About Me

Showing posts with label தமிழ்ப் புத்தாண்டு நினைவுகள்.... Show all posts
Showing posts with label தமிழ்ப் புத்தாண்டு நினைவுகள்.... Show all posts

Thursday, April 14, 2022

சித்திரை...

Fly...

          
 "மனம் கொத்தும் பறவை" 


"விதைக்க ஒரு காலம்… 

அறுக்க ஒரு காலம். 

அறுவடை செய்ததை தானியக் களஞ்சியங்களில் சேமிக்க ஒரு காலம்"

வேதாகமத்தில் மிகவும் பிடித்தமான திரு வசனங்கள் இவை. எல்லாவற்றிற்கும் ஏற்ற வேளை ஒன்று உண்டு.


கிராமிய வாழ்வில் 'திண்ணை' இருந்த வீடுகள் மனசுக்குள் இருக்கும் பாரம் நீக்கும். எப்பொழுதும் எவரேனும் திண்ணையில் அமர்ந்திருப்பார்கள். 



திண்ணை கடந்து வீட்டிற்குள் நுழையும் முன் சந்தோசமோ, மன பாரமோ எதுவாயினும் திண்ணை அறியும். மனம் இலகுவாகும்.பறவையின் இறகாகி மனம் மேல் எழும். 



'மேல் எழும்ப… 

 பறவைகளுக்குச் 

சிறகுகள் போதும்"

      ' மனம்' மேல் எழும்ப நம் வேர்கள் நோக்கித் திரும்ப வேண்டும். நமது வேர்கள் நமது மரபு. 



          நம் தமிழ் மரபில் எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் உண்டு. காரணமில்லாத காரியங்கள் என்று எதுவுமில்லை. தமிழ் மரபின் பெருமை இது. 

'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' 

என்ற இலக்கண மரபு தமிழின் பெருமை பேசுகிறது. 


'விஷயத்துக்கு வந்துட்டேன்னு நினைக்கிறேன்'. 

 "ஏற்ற காலம்" 

"திண்ணை வாழ்வு" 

"தமிழ் மரபு" … 

        எல்லாம் நினைவுகளில் நிழலிட 'கோடை'  காரணமாக அமைந்தது. 


"மழை மட்டுமா அழகு?

சுடும் வெயிலும் அழகு!... 

  கோடையில்

' சித்திரை' விரிக்கும் 

மனக் குடை! "



    "கற்றுக்கொண்டால் குற்றமில்லை" 

- எழுத்துச் சித்தர் ஐயா. 'பாலகுமாரன்' அவர்களின் வரிகள் மனசோடு பேசும். கற்றல் தானே வாழ்வு. நகரும் நொடிகள் ஏதேனும் கற்றுக்கொடுத்தபடியே கடக்கிறது. 


வெயிலின் அருமை நிழலில் தான் தெரியும் என்பார்கள்.



'கோடை' வெயிலின் சூடு உடல் முழுவதும் பரவி கால்கள் நிழல் தேடும். தேடிக் கண்டு இளைப்பாறி அமரும். 


"அமர்தல்" ஒரு அமைவு. உடலுக்கும், மனதிற்கும் "அமர்தல்" தான் ஏற்ற காலம் அல்லது சூழல் எனக் கூடச் சொல்லலாம். 

ஆசுவாசமாக அமர்ந்து பேசி நல்லது கெட்டது அறிந்து சுமைகள் இறக்கி இமைகள் விரித்துச் சிரித்து 'ஒண்ணு மண்ணாக' வாழும் சூழலின் அமைவு இன்று மிகக் குறைவு. 


'கோடை' தெய்வம் நம் அமைதலுக்காக விரிக்கும் குடை.



குடைக்குள் நிழல் உண்டு. மறைவில்லை. நிழலில் அமர்ந்து நமக்குள் இறங்கி நம்மைக் காணலாம். 'நான்' என்பது நானல்லவே. 'நான்' என்ற சொல்லுக்குள் என் மரபு உண்டு. 

அமைதலோடு நம் மரபு அறிய ஏற்ற வேளை இந்தக் கோடை. 


கோடையில் மரங்களில் இலைகள் காய்ந்து உதிரும். சருகாகும். மரங்கள் தங்களைப் புதுப்பித்துக் கொள்ள தயாராகும். 


இக்காலத்தில் மஞ்சள் நிறத்தில் பூக்கும் 'கொன்றைப் பூக்கள்' காண்பதற்கு கொள்ளை அழகாக இருக்கும்.


மரத்தில் பூக்களை எண்ண முடியாது. இலைகளை எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு மரம் மஞ்சள் நிற பூக்குடை விரித்து நிற்கும். சாலைகளில் 'கொன்றைப் பூக்கள்' சிதறிக் கிடக்கும். மிதித்துவிடாமல் கடக்க மனம் சொல்லும். 


'என்ன இது? ஒரு மார்க்கமாகவே பதிவு நீளுது. அக்கினி வெயில் கூட இன்னும் ஆரம்பிக்கலயே?

அதுக்குள்ளயா? சரி தான்.' 


சரி… சரி… மிகச் சரி… 


"இளநீர்" 

தருணம் இது. 



உச்சி மண்டை குளிரும் படி அருந்தும்  "இளநீர்" பனித்துகள்கள் நிறைந்த வண்ண வண்ணக் குளிர்பானங்களைப் பின்னுக்குத் தள்ளும் காலம் இது. 


அசைவ உணவுகளைத் தவிர்த்து அசைபோடாது அருந்தும் உணவுகளையே மனம் விரும்பும் காலம் இது. 


இனிப்போடு கசப்பும் நல்லது என அறிவுறுத்தும் காலம் இது. 


நீர் சூழ் உலகின் அழகைத் தேடும் காலம் இது. 


தேடலின் தொடக்கம் சித்திரையோ? 

கேள்வி மனக் கதவைத் திறக்கிறது. 

திறந்து சித்திரைக்குள் நுழையலாம். 



"தமிழ்ப் புத்தாண்டு" நல்வாழ்த்துக்கள்… 


'எங்கிட்ட ரெண்டு பொண்ணு இருக்கு. 

  ஒண்ணு' அங்கவை'

இன்னொன்னு' சங்கவை'. 

வாங்க. பழகுங்க. யாரைப் பிடிக்குதோ கட்டிக்கிங்க. எங்கிட்ட ரெண்டு பொண்ணுக இருக்காங்க. "

        -' சிவாஜி 'திரைப்படத்தில் திருவாளர். மதிப்பிற்குரிய

' சாலமன் பாப்பையா' அவர்கள் பேசிய வசனம் இது. 

இந்த வசனத்தை நான் வேறு மாதிரி சொல்லிக் கொண்டேன். 


"  எனக்கு ரெண்டு தமிழ்ப் புத்தாண்டு.

 'தை' ஒன்று. 

'சித்திரை' மற்றொன்று. 

மொத்தம் ரெண்டு தமிழ் புத்தாண்டு. இருந்துட்டுப் போகட்டும். கொண்டாட்டம்னா சந்தோசம் தானே. இதுல என்னத்துக்குச் சண்டை. 


'சித்திரை' தான் தமிழ்ப் புத்தாண்டு. 

இல்லவே இல்லை 'தை' தான் தமிழ்ப் புத்தாண்டு. 


'சித்திரையை' தமிழின் முதல் மாதமாகக் கொள்வது ஆரியர்களின் பழக்கத்தால் விளைந்தது. 'தை' தான் தமிழின் முதல் மாதம். இதுவே நம் தமிழர் மரபு என மனக் குறைவு கொண்டார் பாவேந்தர். 'பாரதிதாசன்'. ஏதேனும் காரணங்கள் இல்லாமல் குறைபட்டிருக்கமாட்டார். 

காரணங்கள் இருக்கலாம். 


யோசிக்கையில், 

ஆங்கிலப் புத்தாண்டு குளுகுளு சூழலில் தான் வருகிறது. அப்படியிருக்க 'தை' தானே தமிழ் மாத குளு குளு சூழல்.


அப்ப 'தை' தான் தமிழ்ப்புத்தாண்டு. ஒரு மனம் 'தை' எனும். 


மற்றொரு மனம் நிற்கச் சொல்லும். 

    "இந்தாப்பா. நம்ம வெயிலோடு விளையாடி வெயிலோட உறவாடுறவங்க. அப்புறம் காலக் கணக்குப்படி 'சித்திரை' தான் தன் திரை விலக்கி முதல் மாதமாக புது முகமாகி நமைக் காணும். செடிகளும், மரங்களும் புதிதாகப் பிறக்க தங்களைத் தயார் படுத்தும். 'சித்திரை' 

தமிழ்வருடத்தின் முதல் முத்திரை. மனம் 'அந்தர்பல்டி' அடிக்கும். 


அட என்ன இது 'கூத்தா' இருக்கு. மனம் பட்டிமன்றம் நடத்தி ஒரு முடிவுக்கு வரும். தீர்ப்புச் சொல்ல வேண்டிய நேரம் வந்தாச்சில்ல. 


"சித்திரை" 

"தை" 

      ரெண்டும் நல்லாத் தானய்யா இருக்கு. 

"இரவு, பகல்

வெயில், மழை

நெருப்பு, தண்ணீர்" 

மாதிரி சித்திரை, தை இருந்துட்டுப் போகட்டும். 


' ஒவ்வொரு நாளும் பூக்கள் புதுசாத்  தான பொறக்குது. புதுவருசம் ரெண்டு தடவை பொறந்துட்டுப் போகுது. நமக்கு கொண்டாட்டம்னா சந்தோசம் தான. யாருக்கு எப்புடி தோதுப்படுதோ அப்புடி கொண்டாடிக்கிங்க. என்ன நாஞ் சொல்றது சரிதான"


மனசுக்குள் அமர்ந்திருக்கும் பட்டிமன்ற நடுவர் ஐயா. 

' சாலமன் பாப்பையா' அவர்கள் மாதிரிப்  பேசி முடிக்கும். 


உண்மையில் 'சித்திரை' புறச் சூழலை சூட்டோடு வைத்திருக்கும். அகச் சூழலை குளுமையாக்கும். 


சித்திரக் கனி



சித்திரை முதல் நாள் 

'சித்திரக் கனி' கண்டு வாழ்வு கனிவாய்க் கடக்க மனம் பிரார்த்திக்கும். 

பெரியவர்களிடம் விசேடங்கள் பெற்று புதிய முயற்சிகளை மனம் ஏறெடுக்கும். 

உறவுகளோடு ஒன்றித்து வாழ எத்தனிக்கும். 


இனிப்பும், புளிப்பும், கசப்புமான 'மாங்காய் பச்சடி' வாழ்க்கையின் சாரத்தை உணர்த்தும். கசப்பும் ஒரு சுவை என பாடம் சொல்லும். 


முக்கனிகளின் பரீட்சயம் மிகுந்திருக்கும். 



எல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகளும், படிக்கும் பிள்ளைகளும் தங்கள் கொடி உயர்த்தும் காலம், கொண்டாடும் காலமாக 'சித்திரை' தன் முத்திரை இடும்.

விளையாடிக் கழிக்க 'கோடை' யை விட வேறு காலம் இருக்க முடியுமா? 


வெயில் அறியாது, வியர்வையின் கசகசப்பு உணராது புழுதி படிந்த கால்களோடு சகாக்களுடன் கூடி ஆடும் காலம் கோடை தானே. 


சித்திரை கொடியசைத்து

'கோடை' திறக்கும். நம்மை

உருமாற்றும்.மனசுக்குள் உரமேற்றும். புதிதாகப் பிறக்க மனதைப் பழக்கும். 


கோடை உறவுகளின்  குடைக்குள் நம்மை இணைக்கும். நம் வேர்கள் நோக்கிப் பயணிக்க பயணச்சீட்டாகக்  'கோடை' தன்னை உருமாற்றும்.


வாங்க பழகலாம். 

'சித்திரை' பிறந்தாச்சு… 



மனப்பறவை மனம்கொத்தும்! 

பறக்கும்… 



இருதய். ஆ











அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...