வண்ணமும், வாசனையும்
பூக்களின் மொழி...
எண்ணங்கள் அழகானால்...
வாழ்வு வளமெனும் வண்ணங்களால் மிளிரும்...
திரு ஓணப் பண்டிகை நல்வாழ்த்துக்கள்...
திருஓணப் பண்டிகை குறித்து நிறைய விஷயங்களை அறிய முடிந்தது. சென்னையில் கேரளத்து மக்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். பெரும்பாலும் சென்னை தேநீர்க் கடைகளில் சேட்டன்களைக் காண முடியும். இதனாலோ என்னவோ ஓணப்பண்டிகை மனதிற்கு நெருக்கமாகவே இருக்கிறது.
தமிழர் திருநாளான பொங்கல் திருநாளைப் போல கேரள மக்களால் அறுவடைத் திருநாளாக ஓணப் பண்டிகை 'கொல்ல வர்ஷம்' எனும் மலையாள ஆண்டின் 'சிங்கம்' மாதத்தில் 'ஹஸ்த்தம்' நட்சத்திரத்தில் தொடங்கி 'திருவோணம்' நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்கள் வரை திருவோணப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.
திருவோணப் பண்டிகைக்கான காரணங்கள் மகாபலி மன்னனின் வாழ்வைப் படித்து அறிகிறபோது (via-google) சுவாரஸ்யமான புராண காலத்துப் படம்போல விரிகிறது. படித்துப் பாருங்கள்.
திருஓணப் பண்டிகைத் தோரணங்கள்
திரு ஓணப் பண்டிகை நாளில் கேரள மக்கள் தங்கள் வீட்டு வாயில்களில் அத்தப் பூக்கோலம் இட்டு மையத்தில் குத்துவிளக்கு ஏற்றி மகாபலி மன்னனை வரவேற்கின்றனர்.
கேரளத்துப் பெண்கள் இந்நாளில் மரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடி மகிழ்வார்கள். இதைக் காணும் ஆடவர்களின் மனங்களும் ஊஞ்சலாடும்.
ஆடவர்கள் களரி, கயிறு இழுத்தல், படகுப் போட்டி போன்ற விளையாட்டுக்களில் பங்கெடுத்து உள்ளத்தில் உரம் ஏற்றி மகிழ்வர்.
விருந்து
கேரளத்தின் பாரம்பரிய உணவு வகைகளான அவியல், இஞ்சிப்புளி, மாங்காய், கூட்டுக்கறி என நீளும் பட்டியலுடன் பருப்புடன் நெய்யிட்டு சாம்பாருடன் தலைவாழையில் பூவன் பழம் வரை இடம்பிடிக்க....
கைகள் வடம்பிடித்து இழுக்க நகரும் தேர் போல அத்தனைப் பட்சணங்களும் இலையிலிருந்து வயிற்றுக்கு நகரும்.
'பிரதமன்' எனும் பாயசத்தோடு விருந்து நிறை(வடை)யும்.
எல்லாப் பண்டிகைகளுக்கும் ஒரு காரணம் உண்டு. காரணங்கள் எதுவாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். பண்டிகைகள் மனதை பண்படுத்துகின்றன.
மனங்களை ஒன்றிணைக்கின்றன. தன்னலம் மறந்து பிறர் நலம் பேண அறிவுறுத்துகின்றன.
உள்ளங்கைகளில் அப்பிச் சிவந்த மருதாணி போல எல்லாப் பண்டிகைகளும் மனம் முழுக்க மகிழ்ச்சியை உடுத்திவிட்டுக் கடக்கின்றன. புத்தாடையின் வாசனை புலன்கள் முழுக்க அப்பிக்கொள்ள அன்றைய மகிழ்ச்சி எல்லா நாட்களும் தொடர்ந்தால் மனம் கடக்கும் ஒவ்வொரு நாளும் திருவிழா தான்!
"எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை"
என்ற 'வானத்தைப் போல' திரைப்படப் பாடல் பார்க்கும் போதெல்லாம் கண்களில் ஒளித் திருநாள் ஒளிர்விடும்.
இருளை அகற்ற ஒரு தீக்குச்சி போதும். மனம் பூக்களாக மாற பண்டிகைகள் போதும். ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறக்கலாம். பூக்கலாம்...
பறக்கலாம். மனம் ஒரு பறவை...
Irudhy. A