"அதிர்ந்திடும் இளமைப் போதில்ஆவன அறங்கள் செய்துமுதிர்ந்திடும் பருவந்தன்னில்மக்கட்கு முடியைச் சூட்டிஎதிர்ந்திடும் துன்பமேதும்இல்லாமல் மக்கள், பேரர்வதிந்திடல் கண்டு நெஞ்சுமகிழ்வதே வாழ்வின் வீடு"
- புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்
பாவேந்தரின் பாடல் வரிகள் முதுமை வாழ்வின் உன்னதங்களை உலகிற்குச் சொல்கிறது.
வாழ்வின் தேடல்களின் வழி பயணப்பட்டு கிட்டிய வரை கண்டுணர்ந்து இறுதியில் எல்லோரும் ஏறி அமர்ந்துகொள்ளும் பேருந்து முதுமை. சிறுபிராயங்களில் நான் என் அண்ணனுடனும், தம்பியுடனும் எங்கள் வீட்டு முதுமை காண மிக்கேல் பட்டணம் செல்வது வழக்கம். மே மாதம் முதல்வாரத்தில் எங்கள் பயணம் அமையும். துவக்கத்தில் அம்மா எங்களுடன் வருவார். பிறகு 'வெத்தலப் பேட்ட' யில் 'SNR' - ல் அமரவைத்து நடத்துனரிடம் சொல்லிவிட்டு குச்சிமிட்டாய், குருவி ரொட்டியெல்லாம் வாங்கிக் கொடுத்து 'டாட்டா' காட்டிச் சென்று விடுவார். நடத்துனர் பேருந்தில் எங்களைக் கடந்து நீந்துகையில் ஒரு பார்வை பார்த்துக் கடப்பார். சில கடத்தல்களில் கொய்யாப்பழங்களையோ, வெள்ளரிக்காய்களையோ எங்கள் மடிகளில் தவழ விட்டுக் கடப்பார். 'அண்ணே! பிள்ளைகளைப் பத்திரமா ஊர்ல விட்றுங்க' - என்ற எங்கள் அம்மாவின் ஒற்றை வார்த்தைகளுக்குத் தான் அவரின் இத்தனை அலப்பறைகளும். 'அன்பு அளப்பறியது' - என்பதை உணர்ந்த தருணங்கள் அவை. நாங்கள் காக்கா கடி கடித்து பற்களால் மாவரைத்தபடி பயணிப்போம். நாங்கள் மட்டுமல்ல. இன்னும் சிலரும் அப்படித்தான் பயணிப்பார்கள்.
பத்துநாட்களுக்குள் அம்மாச்சி தடல்புடலாகத் தயாராகிவிடுவார். முள்ளு முருங்கையிடம், அவரைப்பந்தலிடம், நுங்கு வண்டிகளிடம் நாங்கள் வரவிருக்கும் தகவல் சொல்லுவார். மிக்கேல் பட்டணத்துத் தங்கம் 'சந்தியா மடம்' கண்மாய்க்கு காற்றைத் தூதனுப்பி தகவல் சொல்லுவார். அம்மாச்சியின் பழைய சீலை கிழிபட்டு மூன்று 'கௌபீனங்கள்' (கோவணங்கள்) தயாராகும். வீட்டின் தாழ்வார ஓட்டில் கசிந்து படரும் புகை, காற்றுவழிக் கலந்து அம்மாச்சி தயார் செய்யும் தின்பண்டங்களின் வாசனைகளை, எண்ணிக்கைகளை ஒளிவு மறைவில்லாமல் பக்கத்து வீடுகளுக்குக் கடத்தும்.
" என்ன சொர்ணாத்தா மெர்சி மக்க வர்றாகளா?"
விசாரிப்புகள் பலப்படும்.
'அதிதூதர் மிக்கேல் சம்மனசு' தேவாலய உபதேசியார் (ஆலயத்தில் ஊழியம் செய்பவர்) எங்கள் அம்மாச்சியிடம் 'படவாஸ். வர்றானுங்களா? வரட்டும். பூசை சமயத்துல பேசட்டும். இருக்கு அவனுங்களுக்குப் பூசை. போன தடவ வந்தப்ப செப மந்திரங்கள படிச்சிட்டு வரச் சொன்னேன். இந்த மொற பார்ப்போம்'- என்று முஷ்டிமடக்கி தயாராவார். (நாங்கள்லாம் அப்பவே அப்புடி ! இப்ப சொல்லவா வேணும்) எங்களைப் பொறுத்தவரை அச்சமயத்தில் உபதேசியார் எங்களுக்கு நம்பியாராகத் தான் தெரிவார். அவரின் முகம் இன்றும் புதிதாக வரைந்த ஓவியம் போல ஈர்ப்புடனும் வண்ணம் காயாமலும் மனசுக்குள் ஈரத்துடன் இருக்கிறது.
எங்களின் வயதொத்த சில குசும்பர்களும் அங்கு இருப்பார்கள். எங்கள் 'டிரவுசர்' சட்டைகளைக் கிண்டலடிப்பார்கள். டவுசர்ல போஸ்ட் பாக்ஸ் போட்றலாமா?' என்பார்கள். பட்டப் பெயர்கள் வைத்துக் கூப்பிடுவார்கள்.
நாங்கள் அம்மாச்சியிடம் புகார் மனு கொடுப்போம். அம்மாச்சி சிரித்தபடி 'கொசப்பயலுக இங்குன வரட்டும். முதுகுல டின்னு கட்டுறேன்' என்பார். குறைந்தது பத்து அல்லது பதினைந்து நாட்களாவது ஊரில் நாங்கள் 'டேரா' போடுவோம். டின்கள் கணக்கில் வைக்கப்படும். நாங்கள் ஊர் விட்டுக் கிளம்பும் நாளில் அம்மாச்சி அனைத்து டின்களையும் காந்திக் கணக்கில் எழுதிவிடுவார். டின்னுக்கு சொந்தக்கார குசும்புக்காரர்கள் நாங்கள் ஊரை விட்டுக் கிளம்பும் நாளில் கதாநாயகர்களாகி பாசத்துடன் வழி அனுப்பி வைப்பார்கள். 'மறுக்க வாங்கடா...'- என்பார்கள். 'பின்னே பாசம் இருக்காதா? என்ன!...' அவர்களுக்கு மே மாதப் பொழுது போக்கே நாங்கள் தான். எங்களுக்கும் நன்றாய்ப் பொழுது போகும்.
இதோ... நன்றாய்ப் பொழுதுகள் கடக்க மதுரை கடந்து மிக்கேல் பட்டணம் வந்து விட்டோம்.
அம்மாச்சியும் 'நான் ரெடி. நீங்க ரெடியா?' ... என்றபடி படிய வாரி ' Salt & pepper look'- ல் வந்து மிக்கேல் பட்டணப் பேருந்து நிறுத்தத்தில் எங்களுக்காகக் காத்திருப்பார்.
தற்சமயம் என் மனம் உங்களைச் சந்திக்க அடுத்த பதிவு வரை என்னைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு சிறகடிக்கிறது.
மனம் பறவையாகும்...
மனம் கொத்தும்.
பழம் நினைவுகள் உண்ணும்!
பறக்கும்...
Irudhy. a