இரண்டு மணி நேரத் தாமதத்திற்கு மன்னிப்(பு) பூக்கள்...
'7pm எனப் பகிர்ந்து 9pm' ஆகிவிட்டது.
தொடர்ந்திடுங்கள்...
'வரவேற் பூக்களுடன்' .....
"மனம் கொத்தும் பறவை"
"பேரம் பேசி...
அளவினும் கூட்டி அரிந்து...
கட்டுப்படி விலையில் கபடி ஆடி
கைப்பிடித்த பூவை... அவ்விடத்திலேயே நின்று கொண்டு 'கூந்தற் ஊக்கி'யை (hair pin ) பற்களில் கடித்து இழுத்து....
பின்னர், லாவகமாக பிண்ணிய கூந்தலில் கண்ணாடி பார்க்காமல் முன்நோக்கி கண்களை இடம் வலம் நகர்த்தி"...
முடிவாக ஒரு வழியாக சரியான இடத்தில் பூவை மையம் கொள்ள வைப்பாள் ஒரு பூவை . நிறைய பாவையர்கள் இக்கலை அறிவார்கள்.
மை இட்ட கண்கள்...
'சரிடியம்மா. கரெக்டா வச்சிட்ட!'
- எனச் சொல்லாமல் சொல்வது போல கருவிழி மையம் கொண்டு பச்சைக் கொடி காட்டும். காணும் கண்களுக்குள் "பூங்கொடித் திருவிழா" நடந்து முடியும்.
பூக்கடைகளில் ...
அன்றைய நாட்களில் (80-90 களில்) கண்ட இக்காட்சிகளை நினைத்தால் இப்பொழுதும்... அட! எப்பொழுதும் நெஞ்சை அள்ளும்!
"மையம் கொண்டது பூவா? பூவையா?
காதோடு சொல்லுங்கள். இதயத்திற்கு கேட்கும்" .
தேநீர் தருணம்...
"பூவும்... பூவையும்!" ...
ஆண்களின் தேசத்தில் பூக்களுக்கு விலையே இல்லை. பூக்களிடம் பேரமும் இல்லை.
ஏன்?...!
"பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூ கேட்தில்லை...
உன் புடவை முந்தானை சாய்ந்ததில்...
இந்த பூமி பூ பூத்தது!" ...
என்ற பாடல் வரிகள் நினைவுக் கதவைத் தட்டுகிறது.
மனம் தராசுத் தட்டு உயர்த்துகிறது.
"ஒரு தட்டில் பூ...
மறு தட்டில் அவள்"...
'அட... அடடடா... அட... அடடடடா...!'
அதிசயம் கணங்களில்.... கண்களில் நிகழும்!
'பூவும், பூவையும்' சமன்படும்!
தராசின் மையத்தில் நின்ற
நடு முள் இதயத்துக்குள்
நொடி முள்ளாகி நாடி பிடித்து ஓடும்.
பூக்கள் அவளுக்குப் பிடிக்கும்...
அவளை பூக்களுக்குப் பிடிக்கும்.
காளையர்களுக்கு பூவோடு சேர்ந்த பூவையரைப் பிடிக்கும்.
ஆண்களின் தேசத்தில் பூக்களிடம் பேரம் எப்பொழுதும் இல்லை.
'பூவையர் அறிவீரோ?'
பூக்கடையில் பேரம் பேசி பூ வாங்கும் ஆண்களை நான் கண்டதே இல்லை. கண்டால் சொல்லுங்கள்.
'பூக்களுக்குள் பேரங்கள் நடக்கலாம். பூக்களோடு பேரம் நடக்கலாமா?'
பூக்களை ரசிக்கவும் நேசிக்கவும் கற்றுக்கொண்டால்
'இளமை' என்றும் 'இலவசம்' ...!
'விலையற்ற பூக்கள் அழகு!
எந்நிலை உற்றாலும்' பூவையர்' அழகு!'
"இருக்கின்றாள் என்பதே எனக்கின்பம்..." - என்றார் பாவேந்தர். 'பாரதிதாசன்'.
பூக்களோடு பூக்களாக பூவுலகில் நிறைந்திருக்கும் 'பாவையர்களுக்கும்' பூக்களை கண்மலராகப் பாவிக்கும் 'காளையர்களுக்கும்' ...
மனம் கொத்தும் பறவையின்...
'காதலர் தின'
நல்வாழ்த்துக்கள்...
" மனம் பிடித்த இதயம்
மனக் கூடு அடைந்தால்...
நாளெல்லாம் கூடும்!
" காதல் தினம்" ...
ஆதி மனிதன் 'ஆதாம்' '' ஏவாளை' கண்ட முதல் நொடியே' காதல் தினம்' தன் தேதிக்கு சேதி சொல்லி அகரம் இட்டது.
பூக்களின் சபையில்
பூக்களின் ராணிக்கு
'சுயம்வரம்'...
பூக்களின் ராணிக்கேற்ற 'ராசா'
இன்னமும் அமைந்த பாடில்லை.
'பூக்களின் ராணி' இன்னமும்
கன்னியர்களின் ராணி தான்.
கன்னியர்களுக்குப் பிடித்த பூவும்
இந்தப் 'பூவரசி' தான்!
பூக்களின் அரசி...
"ரோசா"!
எத்தனையோ பூக்கள் இருக்கையில் 'ரோசா' மட்டும் எப்படி பூக்களுக்கெல்லாம் ராணி ஆனது?
வீட்டு ராணியிடம் கேட்டேன். அளித்த பதில்களில் இந்தக்
'கூசாவிற்கு' திருப்தி இல்லை.
உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்.
எது எப்படியோ 'ரோசா' ... ரோசா தான்.
"காதல்"
"கைக்கிளை"
"அன்பு"
"கருணை"
"இரக்கம்"
"களிப்பு"
"தனிமை"
என எல்லாத் தருணங்களிலும் மனசுக்குள் பூத்துப் பொருந்தும்
'ரோசாப் பூ...' !
நான்கு கால் பாய்ச்சலாக மனசுக்குள் ஓடும் 'அதிசயப் பரி' என்று சொன்னாலும் தகும்.
ரோசாப் பூவின் முன் நின்றால்
ஆண் முகமும் நகும்!
ரோசாவைப் பற்றி எழுத யோசிக்கையில் 'மலர்களின் அரசியை' வருணிக்கவோ அவளின் வரலாறை எடுத்துரைக்கவோ தேவையான சொற்களை மனசுக்குள் கடத்த நினைக்கையில்...
"அடேய். மக்குப் பையா. நான் கடல். என்னை ஒரு குடுவைக்குள் அடக்க முடியுமா! பேசாமல் எப்பவும் போல உனது நினைவுகளில் நான் எப்படி வாசம் பரப்பினேன் என்பதைச் சொல். அது போதும்."
- என்றாள் பூக்களின் ராணி. 'ஆகட்டும் அரசி. அப்படியே செய்கிறேன்'- என்றேன்.
'ரோசா' ஒவ்வொருவருக்கும் ஒரு சூழலில் அறிமுகம் ஆகியிருக்கும்.
எனக்கு 'ரோசா' முகம் முகமாக அறிமுகமான சூழலும் நினைவுகளும் வாடாமல் வதங்காமல் சித்திரங்களாக வயசு மாறாமல் அப்படியே மனசுக்குள் இருக்கின்றன.
அன்று...
எனது சிறு பிராயத்தில் எனது அம்மாவின்' கேசம்' தான் எனக்கு 'ரோசாவை' அறிமுகம் செய்தது. என் அம்மா நடுநிலைப்பள்ளியில் ஆசிரியை. சனிக்கிழமைகளில் அரைநேரப் பள்ளி தான். நான் பெரும்பாலும் அரைவகுப்பிற்கு 'டேக்கா'(விடுப்பு) கொடுத்துவிடுவேன்.
அம்மா சனிக்கிழமைகளில் சீயக்காய் தூள் தேய்த்து தலைக்குக் குளிக்கும் வழக்கம் கொண்டவர். குளியல் முடித்து கேசத்தில் ஈரம் காயாமல் இருக்கும். துண்டை கேசத்தோடு சுருட்டிக் கட்டியிருப்பார். துண்டையும் மீறி சீயக்காய்த் தூள் வாசனையை கேசம் நாசிக்குக் கடத்தும்.
மிகச்சரியாக சனிக்கிழமைகளில் வழக்கமாக எங்கள் வீடு வருவாள் ஒரு 'பூக் காரிகை' .
அவள் பெயர் ஞாபகத்தில் இல்லை. இன்றுவரை அவளின் பெயர் என்னைப் பொறுத்தமட்டில்...
" ரோசாப் பூ கூடைக் காரி"
அப்படித்தான் மனக்கூடையில் அமர்ந்திருக்கிறாள் அந்த 'ரோசாப் பூ காரிகை'...
"டீச்சராக்கா... ரோசாப் பூ..."
என்ற குரல் வாசற் கதவு தட்டும். தட்டாமல் சட்டென 'வராந்தா' வந்து விடுவேன்.
'டீச்சரக்கா' என்ற விளிப்பிற்கு ஒரு காரணம் உண்டு. அதை பூக்காரிகையே அம்மாவிடம் சொல்வாள்.
'நீங்க பவுசா பதவிசா ரோசாவ எடுப்பீங்க. கோழி மாறி கெளற மாட்டீங்க. அதாங்கா... உங்களயே எடுக்க வுட்றுவேன்.'
கோழி மாறிக் கிளறுபவர்களை கழுவிக் கழுவி ஊற்றுவாள் 'பூக்காரிகை' .
ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. பூக்களை மதித்தால் மரியாதையும் மல்லுக்கட்டாமல் நம் முன் வந்து நிற்கும். பூக்களை மட்டுமல்ல. பூவையரையும் இவ்விஷயத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
'ரோசாக் காரிகை' தன் இடுப்பிலிருந்த வட்டமான நார்க்கூடையை வாசற் நிலைச் சுவற்றில் முட்டுக் கொடுத்து வைத்திருப்பாள். நான் கட்டமிட்ட வெள்ளை நிற தகரக் கதவின் சட்டக வழியே விழி விரிப்பேன்.
நார்க் கூடைக்குள்...
பூக்களின் 'இளவரசிகள்' பச்சையும் மஞ்சளும் கலந்த வண்ணத்தில் இருக்கும் இலையால் தங்களின் முகங்கள் மூடி மறைந்திருப்பார்கள்.
அம்மா வந்ததும் பூக்காரிகை இலைமறைவை நீக்க திரைமறைவை விலக்கிக் கொண்ட ராணிக்களாக அத்தனை இளவரசிகளும் முகம் முகமாக பூத்துச் சிரிப்பார்கள். கண்டவர்கள் சிலிர்ப்பார்கள்.
பூக்கூடைக்குள் இருக்கும் இளவரசிகள்- ' இளஞ்சிவப்பு,மங்கல கர மஞ்சள், அடர் சிவப்பு, வெளிறிய சிவப்பு' - என வண்ணங்கள் குழைத்து கண்களை நிறைப்பார்கள்.
அம்மா 'மங்கல கர மஞ்சள் நிறத்திலும், இளஞ் சிவப்பு நிறத்திலும் உள்ள ரோசாக்களை எடுப்பார். அடர் பச்சை நிறத்தில் உள்ள சில ரோசா இலைகளை காம்புடன் சேர்த்து அம்மாவிடம் தருவாள் 'ரோசாப் பூ காரிகை' . முன்னமே ஈரப்பதத்துடன் தயார் படுத்தி வைத்திருந்த வெள்ளைத் துணி கொண்டு ரோசாக்களை அதன் இதழ்கள் அழுந்தாதவாறு பத்திரமாகப் போர்த்தி ஒரு சில்வர் தட்டில் வைப்பார் அம்மா.
வெள்ளைத் துணி கொண்டு தங்களின் முகங்கள் மறைத்திருக்கும் இளவரசிகளின் மலர்ந்த முகங்களும் சூடிக் கொண்ட எனது அம்மாவின் முகமும், ரோசாப் பூக்கள் செருகியிருந்த கேசமும் பார்க்க அத்தனை அழகாக இருக்கும்.
என்னைப் பொறுத்தமட்டில் 'பூவையர்' மீதான ரசனை அறிவது ஆண்களுக்கு அன்னையிடம் இருந்தே ஆரம்பமாகிறது. பல தருணங்களில் இணையிடம் அன்னையின் வாசனையை அறிவார்கள். அல்லது தேடுவார்கள். அடியேனும் தான்.
'ரோசாப் பூ' வின் ஆரம்பப் பாடசாலை நினைவுகள் அடுத்து வரும் பதிவிலும் மீண்டும் பூக்கும். தொடரும்.
நிசங்களால் நிறைந்த பூக்கள் அரசியின் கதைகள் இன்னும் இருக்கிறது. தொடர்ந்திருங்கள்...
அன்பில் விண்ணப்பம்...
'ரோசாப் பூக் காரிகை' -'பூக்களின் அரசி' பிடித்திருந்தால் பகிருங்கள்...
நன்றிப் பூக்களுடன்...
மனப்பறவை மனம் கொத்தும்!
பறக்கும்...
இருதய். ஆ