விரல்கள் அறிந்த
முதல் சித்திரம்…
"அ" கரம்.
கண்கள் அறிந்த
முதல் சித்திரம்…
மனம் அறிந்த முதல்
சித்திரம்
"இதயம்"...
உதடுகள் அறிந்த
முதல்
சித்திரம்…
"முத்தம்"...
சித்திர உலக வானத்தில் நட்சத்திரங்களாக விரியும் மனச் சித்திரங்கள் எப்பொழுதும் விசித்திரமானவைகள்.
எந்த எண்ணங்களுமின்றி நீளும் வானத்தைக் காண்கையில் கண்களுக்குள்
"கலைடாஸ்கோப்" காட்சிகளாக மேகக் கூட்டங்கள் சித்திரங்களாக உருமாறி உருமாறி தன் சித்திர உலகை அறிமுகப்படுத்தும்.
நிமிடங்களில் வானில் மாறும் மேகச் சித்திரங்கள் ஆச்சரியப்படுத்தும்.
இரவில் விழித்துக் கொள்ளும் விசித்திர உலகைப் போல சித்திர உலகமும் விசித்திரங்கள் நிறைந்தது.
சித்திரப் பார்வை..
நிறங்களோடு கூட்டுச் சேராமல் இயல்பில் வண்ணங்களின்றி வரையும் "புனையாச் சித்திரங்கள்" ஒப்பனையற்ற அழகின் அற்புதங்கள்.
அம்மாவை ஒப்பனையின்றிப் பார்ப்பது அழகு!
காதலியை ஒப்பனையோடு
பார்ப்பதே அழகு!
எம்முகமாயும் மனைவியை பார்த்தலே அழகு!
புனைவில் பொய் அழகு. சித்திரங்களுக்கு எது அழகு?
மனசுக்குள் கேள்வி குடை விரிக்கிறது?
சித்திரங்களுக்கு "பண்பியலும், அழகியலும்" தான் அழகு.
மத நல்லிணக்கம் சொல்லும் பண்பியல் சித்திரம் ...
வார்த்தைகளுக்குள் வளைக்க முடியா அற்புதம்.
இரு கை விரல்கள் கொண்டு அமைக்கும்...
"இதயச் சித்திரம்" காதல் உலகில் என்றும் "அழகியல்" சரித்திரம்.
கற்பனைகளுக்கு எட்டாத உயரம் சித்திர உலகின் வானமாக உயர்வதும்
விரிவதும் அழகு. இத்தனை அழகும் மொத்தமாய் சத்தமில்லாமல் குழந்தைகளின் சித்திர உலகில் விரிவது கொள்ளை அழகு.
எவ்வித வரையறைகளுக்கும், சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்படாது காட்டாற்று வெள்ளமாக மனக் கரை உடைக்கும் சித்திரங்கள் குழந்தைகளின் சித்திர உலகத்து அற்புதங்கள்.
"No Logic" …
"Only Magic"...
-இவைகள் தான் குழந்தைகளின் சித்திர உலகத்து தத்துவங்கள்.
ஒரு வானம்…
இரண்டு சூரியன்!
பெருங்கடல்…
எழும் பேரலை..
சிறு தோணி!
தோணியில்
ஒரு சிறுவன்…
மோதும் அலை மீது வலை வீசி மீன்களை அள்ளுவான்.
இவ்வகையான குழந்தைகளின் சித்திர உலகிற்குள் நுழைய வேண்டுமென்றால் "Rules ரங்காச்சாரியாக" இருக்கக் கூடாது.
"அந்தக் குழந்தையே நான் தானப்பா!"
என்கிற விதமாக மாற வேண்டும்.
குழந்தைகள் வரையும் சித்திரங்களில் அவர்களது மனநிலை இலை மீதமர்ந்த பனித்துளியாக பிரதிபலிக்கும்.
சிறு பனித்துளி சூரியனைப் பிரதிபலிப்பது போல குழந்தைகளின் சின்னஞ்சிறு சித்திரங்கள் வானளவு யோசிக்க வைக்கும். அப்படியொரு அனுபவத்தை
நிச்சயம் நீங்களும் கடந்து வந்திருக்கலாம். இதோ நான் அடைந்த கடக்க முடியா ஓர் அனுபவத்தைப் பகிர்கிறேன்.
அன்றொரு நாள்…
ஞாயிற்றுக் கிழமை…
இது கதையல்ல. சித்திரத்தின் விதை. மனசுக்குள் வேர் பிடித்த நிசமான "
சித்திரக் கதை" .
வாரத்தின் மற்ற கிழமைகளிலிருந்து விடுபட்டு தனித் தீவு போல தனித்துத் தெரிகிற கிழமை 'ஞாயிறு'.
"கொண்டாடக் கண்டுபிடித்துக் கொண்டா ஒரு தீவு"
எனும் 'ஜீன்ஸ்' திரைப்படப் பாடலைப் போல
மனம் 'ஜாலிலோ ஜிம்கானா' பாடும்.
மனம் அரை டவுசர் போட்டுக்கொண்டு 'ஹாயாக' விட்டத்தைப் பார்த்தபடி
"இன்னும் கொஞ்ச நேரம் தூங்கினாத்தான் என்ன? " என புரண்டு படுக்க அறிவுறுத்தும். உடலும் தயாராகும்.
'ஞாயிற்றுக்கிழமை' ஒரு கலவையான நாள்.
"வேலைகள் இருக்கும். ஆனா இருக்காது"
- என்ற நிலையில் பொழுது கடக்கும். சில கணங்கள் கூழாங்கல்லின் குளிர்ச்சியை மனசுக்குள் கடத்தும். அப்படியான ஒரு கணம் ஒர் ஞாயிறன்று விரிந்தது.
"அப்பா... நான் படம் வரையப் போறேன். எதுனா சொல்லுங்க வரையறேன்"
-மகன் கைப்பேசியை விடுத்து, தொலைக்காட்சியை தொலைவில் வைத்து என் மனக்காட்சியில் அழகான சித்திரம் போல நின்றான்.
கைப்பேசியை விடுத்து கைகளில் வெள்ளைத்தாள், பென்சிலோடு மகன் நின்ற காட்சி
"உன் எண்ணம்...
உன் வண்ணம்"
-என சொல்லாமல் சொல்லியது.
மகன் கேட்டபடி அவன் வரைவதற்கு ஒரு சூழலைச் சொன்னேன்.
மகனுக்கு இப்பொழுது ஏழு வயது. நன்றாகச் சித்திரம் தீட்டுவான்.
மகனது மூன்று வயதிலிருந்தே அவனை என் மடியில் வைத்துக் கொண்டு நிறைய கிறுக்குவேன். எனது சித்திரங்கள் கிறுக்கல்களாகத் தான் தளிர்க்கும்.
காகிதத்தில் பட்டம் விட்டிருப்பார்கள். நான் காகிதத்தில் பட்டம் வரைந்து காகிதத்திலேயே பறக்க விடுவேன்.கிறுக்கல்களைக் கண்டு மகன் அழகாய்ச் சிரிப்பான். ஒரு நாளைக்கு ஐம்பது பட்டங்களாவது வரைந்து பறக்க விட்டிருப்பேன். அன்று ஆரம்பித்த பயணம் மகன் சித்திரம் வரைய சூழல் சொல்வதில் வந்து நிற்கிறது.
இதோ, இப்பொழுது சூழல் கேட்டு நிற்கிறான்.
சித்திரத்துக்கான சூழல்
"டேய். குட்டிப் பையா. ஒருத்தன் குளக்கரையில் அமர்ந்து தூண்டிலிட்டு மீன் பிடிக்கிறான். வரை பார்க்கலாம்"
-என சூழல் முடித்து என் சோம்பல் முறித்து காலைக் கடமைகளை முடித்து தேநீர் கோப்பையோடு அமர்ந்தபோது வரைந்து முடித்த சித்திரத்தைக் காட்டினான் மகன்.
மனசுக்குள் 'தீபாவளிக் கம்பி மத்தாப்பு' நட்சத்திரப் பொறிகளாக விரிந்தது. பூ வானமாக உயர்ந்தது. சங்கு சக்கரமாகச் சுழன்றது.
மகன் வரைந்த சித்திரத்தில் நான் சொன்ன சூழல் இருந்தது. ஆனால் முற்றிலும் வேறாக மாறியிருந்தது.
மகன் வரைந்த சித்திரம்
எழுதிமுடித்த சொத்துப் பத்திரமாக மனசுக்குள் பத்திரமானது.
அகன்று விரிந்த கடல். ஒரு படகு. படகில் இருந்தபடி வலையிட்டு இருவர் மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆச்சரியமாக இருந்தது. வண்ணம் மட்டும் நான் நிரப்பினேன். புனையாச் சித்திரம் மகனுடையது.
என் மனசுக்குள்…
"குளக்கரை,
ஒற்றைத் தூண்டில்,
மீனுக்கான காத்திருப்பு,
அமைதலான அமர்வு" -
இவைகளே சித்திரங்களாக விரிந்தன.
மகன் சிந்தனை வேறாக இருந்தது. எனது வேர் பிடித்த கிளையில் பூக்களும், காய்களும், பழங்களும் நிறைந்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.
மகன் மனசுக்குள்-
" அகன்று விரிந்த கடல்...
அலையிலாடும் படகு,
நிறைய மீன்களை அள்ளத்தக்க வலை!"
-என சித்திரக் காட்சிகள் பிரமாண்டமாக விரிந்து நின்றன.
மகன் குளக்கரையில் ஒற்றைத் தூண்டிலோடு காத்திருக்கவில்லை. படகு ஏறி பெரிய வலையோடு கடலுக்குள் பயணப்பட்டு விட்டான். அவனது சிந்தனை சிறகு விரித்த பறவையாக இருந்தது.
'பறவை' சிறகு விரிப்பதைக் காண்பது ஆகச் சிறந்த 'அழகியல்' காட்சியல்லவே!
நானும் எனது மகனின் "சித்திரச் சிறகு" விரிந்ததை எண்ணி அந்த ஞாயிறை "அழகியல் ஞாயிறாக" மனசுக்குள் பத்திரப்படுத்திக் கொண்டேன்.
தொலைக்காட்சி, கைப்பேசி இரண்டுமற்ற அற்புத உலகத்திற்குள் குழந்தைகளை கைப்பிடித்து அழைத்துச் செல்ல நம் கைவிரல்கள் பிடிக்க வேண்டியதில்லை. தூரிகைகளை விரல்களில் தந்தால் போதும்.
குழந்தைகளின் எண்ணம் வண்ணங்களாக சித்திர வானில் விரியும்.
"சித்திரங்கள்"...
நீளும் வானமாகும்.
மனம் பறக்கும்...