இந்தியாவின் இசைக்குயிலாக (Indian's musical Nightingale) இசை வானில் பறந்த "இசைப் பறவை" தன் சிறகசைப்பை நிறுத்திக் கொண்டு விட்டது. பிரபஞ்சம் முழுக்க நிறைந்து கிடக்கும் காற்றோடு இசையாகக் கலந்துவிட்டது. காற்றைச் சுவாசிக்கும் வரை ஆகாசம் மறையும் வரை இசைக் குயிலின் கானங்களை...
மறக்க முடியுமா?
'மராத்தி' மொழியில் பாடிய முதல் பாடல் எல்லாம் இனிதே முடிந்து கடைசித் தருணங்களில் படத்தில் இடம்பெறாமல் போயிருக்கிறது. இசைக்குயில் துவளவில்லை. வீரியமுள்ள விதைமணி எப்படியும் முளைத்தெழும். வீரிய விதையாக முளைத்து இசை வானில் விருட்சமாக எழுந்து நின்றார். தோல்வியை வெற்றிப்படிக்கட்டுகளாக்கி வெற்றிக்கொடி நாட்டியவர் என்றுமே இசை உலகில் அவரது கானங்களால் வாழ்வார் என்பதில் ஐயமில்லை.
இந்தியாவின் 'இசைக்குயில்'
ஆதர்ஷ இசைப் பறவை
" லதா மங்கேஷ்கர்"
அவர்களுக்கு...
"இதய அஞ்சலி"
"பறவையின் முகம்
அதன் சிறகு!
குயிலுக்கு முகம்
அதன் இனிய 'கூவல்'...!
இசை வானில் இசைக்குயில்
'லதா மங்கேஷ்கர்' முகம் அவரது குரலே!...
"இசைக் குயிலின்" பாடல்களைக் கேட்கையில்
'கற்றலின் கேட்டல் நன்று' என்ற வரிகளின் அர்த்தம் விளங்கும்.
நெடுந்தூரப் பயணங்களில் பயணத்தை சுவாரஸ்யமாக்குவது எவைகள் தெரியுமா?
பயணிக்கும் வாகனத்திற்கு வெளியே காணும் பூக்களும், பச்சை படர்ந்த மரங்களும், வான் பறக்கும் பறவைகளும் அதனூடே வாகனத்தின் சாளரத்திற்கு உள் கசியும் இசையும் பயணங்களைச் சுவாரஸ்யமாக்கும் தோழமைகள் என்றால் நிச்சயம் ஆம் என்பீர்கள்.
பயணத்தில் வாகனத்தின் எரிபொருளை நிரப்புகிறதற்கு முன்- பிடித்த இசைத் தொகுப்புகளை வாகனத்தின் உள் நிரப்பி இசை கசிய இசைவுடன் பயணத்தைத் தொடங்குவோம்.
இசை நம் மூச்சில் இருக்கிறது.
நம் மூச்சில் இசை இருக்கிறது.
இசையே மூச்சாக வாழ்ந்த
'இசைப் பறவை'
உலகிலேயே அதிகமான பாடல்களைப் பாடிய இசைமங்கை மதிப்பிற்குரிய இசைக் குயில்
'லதா மங்கேஷ்கர்' அவர்கள் என்பது இசை உலகுக்குப் பெருமையே.
இசைக் குயிலின் பாடலுக்கு மயங்காதவர்கள் எவரும் உண்டோ?!
தமிழ்த் திரை இசைக்கு இசைக்குயில் என்றும்
" குறிஞ்சிப் பூ! "...
இசைக் குயிலின் தமிழ்த்திரைப் பாடல்கள் எண்ணிக்கையில் குறைவே.
குறையினும்
தமிழ்த் திரைக்கு என்றும் நிறைவே...!
தமிழில் 1987- இல் வெளியான 'ஆனந்த்' திரைப்படத்தில்...
ஒரு தாயாக தமிழிசைக்கு அறிமுகமாகி...
"ஆராரோ... ஆரிராரோ...
நீ வேறோ... நான் வேறோ?
..... .........
தாயாய் மாறி நான் பாட
சேய் போல் நீயும் கண் மூட..."
- என்று தாலாட்டுப் பாடி தமிழ்த்திரையில் அன்னையாகத் தொட்டில் கட்டினார்.
தொடர்ந்து இன்றும் நம் மனசுக்குள் வளைய வரும் ஒரு பாடல்...
மங்கையரின் கைகளில் சிணுங்கும் வளையோசையாக... காதுகளில் இசைக்கும் கசியும்.
பனித்துளியாக மினுமினுக்கும்.
உதடுகளுக்குள் காதல் ஊர்வலம் நடத்தும்....
அந்தப் பாடல்....
"வளையோசை கல கல கலவென..
கவிதைகள் படிக்குது குளு குளு
தென்றல் காற்றும் வீசுது...
சில நேரம் சிலு சிலு சிலுவென
சிறு விரல் பட பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்னப் பெண் பெண்ணல்ல வண்ணப் பூந்தோட்டம்..."
- என மனசுக்குள் காதல் தேரோட்டும்.
அமரத்திரு. 'கவிஞர் வாலி' அவர்களின் இரட்டைக் கிளவி இலக்கணப் பாடத்தில் அமைந்த இப்பாடலை இசைஞானி 'மேஸ்ட்ரோ'" "இளையராஜா" அவர்கள் இசையமைக்க இசைக் குயில் பாடியது ஓர் அற்புத நிகழ்வு. இன்றும் அதிகம் பகிரப்படும் பாடலாக மேடைகளில் காதல் தோரணம் கட்டும் பாடலாக இப்பாடல் இசை வானில் சிறகடித்துப் பறக்கிறது.
பிறகு 1988-இல் தொடர்ந்து இசைக்குயிலின் குரலில்
"என் ஜீவன் பாடுது" படத்தில்
இடம்பெற்ற....
"எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன்.....
......
சேர்ந்திடுதே மனமே... ஓ... ஓ...
ஏங்கிடுதே தினமே..."
பாடலை மறக்கமுடியுமா?
உமது கானக்குயில் குரலில்
ஏங்கிடும் மனங்கள்
தினம் உருக... காற்றில்
கலந்த கீதங்களாக...
என்றும் நிலைத்திருக்கும்.
என்பதில் ஐயமில்லை.
விருதுகளெல்லாம்
இசைக்குயிலின் இசைவிழுதுகளில் எப்பொழுதும்
ஊஞ்சல் கட்டி இவரின் கைகள் இரங்கும்!
எத்தனை... எத்தனை... விருதுகள்!
'பாரத ரத்னா' ,
பத்ம பூஷன், பத்ம விபூஷன், தேசிய விருதுகள், இன்னும் ஏராளம் உள்ளன.
எல்லா விருதுகளும் சேர்ந்து இசைக் குயிலுக்கு விழா எடுத்தன.
" வாழ் நாள் சாதனையாளர்"
என மொழிந்தன.
ஏறக்குறைய '36' மொழிகளில் தனது குரலை இசை உலகில் பதிவு செய்து இசைக் குயிலாகப் பறந்திருக்கிறார்.
இன்று...
2022-பிப்ரவரி- 6 ஆம் நாள்
'இசைப்பறவை' தனது சிறகசைப்பை நிறுத்திக் கொண்டுவிட்டது.
காற்றின் தீராப் பக்கங்களில்... 'இசைக்குயில்' தன் வாழ்வை எழுதி முடித்துவிட்டது.
"பறத்தலே பறவையின் வாழ்வு"...
இசைக்குயிலின்
நினைவுகள் பறவையாகும்...
ஆகாசம் உள்ளவரை பறக்கும்!
மறக்க முடியுமா?....
மனப் பறவை பறக்கும்...
மனம்கொத்தும்!
Irudhy.a