ஆகாசத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்கையில் உருமாறி உருமாறி காற்றில் மிதந்து கடக்கும் மேகச் சித்திரங்கள் மனதை விசாலமாக்கும்.
கணங்களில் காற்றில் கலைந்து மீண்டும் கூடி பலவிதங்களில் மாயம் காட்டும் மேக
வி…சித்திரங்கள் விரல்களின் தூரிகைகளுக்கு அப்பாற்பட்டது.
மனதை விசாலமாக்கும் விசித்திரங்கள் இன்னும் இன்னும் இந்த உலகில் நிறைய உண்டு. அறிவீர்கள்.
விசித்திரங்களை ஆராயாமல் சரணடையும் மனதிற்கு படிகளின் வழியே குதித்து குதித்து இறங்கும் மழைக்காலத்து மழைத்துளியும் விசித்திரம் தான்.
கேள்வியும் நானே. பதிலும் நானே…
பதிவின் தலைப்பிற்கும் இந்த தொடக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? கேள்வி எழுகிறது. பதில் தந்துவிடுகிறேன்.
நீண்ட ஆகாசமும், ஆகாசத்து மழைத்துளியும், மழைக்கு வித்தான மேகங்களும் போலவே 'இசைஞானி' இளையராஜாவின் இசையும் மனதை விசாலமாக்கும் விசித்திரங்கள் என்றால் ஒப்புக் கொள்வீர்கள் தானே.
இசை ராசாவின் இசையும் ஒரு விசித்திரம் தான்.
கண்களை மூடிக் கொண்டு இசைஞானியின் பாடல்களைக் கேட்டால் அகம் திறக்கும். அச்சமயம் கேட்கும் பாடல் நமக்கு எப்பொழுது எச்சூழலில் அறிமுகமானதோ அச்சூழலுக்கே மீண்டும் அப்பாடல் நம்மை அழைத்துப் போகும். அக்கணத்தில் மனம் உறையும்.
இப்பொழுது கண்களை மூடிக்கொண்டு ராசாவின் இசையில் உங்கள் மனசுக்கு நெருக்கமான பாடலை நினைத்துக் கொள்ளுங்கள். அந்தப்பாடல் உங்களை உங்களின் பழைய நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும்.
தற்போது என் காதுகளுக்குள்…
"புது ரூட்டுல தான் ஹொய்யா…
நடு ரோட்டுல தான் ஹொய்யா…
தினம் நின்றாடும் வெள்ளி நிலவு" …
-இசைஞானியின் 'மீரா' திரைப்பாடல் ரீங்காரமிடுகிறது. இதற்கு ஒரு நிசக்கதை உண்டு. சொல்கிறேன். சொல்வதெல்லாம் உண்மை.
ஒரு குவளைத் தேநீரும்…
இசை ஞானியின் இசையும்…
Have your cup of" tea"…
"காலம் கனிந்தது
கதவுகள் திறந்தது
…….
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே…
சரணம்2
நேற்றென் அரங்கிலே
நிழல்களின் நாடகம்…
இன்றென் எதிரிலே
நிசங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்தகாலம்"…
இசை ராசாவின் மடை திறந்த பாடலைக் கேட்டிருப்போம்.
-இக்காலம் வரை. மன்னிக்கவும். ஒரு திருத்தம். எக்காலம் வரையிலும் இசைஞானியின் மடை திறந்த இசை கரையோர வேர்களின் தாகம் தீர்க்கும் நதியாக பரவிப் பாய்ந்து இசைதாகத்தை தீர்த்தபடியே இருக்கிறது.
தீராஇசை
ஐந்து வருடங்களுக்கு முன்பு…
'News 18 தமிழ்நாடு' தொலைக்காட்சியில் 'அன்னையர் விருதுகள்' நிகழ்விற்காக மூன்று மாதத் திட்டத்தின் கீழ் வேலை பார்த்தபோது கிடைத்த அனுபவங்கள் அலாதியானது.
'நியூஸ்' தொலைக்காட்சியில் பணிபுரிந்தது எனக்குப் புதிய அனுபவமாகவே இருந்தது. செய்திப் பிரிவில் நடக்கும் தினசரி நிகழ்வுகளை அருகாமையில் இருந்து கண்ட அனுபவம் மறக்க இயலாதது.
பகல்பொழுதுகளில் சேனல்
எடிட்டர் இருக்க அவருடன் அமர்ந்து 'எடிட்' செய்வேன். சின்ன இடைவெளி எடுத்துக்கொள்ள தேநீர் அருந்த வெளியே செல்வேன். அப்படிச் செல்ல எண்ணிய ஒரு நாளில்
" சகோ. செந்தில்(எடிட்டர்)
'ப்ரோ' எதுக்கு வெளில போறீங்க. இங்க தேநீர் இருக்கு. 'Dinning' போங்க. டீ சாப்ட்டு வாங்க'என்றார்.
OK brother. என்றபடி
' dinning' சென்றேன். தேன் குப்பி வாங்கச் செல்கிறவனை தேனடை சேகரக் கூட்டிற்குள் அனுப்பினால் எப்படி இருக்கும். எனக்குப் பிடித்த 'தேநீர்' அங்கு விதவிதமான ருசிகளில் பாக்கெட்டுகளில் அடங்கி எனைக் கண்டு புன்னகைத்தன.
'மாதுளைத் தேநீர்' எனக்கு மிகவும் பிடிக்கும். தேநீரோடு பொழுதுகள் விடியும். தேநீரோடு பொழுதுகள் முடியும்.
'அன்னையர் விருதுகள்' விழா நாள் நெருங்கி வந்த இறுதி மாதத்தில்
காலை பத்து பத்தரைக்குச் சென்றால் இரவு 9 மணிக்கு வீடு திரும்புவேன். சில நாட்கள் வீட்டிற்குத் திரும்பாமல் அங்கேயே தங்கிவிடுவேன்.
வீட்டிற்குச் சென்றாலும் இரவு உணவிற்குப் பின் மீண்டும் சேனலுக்குத் திரும்புவேன். இரவில் உடன் பணிபுரிய வெளியில் இருந்து ஒரு எடிட்டரை பணியில் அமர்த்தியிருந்தார்கள். இரவில் எடிட்டிங் வேலை இருக்கும்.
'நடு ரோட்டுல தான்' 'மீரா' பாட்டுக் கதைக்கு வருகிறேன்.
இரவு மூன்று மணி. கண்கள் தேநீரைத் தேடும்.
மனம் 'ஆகட்டும் ராசாக் கண்ணு ந்தா கெளம்புறேன்' என தேநீர் உலாவிற்குத் தயாராகும்.
"நண்பரே. வாங்க. வெளிய போய் டீ சாப்ட்டு வரலாம். கொஞ்சம் relax - ஆ நடந்துட்டு வரலாம்" என உசுப்பேற்றி எடிட்டரை லாவகமாக வெளியே அழைத்துக்கொண்டு தேநீர் கடை நோக்கி நடையாய் நடக்க
'தினம் நின்றாடும் வெள்ளி நிலவாக'
'அப்பா கடை' குறித்த தகவல் கிடைத்தது.
"அப்பா கடை" என்றால் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் அனைவரும் அறிவார்கள். 'பார்ம்குரோவ்' ஓட்டல் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது இந்த "அப்பா தேநீர் கடை"
நடுநிசி தாண்டி திறந்திருந்த
'அப்பா தேநீர் கடை' அன்றைய மதுரைக் கால நாட்களின் 'Rewind' பொத்தானை மீண்டும் அழுத்தியது. அன்று
'90' -களில் மதுரையில் விடிய விடிய தேநீர்க் கடைகள் திறந்தே இருக்கும்.
கூத்தாடிகளாகச் சுற்றிய காலங்களில் இரவின் விசித்திரங்களாகத் தேநீர்க் கடைகள் எங்களை வரவேற்கும். பல கடைகளின் வாடிக்கையாளர்கள் நாங்கள். 'நாங்கள்' என்பதற்குள் 'மார்ட்டின், தாமஸ், குட்டி ராஜா, கிளிட்டஸ், பிரபு, சுகுமார், ஜோ'
பிறகு அடியேனும் அடங்குவேன்.
அது ஒரு பொற்காலம். சரி இக்காலத்திற்கு வருகிறேன்.
அப்பாகடையும், இசைஞானியின் இசையும்
நடுநிசி கடந்து சுமார் அதிகாலை 3.30 மணியளவில் அப்பா கடையின் கதவுகள் திறக்கும். முழுக்கதவுகள் திறக்கும் முன் பாதிக் கதவு திறந்த நிலையில் கடை உள்ளே சட்னி வகையறாக்கள் தயாராகி கடை திறந்ததும் நம்மைப் பார்த்து 'வாங்கண்ணே' என புன்முறுவல் பூக்கும். கடையின் முழுக் கதவு திறக்கும் வேளையில் இரவு பணியில் இருந்த 'கார்ப்பரேட்' நபர்கள் முதல் ஆட்டோ டிரைவர்கள் வரை இங்கே ஒன்று கூடிவிடுகிறார்கள். சுடச் சுட மசால் வடை, போன்டா, மெதுவடை அத்தனையும் ஏகபோகமாக தட்டுக்களை நிறைக்கும்.
'அண்ணே ரெண்டு டீ' …
-என்றபடி அப்பா கடையின் உட்புறச் சுவர்களைக் கண்டால் எங்கெங்கும் இசைஞானியின் புகைப்படங்கள். அறிய எண்ணுகையில் அறிந்த விசயம் ஆச்சரியப்படுத்தியது.
அப்பா கடையில் இசைஞானியின் பாடல்களைத் தவிர வேறு பாடல்களைக் கேட்கவே முடியாது. கடை திறந்தது முதல் கடை அடைக்கப்படும் வரை இசைஞானியின் மடை திறந்த பாடல்கள் ஓடிக் கொண்டே இருக்கும்.
எங்கள் கைகளுக்குள் தேநீர்க் குவளை வந்தமர்ந்தபோது இசை ஞானியின் பாடல் அதிகாலை ஒளியின் ஒலியாக…
"காற்றில் எந்தன் கீதம்…
காணாத ஒன்றைத் தேடுதே" …
எனக் கசிந்து காதுகளை நிறைக்க வயிறும் மனமும் நிறைந்தது. .
அன்றைய பொழுதின் தொடக்கமும் நேற்றைய பொழுதின் முடிவும் சங்கமிக்கும் இடமாக 'அப்பா கடை' முகம் சிரிக்கும்.
இசைக்கும் ராசாவின் பாடல்களைப் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கச் செய்த காரணிகளுள் தேநீர்க் கடைகளுக்கு பெரும் பங்கு உண்டு.
'தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்'
-'சிந்து பைரவி' திரைப்பாடல் 'ஆடியோ கேசட்' நாடா தேயும். ஆனாலும் ராசையாவின் 'இசை' மன வானில் தேயாத முழுநிலவாக என்றும் முகம் காட்டும்.
வழி நெடுக காட்டு மல்லியாக மனம் வீசும்.
'தேநீர்' இந்தியாவின் 'தேசியபானம்' என்றால் இசை ஞானியின் இசையை 'தேசிய கானம்' என்று சொல்லத் தான் வேண்டுமோ…
சொல்லாமலே விளங்கும் இசைஞானியின் இசை ராசாங்கம்.
மனப் பறவை பறக்கும்…