Journey never ends...
Have a cup of your Tea
( - - - ☕ - - -)
காட்சிகள் கொஞ்சம் மாறியிருந்தன. மீனுக்காக காத்து நிற்கும் கொக்கு போல படியில் நின்றபடி -
'அடுத்த வண்டிக்கு நேரங்கெடக்கு. மிக்கேல் பட்டணம் போறவுக ஏறிக்கலாம்'
நடத்துனர் குரல் சன்னமாக எதிரொலித்தது.
பேருந்துக்குள் நிற்கக் கூட இடமில்லை என்பதை அறிந்தவர்களாக 'எனக்கும் மிக்கேல் பட்டணத்துக்கும் சம்பந்தமில்ல' என்பது மாதிரி நிறுத்தத்தில் நின்றவர்கள் நிற்க ஒரு வழியாக 'போலாம் ரெயிட்' என்று நடத்துனர் குரல்கொடுத்தார். 'ஆகட்டுஞ்சாமி' என்பது போல 'SNR' தலையை ஆட்டியபடி வேகமெடுத்தது.
'ரவைக்குள்ள மிக்கேல் பட்டணத்துக்கு காரு போயிரும்ல?' என்று பேருந்துக்குள்ளிருந்து குரல் கேட்க (மிக்கேல் பட்டணத்து மக்கள் சிலர் பேருந்தை கார் என்பார்கள். என் அம்மாச்சியும் கார் என்பார்)
நடத்துனரின் காதுகளில் எதுவும் ஏறவில்லை.
' யோவ். எழுமிச்ச மூட்டைய மேல போட்ருக்கலாம்ல. மிக்கேல்பட்டணத்துல எறங்கி சூஸ் தான் கொடுக்கப்போற. மூட்டைய ஓரமா வை' என்று
முணுமுணுத்த படி நடத்துனர் முன்னுக்கு வர ஆரம்பித்தார்.
வாசித்துக்கொண்டிருக்கும் சிலருக்கு எப்போது
மிக்கேல்பட்டணத்து கட்டுச்சோற்றை அவிழ்ப்பேன்? என்ற சந்தேகம் வரலாம். தவறில்லை. பயணத்தின் சுவாரஸ்யங்கள் போய்ச் சேர்வதில் இருப்பதை விட போகிற வழிகளில் தான் இருக்கிறது. அதனாலேயே வழிகளை சுவாரஸ்யப்படுத்த விரும்புகிறேன்.
பயணத்தில் ஒரு கதை
கடந்த பயணப் பதிவில் அமரர் கி. ராஜநாராயணன் அவர்களின் "மின்னல்" கதையை ஆரம்பித்து பதிவை முடித்தேன். பலர் கதையைப் படித்திருக்கலாம். படிக்காதவர்களுக்கு கதையின் போக்கு வரவை மட்டும் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறேன்.
"Open பண்ணா" -
இப்படித்தான் சினிமாத்துறையில் இருக்கும் பலர் கதை சொல்லுவார்கள். Me too...
கதைய open பண்ணா...
நல்ல வெயிற் பொழுதில் .
" போலாமா? வேணாமா?"
"வரும். ஆனா வராது!"
- என்பது போல
'புறப்படும். ஆனா போகாது' எனும் விதிகளின்படி புறப்பட எத்தனிக்கும் பேருந்துக்குள் பயணிகளோடு புழுக்கமும், வேக்காடும் இருக்கையிட்டு அமர்ந்துகொள்ள உள்ளே மொத்தம் நாற்பத்தைந்து பிரயாணிகள்.
நாற்பத்தைந்தில் 42 ஆண்கள். மூன்று பெண்கள்.
குறிப்பு
பெண்கள் மூவரும் 60ஐக் கடந்த கிழவிகள்(senior citizens)
பயணம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். மீசைக்கண்காட்சி சாலைக்குள் நுழைந்தமாதிரி திரும்பிய பக்கமெல்லாம் எங்கெங்கும் மீசைகள். பயணத்தில் 'ட்விஸ்ட்டாக' மூன்று கிழவிகள்.
சமயங்களில் இது போன்ற பயணங்கள் வாய்ப்பதுண்டு. அப்படியான தருணங்களில் புரட்சித் தலைவர் 'எம்.ஜி.ஆர்' ஆகிவிடுவேன்.
'அம்மாச்சி. அப்பாயி... நிக்கிறீங்களே. உட்காருங்க 'என்று என் இருக்கையை தாரைவார்த்து என் பக்கத்தில் அமர்ந்திருந்தவருக்கு கடுப்பேற்றி இருக்கிறேன்.
கடுப்பேற்றாமல் கதைக்கு வருகிறேன்.
"இருக்கு. ஆனா. இல்ல!" - என்பது போல மூன்று கிழவிகளை விடுத்து 'ஆண்கள் மட்டும்' என்று' போர்டு' போடாத குறையாக பயணம் சுரத்தின்றி தொடங்கியது.
பெண்கள் இல்லா இடமும் உப்பில்லா உணவும் ஒன்று. உண்மை தானே.
அன்று ஆதி மனிதன் ஆதாம் உணர்ந்திருக்கலாம்.
ஆதி மனிதன் 'ஆதாம்'
"போரடிக்குது சாமி. எதாச்சும் பண்ணுங்க"-
- என்று புலம்ப ஆண்டவன் ஆதாமின் விலா எலும்பை உருவி ஆதாமிற்குத் துணையாக ஒரு பெண்ணைக் கொடுத்தார். அவள் 'ஏவாள்' ஆனாள். 'ஏவாள்' என்றால் ஏவுபவள் என்ற அர்த்தம் உண்டோ? தெரியவில்லை.
இந்த நிகழ்வை தற்பொழுது காட்சிப்படுத்தினால் "ஆதாம் ட்ரவுசர் கழண்டுச்சு" என்று பின்னணி பாடலாம். ஆதாம் அவ்வமயம் 'ட்ரவுசர்' எதுவும் அணியாததால் ஆதாமுக்கு ஆப்பு ஏவாளால் வந்தது.
எது எப்படி இருந்தாலும் பெண்ணிடமிருந்து தானே வாழ்வே தொடங்குகிறது. பெண் வழியாகத்தான் உலகையே காண்கிறோம். "பெண்கள் நாட்டின் கண்கள்" என்பது உண்மை தான்.
' மாதரே... மாதரே... மா.... தரே.' 'பிகில்' படப்பாடல் என் காதுகளில் ஒலிக்கிறது.
எங்கு விட்டேன். ம். ஞாபகம் வந்துவிட்டது.
மூன்று கிழவிகள் நீங்கலாக ஆண்களால் நிறைந்து வழிந்த பயணம் அசடு வழியத் தொடர்கையில்...
பேருந்து ஒரு நிறுத்தத்தில் நிற்கிறது. மூன்று கிழவிகளில் ஒரு கிழவி இறங்குகிறார்.
இயக்குனர் திரு. கே. பாக்யராஜ் அவர்களின் படம் போல கதையில் ஒரு திருப்பமாக அழகான ஒரு நடுத்தர வயதுள்ள பெண் தன் கைக்குழந்தையுடன் பேருந்துக்குள் ஏற எல்லோரது முகத்திலும் மகிழ்ச்சி இருக்கையிட்டு அமர பேருந்துக்குள் இருந்த வேக்காடும், புழுக்கமும் 'எங்களுக்கு இனி சோலி இல்ல. சோலி முடிஞ்ச்சு' என்றபடி வெளியே வெயிலோடு கலந்தன.
பேருந்துக்குள் தென்றலாக வந்த குழந்தையை அனைவரும் கொஞ்சுகிறார்கள். விளையாட்டு காட்டுகிறார்கள். தாயின் சிரிப்பொலி இசைபோல பேருந்துக்குள் பரவுகிறது. நடத்துனர் கொடுத்த பயணச்சீட்டை குழந்தை காற்றோடு பறக்க விடுகிறது.
உலகத்தின் உரிமையாளர்கள் குழந்தைகள். உரிமையாளருக்கே சீட்டுக் கொடுத்தால் சும்மா விடுமா! அதனால்தான் சீட்டைக் காற்றோடு பறக்கவிட்டது. இப்படி சுவாரஸ்யமாகக் கடக்கும் பயணத்தில் அடுத்த நிறுத்தம் வர தென்றலாக வந்த இருவரும் இறங்க பேருந்துக்குள் இருந்த சந்தோசமும், குதூகலமும் மின்னலாக மறைந்தது. பேருந்து புறப்பட வெளிச்சென்ற வேக்காடும், புழுக்கமும் மீண்டும் பேருந்துக்குள் நுழைகிறது. அனைவர் மனதிலும் ஒருவித எரிச்சல் அழையா விருந்தாளியாக வந்து அமர்ந்துகொள்கிறது.
கதை முடிகிறது. ஆனாலும் இம்மாதிரியான பயணங்கள் தொடரத்தான் செய்கிறது.
இதே மாதிரியான பயணங்களை நீங்களும் கடந்திருக்கலாம். மனம் எனும் பறவை அந்தப் பயணத்திற்குள் பிரவேசிக்கலாம். பழம் நினைவுகள் உண்ணலாம்.
மனம்கொத்தும் பறவை பறக்கும்...
Irudhy.a