About Me

Showing posts with label சித்திரப் பூ நெனப்பு.... Show all posts
Showing posts with label சித்திரப் பூ நெனப்பு.... Show all posts

Friday, April 29, 2022

சித்திரப் பூ(செம்பருத்தி)

Fly...



             மனம் கொத்தும் பறவை 

'ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' 

  • என்பது போல சில நினைவுகள் வேறு சில ஞாபகங்களையும் விரல் பிடித்துக் கூட்டி வரும். 


'வர்லாம்… வா… வர்லாம்… வர்லாம்… வர்லாம்… வா…'

மனம் 'பஞ்ச்' பாட்டுக்கட்டி "சித்திரப் பூவை" வரவேற்கிறது. 


பூக்களின் பாடசாலையில்… 



         சித்திரமாக விரியும்

               "செம்பருத்தி" 




"மரக்கொடியில் 

ஊஞ்சலாடும் 

தொங்கு விளக்காக 

சித்திரப் பூ! 

     கூந்தல் சூழும்… 

      கூந்தல் சூடா! 

       ஆச்சரியப்  பூ…

இச் செம் பூ! "


 சித்திரக் கார 'செம்பருத்திப்  பூ' எனக்குள் உலா வந்ததும்,

இப் பூவினால் மனசுக்குள் முகிழ்த்த  அன்றைய தருணங்களும் தங்கமயமானவைகள். இப்படியான தங்கமான தருணங்கள் உங்களுக்குள்ளும் பூக்கலாம். 

பூக்கவே தொடர்கிறது

" உலா"… 


" தேநீர்" தருணம் 




'மாமல்லபுரம்' உங்களை இனிதே வரவேற்கிறது. 



"students… line form" பண்ணி நடந்து வாங்க. இப்ப முக்கியமான இடங்களப் பார்க்கப் போறீங்க. கவனமா பாருங்க. 

'சார்' சொல்ற விஷயங்கள கவனமாக் கேளுங்க. 

'Tour' முடிஞ்சு ஸ்கூல் போனதும் "மாமல்லபுரம்" சிறு குறிப்பு கட்டுரை எழுதணும்"

" Yes Miss… "


இது போன்ற சம்பாஷணைகள்

பள்ளிக் காலத்து இன்பச் சுற்றுலாக்களில் நிகழ்வதுண்டு. அந்நாட்களின் இன்பச்சுற்றுலாக்களை மறக்க முடியுமா? 


அறிவியலும், அழகியலும்

" உள்ளே"...

" வெளியே"... ஆடும் களம். 

பள்ளிக் காலத்து நிகழ்த்துக் களம்!

இனி...


இன்பச் சுற்றுலாவில்… 


" வெண்ணெய் உருண்டை பாறை"



இன்பச் சுற்றுலாவில் தொடரும்   உரையாடல்கள் கற்பனையே


 சரிவிலும் சரியாது உருளாது நிற்கும் 'வெண்ணெய் உருண்டைப்பாறை"யை மாணவர்கள் வாய் பிளந்து பார்க்கிறார்கள். 


"டேய்… எப்புடிடா! இம்புட்டுப் பெரிய பாறை உருளாம நிக்குது?" 


' யாரு சலச்சலனு பேசுறது. கவனமா கேளுங்க. 

இந்தப் பாறைக்கு "வெண்ணெய் உருண்டை பாறை- னு பேரு'. 


"யாருடா பேரு வச்சது. வெண்ணெய் உருகி வழுக்கிக்கிட்டு ஓடுமே… டா!....?! 

பாறை வழுக்காம நிக்கிது!???" 

மாணவன் ஒருவன் வாய் பிளந்து பாறையை அதிசயமாகப் பார்க்கிறான். அழகியல் விழித்துக் கொள்ள...


ஆராய்ச்சி ஆசிரியர் கபடி ஆடி உள்ளே வருகிறார்.


"Students… இந்தப் பாறை உருளாம நிக்கிறதுக்குக் காரணம் அறிவியல் பூர்வமானது. 

'புவிஈர்ப்பு விசை' படிச்சிருக்கீங்கள்ல…

இந்த இடத்துல இருக்க புவிஈர்ப்பு விசை…" 


மன்னிக்கவும். 

அறிவியல் ஆசிரியரின் குரல் 'mute' செய்யப்பட்டுள்ளது. 

அறிவியல் காரணங்கள் இன்பச் சுற்றுலாவை இன்னல் சுற்றுலாவாக்கிவிட்டது. 


வாய் பிளந்து அதிசயத்த கணங்களுக்கு மனம் மீண்டும் திரும்பும். ஆனால்,

" சிறுகுறிப்பு வரைதல்" வரைபடமாகி மீண்டும் அறிவியல் ஆசிரியரின் முன் நிறுத்தும். இப்படியான இரு தலை ஆட்டங்கள் பல இடங்களில் கபடி ஆடும். 


நான் அப்படியொரு கபடி ஆட்டத்தை எனது பள்ளி நாட்களில் ஆடியிருக்கிறேன். ஆட 'சித்திரப் பூ' 'விசில்' ஊதி எல்லைக் கோடிட்டு ஆட்டத்தை துவங்கி வைத்தது.

 

"நான் இந்தான்ட… அந்தான்ட ஓடி கட்டக்கடைசியாக எல்லைக்கோட்டிற்கு வெளியே சென்றுவிட்டேன். 


அன்று… 


" தூயமரியன்னை மேல்நிலைப் பள்ளி"

 

அறிவியல் புத்தகம் புதியது. தாளின் வாசனை கமகமத்தது.


எப்பொழுதும் போலவே புதிய புத்தகத்தின் வாசனை நுகர்ந்தபடி பக்கங்களில் உள்ள படங்கள் பார்த்தபடி கண்கள் இடம் வலம் கபடி ஆடியது. நடுவில் ஒரு பக்கம் நகராமல் நின்றது. 


பக்கத்தில் அதுவரை நான் அறியா பூ ஒன்று முகம் மலர்ந்து நின்றது. 


நான் தாளின் பக்கத்தைச் சொல்கிறேன். 

"பூங்கதவே… தாழ்திறவாய்… 

பூவாய்… செம்பாவாய்.." 

பாடல் ஒலிக்கிறது. 

பக்கம் புதியதொரு பூவின் கதவு திறந்தது. 



அதுவரை நானறிந்த பூக்களிலிருந்து சற்றே வித்தியாசமாக இருந்தது சித்திரப் பூ 'செம்பருத்தி'.


"இதுவரைக்கும் இந்தப் பூவப் பார்த்ததே இல்லயே. படிக்கிறதுக்கு  வச்சிருக்காங்கன்னா எதுனா சமாச்சாரம் இல்லாம இருக்காது". 

திருவாளர் திரைக்கதை மன்னன். 'கே. பாக்யராஜ்' அவர்கள்  போல மனம்  சொல்லியது. 

மறுபக்கம் புரட்டியபோது

சித்திரப் பூவைச் சில்லு சில்லாக்கி பாகம் பாகமாகப் பிரித்து பாய்மரம் ஏற்றியிருந்தார்கள். 


"அடப் பாவிகளா. சல்லி சல்லியா ஆக்கிப் புட்டீங்களே. இத நாம வேற படிக்கணும்? . வரைஞ்சு பாகம் குறிக்கணுமா?. 

இதென்னது. சூல் பையா?

பையெல்லாம் இருக்கா? 

பையப் பைய மனம் பூவின் விலாசம் அறிய 'அல்லி வட்டம்', 'புல்லி வட்டம்' என சித்திரப் பூ கட்டம் கட்டியது. 


 அறிவியலில் இயற்பியல் தராசு, பாதரசமானி, வெப்பமானி, தக்கையுடைய கண்ணாடிக்குடுவைகள் என கொஞ்சம் சமாளித்து  வரைந்திருக்கிறேன். 


 "சவாலே சமாளி" என சித்திரக்கார 'செம்பருத்தி' முஷ்டி மடக்கி கோதாவில் தள்ளியது. 

"நான் வேணும்னா இந்த ரோசா, முல்லை, மல்லிகை அப்டிக்கா வரையட்டுமா?" 

எனக் கேட்க அந்த வகையறாக்களுக்கு இங்கு அனுமதி இல்லை"- என பாடமுறைமை மறுப்புக் கடிதம் நீட்டியது. 


" கடுதாசியாவே எழுதியாச்சா! அப்ப வரைஞ்சு தான் ஆகணுமா?"


' " L " board மாட்டாத குறையாக… 

"வரைஞ்சான்.அழிச்சான்.

திட்டு வாங்குனான். ரிப்பீட்டு…" 

-என செம்பருத்தியை கரிய மேனி உடையாளாக உருமாற்றி ஆசிரியர் பார்வைக்கு அனுப்ப ஆசிரியர் ரொம்ப

' ஸ்ட்ரிக்ட்டாக'

" செல்லாது… செல்லாது… 

மறுக்கா. வரை… 

மறுக்கா வரை" 

என  கபடி ஆட வைத்தார். 


கடுப்பான நான் 

' இனி ஆவறதில்ல. பேசாம அப்பாகிட்ட குடுத்து வரைய வச்சிரலாமா?' என யோசிக்க… 

இந்த இடத்தில் இலவசமாக இன்னுமொரு நினைவுகள் விரல் பிடிக்கிறது. 


காரணம் 

'செம்பருத்தியின் நெனப்பு'. 


எனது தந்தை ஆசிரியர் பணியில் இருந்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்தார். நன்றாக வரைவார்.

"நன்றாக"

என்பதை' repeat

mode' - ல் மீண்டும் படியுங்கள். 

  வீட்டில் எனக்கு 'வகுத்தல் கணக்கு' சொல்லிக் கொடுத்திருக்கிறார். அபூர்வமான நாட்கள் அவை. 

சுவரில் சாய்ந்து 'சிலேட்டை' மடியில் வைத்தபடி வகுத்தல் கட்டம் இடுவதே ஒரு 'வரைபடம்' மாதிரி இருக்கும். 


அப்பாவின் எழுத்துக்கள் 'நாங்கள்லாம் ஒன்னு சொன்னாப்லதான் இருப்போம்' என்பது மாதிரி ஒரே அளவில் அச்சடித்தாற் போல இருக்கும். 


"பறாக்குப் பார்க்காம கவனி. 

கடன் வாங்கு. வாங்குனத திருப்பிக் குடு. மீதி எத்தன இருக்கு. விரல்களைப் பற்றி மடக்குவார். விரிப்பார். இப்ப எத்தன விரல் இருக்கு?கேள்வி அம்பு தொடுப்பார்.ஒரு வழியாக கணிதப் பாடம் முடிந்ததும் 

குஷிப்படுத்துவார். 


'வகுத்தல் கட்டம்' மனக் காட்டிற்குள் தொலைந்து போகும். 

அப்பா 'பர்மா' குச்சியால் ஒரு மனித உருவம் வரைவார். நன்றாகத் தான் இருக்கும். 

"யாருப்பா இது?"கேள்வி கேட்பேன். 


'கணக்குல இது மாதிரி கேளேன்டா. அப்பமட்டும் குர்றப்பானு உட்கார்ந்திருப்ப' அப்பா சலித்துக் கொள்வார். சலித்தபடியே வரைந்த உருவத்திற்குக் கீழே 'சிவாஜி கணேசன்' என எழுதுவார். 



"யப்பா. இனிமே வரைஞ்சவுடன யாருன்னு எழுதிருங்கப்பா. கரெக்டா சொல்லிருவேன்"

அப்பா என்னை ஒரு பார்வை பார்த்து விட்டு' நாளைக்கு வகுத்தல் பாடம் இருக்கு. மறந்துறாம ஞாபகப்படுத்து" - என்றபடி எழுந்து செல்வார். 

நடிகர் திலகம் 'சிவாஜி கணேசன் '

' படிக்கிற வழிய பாருப்பு' என்பது போல' சிலேட்டில்' இருந்தபடி என்னைப் பார்ப்பார். 


அப்பாவிற்கு 

"வரைய வரும். ஆனா… வராது". 

      என்ற வசனம் நன்கு பொருந்தும். 

அப்பாவின் வரைவிற்குள் 

சிவாஜி வருவார். கண்ணாடி அணிந்த புரட்சித் தலைவர்

'எம். ஜி.ஆர்' வருவார். ஏன்! "காதல் மன்னன் ஜெமினி கணேசன்" கூட வருவார். 

ஆனால், அப்பாவிற்கு கை வராத ஓவியம் ஒன்று உண்டு. 


அது ஒரு அழகிய ஓவியக் காலம். 

      


  'பர்மாக்குச்சியால்' சிலேட்டில் வரைந்து கொண்டிருந்த அப்பாவின்  கைகளுக்குள் பென்சில்களைத் திணித்து அறிவியல் பயிற்சி நோட்டின் வாயிலாக பள்ளிக்கூடத்து வாயிலுக்கு அழைத்துப் போன பெருமை எனது தம்பிக்கு உண்டு. 


செம்பருத்திப் பூ மரத்தில் கிளைவிடும் கதைகள் இவை.

'கதை' கதையல்ல நிசம். 


நகைச்சுவைக்கு நான் 

"கியாரண்டி" . 

செம்பருத்தியை முடிக்க மனம் இல்லை. சித்திரக்கார 'செம்பருத்தியின்' நினைவுகளுக்கு மீண்டும் வருவேன். 


"செம்பருத்தி" பூ மட்டுமல்ல. நல்ல மருத்துவச்சியும் கூட. அறிவீர்கள். அறியலாம். 


அன்று

நேரம். 

இரவு. பத்து மணி


மதுரை வானொலி… 

தொடர்வது… 

" மனோரஞ்சிதம்" 


பாடல் ஒலிக்கிறது. 


"சிரித்து சிரித்துச் சிரித்து என்னை

சிறையிலிட்டாள்.

கன்னம் சிவக்க சிவக்க வந்து கதை பயின்றாள்" 


"சித்திரப் பூ" நடை தொடரும். 



தொடர்ந்த வாசிப்பிற்கு 'நன்றிப் பூக்கள்'… 

தொடுக்கவிருக்கும் பூக்களுக்கு…

'வரவேற்… பூக்கள்' 


மனம் பறவையாகும்! 

பறக்கும்… 



                             இருதய். ஆ

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...