ஓரு பூஞ்சோலை...
வண்ண வண்ண மலர்கள் கண்கொள்ளாக் காட்சிகளாக கண்களுக்குள் விரிகின்றன.
"பூக்களே நீங்கள் அத்தனை பேரும் அவ்வளவு அழகு!
இதை சொல்லியே ஆக வேண்டும்.
உங்களை இன்னும் பேரழகாக்க முடியும். பூக்களே முடிவு உங்கள் கைகளில்.
பேரழகு பூண பூரண சம்மதமா?" -
மலர்களுக்குள் சில பல சம்பாஷணைகள் நிகழ்ந்து முடிய முடிவில் 'பேரழகு' கை கூடியது. பூக்கள் எல்லாம் கைகோர்க்க
'க த ம் ப ம்' ஆனது.
'உலாப் பூக்களின் கதை' இங்கு எதற்கு?
'காரணம் இருக்கு...' அன்பர்களே. பூக்கள் கதம்பமாக மாறிய கதைக்குள் நமது தாய்த்திரு நாட்டின் வரலாறும் இருக்கிறது.
சுதந்திரம் பெற்ற பின்னர் சிதறிக்கிடந்த பல்வேறு சமஸ்தானங்களை இந்தியாவின் இரும்பு மனிதர் எனப் புகழப்பட்ட
'சர்தார் வல்லபாய் படேல் ' அவர்கள் இரும்புக் கரம் கொண்டு
அத்தனை சமஸ்தானங்களையும் ஒருங்கிணைத்திருக்கிறார். 'இந்தியா' என்ற ஒரு குடைக்குள் வரவழைத்து அதன் நிழலில் இளைப்பாற வைத்திருக்கிறார். நாட்டில் பிரிவினைகள் மறைந்து மறுமலர்ச்சி மலர்ந்திருக்கிறது.
சட்டமேதை டாக்டர். அம்பேத்கரால் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட ...
நிலச்சுவான்களின் 'வாரிசு அடிப்படை' ஆட்சிக் கட்டமைப்புகள் மாறி குடிமக்களால் குடிமக்களின் நலனுக்காக குடிகளில் இருந்தே தங்களுக்கான தலைமையை தேர்ந்தெடுக்கும் ஆட்சி முறைமைகள் நடைமுறைக்கு வந்தன.
இந்திய அரசு 'குடியரசு' என்ற முழுமையான வட்டத்திற்குள் தனது ஓட்டத்தைத் தொடங்கியது. அத்தனை வரலாறுகளையும் நீங்கள் அறிவீர்கள்.
வட்டப்பாதையில் எது தொடக்கம்? எது முடிவு? ஓடிக் கொண்டே இருக்க வேண்டியது தான். அப்படி ஓடுகிற போது கொஞ்சம் நின்று இளைப்பாறி பின்னோக்கிப் பார்க்க வேண்டியிருக்கிறது.
குடியரசு தின நாளில் ஓட்டத்தை நிறுத்திப் பின்னோக்கிப் பார்க்கையில் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கக் காரணமாக இருந்த 'தியாகச் செம்மல்கள்' நினைவுக்கு வருவார்கள். தியாகச் செம்மல்களை நினைவுகூரும்
நாளாகவும் 'குடியரசு தினம்' கொண்டாடப்டுகிறது.
'எறும்பு ஊரக் கல் தேயும்' எனக் காத்திருக்க விரும்பாமல் விவேகத்துடன் இந்தியாவில் முதல் ஆயுதப் போராட்டக் களத்தை முன்னெடுத்த...
அண்ணல் 'நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்' அவர்களின் குரலில்...
'ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்... ஜெய்ஹிந்த்' ...
எனக் குரலெடுத்து
தியாகச் செம்மல்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தபடி
அனைவருக்கும்...
'குடியரசு தின' நல் வாழ்த்துக்களைப் பகிர்கிறேன்.
வட்டப்பாதையின் ஓட்டத்தில் கடந்த சில நாட்களாக அதிகம் விவாதிக்கப்பட்டு சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்ட விஷயம்?
"முண்டாசுக் கவி பாரதியார், 'செக்கிழுத்த செம்மல்'
வ. உ. சிதம்பரனார்,
'வீரமங்கை' வேலு நாச்சியார்
பெயர்தாங்கிய நினைவு ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் இருந்து மத்திய அரசால் நீக்கப்பட்டன"
-என்ற செய்தி தான் அதிகம் பகிரப்பட்டு விவாதத்திற்கு உள்ளானது.
" ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் "என தீர்க்கதரிசனம் உரைத்த முண்டாசுக் கவி 'பாரதி' அறியாத முகமானார். நினைவு ஊர்தி அணிவகுப்புப் பரிசீலனையில் இல்லை.
வசதியான குடும்பத்தில் பிறந்து வசதிவாய்ப்புகளைப் பெரிதெனக் கொள்ளாதவர். தேசத்திற்காக தேசத்தின் நேரம் நல் நேரமாக மாற வேண்டி காலக் கடிகாரத்திற்குள் செக்குமாடாகச் சுற்றியவர். 'வ . உ. சிதம்பரனார்" என்பதை நாம் அறிவோம்.
'செக்கிழுத்த செம்மல்'
'கப்பலோட்டிய தமிழன்'
- என்று பெயரெடுத்தவரை
உலகறியாது எனச் சொல்லி செம்மல் அவர்களது நினைவு ஊர்தியும் பரிசீலிக்கப்படவில்லை.
இறுதியாக,
அடுப்பூதிய மங்கையர்களுக்கு மத்தியில் சுதந்திரப் போர்க்களத்தில் வாள் சுழற்றிய முதல் வீரமங்கை சிவகங்கைச் சீமையில் பிறந்த 'வேலுநாச்சியார்'
வீரமங்கையின் நினைவு ஊர்தியும் பரிசீலிக்கப்படவில்லை.
தமிழர்களுக்கு இது புதிதல்ல. சுதந்திர வெளியில் போராடி உயிர் துறந்த தமிழகத்து போராட்டக்கள தியாகிகளை பட்டியலிட வீட்டுப் பலசரக்குச் சாமான்களல்ல அவர்கள். விளக்குத் தண்டில் ஏற்றி வைத்த தீபங்கள் நம் தமிழ் மண்ணின் தியாகச் சுடர்கள். எவராலும் மறுக்க முடியாது. மறைக்க முடியாது.
"மறைத்தல் ஒல்லுமோ ஞாயிற்றது ஒளியை"
என்ற சங்கத்தமிழ் பாடல் நினைவிற்கு வருகிறது.
வாழைப்பழத்தில் ஊசி ஏற்றிப் பயனில்லை. வான் உயர்ந்து விரியும் ஓளிக் கீற்றின் மத்தாப்புகளாகச் சிதறி அனைவரும் அன்னார்ந்து பார்க்கும்படி சித்தாப்பு காட்டி வீராப்பில் வீறு நடை நடந்து நமது தியாகச் செம்மல்களின் வரலாறை நம் சந்ததிகளுக்குச் சொல்வோம்.
நாளைய உலகு நம் சந்ததிகளுக்கானது...
"தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!"
என்ற ஓங்கு குரல் காதிருந்தும் கேளாதோரின் காதுகளுக்கு எட்டும் வரை 'ஜெய பேரிகை' கொட்டலாம்.
நிறைவில் தொடக்கமாக...
'ஒன்றில்லாமல் மற்றொன்று உருவாகுமா? இதில்
உயர்வென்றும், தாழ்வென்றும்
பிரிவாகுமா?
........... ..........
படித்தவன் கருத்தெல்லாம் சபை ஏறுமா?
பொருள் படைத்தவன் கருத்தானால் சபை மீறுமா?' ...
- கவியரசு கண்ணதாசன் அவர்களின் 'சரஸ்வதி சபத' படப் பாடல் வரிகளை நினைவில் நிறுத்தி, அனைவருக்கும்...
குடியரசு தின நல் வாழ்த்துக்களை மீண்டும் உரித்தாக்குகிறேன்.
குடியரசு தின வாழ்த்துக்களோடு மனம் கொத்தும் பறவையின் வாழ்த்துக்களையும் பகிருங்கள். இது அன்புடை வேண்டுகோள். விரும்பினால் பகிருங்கள். கட்டாயம் எதுவுமில்லை.
மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்..
இருதய். ஆ