About Me

Showing posts with label நம்பிக்கையும்.... Show all posts
Showing posts with label நம்பிக்கையும்.... Show all posts

Friday, December 31, 2021

நம்பிக்கைப் பூக்கள்...





மனம் கொத்தும் பறவை... 

பனிவிழுந்த இரவில்... 
   மீட்பராம் "பாலன் இயேசுவின்வின் பிறப்பை  உற்சாகத்துடன் கொண்டாடி முடித்து
நினைவுகளைச் சுமந்தபடி மதுரையிலிருந்து சென்னை புறப்பட்டதிலிருந்து வருகிற வழியெல்லாம் நல்ல மழை. இந்தப் பதிவை மதுரையில் தயார் செய்தேன். முடிக்கையில் விடிந்தே விட்டது. 

புதியதொரு விடியலை நோக்கிய வருடம் குறித்த பதிவென்பதால் பதிவின் முடிவும் விடியலில் தான் முடிந்தது. "கொக்கரக்கோ... கோ"... சேவல் கூவியது. சேவல் விழித்துக் கொள்ள "இனி ஆவுறதில்ல. பேஜாம(பேசாமல்) படுத்துத் தூங்கிட்டு பொறவு கிறுக்கல்களுக்குத் தயாராகலாம்"-என்றெண்ணி பென்சில், அழிப்பானைப் பார்த்தபோது 'ஆகட்டும். நாங்களும் தாயார் (தயார்) தான்' என நகைச்சுவை மன்னர்  கவுண்டமணி கணக்காக பென்சிலும், அழிப்பானும் கவுண்டர் கொடுத்தன. " (அழிரப்பர்-இப்படித்தான் நான் சொல்லுவேன். என் மகன் கிண்டல் பண்ணியதால் 'எரேசர்' என அவன் சொல்லியதை தமிழாக்கத்தில் அழிப்பான் என பதிந்துவிட்டேன்) சரி விஷயத்துக்கு வருகிறேன். எல்லாம் முடித்து சின்னச்சின்ன 'நகாசு' வேலைகள் மட்டும் மீதமிருந்தன.

 இதற்கிடையில் எங்கள் வீட்டிற்கும் எனது 'வூட்டுக்காரம்மா' ஊரான 'ராசகம்பீரத்திற்கும்' 'கால்டாக்ஸியை'ப் போல எங்கள் காரை 'ட்ரிப்' அடித்தேன். 'Upcoming-நம்பிக்கைப் பூக்கள்' 'status' இட்டு பூக்களெல்லாம் காய்ந்தே போயிருக்கும். இரண்டு நாட்கள் கடந்தது. இடையில் ஒருநாள் எனது பற்களில் பராமரிப்பு வேலை நடந்தது. 'சும்மா இரண்டரை  மணி நேரமா பற்கள ஒராசி ஒராசி. இப்ப நெனச்சாலும் ஸப்பாடி... முடியல. வாய் விட்டுச் சிரிக்க மட்டுமில்ல. பேசக் கூட முடியல. டபக்குனு (உடனே) ஒரு முடிவு பண்ணி என் வூட்டம்மாவுக்குப் போன் பண்ணி இதபாரு... நம்ம "gabree'அப்புறம் உன்  தங்காச்சி (தங்கச்சி) புள்ளைக சாரா, சாண்ட்ராவ பூக்குடை புடிச்சாமாதிரி சோக்கா படம் வரையச்சொல்லு.


 கலர் சங்கதிகள் எம் பொறுப்புனு சொல்லி போனை' வைத்து முடிக்க சுடச்சுட' வாட்ஸ் ஆப்' வழி மூன்று படங்களும் வந்துசேர்ந்தன. (சாரா, சாண்ட்ரா ரெண்டுபேரும் எங்க புள்ளைக தான்.சிறுசில இருந்து எங்கள அம்மா, அப்பான்னு தான் கூப்புடுவாக. எப்புடிக் கூப்புடுவாக தெரியுமா? 'எட்டம்மா','எட்டப்பா'. எனது' வூட்டம்மா'வின் பெயர் 'எட்விடா'. அதனால் 'எட்டம்மா'என அன்புடன் அழைக்கப் பெற்றார். நான் 'எட்டப்பா'வானது என் அறிவிற்கு எட்டாத விந்தை. என்னை எட்டப்பனாக்கிய பெருமை அவர்களையே சாரும்.  சரிதான் விட்டா கதைபேசிக்கிட்டே இருப்பேன். விஷயத்துக்கு வர்றேன். முடிவாக மழையோடு சென்னை வந்து வீடு வந்ததும் 'மறுபடியும் மொதல்ல இருந்து பதிவின் சில பகுதிகளை மாற்றினேன். ஒரு வழியாக நம்பிக்கைப் பூக்களை கட்டி முடித்தேன். 
    
வழக்கம் போல இந்த ஆண்டிலும் 'டிசம்பர்' பனியையும், மழையையும் ஒரே வண்டியில் பூட்டி கடகடவென ஓடி நம்மைக் கடந்து போகப் போகிறது.  இதை நீங்கள் வாசிக்கிறபோது  'டாட்டா' காட்டியபடி கடந்தே போயிருக்கும். 


"கிறிஸ்துமஸ்" உற்சாகத்தின் தொடரியாக "புதுவருடம்" நம்மைத் தொட்டுத் தொடரக் காத்திருக்கிறது. தொட்டதெல்லாம் பொன்னான நீதிக் கதையை அறிந்திருப்பீர்கள். அப்படியான பேராசைகள் எதுவும் இல்லை. தொடுவதெல்லாம் பூக்களாக விரிந்தால் போதும். விரியும்  நம்பிக்கைப் பூக்களை வண்ணப்பூக்களின்  குடையாக்கி  புதுவருடத்தை பூக்குடையின் கூடாரத்திற்குள் வசப்படுத்துவோம். 




Have your cup of "tea"...


Who is the " Hero?"... 


கடந்த பதிவை  who is the" Hero"என்ற கிறிஸ்துமஸ் தாத்தாவின் கேள்வியோடு முடித்திருந்தேன்.  மனமுடிக்குள் முடிந்து வைத்துள்ள "ஹீரோ" முடிச்சை இப்பதிவில் அவிழ்க்கிறேன்... 

  ஒளிந்துபிடித்து விளையாடி அவ்வப்போது கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் 'நம்பிக்கை ஒளி' தான் நமக்குள்  உருக்கொண்டிருக்கும்    
 "ஹீரோ"... 

  நமக்குள் இருக்கும் நம்பிக்கை 'ஹீரோ'வைத் தேடிக் கண்டுகொண்டால் தொட்டதெல்லாம் பூக்களாக விரியும். வண்ணங்கள் நம் வழியாகும். நல் எண்ணங்கள் நம் மொழியாகும். விழி காணும் வழியெல்லாம் ஒளியாகும். 

எல்லா மறைகளும் நம்பிக்கைகளையே தங்கள் கரங்களாக்கி நம்மை அரவணைக்கின்றன. 

"நம்பினோர் கெடுவதில்லை. இது நான்கு மறைத் தீர்ப்பு" 
- என்பதனை அறிந்திருப்போம்.

 'நம்பிக்கை' குறித்த ஒரு நிகழ்வை நான் அறிந்த மறை வழியே பகிர்கிறேன்.
வேதாகமத்தில் 'புனித பேதுரு' தேவகுமாரன் 'இயேசு' வின் சீடராக மாறின வரலாறு அறிந்தபோது 'நம்பிக்கையும், விசுவாசமும்' எவ்வளவு ஆழமானது  என்பதனை உணர முடிந்தது.

 தேவன் 'இயேசு' வால் சீடராகத் தெரிந்துகொள்ளப்பட்ட மீனவர் 'பேதுரு' புனிதராகும் முன் மீனவராக அறியப்பட்டார். மீன்பிடி தொழிலில் அதன் அடி ஆழம் கண்டவராக விளங்கினார். 
மீன்வலை விரிப்பதில் வல்லவர். இவர் விரிக்கும் வலைகளின் கண்களுக்கு மீன்கள் தப்ப முடியாது. எல்லா மீன்களும்  மீனவர் 'பேதுரு' வின் வலைகளுக்குள் வளையவந்து சரணாகதி அடைந்துகொள்ளும்.

 இச்சூழலில் ஒருநாள் மீனவர் 'பேதுரு' வழக்கம்போல கடலில் வலைவீசினார். கணங்கள் கடலில் கரைந்தும் வலைக்கண்களில் ஏனோ! மீன்கள் கண் வைக்கவில்லை. இரவெல்லாம் வலைவிரித்து சோர்ந்த கணத்தில் தேவன் 'இயேசு' மீனவர் 'பேதுரு' வின் படகில் ஏறினார்.


 சோர்ந்துபோயிருந்த மீனவர் 'பேதுரு' வின் நிலைமை அறிந்தார் தேவன் இயேசு. பேதுருவை மீண்டும் கடலில் வலை விரிக்கச் சொன்னார் தேவகுமாரன் 'இயேசு'.

நம்பிக்கை வலை விரித்தார் மீனவர் 'பேதுரு'...


மீனவர் 'பேதுரு' தேவனின் வார்த்தைகளைக் கேட்டவுடன் மறுமொழி பகிராமல் கடலில் வலை விரித்தார். கணநேரம் கடந்தது. கடல்மீன்கள் தேவனின் விருப்பத்தை அறிந்தன.ஒவ்வொரு மீன்களும் 'நான் முந்தி நீ முந்தியென' பிந்தாமல் நீந்தி மீனவர்' பேதுரு' வின் வலைக்குள் வலை அறுபடுமளவிற்கு  தஞ்சம் புகுந்தன.

இந்த இடத்தில் ஆழமாக "விசுவாசம், நம்பிக்கை" எனும் இரண்டு உண்மைகளை உணர முடிந்தது.  

மீன்பிடித்தலில் கரைகண்ட மீனவர்
' பேதுரு' தேவன் வலைவிரிக்கச் சொன்னவுடன்... 

'நான் இரவெல்லாம் வலைவிரித்து அகப்படாத மீன்கள். நீங்கள் சொன்னவுடன் விரித்தால் மட்டும் மீன்கள் கிடைக்கவா போகிறது?'  - என நாவெனும்  நாணில் பதில் அம்பு தொடுக்காமல் 'நான் பெரிய மீனவனாக்கும்' என்ற 'நான்' எனும் அகந்தையற்று தேவகுமாரனின் வார்த்தைகளை விசுவசித்து  நம்பிக்கையுடன் உடனே வலை வீசினதாலேயே வலைஅறுபடுமளவிற்கு மீன்கள் கிடைத்தன. பின்னர் மீன்களைப்பிடிப்பதை விட்டுவிட்டு
இயேசுக் கிறிஸ்து'வின் சீடராக மாறி மனித மனங்களைப் படிக்க
 பின்னாளில் எல்லோருக்கும் பிடிக்கும்  புனிதர்  ஆனார். 


வேதாகமத்தில் அற்புத நிகழ்வுகளின் விவரிப்பில்
'உடன்' என்ற சொற்பயன்பாடு இடம்பெற்றிருக்கும். 'உடன்' என்ற சொற்பயன்பாட்டிற்குள் நம்பிக்கை உருக்கொண்டிருக்கும். தேவன் "இயேசுக் கிறிஸ்து " அற்புதங்கள் நிகழ்த்திய தருணங்களிலெல்லாம் 'தன்னால் தான் அற்புதம் நிகழ்ந்தது' 
என்று எப்பொழுதும் காப்புரிமை மொழிந்ததில்லை. மாறாக... 
 "உன் விசுவாசத்தாலும் நம்பிக்கையாலும் அற்புதம் நிகழ்ந்தது" 
        என்றே மொழிந்திருக்கிறார் தேவகுமாரன் 'இயேசுக் கிறிஸ்து'.

"இயேசுக் கிறிஸ்து" மட்டுமல்ல எல்லா மறைகளும் முன்மொழியும் வேதமொழிகள் இவைகளே.
"நம்பிக்கை" , "விசுவாசம்" 
இரண்டும் இரு விழிகள். 

 கடக்கும் வழியெல்லாம் விசுவாசத்துடன் 'நம்பிக்கைப் பூக்கள்' உயர்த்தி பாதைகள் கடப்போம்.  


வரும் காலம் 'பூக்காலமாக' 
மலர வேண்டி பிரார்த்தனை
செய்வோம்.
விசுவாச நாற்றில் நம்பிக்கைப் பூக்கள் தொடுத்து 'புதுவருடத்தை' வரவேற்கலாம். 
 அன்பிற்கு இனிய... அனைவருக்கும்   "புதுவருட" வாழ்த்துக்களை மகிழ்வுடன் பகிர்கிறேன்... 


பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள்... 




' மனப் பறவை'  மனம் கொத்தும்! 
பறக்கும்... 

"சுய பலத்தினாலும், பராக்கிரமத்தினாலும் அல்ல.  தேவ கிருபையினால் எல்லாம் கூடும்". 
ஆமென். 
Irudhy. a

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...