Fly...
'டிசம்பர் உலா' தொடர்வதால் 'மகுட ராசா' கதையும், கடந்த இரண்டு ஞாயிறாக இடம்பெறாத 'காதல் உலாப் போகும் காலமும்' டிசம்பர் உலா' முடிந்தவுடன் தொடரும் என்பதை தாழ்மையுடனே பகிர்கிறேன்.
தொடர்வது...
டிசம்பர் உலா-பகுதி-2
அது ஒரு "பனிக் காலம்"...
ஏழு மலை ஏழு கடல் தாண்டி ஒரு காடு. அந்தக் காட்டினுள் ஒரு குகை. குகைக்குள் ஓர் ஓடை. ஓடைக்குள் இறங்கி கண் மூடினால் கைவரும் தங்க மீன்.
'அம்புலிமாமா' கதை 'டிசம்பர்' மாதத்தில் மனக்கதவைத் தட்டும். டிசம்பரில் "கிறிஸ்துமஸ் தாத்தா"
தானே கதவு தட்டவேண்டும்!? "Why?" 'அம்புலிமாமா'?
Have your cup of "tea" ...
1980 களின் மத்தியில் 'அம்புலிமாமா' கதைகள் மிகவும் பிரபல்யம். ஐந்து பைசா கொடுத்தால் கடையிலேயே அமர்ந்து' காமிக்ஸ்' புத்தகங்கள் படித்து வரலாம்.
எனது மூத்த சகோதரர் வெறித்தனமான வாசிப்பாளர். சிறுகதைகள் புனைவதில் கெட்டிக்காரர். 'நெல்லுக்குப் பாயும் நீர் சிறு புல்லுக்கும் பாய்வது போல' அவராலேயே நானும் வாசிப்புப் பழக்கத்துக்கு என்னைப் பழக்கிக் கொண்டேன். 'கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்' - என்ற சொற்பதம் அறிந்திருப்பீர்கள். எனது சகோதரர் நல் உதாரணம்.
சிறு பிராயத்தில் துப்பறியும் 'பாக்கெட் நாவல்' தொடங்கி 'இரும்புக் கை மாயாவி' வரை எல்லாவற்றையும் படித்து முட்ட உண்ட வயிற்றுக்காரன் போல 'ஏப்பம்' விடுவார். நானும் எனது மூத்த சகோதரரும் பாடப் புத்தகத்திற்குள் 'பாக்கெட் நாவல்' வைத்துப் படித்த பண்பாளர்கள்.
இப்பொழுது "அம்புலிமாமா" கதைக்கு வருகிறேன். ஏழு கடல் ஏழு மலை தாண்டிய கதைகள் போல சிறுவயதில் "கிறிஸ்துமஸ்" கொண்டாட்டத்திற்கு குறுக்கே அரையாண்டுத் தேர்வுகள் வந்து நிற்கும். 'ஸப்பாடி' இந்தப் பரீட்சைகளத் தாண்டித் தான் "கிறிஸ்துமஸ்" கொண்டாடணுமா? பேசாம 'jesus' 'June' இல்லைனா 'july' -ல பிறந்திருக்கலாம். பரீட்சை இல்லாம இருந்திருக்கும். சிறிய வயதில் மனம் கூப்பாடு போடும்.
'டிசம்பர்' மாதம் ஒரு கையில் 'கூடைக் கேக்கு'களையும் மற்றொரு கையில் அரையாண்டு பரீட்சைக்கான வினாத் தாள்களையும் சுமந்தபடி கதவு தட்டும். 'கூடைக் கேக்'கிற்குள் கிறிஸ்துமஸ் சந்தோசங்கள் வாசம் பண்ணும். வினாத் தாள்கள் அச்சந்தோசங்களைக் கேள்விக் கொக்கிபோட்டு பரீட்சைக்கு இழுத்துச் செல்லும். பரீட்சை எனும் ஏழு மலை ஏழு கடலைத் தாண்டினால் தான் 'கிறிஸ்துமஸ்' எனும் 'தங்க மீனான' தங்கத் தருணங்களை அடைய முடியும்.
' சவாலே சமாளி' என்றபடி நாட்கள் கடக்கும். டிசம்பர் 22 அல்லது 23 தேதிகள் வரை பரீட்சை இருக்கும். பரீட்சை முடியும் நாளும் 'கிறிஸ்துமஸ்' புத்தாடையை தையற்கடைக்காரரிடம் பெறும் நாளும் ஒன்றாகவே இருக்கும்.
80 களின் மத்தியில் புத்தாடை அணிவது 'புதுப்பட ரிலீஸ்'போல படு 'த்ரில்லாக' இருக்கும். துணி எடுத்து 'மேட்சிங் கால்சராய்' நிறம் தெரிந்து தீபாவளி தினத்தில் புத்தாடை அணிந்த 'தோஸ்த்துகளில்' யாரின் உடை சிறப்பாக இருந்ததோ அந்த தோஸ்த்திடம் தைத்த 'டெய்லர்' கடை அறிந்து அங்கு கிறிஸ்துமஸ் புத்தாடை தைக்க கொடுப்போம்.
' சும்மா "குடை ராட்டிணம்" கணக்கா டெய்லர் நம்மள சுத்து சுத்துனு சுத்தி அளவெடுப்பாரு. நோட்டுல எழுதறப்ப நான் அளவை மறு மதிப்பீடு செய்வேன். கடைசில என் கெரகம் alteration பண்ணித்தான் அதை அணியணும். இருப்பினும் அந்நாட்களில் அணிந்த உடைகளின் தருணங்களை எப்பொழுது நினைத்தாலும் மனசைத் தைக்கும். சரி. பனிக்காலத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன்.
அன்று எனக்கு புத்தாடையின் வாசனையைத் தவிர பரீட்சை குறித்த எந்த யோசனைகளும் தோன்றாது. 'எப்படா... பரீட்சை முடியும்' என்று 'ட்ரிகரை' விட்டு வெளியேறத் துடிக்கும் தோட்டா போல மனம் காத்திருக்கும்.
"80-களின்" மத்திய தீபாவளிக் கொண்டாட்டங்களைப் போலத் தான் 'கிறிஸ்துமஸ்' பண்டிகையும் மனதை "80களின்" மத்திய வருடங்களுக்கு இழுத்துச் செல்லும்.
"1980" களின் மத்திய வருடக் "கிறிஸ்துமஸ்" காலங்கள்
மதுரை 'தூயமரியன்னை' மேல்நிலைப் பள்ளிப்படிப்பு நாட்கள் எனக்கு வனவாசம் போலவே கழிந்தன. தேர் ஊர்வலத்தில் 'மண்டபப் படிகள்' இருக்குமே அப்படி பள்ளிக்கால நாட்களில் 'தீபாவளி' , 'கிறிஸ்துமஸ்' போன்ற பண்டிகைகள் மண்டபப் படிகள் போல வந்து மனத்தேரின் ஓட்டத்தை நிறுத்தி இளைப்பாற வைக்கும். இப்படிக்கும் எங்கள் வீடு பள்ளிக்கூடம் போலத் தான் அப்பொழுது இருந்தது. அப்பா நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர். அம்மா ஆசிரியை. அம்மா எனக்கு '3-c டீச்சராக்கும்'. ஆசிரிய வீட்டுப் பிள்ளை 'மக்கு' என்ற சொல் வழக்கு உண்டு. வழக்குகள் இல்லாமல் வழக்கமாகப் பல வேளைகளில் நிரூபித்து நெஞ்சு நிமிர்த்தி நடந்தவன் யான். அந்தக் கதைகளைப் பின்னொரு சூழலில் பகிர்கிறேன்.
சுவாரஸ்யங்கள் நிறைந்த கதைகளை மனப் பறவையாக உங்கள் மனக்கூட்டிற்குக் கடத்துவேன். என் கதைகளில் உங்கள் கதைகளும் கிளைகள் விடலாம்.
ஒரு வழியாக அரையாண்டுப் பரீட்சை முடியும். மனசுக்குள் "கிறிஸ்துமஸ்" சந்தோசக் குடில் கட்ட ஆரம்பிக்கும். மதுரை ஜெய்ஹிந்துபுரத்து வாழ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கும் பின்னர் 90களில் மதுரை அண்ணாநகரில் கொண்டாடிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கும் நிறைய வித்தியாசங்களை உணர்ந்த காலங்கள் அவை. இரண்டின் ஞாபகங்களும் 'டிசம்பரில்' மனசுக்குள் அலையடிக்கும்.
ஜெய்ஹிந்துபுரத்தில் 'தீபாவளி' களை கட்டும். 'கிறிஸ்துமஸ்' எங்கள் வீட்டில் மட்டும் வாழைமரம் கட்டும். எங்கள் தெருவில் மூன்று கிறிஸ்தவக் குடும்பங்கள் இருந்தன. அதுவும் அந்தக் கடைசியில் ஒன்று. இந்தக் கடைசியில் ஒன்று. நடுவில் ஒன்று என்ற விகிதாச்சாரப்படி கிறிஸ்தவ வீட்டுப் படிகள் இருக்கும். ஆரம்பத்தில் அங்கிருந்த எங்களை ஆங்கிலேய நாட்டிலிருந்து வந்தவர்களைப் போல பாவித்தார்கள் அங்கிருந்த பயலுகள்.
பின்னர் "! அடேய்! பயலுகளா... நாங்களும் புரத்துல இருந்து தான் வந்திருக்கோம். நாங்களும் உங்க சரகம் தான்டாஅடேய்" என பேச்சுவார்த்தைக்கு அழைப்போம். மதுரை எம். கே.புரத்தில் (சுப்ரமணியபுரம் அருகில்) தான் எங்களது ஆரம்பகாலம் அமைந்திருந்தது. எங்களது அதான பிரதான செயல்பாடுகளைக் கண்ணுற்ற பின்னர் ஜெய்ஹிந்துபுரத்துப் பயலுகள் 'எங்கள் இனமடா நீங்கள்' என்று எங்களை ஏற்றுக் கொண்டார்கள்.
ஆரம்பத்தில் கிறிஸ்துமஸ் தினத்தில் எங்களை வெடி போட விடமாட்டான்கள் அந்தப் படவாக்கள். வெடி வைத்து நெருப்பு மருந்தைத் தொடும் முன் படவாஸின் 'சில்லாக்கு' விளையாட்டுக் கற்கள் எங்களின் வெடிகளைப் பருந்தாகத் தூக்கிப் பறக்கும்.' தீபாவளிக்கு மட்டுந்தான்டா வெடிச்சத்தம் கேட்கணும். நீங்கள்லாம் சர்சுக்குப் போனமா கேக்க தின்னமானு இருக்கனும். மனசுக்குள் திரி கிள்ளுவான்கள் படவாக்கள். நான் அப்பொழுதெல்லாம் மிகுந்த கோபக்காரனாக்கும்.
இப்பொழுது இல்லை. கோபங்கள் எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டேன். அவர்களுடன் மல்லுக்கு நின்று பின்னாளில் "மூழ்காத சிப்பே ப்ரண்ஷிப் தான்" - என்று பாடாத குறையாக
படவாக்களுடன்....
'சில்லாக்கு', 'ஆத்தலக்கடி, பூத்தலக்கடி' , 'கம்புத் தள்ளி' , கிளியாங் கிளியா, 'கல்லா... மண்ணா' ... எல்லாம் விளையாண்டு கழிக்க '' டிசம்பர்" 'கிறிஸ்துமஸ்' தினத்தன்று எங்கள் வெடிகளின் திரிகளை படவாக்கள் தான் கிள்ளிக் கொடுப்பார்கள்.
'கிறிஸ்துமஸ்' தினத்தன்று ஜெய்ஹிந்துபுரத்து தெருவில் வெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்தது. இந்து மதச் சகோதரக் குடும்பங்களுக்கு நடுவில் தனித் தீவாக இருந்த எங்கள் வீட்டு வாசற்படிகளில் வெடித்த மருந்தின் வாச நெடிகள் , வெடிப்பில் எழுந்த புகைகள் இப்பொழுது நினைத்தாலும் மனசுக்குள் புகை மூட்டமாக எழும்பும்.
எங்கள் வீட்டின் உள்ளே 'கிறிஸ்துமஸ் கேக்'குகளின் வாசனையை முகர்ந்து சிரித்தபடி படவாக்களுடன் உண்ட தருணங்களும் மனக்குடுவைக்குள் கண்ணாடி மீன்களாக நீந்திக் கொண்டே இருக்கின்றன.
தினத்தந்தியில் இடம்பிடித்த 'கன்னித் தீவு' கதை போல 'டிசம்பர் உலா'வும் முடிவற்றது. இம்மாதம் முடியும்வரை 'டிசம்பர் உலா' தொடர்வேன். தொடர்ந்திருங்கள். டிசம்பர் தேரை தொடர்ந்து இழுக்கிறேன்.
வரும் பதிவில்...
"who Is The" Hero"*...?
மனங்கொத்தும் பறவை பறக்கும்...