Fly...
"வான் வீதியில்
உலா வரும் நிலா…
தேயும்…
வளரும்…
வளர்ந்து தேயும்.
தேய்ந்து வளரும்…
முழுமதியாக முகம் காட்டும்.
நிலவின் முகமோ...
வாழ்வு!"
நிலவைப் பற்றி எழுதலாம்.
"நிலா அது வானத்து மேலே…"
பாட்டுப் பாடலாம்.
நிலவைப் பார்த்தபடி நிலாச் சோறு உண்ணலாம்.
நிலவைக் காட்டி குழந்தைக்குச் சோறு ஊட்டலாம்.
இவை எதுவுமில்லாமல்
" தேமே" என மொட்டைமாடியில் அமர்ந்து கொண்டு கண் சிமிட்டும் நட்சத்திரங்களோடு கைகோர்த்து நிலவைக் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கலாம்.
நிலவில் குடியேற்றம் தொடங்கிவிட்டால்
' வசதி வாய்ப்பு எல்லாம் இருக்கா?குடியேறலாமா?, வேண்டாமா?,
நம்ம சாதி சனங்க அங்க
இருக்காகளா?-
என ஓரு எட்டு பார்த்துவிட்டு ஆகுற சோலியப் பார்க்கணும்'
நிலவைப் பார்த்து மனக் கோட்டை கட்டலாம்.
நிலவோடு வேறு எப்படி தொடர்பில் இருக்க முடியும். வேறு வழி எதுவும் இருக்க முடியுமா?
முடியும் என்கிறது ஒரு "மார்க்கம்" .
நிலவை மறை மார்க்கத்தின் அங்கமாகக் கொண்டது' இஸ்லாம்'.
தேய்ந்து வளரும் பிறைநிலவில் தங்களைக் கரைத்துக் கரையேறும் மார்க்கங்களை வாழ்வின் பயண வரைபடமாகத் தந்திருக்கிறது 'இஸ்லாம்' .
பிறையின் உரு கண்டே இஸ்லாமியர்கள் தங்களை உருக்கி உரமேற்றும் நோன்பைத் திறக்கிறார்கள்.
முப்பது நாட்களின் கட்டுப்பாடான நோன்பு முடித்து வளரும் 'பிறை' கண்டு வசந்த காலத்திற்குள் நுழைகிறார்கள்.
இஸ்லாமியர்கள் கைக்கொள்ளும் ஐந்து கடமைகள்
கலிமா
தொழுகை
நோன்பு
சகாத்
ஹஜ்ஜு(புனித யாத்திரை)
எனும் ஐந்து தூண்களை ஆதாரமாகக் கொண்டு நிமிர்ந்து நிற்கிறது 'இஸ்லாம்'.
ஐந்து தூண்களுள் மிக முக்கியமான தூணாக 'நோன்பு' எண்ணப்படுகிறது.
"நோன்பு என்றால் என்ன?" என்பதன் பொருளை இஸ்லாமியர்கள் மேற்கொள்ளும் நோன்பின் மூலம் அறியலாம்.
அதிகாலை 4-15 மணிக்குத் தொடங்குகிற உண்ணா நோன்பை சூரியன் மறைந்த பின்னே முடிக்கிறார்கள். அதுவரை நோன்பில் இஸ்லாமியர்கள் "strict officers" தான்.
நானெல்லாம் 'உபவாசம்' மேற்கொள்கையில் வடை, தேநீர், பிஸ்கோத்துகளை விரதத்திற்குள் அனுமதித்து விடுவேன். குறிப்பாக, 'தேநீர்' குற்றால அருவியாகி தொண்டையைத் திறக்கும். மற்றபடி மதியச் சாப்பாடு, மாலை ஆகாரங்கள் எல்லாம் களை கட்டும். அன்றைய உபவாசம் முடியும்.
அப்புறம் ஊர் உலகில் மேற்கொள்ளும் எல்லா உண்ணாவிரதங்களையும் நாம் அறிவோம்.
ஆக…
'நோன்பு "என்றால் என்ன?' என்பதனை உலகிற்குக் காட்டும் மறையாக 'இஸ்லாம்' இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்து ஏதேனும் இருக்க முடியுமா?
முப்பது நாட்கள் கட்டுப்பாட்டோடு நோன்பிருக்கையில் பல்வேறு தவ முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.
ஒவ்வொரு தொழுகைக்கு முன்னரும் தங்களின் புறத்தைத் தூய்மையாக்குவது போல அகத் தூய்மையும் காக்கிறார்கள்.
"பொய்யுரைத்தல், பேராசைகள், உடற் இச்சைகள், பொறாமைகள்"
போன்ற
பலவித தீவிரவாதிகளை மனத் தூய்மை காக்க கைநெகிழ்கிறார்கள்.
நெகிழ்ந்த கைகளை சிவந்த கரங்களாக மாற்றுவது இஸ்லாமியர்களின் "ஈகை".
"இழப்பதற்கு எதுவும் இல்லை.
பெறுவதற்கு இந்த உலகம் இருக்கிறது"
-மனம் அறிந்த விஷயம் இது.
மனம் கைக்கொள்ள சிரமப்படும் ஒன்றை 'இஸ்லாம்' மாற்றுச் சிந்தனையோடு தங்களின் மார்க்கமாக உள்ளங்கைகளில் வரைகிறது.
"ஈ" அதுவே "கை" களில் விரியும் "ரேகை" என்கிறது இஸ்லாம்.
ஒன்றைத் தந்து மற்றொன்றைப் பெற்றுப் பழகிய மனதிற்கு" ஈகை" வேற்றுக் கிரக மனிதனாகத் தெரிகிறது.
இஸ்லாம் அறிவுறுத்தும் "ஈகை" எதிர்பார்ப்புகளற்றது.
இஸ்லாமியர்களின் நாட்காட்டியில் 'ரமலான்' ஒன்பதாவது மாதம். இம்மாதத்தை வசந்த காலத்தின் தொடக்கமாக இஸ்லாமியர்கள் கருதுகிறார்கள்.
'ரமலான்' காலம்...
பாவங்களைத் துடைத்தெறிந்து புண்ணிய பலன்களைச் சேர்த்துக் கொள்கிற காலம்.
'நரக வாசல்' அடைக்கப்பட்டு 'சொர்க்க வாசல்' திறந்தே இருக்கும் காலம்.
'சொர்க்க வாசல்' தேடும் மனங்களுக்கு
ஈகையால் விளைந்த நற்பலனே சொர்க்க வாசலின் நுழைவுச்சீட்டாக அமையும்' என்கிறது இஸ்லாத் மார்க்கம்.
அனைவருக்கும்
"ஈகைத் திருநாள்"
நல்வாழ்த்துகள்...
"ஈகை"...
இருப்பதைக் கொடுப்பதல்ல. இருப்பதையே கொடுப்பது.
இல்லையெனினும் இரந்து கொடுப்பது.
மனதிற்குத் தெரியும். மனதை ஆளுமை செய்யும் அறிவிற்கு
"இதெல்லாம் ஆவறதில்ல"
எனச் சொல்லத் தெரியும். சொல்லித் தருவது வாழ்வின் சில சூழல்களே.
உண்மை தான். இன்றைய சூழலில் கைகளே அறியாமல் கொடுக்கும் "ஈகை" சற்றே சிரமம் தான். காலச் சூழலின் சுழற்சி மனசுக்குள் அயற்ச்சியைக் கடத்தியிருக்கிறது. காரணம் "வினைப் பயன்" என எண்ணிக் கொள்ளலாம்.
"ஈகை" என்றால் என்ன? என்பதனை நம் தமிழ் மரபும் பறை கொட்டிச் சொல்லியிருக்கிறது.
முல்லைக்குத் தேர் மட்டுமா தந்தார்
' பாரி' ? தன்னை எதிர்த்து முன் நிற்க முடியாத மூவேந்தர்களின் சூழ்ச்சியான யாசகத்தினை அறிந்தும் தன்னுயுரையே தந்தார் பறம்பின்
" வேள் பாரி"! .
குளிர் கண்டு நடுங்கிய மயிலுக்குத் தனது போர்வையைப் போர்த்தி மயிலின் குளிர் நீக்கிய "பேகன்",
தன் வாழ்நாள் நீளக் கிடைத்த "நெல்லிக்கனி"யை
தான் உண்ணாமல் தமிழ் மூதாட்டி "ஔவை"க்குத் தந்து தமிழ் வளர துணையானார் வேந்தன் "அதியமான்" - என
இன்னும் எத்தனையோ உன்னத நிகழ்வுகளை அறிவோம்.
" ஈகை" இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல. உலகத்தின் பொது மறையாகவும் உருவெடுக்கட்டும்.
" வறியார்க்கொன்று ஈவதே ஈகை "
குறுகத் தரித்த" குறள்" சொல்லும் மறையும் இதுவே.
மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்….