ஆசான்களின் விரல்களில்
தூரிகை ஆனோம்...
எழுதப்படாத
வெள்ளைத் தாள்களில்
வாழ்வின் வண்ணங்கள் சேர்த்து...
சித்திரங்களாகத் தீட்டி
உயர் நட்சத்திரங்களாக்கி!
அழகு பார்க்கும்-
ஆசான்களுக்கு***
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...
"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்"...
-கொன்றைவேந்தனில்
இடம்பெற்ற அவ்வையார் பாடிய பாடலும்,
"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்"
- வெற்றிவேற்கையில் இடம் பெற்ற அதிவீர ராம பாண்டியர் பாடிய பாடலும்...
அனைவர் வாழ்விலும் அடி நாதங்களாக அமைந்துவிட்டன. இது நிதர்சனமான உண்மை.
புறக்கண்களுக்குப் புலப்படாத இறைவன் நம் அகமும், புறமும் அறிய தன் சாயலாகத் தாயையும், தந்தையையும் நமக்குக் கொடுத்ததால்
அன்னையும் பிதாவும் நாம்
முன் அறியத்தக்க தெய்வங்களாகினர்.
இரண்டு தெய்வங்களும் கூடி நம்மைப் புதிய உயிராகத் தெளிந்து உணவில் அன்போடு அறம் சேர்த்து வளர்த்தெடுத்தனர்.
நம் மனச்சிறகு முளைத்ததும்...
அன்னையும் பிதாவும்
நாம் எண்ணும், எழுத்தும்
அறிய வேண்டி இன்னொரு தெய்வத்திடம் நம்மை ஒப்படைக்கிறார்கள்.
எழுத்தறிவித்த ஆசான்களும் நம் கண்கள் காணும் கடவுளர்கள் ஆகிறார்கள்.
தாயின் கருவறையில்
விதையாக விழுந்து...
தந்தையின் தோள்பிடித்து, எழுந்து
கல்வியறைகளில் விரிந்து...
வளர்ந்து....
மரமாகி, மொட்டாகி, பூவாகி, கனியாகி...
உலகறிய
விருட்சங்களாக விரிந்தோம்!
நாம் வேர்கள் பிடித்து வளர
தங்களை உரமாக்கி...
நம் வாழ்வில் நல் வண்ணங்கள் சேர்த்த ஆசான்களுக்கு என்றும் நன்றியுள்ளவர்களாக இருத்தலே நம் வாழ்வின் பயன்...
நம் எண்ணம் நம் வண்ணம்...
பயணங்கள் தொடரும்..
மனம் கொத்தும் பறவையின் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்....
Rewind
என் மனம் எனது முதல்வகுப்பின் ஆசிரியை குறித்த நினைவுகளை நோக்கிப் பறக்கிறது. என் அன்னை எனக்கு மூன்றாம் வகுப்பின் (3c) ஆசிரியையாக இருந்தார். இது எனக்குக் கிடைத்த ஒரு பேறு.
பள்ளி
சகாயமாதா நடுநிலைப்பள்ளி
எம். கே. புரம்
மதுரை.
முதல் வகுப்பு - 1A
எனது முதல் ஆசிரியை
மதிப்பிற்குரிய
திருமதி. பத்மா
அவர்கள்...
எப்பொழுதும் புன்னகை பூத்த முகத்துடன் தான் இருப்பார். அதிராத பேச்சு. ஆழ்கடலுக்குள் இருக்கும் அமைதி. இவைகளே மதிப்பிற்குரிய எனது முதல் வகுப்பு ஆசிரியையின் அடையாளங்கள்.
அடையாளங்களை அடைகாத்த உங்கள் மனப்பறவையும் இப்போது பறக்கலாம். பழம் நினைவுகள் உண்ணலாம்...
மனம் பறவையாகும்! பறக்கும்...
Irudhy. A.