மிக நீண்ட பகலும், மிக நீண்ட இரவும் ஒரு வருடத்தில் எப்பருவநிலையில் நிகழும்?
' ஒரு எட்டு கூகுள் அண்ணாச்சியின் வலைச்சந்தைக்குள்ள போனா கண்டுக்கலாம்'
என எண்ணி விரல்கள் கைப்பேசியை எடுக்க தொடுதிரையின் முகத் திரை இருள் நிறத்தில் அமைதியாக இருந்தது. கைப்பேசியின் அமைதிப்பேரணியைக் கலைக்க மனமில்லாமல் மனம் ஆராய்ச்சி அறிவைக் கடந்து மோட்டுவளையைப் பார்த்து யோசிக்க…
"வேலையற்றவனின் பகற்பொழுதும், உறக்கம் தொலைத்தவனின் இரவுப் பொழுதும் தான் மிக நீண்டது"
ஆராய்ச்சிகளற்று அக்கம்பக்கம் பார்த்து அறியும் அறிவு சொல்லியது.
(வி)சித்திர இரவு
பகற்பொழுதைக் காட்டிலும் விசித்திரங்கள் விழித்துக் கொள்ளும் இரவே மனதிற்கு மிக நெருக்கமாக இருக்கிறது. சப்தங்களற்ற இரவுப்பொழுது இரைச்சல் நிறைந்த மனதிற்கு எப்பொழுதும் இன்பச் சுற்றுலா தான்.
நெரிசல் மிகுந்த பேருந்தில் அடித்துப் பிடித்து ஏறி பயண தூர இடைவெளியில் இருக்கை தேடும் கண்களைப் போல இரவின் தனிமையை மனம் தனதாக்கி இருளின் நிறத்தை ஆடையென உடுத்திக்கொள்ளும்.
இருளே ஒளியாகி விழிகளில் விளக்கேற்றும்.
"இருள்" என்பது குறைவான "ஒளி" ஆதர்ச ஒளிப்பதிவாளர். மதிப்பிற்குரிய "பி.சி.ஸ்ரீராம்" அவர்களின் கருத்தியல் இது.
இருளுக்குள்ளும் ஒளி காணும் இயல்பு கண்களுக்கு உண்டு.
இரவை "ரகசிய சிநேகிதன்" என விளிப்பது இயல்பு. எனக்கு அப்படித் தோன்றவில்லை.
கோடிக்கண்களால் நட்சத்திரங்கள் விழித்திருக்கும் இரவில் ரகசியங்களுக்கு ஏது இடம்.
இரவு தன் முகம் காண்பவனின் மனநிலைக்கு ஏற்ப தன் முகம் காட்டும். 'இரவு' எனக்கு கதைகள் பேசும் தோழன்.
ஆதர்ச எழுத்தாளர் மதிப்பிற்குரிய. திரு. ஜெயமோகன் அவர்களின் "இரவு" நாவலை வாசிக்கிற போது அருகாமையில் இரவும் இருக்கையிட்டு அமர்ந்து கொள்வதாகத் தோன்றும். அருமையான நாவல். இரவில் வாழும் மனிதர்களின் வாழ்வு அற்புதமாக கண்முன் விரியும்.
இரவு வாழ்வு மனித உடலின் உடற்கூற்றுக் கோட்பாடுகளுக்கு எதிரானது என புற அறிவு "நொய்…நொய்" என்று தொணதொணக்கும்.
தொடர்ந்து இரவில் விழித்திருந்தால் உடல் ஓய்வே கொள்ளாது என்கிறது மருத்துவ ஆராய்ச்சி அறிவு. ஆராய்ச்சி அறிவைப் புறந்தள்ளுகிறது விசித்திரங்கள் விழித்திருக்கும் இரவு.
ஊரெல்லாம் உறங்குகையில்
கோடிக் கண்களால்
விழித்திருக்கிறது வானம்!
விழிகள் திறக்கிறது ஆகாசத்தின் மௌனம்.
தேடலின் பொருட்டே
உறக்கம் தொலைகிறது.
தேடுவதும்,
தொலைவதும்
தோற்பதும், வெல்வதும்…
இரவின் விடியலில் சூரியனைக் கண்ட பனியாகக்
காணாமற் போகும்.
"ஸப்பாடி" 'பனி'-ங்கற சொல்லுக்கு வந்துட்டேன். இந்தப்பதிவோட தலைப்பு
"பனித்துளி"...
போலாம் ரெய்ட்…
பனிக்கால இரவுகளில் இலைகளின் மீது உறங்கும் பனித்துளி விடியலில் கதிரவன் விழிக்க கண் முன்னே மறைகிற கடன்காரனாக காணாமற் போகும்.
பனியின் ஆயுளை வெம்மையே தீர்மானிக்கிறது.
" அனல் மேலே பனித்துளி" 'வாரணம் ஆயிரம்' திரைப்பாடல்.
எப்பொழுது கேட்டாலும் "கேளுங்க. கேளுங்க. கேட்டுக்கிட்டே இருங்க…"என காதுகளிடம் 'Recommend' பண்ணும்.
கண்ணாடி & பனித்துளி
வெம்மை கண்டால் சட்டென உலரும் பனித்துளி உலர்ந்துபோவதற்கு முன் எதிர்முகங்களை பிரதிபலிக்கும் கண்ணாடியாகிறது. ஒரு சிறு பனித்துளி சூரியனையே பிரதிபலிக்கிறது. பின் உலர்ந்து போகிறது.
இறுகப் பிடித்த கரங்களின் வழியே நீராய்க் கசிந்து கரைந்து வெளியேறும் பனித்துகள்கள் போல காலம் கரைந்து நம் கண்களின் வழியே கடந்துபோகிறது.
பனித்துளியாக, பிரதிபலிக்கும் கண்ணாடியாக கடந்தகாலம் சிலபல மாயங்களை, வித்தைகளை, அற்புதங்களை கண்முன் காட்டி கபடி ஆடியது.
தன் அணியின் இன்னொரு ஆட்டக்காரனாக புதிய வருடத்தை "போய் பாடி வா" என நம் எல்லைக்குள் சடுகுடு ஆட அனுப்பிவிட்டது.
புதுவருடத்திற்கு மனப்பறவையில் என்ன எழுதலாம்? என இரவின் நிழலில் அமர்ந்திருக்கையில் 'டிசம்பர் பனி' சில்லிட்டு பனித்துளியாக கைகள் சேர்ந்தது.
பனித் தலைப்பை இறுகப் பிடித்து எழுத எழுத கரைந்து காணாமல் போகும் பனித்துகள் போல கடந்த வருடம் மனம் தொலைத்த தருணங்களில் முட்டிக்கொண்டு மீண்டும் தன்னைத் தேடியது. தொலைத்தது பொருள் இல்லை. எனது அப்பாவின் இருப்பு.
பனித்துகள்கள் போல பிரதிபலித்து கரைந்து கடந்துபோனார் அப்பா.
அனல் மேலே பனித்துளியாக கடந்த கணங்களை மறக்கமுடியாது.
கடந்து போன நாட்களில் சிலபல தருணங்கள் மனதிற்குள் வெம்மையைக் கடத்தியிருக்கலாம். வெம்மை ஏற்படுத்திய வெறுமைகளைக் கடக்க காலம் கற்றுக்கொடுக்கும். கடக்க முயலும் மனதோடு விசையுறு பந்தாக மீளமுடியும்.
"புதிதாய்ப் பிறத்தலே பூக்களின் வேதம்" .
நான் எழுதிய வரிகள். உலகில் என்ன நிகழ்ந்தாலும் பூக்கள் பூக்கத் தவறுவதில்லை.
இதழ்கள் விரிக்கும் பூக்களைப் போல புதிய வருடம் கரங்கள் விரித்து நிற்கிறது.
வீதியிறங்கி நடக்கையில் தகப்பனின் விரல்களோடு கைகள் பிடித்துக் கொண்டு நடை போடும் சிறுவன் போல புதிய வருட நாட்களின் நகர்வில் கடிகார முட்களோடு தன்னைப் பிணைத்துக்கொள்கிறது மனம்.
கடிகார நகர்வில் முட்களின் பாதையில்
பூக்களும் இருக்கலாம்!
பயணமே அழகு…
பயணிக்கலாம்.
மனதிற்குச் சிறகு
முளைக்கலாம்.
புத்தாண்டு உறுதிமொழி.
"இன்னிக்கு இல்லைனா என்ன? நாளைக்குப் பார்த்துக்கலாம்.
நாளைக்கும் இல்லைனா???
நாளான்னைக்குப் பார்த்துக்கலாம்"
"நாளை" என்பது நாளல்லவே. அது நம் நம்பிக்கையே.
"அனல் மேலே பனித்துளி" பாடலைப் போலவே மனதிற்கு நெருக்கமான இன்னொரு பாடலும் உண்டு.
'பாண்டவர் பூமி' திரைப்படத்தில் இடம்பெற்ற
"அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்.
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள்
அது ஒரு அழகிய
நிலாக் காலம்"
கவிஞர். திரு. சிநேகன் அவர்களின் பாடலோடு முடிக்கிறேன்.
நீளும் வானமாக வாழ்வு…
மனம் இரு சிறகு!
மனப்பறவை பறக்கும்…