About Me

Showing posts with label தீபாவளியும் முன்னிரவும்... Show all posts
Showing posts with label தீபாவளியும் முன்னிரவும்... Show all posts

Thursday, November 4, 2021

கம்பி மத்தாப்பும், பூ வானமும்... ...

Fly...


புறச்சூழல் மழையால் நனைந்திருக்க அகத்தில் அகல் விளக்கின் ஒளி மனம் முழுக்க நிறைந்திருக்கும்.  தண்ணீரும் நெருப்பும் எதிரெதிர் துருவங்கள். இருப்பினும்  எதிரெதிர் துருவங்களை இடம் வலமாகக் கைகளில் ஏந்தி மத்தாப்பும் பூ வானமுமாகக் கண்கள் நிறையும்படி பட்டாசு கொளுத்தி  
மழைக்காலத்தின் ஈரம் மனசுக்குள் ஒளிர்ந்துகொண்டிருக்கும் தீப ஒளித் திருநாளின் சந்தோசங்களை அணைத்துவிடாதபடி  வியாபாரிகள் முதல் விளையாட்டுப்பிள்ளைகள் வரை உள்ளங்கைக்குள் பொத்திப் பொத்தி வளர்க்கும் அணையா நெருப்பின் வெளிச்சத் திருவிழாவாக... மகிழ்வெனும் தேர் உருட்டி  வீடுகள் தோறும் விருந்தாளியாக வந்து சேரும் நாள்  தீபாவளித் திருநாள். 


W
hy this 'தீபாவளி?' 

தீபாவளித் திருநாள் குறித்து பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் முனைவர். அமரர் திரு.தொ.பரமசிவன் அவர்கள் தனது 'அறியப்படாத தமிழகம்' நூலில் 
     விஜய நகரப் பேரரசுக் காலத்தில் தான்  தீபாவளி தமிழ்நாட்டுக்குள் நுழைந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். 
மேலும்,' "நரகாசுரன்" எனும் அரக்கன்
கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக்கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்பில்லாதது என்றும், மாறாக பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதை" எனவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து நூலில்
 "இந்த நாள் பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் 24 ஆம் தீர்த்தகாரரான வர்த்தமான 'மகாவீரர்' வீடு பேறு அடைந்த நாளாகும். தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்கள் ஏற்றி கொண்டாடுமாறு மகாவீரர் கேட்டுக்கொள்ள பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள்
குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும். "என்றும் தீபாவளித் திருநாள் குறித்து எழுதியிருக்கிறார்.
 இத் தகவலை எனது கல்லூரிக் கால நண்பர் 
'what's app-ல் எங்கள் குழுவில் பகிர்ந்திருந்ததால் அறியமுடிந்தது. அதை உங்களிடமும் பகிர விரும்பினேன். 
காரணங்கள் எதுவாக இருந்தாலும் மனங்களை மகிழச் செய்வதே  பண்டிகைகளின் மைய நோக்கம். 

"தீபாவளி" - 
            அன்றும்... 
                 இன்றும்...


   தீபாவளி என்றதும் சில நினைவுகள் 
மத்தாப்பூ கொளுத்தும். சில நினைவுகள் பூ வானமாகிச் சிதறும். சில நினைவுகள் சங்கு சக்கரமாக மனசுக்குள் சுற்றிச் சுழலும். 

தீபாவளி 'Rewind' 


1980களுக்குப் பிறகான தீபாவளி நாட்கள் நெஞ்சுக்குள் இட்ட மருதாணியாக மனம் முழுக்க சிவந்து கிடக்கிறது. இக்காலத்தில்   மதுரை ஜெய்ஹிந்துபுரத்தில்  வசித்தோம். மனம் போன போக்கில் சுற்றித் திரிந்த காலகட்டம். படிப்பு எனக்கு அப்பொழுது பாகற்காய். பகலிலேயே கனவுகள் கண்டு திரிவேன். மேல் சட்டை அணியாமல் சட்டை குறித்து சட்டை செய்யாமல் அதிரிபுதிரியாக வாழ்ந்த காலம். 
காற்றடி காலத்தில் பக்கத்து வீட்டு மொட்டைமாடி ஏறி காற்றாடி விடுவது. மழைக்காலத்தில் களிமண் பிசைந்து விளையாட்டுச் சாமான்கள் செய்வது. விடுமுறை நாட்களில் கல்லா மாங்காயை பொடியாக்கி கடுகு, உப்பு, மிளகாய்த் தூளை கொட்டாங்குச்சியில்(தேங்காய் மூடி) போட்டுக் கிளறி விற்றது. ஐந்துகாசிற்கு பழைய சைக்கிள் டயர்களை வாங்கி தெருத் தெருவாக கம்பால் அடித்து ஓடித்திரிந்தது அத்தனையும் கம்பு ஊன்றி நடக்கும் காலந்தொட்டாலும் மறக்காது.கம்பு ஊன்றும் ஆசையெல்லாம் எனக்கு இல்லை. கால் ஊன்றித் திரிகிறபோதே கதவடைத்துவிடவேண்டும் என்பதுதான் விருப்பம். சரி ஜெய்ஹிந்தபுரத்து தீபாவளிக்கு வருகிறேன். 

வண்ண மீன் தொட்டிக்குள் உலவித் திரியும் கண்ணாடி மீன்களுக்கு மத்தியில் குளத்து மீன்கள் நீந்தினால் எப்படி இருக்குமோ அப்படி நாங்கள் வசித்த தெருவில் மூலைக்கு ஒரு கிறிஸ்தவக் குடும்பம் மட்டுமே இருக்கும். மற்றபடி இந்துமதம் தழுவிய குடும்பங்கள் தான் அதிகமாக இருக்கும். அதனால் 'தீபாவளி' வான்நட்சத்திரங்களைப் போல ஜொலியாய் ஜொலிக்கும். 


காட்சி1
 

தெருக்குழாய்களில் விடிய விடிய தண்ணீர் விழுந்த படி இருக்கும். வாசற் படிகளில் அமர்ந்தபடி தாவணி அணிந்த இளங்குமரிகள் 
 கைகளில் மருதாணி அப்பிக் கொண்டு எந்தப் பல்லும் 'absent' ஆகி விடாதபடி எல்லாப்பற்களும் தெரியச்சிரித்து வயசுப்பயல்களின் மனசுக்குள் கூழாங்கல்லின் குளுமை சேர்ப்பார்கள். 

காட்சி-2

'வயசுப் பயலுகளென்றால் சும்மாவா! மீசை முறுக்கி தாடி தடவி கிப்பித் தலை சிலிர்க்க ஓரக் கண்ணால் அங்குமிங்கும் மேய்ந்து கைகளுக்குள் பதுக்கி வைத்திருந்த வெங்காய வெடியை தடாலென சுவரில் அல்லது தரையில் தேங்காய் உடைப்பது போல எறிய ஏரியாவே எழுந்து நின்று பார்க்கும். அப்புறம் குமரிகள் பார்க்காமலா இருப்பார்கள். பிறகு 'சுப்பிரமணியபுரம்' திரைப்படம் ஓடும். 
'கண்களிரண்டால் உன் கண்களிரண்டால்...' பாடல் போல காட்சிகள் அரங்கேறும். இப்படத்தைப் பார்த்தபோது எனக்கு ஜெய்ஹிந்துபுரத்து ஞாபகங்கள் அலையடித்தது. 

காட்சி-3

 அப்புறம் இரவு கொஞ்சம் கடக்க இளங்காளைகளும், அப்புறங்காட்டி 
'இந்தா உங்க லிஸ்ட்ல நாங்களும் சீக்கிரம் சேந்துருவோம்ல' என்கிறதொனியில் உள்ள சிறு வரும் காளைகளும் தலையில் டப்பா எண்ணையைக் கொட்டித் தேய்த்தபடி முகத்தில் எண்ணெய் வழிய குழுகுழுவாக கதைகள் பேசி அமர்ந்திருப்பார்கள். குழாயடிகளில் தண்ணீர் பிடித்துக்கொண்டிருக்கும் பெண்கள் அவர்களின் எண்ணெய் முகம் கண்டு அசடு வழிவார்கள்.

காட்சி-4 

இரவு மூன்று மணி கடக்க மீண்டும் வெடிச்சத்தம் காதுகளில் திரி கிள்ளும். வாசல் வந்தால் தாவணிகளும் தாவணிக்களின் அம்மாக்களும் தங்கைகளும்   கோலமாவுகளை டப்பாக்களில் எடுத்துக்கொண்டு தரையில் குதிங்காலிட்டு அமர்ந்தபடி' என்ன கோலம் இடலாம்?' - என்று ஆலோசித்து முடிவில் தரையில் கோலமாவால் தொடக்கப் புள்ளி இடுவார்கள். பார்க்கும் மனசுக்குள் ஓர் அழகான கோலம் வரையப்பட்டிருக்கும். இப்படியாக தீபாவளியின் முந்தைய நாள் இரவு முடிவுக்கு வரும். 


வி
டியற்கால தீபாவளி சரவெடியாகத் தொடரும். 


இரவின் விடியலாகவும்
இருளில் ஒளியாகவும்
ஒளிரும் 'தீபாவளித் திருநாள்' நல்வாழ்த்துக்கள்... 

மனப் பறவை மனம் கொத்தும்! 
பழம் நினைவுகள் உண்ணும். 
பறக்கும்... 


                          Irudhy.a 
 

 


அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...