About Me

Showing posts with label சித்திரம் பேசும்.... Show all posts
Showing posts with label சித்திரம் பேசும்.... Show all posts

Sunday, August 28, 2022

சித்திரம் பேசும்...

Fly… 


"மனப் பறவை" ...




"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம்

நடையும் நடைப்பழக்கம் நட்பும் தயையும்

கொடையும் பிறவிக் குணம்".

ஓளவையாரின்

தனிப்பாடல்களில் இடம் பெற்றுள்ள வரிகள் சித்திரத்தின் சுவடுகள் மனசுக்குள் நிழலிடும் பழக்கத்தின் மீதான நுணுக்கங்களை இயல்பில் எடுத்துரைக்கிறது. 


மதுரையில்

" சித்திரக்காரர் வீதி" என்றொரு வீதி உண்டு.

மதுரைக்குள் நுழைகையில் காணும் யானை மலையின்  தோற்றம் இயற்கை வரைந்த பாறைச் சித்திரமாக மனசுக்குள் எழுந்து நிற்கும். 


"ஓவியம்" என்ற சொல்லை விட

"சித்திரம்" என்ற சொல்லே   புவிஈர்ப்பு விசையாக மனதை ஈர்க்கிறது. 



சித்திரத்தில் தொடங்கும் எல்லாத் தலைப்புகளும் தலைப்பாகை கட்டிக் கொண்டு ஒய்யாரமாக மனசுக்குள் அமர்ந்துகொள்ளும். 


சித்திரச் சிநேகம்



   மனசுக்கு நெருக்கமான சிநேகிதன் போல சித்திரங்கள் எப்பொழுதும் என் விரல்களைப் பிடித்துக்கொண்டு என்னைப் பழக்கியிருக்கிறது. 

நானும் எனது பள்ளிப் பருவ நாட்களில் இருந்து 

    "வாங்க பழகலாம்"… 

  • என சித்திரங்களோடு பழகி கிறுக்கல்களாக ஆரம்பித்து கிறுக்கல்களிலேயே தொடர்ந்திருக்கிறேன். இப்பொழுதும்  தொடர்கிறேன். 


சின்ன Flash Back… 


 80-களின் மத்திமத்திற்கு மனம் பறக்கிறது. 


ஊர்

-மதுரை. 

இடம்

"தூயமரியன்னை மேல்நிலைப்பள்ளி" … 


தூயமரியன்னை மேல்நிலைப் பள்ளியில் படித்தபோது? மன்னிக்கவும். 

' பள்ளிக்குச் சென்றபோது' … என மாற்றிக்கொள்கிறேன். படித்த மாணவர்கள் கோபிக்க வாய்ப்பிருக்கிறது. விசயத்துக்கு வருகிறேன். 


பள்ளியில் "லைப்ரரி" ஆசிரியர் இருப்பார். சித்திரங்கள் வரைந்து அவரிடம் கொடுத்தால் அவற்றில் சிறந்ததைத் தேர்வு செய்வார். பின் பள்ளியின் மைய வராந்தாவின் ஒரமாக உள்ள கம்பிவலையிடப்பட்ட சட்டகத்திற்குள் தேர்ந்த சித்திரங்களை வரிசை கட்டி ஒட்டி வைப்பார்.



நானும் நிறைய சித்திரங்களைத் தீட்டி (கிறுக்கி) அவரிடம் தந்துவிட்டு வருவேன். 


மறுநாள் கம்பிவலைக்குள் எனது சித்திரம் இருக்கிறதா? எனக் கண்கள் தேடும். பட்டாம் பூச்சிச் சிறகாய் மனம் படபடக்கும். தேடல் தொடர்ந்ததே தவிர எனது சித்திரம் கம்பிவலைக்குள் நுழையவே இல்லை. 


 கம்பிவலைக்குள் சிக்காத சித்திரக்காரன் என என்னை எண்ணிக்கொள்வேன். 



"விட்டேனா பார்"  என வீரநடை கட்டி எங்கள் வீட்டுச் சுவரில் கிறுக்குவேன். கிறுக்கல்களுக்கு ஒரு பெயரிட்டு அன்றைய தேதியோடு சுவரில் ஒட்டி வைப்பேன். 



ஒட்டிய நாளிலிருந்து கணக்கு வைத்து வெற்றிகரமான

 "25 வது நாள்" என வீட்டிற்குள் போஸ்டர் ஒட்டுவேன். ஒரு வருடம் கடந்து புத்தம்புது காப்பியாக உருமாறிய கிறுக்கல்களும் உண்டு. 


ஆழ்ந்த நித்திரைக்குப் பிறகு எழும் புத்துணர்ச்சியைப் போல  அன்றைய சித்திரக்கூட்டு நாட்களை நினைக்கையில் மனசுக்குள் ஒரு புத்துணர்ச்சி எழும்.


திருக்குறளில் 

அறிந்த சித்திரம்  


இரண்டடி வெண்பாவாக விரியும்… 


"கண்ணொடு கண்இணை         நோக்கு ஒக்கின் 

வாய்ச் சொற்களால் என்ன பயனும் இல" 

- எனக்கு மிகவும் பிடித்த திருக்குறள். குரல்வழி எதுவும் தேவையில்லை. கண்விழி போதும். கருத்தாய் எல்லாம் புரியும் என்கிறது இக்குறள்.



சித்திரங்களின் மெளனமொழிக்கு இக் குறள் பொருந்தும்.


மனித உடலில் ஆண்டவன் வரைந்த ஆகச் சிறந்த சித்திரம் கண் விழிகள் என்பது எனது எண்ணம். விழிகளை வைத்து எவ்வளவு கவிதைகள்

 எழுதியிருப்பார்கள். நானும் கவிதைகள் பழகி இருக்கிறேன். 'சாம்பிளாக' ஒன்றைச் சொல்கிறேன். 



கயல்விழியே… 

என் விழி எதிரில் வா… 

விழி வழி

 நுழைந்து கொள். 

என் இதயத்தின் வழி 

தெரிந்து கொள்… 

கண்கள் 

கதவடைக்கும் நேரம்… 

கயல்விழி

விரைந்து வா… 

என் விழி எதிரில் வா...

இதயத்தின் வழி அறியலாம்! " … 

-இருதய். ஆ


கூடும் வரை கூடி நீந்தும் "அன்னப்பறவை" போல சித்திரங்கள் மனசுக்குள் கூடி நீந்தும். மனிதர்களின் உணர்வுகளை வெண் கூட்டிற்குள் உறைய வைக்கும் சாத்தியம் சித்திரங்களுக்கு உண்டு. சித்திரங்களுக்கு வயது கூடுவதே இல்லை. மனதின் எண்ணங்களை வண்ணங்களாக மாற்றும் மாய வித்தை சித்திரங்களுக்கு உண்டு. 



சித்திரங்களை ஆகச் சிறந்த குறியீட்டு மொழியாக பல களங்களில் இன்றும்

 பயன்படுத்தி வருவதை   அறிந்திருப்போம். 


மொகலாய மன்னர் அக்பரின் அமைச்சரவையில் புத்தி கூர் படைத்த பீர்பாலின் புத்திசாலித்தனத்தை அவர் வரைந்த ஒரு நெடிய கோட்டுச் சித்திரத்தின் மூலம் அறியலாம். 


இதிகாச நூல்" இராமாயணத்தில்" 'இலக்குவன்'

சீதையைக் காக்க தரையில் இட்ட எல்லைக்கோடு ஆகச் சிறந்த பாதுகாவல் சித்திரம். சீதை பாதுகாப்புச் சித்திரத்தை தாண்டியதால் காப்பிய உலகில் புதிய சரித்திரம் பிறந்தது. 


கேசத்தின் ஒரு சுருள் முடியை வைத்தே முக அழகைத்  தீட்டும்  சித்திரக்காரர்கள் இருந்ததாக சில பல கதைகள் உண்டு. 


"காவலர்கள் உங்கள் நண்பன்" என்ற வாசகம் பிரசித்தம்.  அசகாய சூரத் திருடர்களை இனங்கண்டுகொள்ள காவலர்கள் சித்திரக்காரர்களைத்  தான் கைப்பிடிக்கிறார்கள்.  


சித்திரங்களைக் கைப்பிடித்து சித்திரங்களின் கதைகளை தொடர்ந்து பகிர்கிறேன்.  விரியும் சித்திரங்களில் உங்கள் வண்ணங்களையும் நீங்கள் உணரலாம். 



"மனப் பறவை"

சித்திரக் கூட்டிற்குள்… மீண்டும் திரும்பும்… 


தொடர்ந்திடுங்கள். தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றிகள்… 



தற்போது "Titling promos" மட்டும் upload செய்து வருகிறேன். செப்டம்பர் கடைசி வாரத்தில் முதற் பதிவின் சிறகசைப்பு தொடங்கும். தொடர்ந்து வாசித்து உற்சாகம் அளித்தது போல மனம் கொத்தும் பறவை காட்சிப் பதிவு ஊடகத்தையும் உற்சாகப்படுத்துவீர்கள் என நம்புகிறேன். 

" தட்டுங்கள் திறக்கப்படும்" 
என்பது புனித பைபிளின் வாசகம்.
 
நானும் உங்கள் அகத்தின் கதவுகளில் மனம் கொத்தும் பறவையின் மணிப் பொத்தானை பதிக்கிறேன். பதிவு செய்யுங்கள்(subscribe). எண்ணங்களைப் பகிருங்கள். உங்கள் மனக் கூடு நோக்கிப் பறந்து வரும்


"மனம் கொத்தும் பறவை "

https://youtube.com/shorts/EcSFmdf2XQA?feature=share



இருதய். ஆ












அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...