Praise the Lord...
மனப்பறவை.com
"நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே
…
நீங்களெல்லாம் சொற்பனந்தானோ
பல தோற்ற மயக்கங்களோ
…
கற்பதுவே கேட்பதுவே கருதுவதே
நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ ki
உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ
…
வானகமே இளவெயிலே மரச்செறிவே
…
நீங்களெல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சிப் பிழைதானோ
…
போனதெல்லாம் கனவினைப்போல்
புதைந்தழிந்தே போனதனால்
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ
…
காலமென்றே ஒரு நினைவும்
காட்சியென்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அங்குக் குணங்களும் பொய்களோ
….
காண்பதெல்லாம் மறையுமென்றால்
மறைந்ததெல்லாம் காண்பமன்றோ
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய்தானோ"…
-மகாகவி பாரதியார்
வரிக்குதிரையின் மேல் இயற்கை வரைந்த கோட்டுச் சித்திரம் போல மகாகவி 'பாரதியாரின்' பாடல் வரிகள் மனசுக்குள் எழுத்துச் சித்திரங்களாக விரிந்து 'முண்டாசுக் கவி' பாரதியின் நெற்றித் திலகம் போலவே தீர்க்கமாக மனசுக்குள் பதிந்து விடும்.
பாரதியின் பாடல் வரிகளைக் கண்ணுறுகிறபோதெல்லாம் வரிக்குதிரையின் பாய்ச்சலைப் போல 'மனக் குதிரை' வரிக் குதிரையின் வேகமெடுக்கும்.
வேகத்துடன் நிதானமாகவே சித்திர உலாவைத் தொடர்கிறேன்.
"ஹலோ" …
'ஒரு நிமிசம் நீங்க எப்பவுமே நிதானமா ராத்தூக்கத்துக்கு முன்னாடி தானே பதிவுகள' upload' பண்ணுவீங்க. என்னமோ புதுசா நிதானத்துடன் "சித்திர
உலாவை" தொடர்கிறேன்னு பவுசு காட்றீங்க'.
இது "மனப்பறவை" கூட்டிற்குள்ளிலிருந்து வரும் மனக் குரல்கள்.
ரொம்பச் சரி. ரொம்பச் சரி. ஒத்துக்கிறேன்.
என் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்றுவிடுவதில் தொடங்கி எல்லாவற்றிலும்
தாமதப்படுவதே எனது வாடிக்கை ஆகிவிட்டது.
" படிக்கிறப்ப நீங்க ஸ்கூலுக்கு சீக்கிரம் போயிருந்தா தான. என்னையும் சீக்கிரம் ஸ்கூல்ல விடுவீங்க. இப்பொழுதெல்லாம் மகன்'Gabree' திட்டுகிறான்.
தாமதங்களுக்கு மன்னிக்கவும். தாமதமாகப் பகிரும் போதும் 'late comer' ஆக இல்லாமல் வாசிப்புப் பதிவேட்டில் விடுபடாமல் வருகை புரிந்து வாசித்து உற்சாகம் அளிக்கும் அனைவருக்கும் நன்றிகள்.
"சித்திரம்" குறித்து இது மூன்றாவது பதிவு.
எழுதத் தொடங்குகையில் தொடரியாக எழுதவேண்டும் என்ற எந்த முன் மனப் பதிவும் எனக்கு இல்லை.
மாயச்சித்திரங்கள் போல மனசுக்குள் நிகழ்ந்த மாயமாக இப்பொழுது சித்திரப் பதிவுகளைத் தொடராக்குகிறேன்.
வண்ணத்துப் பூச்சியின் உடலில் இயற்கை தூவிய வண்ணங்களைப் போல அல்லாமல் சித்திர உலகம் வண்ணங்களற்ற வர்ணங்களாக தன் வானை விரித்தது. விரிந்த சித்திர வானில் வாழ்வின் எண்ணங்கள் வண்ணங்கள் சேர்த்தது.
தொடர்ந்து வாசித்து உற்சாகப்படுத்துவதால் சித்திர உலாவைத் தொடங்குகிறேன். வாசிக்கும் இனியவர்களால் இதுவும் சாத்தியப்படுகிறது.
இனியும்அவர்களால் (உங்களால்) மேலும் வசமாகும் என 'மனப்பறவை' சிறகு விரிக்கிறது.
வரைகலையில் தூரிகை கொண்டு உயிர் பெறும் சித்திரங்களைப் போல உயிர் கொண்டு உலகைத் தரிசிக்கிற முதல் நொடியிலிருந்து மனச் சித்திரங்களும் இதயத்திற்குள் இடம்வலமாக அசைவாடி இடம்பிடிக்கின்றன.
நானும் மனச் சித்திரங்களை முதன்மைப்படுத்தியே தொடரவிருக்கிறேன்.
"நோக்குவன எல்லாம் அவையே போறல்"
-என்கிற இலக்கண மரபு போல
காண்பவை யாவும் சித்திரங்களாகத் தான் தோன்றுகின்றன. இருப்பினும் காண்கிற யாவும் மனசுக்குள் சித்திரச் சட்டகமாக உறைந்து விடுவதில்லை.
'சில.. பல' என்கிற விகிதாச்சார முறைமையிலேயே சில காட்சிகள், நிகழ்வுகள் மனசுக்குள் சித்திரமாக உறையாமல் மாயக் குமிழ்களாக காற்றில் பறந்து உடைகின்றன.
உடைபடாத குமிழ்களாக மாறும் சித்திரக் காட்சிகள் அழியா மனச்சித்திரங்களாக எப்பொழுதும் உயிர்ப்போடு அசைவாடிக் கொண்டே இருக்கின்றன. அப்படியான மனச் சித்திரங்களின் உலாவைப் பகிர்கிறேன்.
உங்களுக்குள்ளும் நீங்கள் அடைகாக்கும் மனச் சித்திரங்கள் நிறைய இருக்கலாம். சித்திர உலாவிற்குள் நுழைந்து வெளி வருகையில் உங்கள் மனம் உங்களின் மனக் கூட்டிற்குத் திரும்பலாம். உங்கள் மனசுக்குள் அழிக்க முடியாது உறைந்து கிடக்கும் அசைவாடும் மனச் சித்திரங்களைப் பார்க்கலாம்.
சித்திர உலாவில்…
வானகமே இளவெயிலே மரச்செறிவே
…
நீங்களெல்லாம் கானலின் நீரோ
வெறும் காட்சிப் பிழைதானோ…
காணும் காட்சிகளில் சில பிழையாகும்.
சில மழையாகும்.
சில சிற்பியின் சிலையாகும்.
இன்னும் சில…
இன்னும் பல…
எல்லாம் உள…
உளமெனும் களத்துக்குள்
நிழலாடும்…
மனச் சித்திரங்கள்
மலையாகும்...
மலைக்க வைக்கும்!
மழையென மனமதை நனைக்கும்.
மறக்குமா நெஞ்சம்?...
சித்திரப் பார்வையில்.....
மறக்க முடியா
முதற் "மனச் சித்திரம்"
உயிர் கொண்டு கண் திறக்க விழியின் கருமுடி தூரிகையாக எதிர் உறையும் அம்மாவின் முகமே....
மனம் அறிந்த அன்பில் நிறை முதல் அழகுச் சித்திரம்! …
உணர்வுகொண்டு மறைவில் இலைமறைகாயாகும் அப்பாவின் சித்திரத்து ஒண்ணா அன்பில் மறை முகமாய்…
தன் முகம் மறைத்து
உணர்வில் உறையும்...
மனம் அறிந்த உணர்வின்
முதற் சித்திரம்!...
'அப்பா!' ...கண்டிப்பு காட்டி கல்விக் கடலில் நீந்திக் கரையேற அர்ப்பணிப்பில் நிறைந்த ஆசிரியர்கள் மனம் அறிந்த குருச் சித்திரம்!...
எல்லைகளற்ற வெளியில் நாளைய குறித்த கவலைகளின்றி சிறகு விரிக்கும் பறவைகளாக வாழ்வு வானில் பறக்க சிறக்க சிறகு தரும் எதிர்பார்ப்புகளற்ற பறவைகளின் முகமாக மனம் அறிந்த சித்திரம்
நட்பு!...
இன்னும் இன்னும் என மனச் சித்திரங்கள் சிறகு விரித்து நீளும் வாழ்வில் 'றெக்கை' தட்டிப் பறக்கும். பறக்கலாம்.
தூரிகைகள் தேவையில்லை. மனமே தூரிகை. மறக்க முடியா நினைவுகளே சித்திரங்கள்.
மனச் சித்திரங்களைக் காணும் முன் சித்திரங்கள் குறித்த பொதுப் பார்வைக்குத் திரும்புகிறேன்.
புனைவுச் சித்திரங்கள், புனையா சித்திரங்கள் என்ற இரு வகைகளுக்குள் கருத்தியலாக, பண்பியலாக, அழகியலாக சித்திர உலகை அறியலாம்.
மனக் கூற்றின் படி…
"புனையாச் சித்திரம்"
கண்டதை அப்படியே சொல்வது புனையாச் சித்திரம்.
"அதிகாலை…
குளியல் முடிந்து
கேசத்தின் ஈரக்கசிவோடு
ஒருபக்க தலைசாய்த்து
கேசம் உலர்த்தி..
ஒப்பனைகளற்ற வெளியில்
முகம் சிரிக்கும்…
அவள்!
கண் கண்ட
புனையாச் சித்திரம்"…
மனக் கூற்றின் படி
"புனைவுச் சித்திரம்" …
கண்டதை அப்படியே கடத்தாது கடத்தலில் வண்ணங்கள் குழைத்து எண்ணங்கள் உடுத்தி உலா வந்தால் அது
புனைவுச் சித்திரம்!...
"அதிகாலை…
குளியல் முடித்து
கருகரு கேசத்தின்
ஈரம் உலர்த்தி…
நடுவகிடு கோடெடுத்து
நட்ட நடுவில்..
வட்டத்தில் செம்பொட்டிட்டு
வீட்டுக் கூடத்தில்
இள மஞ்சள்வெயில் காயும்
அவள்…
மனம் அறிந்த
புனைவுச் சித்திரம்!"..
அப்புறம்…
மனம் அறிந்த
- "அழகியல்" சித்திரம்…
" இறுகக்
கட்டிக் கொள்கையில்…
இப்படியா கண்களை
மூடிக் கொள்(ல்)வாய்.
கண்களைத் திற கண்மணி…
இது நிலாக் காதல்!
கண்களைத் திற…
நிலவின் ஒளியில்
காயட்டும் நம் காதல்!"....
கருத்தியல் சித்திரத்துடன் சித்திரப் பார்வையை இந்த வாரம் முடிக்கிறேன்.
திருமணத்திற்குத் தயாராகும் க(ன)ணவான்களுக்கு வாழ்த்துக்கள். உலா முடிவில் மறைவில் நிற்கும் திருவிழாத் தேராகும் திருமணம் முடிந்த கண(ன)வான்களுக்கு என்னையும் சேர்த்து...
பார்த்து ரசிக்க மட்டும்
இந்த கருத்துச் சித்திரம்…
'மனம்' பத்திரம்…
"சித்திர உலா" தொடரும்…
"மனப் பறவை" பறக்கும்…
நினைவுகள்..
சித்திரங்களாகும்!