About Me

Showing posts with label உலாப் பூக்களில் காகிதப் பூக்கள்... (memories paper flowers). Show all posts
Showing posts with label உலாப் பூக்களில் காகிதப் பூக்கள்... (memories paper flowers). Show all posts

Friday, March 11, 2022

காகிதப் பூ நெனப்பு(2)

Fly...

           ' மனம் கொத்தும் பறவை' 

"வாடாத 
காகிதப் பூக்களைப் போல
சில நினைவுகள் 
காய்ந்து போவதே இல்லை".

      'நோக்குவன எல்லாம் அவையே போறல்' - என்ற கூற்று காதல் வயப்பட்டவர்களுக்குப்  பொருந்தும். தமிழ் இலக்கணம் சொல்கிறது. 

 உயிர்களின் 'புவிஈர்ப்பு விசை' 'காதல்'. காதல் எதன் மீதும் படரும். பாரபட்சம் ஏதும் இல்லை. பூக்களின் மீதான காதல் புன்னகையில் தொடங்கி மெளனத்தில் தொடரும்.  கடக்கும் ஒவ்வொரு நொடியும் ஏதேனும் சில நினைவுகளில் நனையும். ஈரம் உலர்த்தியபடி நினைவுகளில் மனம் கோதும்.  சிறகு விரித்துப் பறக்கும். 

    பூக்களைப் பற்றி எழுதலாம் என்றெண்ணி "பூக்களின் பாடசாலையில் உலாப் பூக்கள்" எனப் பெயரிட்டேன். 


உண்மையில் எனக்குப் பாடங்கள் மண்டையில் ஏறாது. அது ஒரு காலம். கல்லூரிக்குள் நுழைந்த போது தான் 'கல்வி' மீதான புரிதல் ஏற்பட்டது. அதற்கு முன்னர் வரை கல்விக் கூடம் செல்வதை 'எனது போறாத காலமாக' நினைப்பேன். 

        வரலாற்றுப் புத்தகங்களில் அச்சிடப்பட்ட அசோகர், பாபர், ஔரங்கசீப், புத்தர், ஜான்சி ராணி அம்மையார், நெப்போலியன், அலெக்சாண்டர் போன்றோரின் முகங்கள் இன்னமும் சுவரில் மாட்டி வைத்த ஓவியச் சட்டகமாக மனக் கூட்டுக்குள் ஊஞ்சலாடுகின்றன.

 ஆனால் வரலாற்று முகங்களின் விலாசங்கள் சொல்லும் வரலாறு மனதில் நிற்கவில்லை.
 பஞ்சாரக் கூடை எடுத்தவுடன் ஓட்டமெடுக்கும் 'நாட்டுக்கோழிகள்'   போல பாடங்கள் குறித்த நினைவுகள் ஓரே ஓட்டமாக மனதை விட்டு ஓட்டமெடுக்கும். 

ஆனால், இன்று பாடங்களை படங்களாக்கி 'செயல்முறைக் கற்பித்தல்' வழி குழந்தைகளுக்கு  கல்வியின் மீதான பிரியத்தை  மனசுக்குள் கடத்துகிறார்கள். 

 அன்று... 
புதுப்புத்தகங்கள் வாங்கியதும் அதன் வாசனை நுகர்வேன். புத்தகங்களுக்குள் நுழைந்து படம் பார்ப்பேன். படிக்கச் சொன்னால் புத்தகம் தலைகீழாகப் பிடித்திருப்பது அறியாமல் 'படிக்கிறேன் பேர்வழி' என வேறு எங்கோ 'பராக்கு' பார்த்தபடி அமர்ந்திருப்பேன்.
பிறகு எங்கள் வீட்டு 'Head master' என்னை மெச்சி புத்தகத்தை நேரே பிடித்து படிக்கச் சொல்லி முதுகில் ஒன்று போட்டுவிட்டு காய்கள் நறுக்க அமர்வார். 
அப்பா நடுநிலைப் பள்ளியின் 'Head master'. அப்போது 'strict officer' . வீடும் அப்பாவிற்கு பள்ளிக் கூடமாகவே தெரியும்.

 அப்பா அம்மாவிற்குச் செய்யும் ஆகச் சிறந்த உதவி காய்கள் நறுக்கித் தருவது தான். தினம் காலையில் நடு நாயகமாக அமர்ந்து காய்கள் நறுக்கியபடி முன் அமர்ந்து படிக்கும் எங்களைப் படித்தபடி காய்கள் நறுக்குவார் எங்கள் அப்பா. அண்ணன் மட்டும் வராந்தாவில் 'என் ஏரியா உள்ள வராதீங்க' என தனி ஆவர்த்தனம் புரிவார்.
இச்சூழல்கள் எங்கள் பள்ளிக்கால நாட்களின் தின அஜந்தாவாக நடைபெறும். இச்சூழல்கள் '80' -களின் மத்திமத்தில் இடம் பெற்றவைகள். 

வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு 'பூக்களின் பாடசாலைக்குள்' இருக்கும் ஞாபகம் மறந்து போயிருக்கும். பூக்களின் மீதான நினைவுகள் தான் '80' -களின் மத்திமத்திற்கு பறந்து வந்திருக்கிறது. 


'காகிதப் பூக்களின்' நினைவில் உறைந்து கிடக்கும் அந்நாள் நிகழ்வுகளை மனம் கொத்திக் கிளறுகிறது. 

'தேநீர்' தருணம்... 


 ஒவ்வொரு பொருளும் ஏதேனும் சில நினைவுகளை மனசுக்குள் கடத்தும். 
'முல்லைப் பூ' வள்ளல் 'பாரியை' நினைவு படுத்தும்.

வள்ளல்  'பாரி' 'முல்லைக்கொடியை' நினைவுபடுத்துகிறார். சில வேளைகளில் நினைவுகள் வண்ணக் கண்ணாடி மீன்களாக மனக்குடுவைக்குள்  நீந்தும். சில வேளைகளில் சிறகு முளைத்த பறவையாகிப் பறக்கும்.

'காகிதப் பூக்களின்' நினைவுகள் எனது பள்ளிக் காலத்து  நினைவுகளுக்கு இழுத்துச் செல்கிறது. 

மதுரை-
' தூயமரியன்னை மேல்நிலைப் பள்ளியில்' 10வது வரை படித்த காலங்கள் எனக்கு வனவாசம் போலத் தான் கழிந்தது. ஜெய்ஹிந்துபுரத்து நாட்கள் கொடுத்த சந்தோசங்கள் மட்டும் தான் அந்நாட்களைக் கடக்க தோணியாக இருந்தது.

காலாண்டுத் தேர்வுகள் முடிந்து பள்ளி தொடங்கியவுடன் ஓரிரு நாட்களில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு பட்டியலில் கடைசி இடம் பிடிக்கும் என் போன்றவர்களுக்கு 'தலைமையாசிரியர்' பொறுப்பில் இருக்கும் 'பாதிரியார்' நல்ல பல பரிசுகளை கைகள் நிறைய தந்து அனுப்புவார். பின் மதிப்பெண்
 அட்டையில் தந்தையின் கையொப்பம் பெற்று வருதல் அவசியம். இல்லையெனில் வகுப்பில் அனுமதி இல்லை.  

என் சகாக்கள் சிலர் தந்தை கையொப்பத்தை தாங்களே இட்டுக்கொண்டு வகுப்பிற்கு திரும்பிவிடுவார்கள். நான் இந்த விஷயத்தில் 'கண்ணியம்' காத்து தந்தையின் கையொப்பத்தை அவரிடம் இருந்து பெறும் வரை பள்ளியிலிருந்து வெளிநடப்புச் செய்வேன். அந்நாட்கள் எனக்கு கிடைத்த "இன்பச் சுற்றுலா". 

அப்படியான ஓர் இன்பச் சுற்றுலா நாளில் 'காகிதப் பூக்களின்' அருகாமை எனக்குக் கிடைத்தது.


 "திருமலை நாயக்கர் மஹால்" தெருவிற்குள் நுழைந்து திரும்பினால் சாலையோரம் குதிரை வண்டிகளும், சைக்கிள் ரிக்ஷாக்களும் இளைப்பாறிக் கொண்டிருக்கும். நடையோரம் 'காகிதப் பூக்கள்' வேலியாகப் படர்ந்து பூக்குடை கள் விரித்து நிற்கும். 

குதிரைகள் வாயில் புற்கட்டுக்கள் உள்ள  ஒரு பை தொங்கும். குதிரைகள் பைக்குள் தலை நுழைத்து புற்கள் உண்டு அசைபோடும். ரிக்சாக்கார நபர்கள் பீடி புகைத்தபடி நடையோரம் அமர்ந்திருப்பார்கள். அவர்களைக் கடந்து நாயக்கர் மஹால் சந்து நுழைவேன். 


முன்புறம் உள்ள இடப்பக்க பகுதி எனது ஆஸ்தான இடம். இடப்பக்கம், வலப்பக்கம் என எங்கும் 'காகிதப் பூக்கள்' கொடி பிடித்து வேலிப் பூக்களாகப் படர்ந்து நிற்கும்.


தரையெங்கும் பூக்கம்பளங்கள் விரித்துக் கிடக்கும். 

நான் அமர்ந்திருக்கும் பகுதிக்கு அருகாமையில் கிளி ஜோசியர் அமர்ந்து அவ்வப்போது வந்து அமர்பவர்களுக்கு ஜோசியம் சொல்லுவார்.

எதிர் காலம் உரைப்பார். கிளி லாவகமாக சீட்டுக்களை எடுத்துக் கொடுத்து சட்டகப் பெட்டிக்குள் சென்று வேடிக்கை பார்க்கும்.

ஜோசியம் கேட்க வருபவர்கள் கிளிக்கும், ஜோசியக்காரருக்கும் வாழ்வாதாரம் காப்பவர்களாக இருப்பார்கள். இடைவேளை களில் ஜோசியக்காரர் தன் சிறு டப்பாவைத் திறந்து சிவந்த மிளகாயை விரல்களால் கிள்ளிப் போடுவார். மிளகாய் உண்ணும் கிளி ஆச்சரியத்தைக் கடத்தும். கிளிஜோசியப் பெட்டியின் மேல் 'காகிதப் பூக்கள்' வந்து இறங்கும். காற்றில் கடந்து போகும்.

சில நாட்களுக்கு முன் என் வீட்டிற்கு எதிரில் ஒரு 'கிளி ஜோசியக்காரரை' சாளரத்தின் வழியே கண்டேன்.

ஆச்சரியமாக இருந்தது. கீழிறங்கி சந்திக்கலாம் என நினைத்துக் கொண்டிருக்கையில் சைக்கிள் ஏறி தன் கிளிப் பெட்டியோடு பறந்து போனார்.

நான் மூன்றாவது மாடியில் சாளரத்தின் வழி பார்த்தபடி சட்டென கைப்பேசியில் படம் எடுத்துக்கொண்டேன்.

எங்கேனும் எவருக்காவது 'கிளி ஜோசியம்' சொல்லிக் கொண்டிருப்பாரா? இன்னும் அமர்ந்து 'கிளி ஜோசியம்' கேட்கிறார்களா? ஒரு நாளில் எத்தனை பேர் கேட்பார்கள்? கிளிக்கு உணவு சிவந்த மிளகாய் தானா? ஏதேதோ கேள்விகள் மனசுக்குள் கிளைவிட்டன. கிளிஜோசியக்காரர்களைக் கண்டால் 'காகிதப் பூக்கள்' மனசுக்குள் பூக்கும். 


"காகிதப் பூக்களின்" நினைவுகள் அலாதியானது. 'தூயமரியன்னை' பள்ளிக்கு வெளியே நிமிர்ந்து நிற்கும் தேவாலய சுற்றுப் பகுதிகளெங்கும் 'காகிதப் பூக்கள்' வேலியாகப் படர்ந்து கண்களை நிறைக்கும். ஜெய்ஹிந்துபுரத்து வீதிகளில் பெரும்பாலும் 'காகிதப் பூக்கள்' வேலிக்கொடி பிடித்து விழித்திருக்கும். அப்பொழுது 'ஜெய்ஹிந்துபுரம்' பதட்டம் நிறைந்த பகுதியாகப் பார்க்கப்பட்டது.

சர்வ சாதாரணமாக பகற்பொழுதில் 'கத்தி கபடாக்களோடு' தலை தெறிக்க ஓடி வருவார்கள். பதட்டமாக கத்தியபடி கடந்து போவார்கள். கண் எதிரே மனம் பதறும் காட்சிகள் அரங்கேறும். 

இப்பேற்பட்ட பகுதியில் பெரிய வீடுகளில் சம்பளம் வாங்காத காவல்காரர்களாக 'காகிதப் பூக்கள்' முள்ளோடு கொடி பிடித்து படர்ந்து நிற்கும். காகிதப் பூக்கள் வேலிக்காரனாகக் காவல் காக்க காணும் கண்களின் வழியே மனம் கொள்ளை போகும். 

நிறைய பகிர எண்ணுகிறேன். காலம் கருதி 'காகிதப் பூக்களை' இதயத்திற்கு அருகில் மனதளவில் இருத்தி முடிக்கிறேன். 

     ஜெய்ஹிந்துபுரத்து வீட்டைக் காலி செய்து புறப்பட்ட அன்று அங்கிருந்து நேரே பள்ளிக்குச் சென்றுவிட்டோம். பள்ளி முடிந்து மாலையில் நாங்கள் மூவரும்(அண்ணன், தம்பி) நேரே நாங்கள் புதிதாகக் குடி பெயர்ந்த மதுரை அண்ணாநகரின் 'அன்னை வேளாங்கண்ணி நகர்' வீட்டிற்குத் திரும்பினோம்.

 காலையில் ஜெய்ஹிந்துபுரத்தைக் கடக்கும் முன் 'காகிதப் பூக்களின்....

வீட்டு 'காகிதப் பூக்களை' கையோடு எடுத்துக் கொண்டேன்.

மாலையில் 'அன்னை வேளாங்கண்ணி நகர்' சென்றபோது அங்கிருந்த வீடுகளெங்கும் 'முல்லைப் பூக்கள்' கொடி பிடித்து மனம் பரப்பின.

வாசமற்ற 'காகிதப் பூக்கள்' எனது பைகளில் உறைந்து கிடக்க வாசம் மிக்க 'முல்லைப் பூக்கள்' தோரணங்கள் கட்டி வரவேற்றன. 


 'முல்லைப் பூக்கள்' ச்சைக் கொடி அசைத்து எங்கள் வாழ்வின் புதிய அத்தியாயங்களைத் தொடங்கி வைத்தன. 

னப் பறவை மனம் கொத்தும்!

பறக்கும்… 


                             





இருதய். ஆ 

 






Friday, March 4, 2022

'வாசமில்லா மலர் இது' ...

Fly...

           மனம் கொத்தும் பறவை... 

"வாசமில்லா மலர் இது!
வண்ணங்கள் நிறைந்தது... 
வாடாது. வதங்காது!
பறவையின் சிறகிலிருந்து உதிர்ந்த
இறகாக...
      கொடி பிரிந்து 
       தரை இறங்கும். 
       தரையிறங்கி... 
     கரையோரம் ஆடும் 
   சிறு படகு போல... 
        இடம் வலமாக
            முன் பின்னாக 
              காற்றில் நகர்ந்து நகர்ந்து
             கண்கள் நிறைக்கும். 

         வாசமற்ற மலர் இது! 
             எண்ணி முடியாது.
எண்ணமுடியா கூட்டமிது...
 ஒரு கூட்டுப் பறவைகளாக!
    முள்ளோடு வேலியாக... 
       கொடி பிடித்து வேர் பரப்பும்"...

  பூ மரமோ? பூங் கொடியோ? 

   பூவுலகில் பூவிதன் பெயர்.....? 
 
             "போகைன் வில்லா" .... 

தேநீர் தருணம்... 


'தாவரவியல்' அறிவு  எப்பொழுதும் எனக்குத் தொலைவு. 

வாசமற்ற 
வண்ணங்கள் நிறைந்த
இப்பூக்களின் செறிவுள்ள பெயர் 
இனிக்கும் தமிழில் என்னவாக இருக்கும்? 


பூக்களின் பாடசாலையில்.... 

இனிதாகும் தமிழில்... 

               " காகிதப் பூக்கள்..." 


"காகிதம்" அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியா ஒர் அங்கம். 
  கனவுகள் கரை ஏறும்
   கட்டுமரம் 'காகிதம்'. 

படைப்புலகத்து தேவதைகளாக உலா வரும்' காகிதங்கள்' ஒரு பூக்களுக்குப்  பெயரானால் அந்தப் பூக்களும் தேவதைகள் தானே! 

'போகைன் வில்லா" எனும்
' காகிதப் பூக்களை' பூக்கும் கொடித் தாவரம் என்கிறது தாவரவியல். ரோசாவைப் போலவே காகிதப் பூக்களும்  முட்கள் சூழ பூக்கின்றன. 

முட்கள் நிறைந்த' காகிதப் பூக்களின்  கொடிகள் பூக்களுக்கு வேலியா!  அல்லது பூக்களை நட்டவர்களுக்கு வேலியா? ஆச்சரியமும், கேள்வியும் கைப் பிடிக்கும். பெரும்பாலும் காகிதப் பூக்கள் வேலிச்சுவர்களில்  'வேலிப்பூக்களாக' முட்களுடன்  கொடி பிடித்துப் படர்ந்திருக்கும். கண்ட கண்களை வண்ணங்களால் நிறைக்கும். 
மஞ்சள், சிகப்பு, ஆரஞ்சு, ரோசாப் பூ சிவப்பு  வண்ணங்களில் கொத்துக் கொத்தாகப் பூத்துக் கிடக்கும். மனம் அவற்றைக் கடக்க மறுக்கும். 

 வாசனையற்ற பூக்களாக மலர்வதும், பூவையரின் கூந்தல் சேராமல் காட்சிப் பொருளாக உறைவதும், கொடி பிரிந்தும் வாடாது வண்ணம் மாறாது ஒரு 'யோகி' போல தரைகளிலும்,  வேலியோரப் பாதைகளிலும் காகிதப் பூக்கள் .  அமர்ந்திருக்கும் '

 வாசமில்லா 'காகிதப் பூக்கள்' மனசுக்குள் கடத்தும் நினைவுகளுக்கும் வண்ணங்களுக்கும் என்றும்  வாசனைகள் உண்டு. 

காகிதப் பூக்களின் வாசமுள்ள நினைவுகள் 


 கடலில் நீந்தும் மீன்களும், வான் பறக்கும் பறவைகளும் கடக்கும்   வழிகளில் தடங்கள் ஏதும் தென்படுவதில்லை.  ஆனால், நம் வாழ்வில்  கடக்கும்  தருணங்கள் சில அழிக்க முடியா நினைவுகளை விதைத்துக் கடக்கின்றன.

 'காகிதப் பூக்கள்' எனக்குள் வாசமுள்ள பல நினைவுகளை மலர வைத்திருக்கிறது. என் நினைவுகளை கண்ணுற்று வாசிக்கையில் காகிதப் பூக்களின் வாசமான நினைவுகள் உங்கள் மனசுக்குள் பூக்கலாம்.

"'காகிதப் பூ' நெனப்பு(பூ)" ...


'காகிதப் பூக்களின்' தலைப்பில் ஏராளமான கவிதைகளும், கதைகளும் எழுதப்பட்டுள்ளன. எழுதப்படுகின்றன. ஏதோ ஒரு வசீகரத்தை வாசமற்ற காகிதப் பூக்கள் தன் கொத்துகளுக்குள் மறைத்து வைத்திருக்கின்றன.

'காகிதப் பூக்கள்' விதைத்த நினைவுகளில் மூன்று விதச் சூழல்களை, அழகான அந்நாட்களின்  தருணங்களை மறக்க  முடியாது.

'காகிதப் பூ' முதல் நெனப்பு

  மதுரை 'ஜெய்ஹிந்துபுரத்தில்' வசித்த போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த  காலம். எங்கள் வீட்டிற்கு சற்றுத் தள்ளி ஒர் அரிசி ஆலை. நீண்டு பரந்த பகுதி. ஆலைக்கு அருகில் ஒர் அழகான வீடு.  கலாரசனையோடு புள்ளிக்கோலமிட்டால் எப்படி இருக்கும். அப்படி அழகான புள்ளிகளால் இடப்பட்ட வண்ணக் கோலமாக அந்த வீடு காணும் கண்களை நிறைக்கும். 


நிறைந்த கண்களின் கரு விழிகளில் வண்ண வண்ண  'காகிதப் பூக்கள்' தங்கள் முகம் பார்க்கும். 
வெள்ளை, இளஞ்சிகப்பு, 'ரோசாப் பூ செவப்பு' , ஆரஞ்சு, மஞ்சள் வண்ணம் என கொத்துக் கொத்தாகப் பூத்து அந்த வீட்டைச் சுற்றி வேலி அமைத்திருக்கும். தரையெங்கும் குட்டிக் குட்டி காகிதப் பூ தீவுகளாக விரிந்து கிடக்கும். 

காகிதப் பூக்களின் வீடாகவே அந்த வீட்டின் பெயர் என் நினைவில் வாசம் செய்கிறது. 
'பெந்தக்கோஸ்தே' பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவக் குடும்பத்தினர் அந்த வீட்டில் வசித்தார்கள். 
'காகிதப் பூக்களின் வீடு அவர்களின் சொந்த வீடு. 

அந்த வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று மாலையில் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில்' மறைக்கல்வி' வகுப்பு நடத்துவார்கள். தவறாமல் கலந்து கொள்வேன். சில ஞாயிறுகள் எப்படியோ கை நழுவிப் போகும். வகுப்பு முடிகையில் எல்லோரது  கைகளிலும்  ஒரு  'பட்சணம்' கை சேர்வது நிச்சயம். பட்சணங்களை எதிர் நோக்கி காத்திருக்க மறைக்கல்வியின் இறுதிப் பாடல் தொடங்கும். 

    'சந்தோசம் பொங்குது. சந்தோசம் பொங்குது... 
சந்தோசம் என்னில் பொங்குது... 
இயேசு என்னை இரட்சித்தார்! 
முற்றிலும் என்னை மாற்றினார்... 
சந்தோசம் என்னில் பொங்குது...' 
      - கைகள் தட்டி சந்தோசக் குரலெடுத்து அந்த வீட்டின் அக்கா நடு நாயகமாக நின்று தலையை இடம் வலம் அசைத்துப் பாடுவார். நான் "ஆ" வென்று வாய் பிளந்து அக்காவிற்கு சற்றுத் தள்ளி தடல் புடலாகத் தயாராகிக் கொண்டிருக்கும் பட்சணங்களைப் பார்த்தபடி...    

       "சந்தோசம் பொங்குது... 
        சந்தோசம் பொங்குது..."                        சந்தோசம் என்னில்       பொங்குது"... 
    பாடிக் கொண்டிருப்பேன். 


    நடுவில் பாடிக்கொண்டிருக்கும் அக்காவின் தலையசைப்பிற்கு எதிர்விசையில்  தலையசைத்தபடி அக்காவிற்குச் சற்றுத் தள்ளி நடக்கும் களேபரங்களில்... 
       'கை சேரவிருக்கும் பட்சணம்          என்னவோ?' 
என அலைபாய்ந்தபடி அமர்ந்திருப்பேன். அமர்ந்திருப்போம். என் 'சகோதரர்கள் ' இருவரையும் சேர்த்துச் சொல்கிறேன். சில ஞாயிறுகளில் மூத்தவர் 'டேக்கா' கொடுத்துவிட்டு அவரது தோஸ்த்துகளுடன் 'சதுரங்கம்' விளையாடப் போய்விடுவார். நான் என் தம்பியுடன் தட்டாமல் கலந்து கொள்வேன்.  என் தம்பி... 


' இன்னும் கொஞ்ச நேரம் பாடினாத் தான் என்ன? 'இன்னும்
  நான் தூங்கணும்'
         - என்பது போல அமர்ந்திருப்பான். 

       "சந்தோசம் பொங்குது.... 
சந்தோசம் பொங்குது...." 

'காகிதப் பூக்கள்' நிறைந்த அந்த வீடு மனம் முழுக்க சந்தோசங்களை அள்ளித் தெளித்திருக்கிறது. 
 
காகிதப் பூக்களின் வீட்டைக் கடக்கும் போதெல்லாம் தரையில்  ஒரு' யோகி 'போல அமர்ந்திருக்கும் வெள்ளைக் காகிதப் பூக்களை கைகளில் பற்றி சொக்காயின் இடப்புற பையில் வைத்துக் கொள்வேன். 


சிகப்பு நிற காகிதப் பூவை அதன் சிறிய காம்புப் பகுதியை விரல்களில் வைத்து சுற்றிச் சுற்றி விளையாடிய படி நடந்த ஞாபகங்கள் காகிதப் பூக்களை பற்றி யோசிக்க ஆரம்பித்தால்  சட்டென "தோ... வந்துட்டேன்' என மனசுக்குள் நடைபயில ஆரம்பித்துவிடும்.

 வாடாத' காகிதப் பூக்களை' இதயத்தின் அருகாமையில் வைத்துக் கொண்டதினால் அதன் நினைவுகளுக்கு மட்டும் வாசம் உண்டு. 

காகிதப் பூக்களின் நடை தொடரும். 


மனப் பறவை மனம் கொத்தும்! 
பறக்கும்... 


இருதய். ஆ


 









அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...