About Me

Showing posts with label பூக்களின் தேசம்.... Show all posts
Showing posts with label பூக்களின் தேசம்.... Show all posts

Friday, July 15, 2022

பூக்களின் தேசம்...

Fly... 



பூக்களே
பூவுலகின் முகவரி... 
           புன்னகையே... 
பூவுலகின்
நுழைவுச்சீட்டு! 
நித்தம் சத்தமின்றி
புதிதாகப் பூக்கும் பூக்களாக
தினம் மனம் பூக்கலாம்... 



சிறகு விரித்துப் பறக்கும் பறவை
தன் உடல் எடை அறிவதில்லை.

மொட்டுக்கள் இதழ்கள் விரிக்கையில்"பூக்கள்
எடை குறைக்கின்றன. 

 பூக்களின் இதழ்களாக மனம் விரிந்தால் சுமைகள் விலகலாம்.
மனம் பறவையின் சிறகாகலாம். பூக்களின் வேதம் அறியலாம். 

 பூக்களின்   வேதம்



"வேதங்கள்"  நான்கு… 

பூக்களைச்  சேர்த்தால்  ஐந்து! 

கூட்டணிப் பேச்சுவார்த்தை

தேவையில்லை.

பொதுக் குழு கூடுதலுக்கு

வாய்ப்பே இல்லை.


பஞ்ச பூதங்களும்...

வழிமொழியும்.

நான்கு வேதங்களும்

கை விரல்கள் விரித்து

பூக்களோடு கைகள் பிணைக்கும்.


பூக்களின் வேதத்தில்

மதச் சாயங்களும் இல்லை. 

மதச்சாயல்களும் இல்லை. 

ஒப்பனைகளற்ற வெளியே

பூக்களின் பாடசாலை.



பூக்களின் வேதம் அறிய பூக்களை அறிந்தால்  போதும். 

பூ வேறு. வேதம் வேறு அல்ல. 

இரண்டும் ஒன்றெனும்

'அத்வைதம்'  

பூக்களுக்கும் பொருந்தும்.


https://www.facebook.com/reel/1927475880779817?extid=Af1gQs&fs=


"ஒரே மனம் வாய்க்கும் தினம்...

பூக்களைக் காணும் கணம்!"


"One By Two" 


"இரண்டு நிலைகள்" என்பது இரட்டைத் தலைமை போல சர்ச்சைகளை கச்சை கட்டி இழுத்து  வரும். 


"ஒருவன் இரண்டு எசமானர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது" 

வேதாகமத்தில் வாசித்த ஞாபகம். 


'இரண்டு நிலைகள்' , இரு எசமானர்கள் போலவே இரு மனமும் மனசுக்குள் இடியாப்பச் சிக்கலாக நூல் விடும். 

'இரு நிலைகள்' இரு முனைக் கத்தியாக மனமதை பதம் பார்க்கும். 


மனதிற்கு இரு எசமானர்கள் இருக்கிறார்கள். இயல்பில் இது தான் உண்மை. 


ஒருவர் 

        "Mister Brain" 

மற்றொருவர்

           " Sweet Heart"... 

குறிப்பிட்ட சூழலில் இரு எசமானர்களில் யாரேனும் ஒருவரது குரலை மட்டுமே கேட்க முடியும். 


ரு எசமானர்களில் அழகியல் உணர்வின் வாசல்களைத் திறக்கிற "Sweet Heart" தான்

பிடித்த எசமான்.


இதயத்தின் வாசல் திறந்தால் மூளை கதவடைக்கும்.

"தாழ் திறவாய்" எனப் பாடுவதும் பாடாமல் விட்டுவிட்டு பட்டும் படாமல் இதயத்தின் வாசல் தொட்டு

நுழைவதும் அவரவர் மனவிருப்பைப் பொறுத்தது.



"ஏலேய்…  ஒரு மனசா இருடா. எல்லாம் நல்லபடியா நடக்கும்" .

அறிந்தவர்கள் சொல்லக் கேட்டதுண்டு. 


காத்து வாக்குல ரெண்டு காதல்  வரும் போது… 

"ரெண்டு நிலையா இருக்கது எப்படி தப்பாகும்"


பூவா? தலையா? 

போட்டுக் பார்த்திரலாம் என நினைத்தால்… 


'நாணயத்தில் இரண்டு பக்கம்  இருக்கு. மனசுல இரண்டு நிலை இருக்கப்படாதா? என்ன இது சின்னப்புள்ளத் தனமா இருக்கு' - என மனசு வைகைப் புயலாக சுழன்றடிக்கும். 


இரு மனநிலை தராசின் எடைக்கற்களாக கனக்கும்.


"ஒரு மனம் நிற்கச் சொல்லுதே

மறுமனம் நெட்டித் தள்ளுதே...

எதை நான் கேட்பது

தடுமாற்றம் தாக்குது"

-' துருவ நட்சத்திரம்' பாடல் இசைக்கிறது.


"இந்தாப்பா… உலாப் பூக்கள் தான எழுதற.   ஒரு ஓவருக்கு பத்து பந்து போடாத. சட்டுபுட்டுன்னு எப்பவும் போல பூக்களோட எதாவது   கதைய சொல்லிப்புட்டு கதவ மூடு. நெறைய சோலி கெடக்கு" 

இது என்னோட மனக் குரல் தான். வேற யாரும்  பேசல. 


இனியவர்களே… 

" உலாப் பூக்கள் " ஆரம்பித்து '14 வாரங்கள்'  தொடர்ந்திருக்கிறேன்.




2022-சனவரி-20-ஆம் தேதி" தொடங்கினேன்.


" எழுதும் முன் யோசி "என்பார்கள். பெரிதாக நான் யோசிக்கவில்லை. எனது நினைவுகளில் நின்ற பூக்களை இணைத்து என் மனதைக் கட்டிய பூக்களின் மீதான எனது நிசக் கதைகளைப் பகிர்ந்தேன். அவ்வளவு தான்.


வாசிப்பவர்களைக் கவரவேண்டும் என மெனக்கெட்டு எழுத்துக்களுக்கு நான் ஒப்பனைகள் இடுவது இல்லை. பெரிதாக எதுவும் யோசித்து எழுதவில்லை.  நான் கண்டவற்றை எழுதவில்லை. கண்கள் கண்டவைகளை எழுதுகிறேன். எழுதுவேன்.


"மனம் கொத்தும் பறவையில்" எழுத ஆரம்பித்து முதலாம் ஆண்டை கடக்கிறேன்.

எதுவும் கடக்கும் வாழ்வை எழுதிக் கடக்கும் போது மனம் பறவையாகிறது.



உலாப் பூக்களை முதலில் தினப்பதிவாக எழுத நினைத்தேன். 

நிசமாகவே பூக்களைத் 'தாவரவியல்' அறிவுப் படி அறிய முயன்றேன். "ஸப்பாடி" கண்களைக் கட்டியது. அறிவுப் பூர்வமாக யோசிக்கும் நிலை எப்பொழுதும் எனக்கு வராது. நான் அதற்குச் சரிப்பட்டு வரும் ஆள் கிடையாது. 


இருப்பினும் பூக்களைப் பற்றி வலைப்பூக்களில் படித்தபோது புதிதாய் பூக்கும் பூக்கள் போலவே

பல விஷயங்கள் எனக்குப் புதிதாக இருந்தன. 


பூக்களை மலர்கள் என்கிறோம்.

"நறுவீ" என்பது மலரைக் குறிக்கும் சொல். அறிவீர்கள். 

பெண் குழந்தைக்கு "நறுவீ" என பெயர் சூட்டலாம். தனித்துவமாக இருக்கும் எனத் தோன்றியது. 


"தையல் நாயகி", "கயல்விழி", "பொற்கலை", "செம்பூவை" பெயர்கள் சூடிய பாவையரை அறிந்திருக்கிறேன்.

"நறுவீ" என்ற விளிப்பு நிலையில் திரும்பும் பாவையரை இதுவரை விழிகள் கண்டதில்லை. நீங்கள் கண்டு கேட்டால் பகிருங்கள். 


ரோசாப் பூக்களைச் சூழ்வது முட்கள் அல்ல. திருத்தப்பட்ட கிளைகள் என்கிறது  'தாவரவியல்' . 

கவிஞர்கள் 'அடப்போங்கப்பா' என

கடந்து போகலாம். 


'99'வகைப் பூக்களை தமிழின் 'குறிஞ்சிப்பாட்டு' பட்டியலிடுகிறது. ஆனால் நம் வாழ்வில் கைப்பிடிக்கும் பூக்கள் மிகக் குறைவு. நான் என் மனசுக்குள்

உலவிய பூக்களைப் பகிர்ந்து முடித்துவிட்டேன். 



பகிர்வில் சில இடங்களில் கவிதைகள் பழகியிருப்பேன்.பழக வாய்ப்பளித்தீர்கள்.

பொறுமையோடு வாசித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி. 


இன்னும் சில பூக்கள் உண்டு. 


'சாமந்தி' , 'கனகாம்பரம்' , 

'டிசம்பர் பூ' போன்ற பூக்கள் பிடிக்கும்.


சமீபத்தில்... 

'கனகாம்பரக் காதலியும், டிசம்பர் பூ 

காதலனும்' 

-என்ற கதை எழுதினேன். விரைவில் பகிர்கிறேன். 


நிதர்சனப் பூக்கள்


மனம் பூக்களாக மாறாதா? பூவுலகில் தினப்பொழுது பூவின் இதழ்களாக விரியாதா? 




"வாழ்க்கையே போர்க்களம். போர்க்களம் மாறலாம். போர்கள் மாறுமா?"

-பாடல் நினைவிற்குள் இயங்குகிறது.


போர்க்களம் செல்கிறவன் உடைவாளுக்குப் பதில் பூக்கூடையையா கைப்பிடிப்பான்?


இருப்பினும்

பூக்களை அறியத் தான் மனம் விரும்புகிறது. 

போர்க்களம் செல்லத்தான் ஆயுதங்கள் வேண்டும். 

பூக்களம் திரும்ப… 

புன்னகை போதும்! 


 வாழ்வின் முக்கிய தருணங்கள்  பூக்கள் இல்லாமல் முழுமை பெறுவதில்லை.


"முழுமை" தான் பூக்களின் முகம். 

எல்லை தாண்டாத 

ரசனை தான் 

பூக்களின் வேதம்! 


பாவையரை பூவையாக எண்ணுகிறது கவியுலகம். 


"கவிதைகள் பழகுபவன்" 

கை உயர்த்தி உள்ளேன் தோழா என உள் நுழைகிறான். 'ஆனது ஆச்சு  ஒரு கவிதை பழக்கத்துல வருது. எழுதிருங்க. பாட்டாவே படிக்கிறேன்' என விண்ணப்பம் நீட்டுகிறான். 



"பூக்கள் பூக்கும்

தருணம் யாரும் பார்த்ததில்லையாம்!

பாட்டுக் கட்டுகிறார்கள். 

இனியவளே... 

முன்வந்து மனமுவந்து

உன் விழிகளை மூடி

 இமைகளைத் திற...

பூக்கள் மலர்வதைப் பார்க்கட்டும்!" 

      - பாவையை பூவையாக எண்ணுகிற மனதை பூக்கள் தான் கற்றுக்கொடுக்கின்றன. 


தன்னைப்  பறிக்கிற  விரல்களுக்குள்ளும் தனது வாசனையைக்  கடத்துகிற பூக்கள் தான் பூவுலகின் ஆகச்சிறந்த 'அகிம்சாவாதிகள்' .


பூக்களைப் பற்றி அறிய "தாவரவியல்" அறிவு   அவசியம் தான். 


அவசியங்களை விட மனசுக்குள் ஆச்சரியங்களை, அற்புதங்களை நிகழ்த்துவது எப்பொழுதும் "அழகியல்" தான். இது எனது எண்ணம். 


 "தாவரவியல்

பூக்களின் வாழ்வைச் சொல்லும். 


"அழகியல்" பூக்களாகவே

மனதை மாற்றும். 


அறிதலும், ஆராய்தலும் "அறிவியல்". 

ஆராயாது ஆராதித்து சரணடைய வைப்பது  "அழகியல்". 


மேலிருந்து கீழ் விழுந்த ஆப்பிளை அறிந்தது 'அறிவு' . 

'ஏன் விழுந்தது?' என்ற கேள்வியில் முளைத்தது 'ஆராய்ச்சி' . 

"புவிஈர்ப்பு விசை" என பாடம் சொல்லியது "அறிவியல்". 


"ஆப்பிள் பெண்ணே நீ யாரோ?" 

என பாட்டுக் கட்டுவது 'அழகியல்'. 


இறைவன் படைப்பில் அறிவியலும் உண்டு. அழகியலும் உண்டு. 

"நீ பாதி! 

நான் பாதி!

-என அறிவியலும், அழகியலும் உலகை முழுமையில் நிறைக்கிறது.


புதிதாகப் பிறத்தலே…

பூக்களின் பாடசாலையில் 

முதல் "வேதம்". 


"எத்தனைக் கோடி  கண்ணீர் 

மண் மீது விழுந்திருக்கும். 

அத்தனை கண்ட பின்னும் பூமி இன்னும் பூ பூக்கும்!" 

          -ஆதர்ச கவிஞர்   

அமரர். "நா. முத்துக்குமார்" அவர்களின் வரிகள் மனசுக்குள் அவ்வப்போது பூக்கும். 


ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே… 
வாழ்வென்றால் போராடும் போர்க்களமே" … 
    -கவிஞர். திரு. பா. விஜய் எழுதிய வரிகள்  மனசுக்குள் வரிக்குதிரையாக ஓடும்
"ஒருவனை ஒருவன் அடுதலும், தொலைதலும் புதுவது அன்று. 
இவ்வுலகத்து இயற்கை" …

-புறநானூற்றில் படித்ததுண்டு. 

மனம் விரும்புவது பூக்களம்… 
மனம் தினம் நுழைவது ஏனோ போர்க்களம் தான். ஒரு நாளில் ஏதேனும் ஒரு  போர் நிச்சயம் உண்டு. 

சமயங்களில் அகப் போர், புறப் போர் இரண்டும் நிகழும்.
மனம் பூக்களாக மாறாதா? பூவுலகில் தினப்பொழுது பூவின் இதழ்களாக விரியாதா? 
எதிர்பார்ப்புகளுக்கு மலர் வளையம் வைத்துவிட்டு மனம் எப்பொழுதும் யுத்தத்திற்குத் தான் தயாராக நிற்கிறது. 


விசையுறு பந்தாக மீளும் வித்தையை பூக்களிடம் கற்கலாம். 


உலாப் பூக்களை முடிக்கும் முன் பூக்களின் 

" அத்வைதம்" சொல்லி முடிக்கிறேன். 


பதிவை ஆரம்பித்த இடத்திற்கே வருகிறேன். 


பூக்களின் வேதம் எனத் தனியே எதுவும் இல்லை. பூக்கள் தான் வேதம். 


"கவிதைகள் பழகுபவன்" 

வரிகளோடு உலாப் பூக்களை முடிக்கிறேன். 


"செக்கு மாடுகளாக 

கடிகார முட்கள்… 

முட்களின் பாதையில் 

பூக்களும் இருக்கலாம்!" 


பயணமே அழகு… 


மனப்பறவை மனம்கொத்தும்! 

பறக்கும்… 



இருதய் - ஆ

















































































அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...