About Me

Showing posts with label கதம்பப் பூக்கள்.... Show all posts
Showing posts with label கதம்பப் பூக்கள்.... Show all posts

Friday, January 21, 2022

உலாப் பூக்கள்... (முதற் பூ... )

Fly...

           மனம் கொத்தும் பறவை 

'உலாப் பூக்களை' தொடங்க நினைத்து பூக்கள் குறித்த நினைவில் இருக்கையில் 'கொரோனா' யுத்தத்தின் மூன்றாவது அலை ஆர்ப்பரிப்பின் வீரியத்தை அறிவித்துக் கொண்டிருந்தது செய்திப் பிரிவின் அலைவரிசை. 

 "பூவுலகு"  சத்தமில்லா போர்க்களத்திற்கு தன்னைப் பழக்கி இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. 

பெருந்தொற்றின் பிடி இறுக்கிக் கொண்டிருக்கையில் இரக்கமில்லாமல் சூழலுக்கு முரணான விஷயங்களைப் பேசுகிறது போல தோன்றலாம். தவறில்லை. 

இச்சூழலை பூவின் வழியே உணர்த்த விரும்புகிறேன்.


பூக்களின் ராணி "ரோசா". அறிந்ததே. முட்களுக்கு மத்தியில் தான் 'ரோசாப் பூ' தன் தின நாள் மொட்டுக்களை அவிழ்க்கிறது.

 முட்களுக்கு மத்தியில் மலரும் 'ரோசாப் பூக்கள்' போலவே நம் இன்றைய சூழல்கள் அமைந்திருக்கின்றன. அமைதலோடு 'நம்பிக்கைப் பூக்கள்' கையிலேந்தி பாதைகள் கடக்கலாம். பூக்காலம் திரும்ப பிரார்த்திக்கலாம்.

 சத்தமில்லா யுத்தத்தில் சத்தமின்றிப் பூக்கும் பூக்களை அறிய குறைந்தபட்சம் பூச்சந்தைகளுக்காவது போய் வந்தால் வண்ணப் பூக்களை அதனதன்  வாசனைகளை அருகிருந்து அறிந்து அனுபவங்களைப் பகிர ஏதுவாக இருந்திருக்கும். 

ஆனால் "அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்ல ராசா" என்கிறது 'கொரோனா' யுத்தக் களம். எனக்கும் அவ்விதம் கண்டு எழுதும் வாய்ப்புகள் இல்லை. 

    முதலில், பூக்கள் குறித்து எழுத முடிவு செய்தபோது 
' இத பாருப்பா. பூக்களைப் பத்தின சமாச்சாரங்கள்.... வலைத்தளங்களில்   வானத்து நட்சத்திரங்களாக விரிஞ்சு கெடக்கு.  சும்மா கெடக்காம நீ   வேற என்ன புதுசா சொல்லப் போற. கம்முனுகெட'-  என 'சம்சாரம் அது மின்சாரம்' திரைப்பட 'ஆச்சி மனோரமா' அவர்களைப் போல குரல் தொடுத்தது. மனசுக்குள்  இருந்த ஆமை' 'எழுதாதே' என வெளிநடப்புச் செய்தது. 

'எழுதும் முன் யோசிக்கலாம். எழுதவே யோசிக்கலாமா?
வெளிநடப்புச் செய்த
 முயலாமையை வெளியிலேயே விட்டுவிட்டு  கதவடைத்தேன். பூக்களின் பாடசாலைக் கதவுகளைத் திறந்தேன்.  


'மாலையில் பூக்கும் "வெள்ளிப் பூக்கள்" ... '
எனப்  பகிர்ந்தேன். மாலையில் பூக்கவிருக்கும் 'முதற் பூக்களை' மாலையாகக் கட்ட ஆரம்பித்தேன்.
 'முதற்பூ' எனச் சொல்லியபின் ஒரு பூவாக அல்லாமல்  பூக்கள் எல்லாம் ஒன்றோடொன்று விரல் பிடித்து மனம் பிடிக்கும்  பூக்களாக மலர்ந்து  மனம் முன் நின்றன. 


உலாப் பூக்களின்- 
' முதற் பூக்களுக்கு' முன்... 
 
தேநீரோடு உலாவைத் தொடங்குகிறேன்... 

 உங்களுக்கான "தேநீர்" ... 


சற்றே நீண்ட பதிவாகலாம். பூக்காட்டிற்குள் நுழைந்து பயணிக்கையில் சற்றே அலுப்புத் தட்டினாலும் ஓய்ந்து அமருங்கள். இது திறந்து கிடக்கும் பூக்காடு...


 எப்பொழுது வேண்டுமானாலும் உள் வரலாம். வெளிச் செல்லலாம். வருகைப்பதிவுகளோ, வரையறைகளோ ஏதும் பூக்களின் பாடசாலையில் இல்லை. இளைப்பாறிய பின் தொடருங்கள். 

வெள்ளியில் பூத்த "முதற் பூக்கள்" 


    ஒரு குழந்தையிடம் உன் அம்மாவை உனக்கு எவ்வளவு பிடிக்கும் எனக் கேட்டால் என்ன சொல்லும்? 


"இரண்டு கைகளையும் அகல விரித்து அவ்ளோ!... அவ்ளோ!... பிடிக்கும்" - 
என்று உற்சாகக் குரலெடுக்குமே"
அவ்விதம் தான் பூக்கள் விஷயத்திலும் என் மனம் கடை விரித்தது. 

கடை விரித்த பூக்கள் உங்கள் கண் மலர் முன்... 


'கதம்பப் பூக்கள்' ...

வீட்டு விஷேசம் என்றால் அறிந்த தெரிந்த  அனைவரையும் வரவழைத்து உற்சாகத் தோரணங்கள் கட்டுவோமே! அது போல 'உலாப் பூக்களில்' குறிப்பிட்ட ஒரு பூவோடு உலாவைத் தொடங்காமல் பூக்களின் குடும்பங்களை அழைத்து கதம்பங்களாக்கி உலாவைத் தொடங்குகிறேன். 

'கதம்பம்' என்றால் 'கலந்து' 'பலவித' 'கூட்டாக' எனக் கற்பிதம் செய்து கொள்ளலாம். 
'கதம்பம்' என்பது பூக்களின் 'கூட்டுக் குடும்பம்' என  எண்ணிக் கொள்வோம். இன்று தனித்தனி தீவுகள் போல வாழும் சூழலில் பூக்களின் கூட்டுக் குடும்பத்திலிருந்து உலாத் தொடங்கியது எதேச்சையாக நிகழ்ந்தது. முதலில் மனசுக்குள் எல்லோருக்கும் பிடித்த ஒரு வண்ணத்தில் தான் 'முதற் பூ' பூத்தது. ' நாளை மாலையில் வெள்ளிப் பூக்கள்' எனப் பகிர்ந்த பின் 'மனப்பறவை' தன் அலகில் பூக்குடை சுமந்து வந்து... 


  வண்ணப் பூக்கள் நிறைந்த கூடையை இறக்கி வைத்தது. பூக்களைச் சேர்த்து கதம்பமாக்கி விட்டேன். 

ஒரே கதம்பத்தில் அத்தனை பூக்களையும் கட்டி விட மனம் கட்டவிழ்த்தது. 
 மொட்டவிழ்க்கும் பூக்கள் எத்தனை வகைகளில் இருக்கிறது? பூக்களைத் தொடுக்காமல் மனம் கேள்வியைத் தொடுத்தது. 

முதுகலைத் தமிழ் முதலாமாண்டு பயின்றபோது சங்க இலக்கியத்தின் "குறிஞ்சிப் பாட்டு".   தொண்ணூற்றொன்பது வகையான பூக்களைப் பட்டியலிட்டது. முடியுமானால் நேரம் கிடைக்கும் பொழுது  குறிஞ்சிப் பாட்டைப் படித்துப் பாருங்கள். 
நடிகர் 'திரு. சிவக்குமார்' அவர்கள் '99' பூக்களையும் மனப்பாடமாகச் சொல்வதை அவரது நேர் காணலில் கண்டிருக்கிறேன். அவரது இளவல் 'திரு. சூர்யா' அவர்களும் மனனமாகச் சொல்லுவார். நான் தமிழ் இலக்கியம் பயின்ற காலத்தில் மனப்பாடமாகச் சொல்வேன். இப்பொழுது மறந்துவிட்டது. மீண்டும் அறிய வேண்டும். பூக்களின் பாதைக்குத் திரும்ப வேண்டும். 


'கதம்பம்' என்றதும் அதன் வண்ணங்கள் கண்களுக்குள் வண்ணக் கோலமிடும். அதன் வாசனைகள் நாசிகளில் புகுந்து 'பூக்காட்டிற்குள்' அழைத்துச் செல்லும். 
       கதம்பங்களில்  பச்சை, மஞ்சள், இளஞ்சிவப்பு, ஊதா, கனகாம்பரத்துச் செந்நிறம்,  வெள்ளை நிறத்தில் எனக் கலந்து ஊடு ஊடாக.... 
'மானே தேனே என சேர்த்துக்க..' - என திரு. கமல்ஹாசன் 'குணா' திரைப்படத்தில் கடுதாசிப் பாடலில் சொல்வாரே... அது போல கதம்பங்களும் தன் பூக்களோடு இடை இடையே இலைகளைச் சேர்த்துக் கொள்ளும். சேர்த்துக் கொண்ட இலைகளின் வாசம் கண்டவர்களை கைகளில் கொண்டவர்களைக் கிறங்கடிக்கும்.

' கதம்பங்கள்' கொடுக்கும்
'கிறக்கம்' மனசுக்குள் ஒர் உன்னத அனுபவத்தைச் சேர்க்கும். இதனால் தானோ என்னவோ 'கதம்பங்கள்' பெரும்பாலும் தெய்வங்களின் தோள்களுக்கு மாலைகளாகின்றன. 

எழுதிக் கொண்டே இருக்கையில் வெயில் நகர்ந்து நகர்ந்து வான் வீட்டிற்குள் நுழைய ஆரம்பிக்க மாலைப் பொழுது 'பொன்மாலைப் பொழுதாகி' கவிழ ஆரம்பித்தது. 


 பொன்மாலை கவிழத் தொடங்க மொட்டவிழ்த்த உலாப் பூக்களின்
முதற் பூக்களை அதன் வண்ணங்களோடு வாசனைகளோடு பதிவேற்ற தயாரானேன். அநேகமாக பகிரும் பொழுது 'பொழுது' போயே போயிருக்கும். காத்திருப்பூக்களுக்கு நன்றிப் பூக்கள். 

 வெள்ளிக் கிழமைகளில்' கதம்பங்களின்' விற்பனை அமோகமாக இருக்கும். அநேகமாக உங்கள் வீட்டுப் பூக்கூடைக்குள் கதம்பங்கள் வாசனையோடு வீற்றிருக்கலாம் அல்லது தெய்வங்களின் திருவுருவப் படங்களில்  அதன் வண்ணங்களோடு வாசனைகளோடு காற்றில் அசைவாடிக் கொண்டிருக்கலாம்.

கதம்பங்களோடு சேர்த்துக் கட்டப்படும்' மரிக்கொழுந்து' ,'துளசி' இலைகளின் வாசம் உங்கள் நாசிகளில் புகுந்து உன்னத நிலைக்கு கூட்டிச் செல்லலாம்.

பலவித வண்ணப்பூக்களை தன்னுடன் இணைத்துக் கொண்ட  'கதம்பம்' எனும் உன்னத கூட்டுக்குடும்ப பூக்களைப் போல  'கூட்டுக் குடும்பங்களும்' நம் வாழ்வில்  ஓர் உன்னத நிலை தான். 

"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை"... 


 பூக்களின் பாடசாலையில் இணைந்தமைக்கு நன்றிப் பூக்கள்... 
உலாவில் தொடர்ந்திருக்க
வரவேற் பூக்கள்... 

தொடரும்' உலாப் பூக்களில்' மனம் கவரும் 'பூவுடன்' சந்திக்கிறேன். 

நட் பூ.. உடன் வேண்டுகோள்... 

பூக்களின் உலா உங்கள் மனதை வசப்படுத்தியிருந்தால்?... 
இதன் வாசனையை அறிந்தவர்களுக்கும் கடத்துங்கள். 

               நன்றிப் பூக்களுடன்... 



மனப்பறவை மனம்கொத்தும்
பறக்கும்... 


இருதய்-ஆ
  




அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...