"மல்லிக மொட்டு மனசத் தொட்டு… இழுக்குதடி ஆள…!"
அப்புறம்…
"மல்லிகையே… மல்லிகையே…
மாலையிடும் மன்னவன் யார் சொல்லு… ஹே… ஏ…
சொல்லு…
உள்ளங் கவர் கள்வனா?
குறும்புகளின் மன்னனா? "
- 'குறும்புகளின் மன்னனா' வரிகளை 'repeat mode-ல rewind button' தட்டிக் கேளுங்க. ஏன் சொல்றன்னா?
'Three days before' ஒரு குறுஞ்செய்தி எனக்கு வந்தது. அனுப்பியவர் ரகசியமோ. ரகசியம். நான் சொல்ல மாட்டேன். சொன்னா 'ராயல்டி' கேட்க வாய்ப்பிருக்கு. அதுனால கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொல்றேன். செய்தி தான முக்கியம். நிரூபரா முக்கியம்.
குறுஞ்செய்தி இதோ…
' ஏம்பா… ரோசாவுக்குக் கூட இவ்வளவு பெருசா எழுதலீயேப்பா…?'
என நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 'மாடுலேஷன்ல' கேட்டிருந்தார். மதுரைக்காரனா இருந்துகிட்டு 'மல்லிகைய' எண்ணியா எழுதறது. அதான் முழம் முழமாகச் சுத்தி மல்லிகைப் பந்தாக்குகிறேன். அப்புறம் கேள்விக்கான பதில பாட்டாவே படிச்சிட்டேன்.
மல்லிகை "காதல், களவு,
கற்பு" என கலந்து கட்டி கைப் பிடித்து உடன் வரும். சில சமயங்களில் பக்திப் பரவசங்களிலிலும் பங்கெடுக்கும்.நம்ம கவிஞர்கள் நல்ல மாதிரி தான். ஆனால் சூழல மல்லிகை மயக்கிடுது. அதான்…
குறும்புகள் மன்னனா?
உள்ளங்கவர் கள்வனா? - னு எழுத வைக்குது.
இந்தப் பாட்டைக் கேளுங்க…
"மணக்கும் மல்லிக மஞ்சத்தில் இருக்கு" …
அடுத்த வரிகள எழுத மாட்டேன். நான் ரொம்ப 'டீசன்டான' ஆளாக்கும். சரி விஷயத்துக்கு வர்றேன்.
Have your cup of Milk…
இதென்னடா தேநீருக்குப் பதிலா பால் வருதுன்னு பார்க்குறீங்கள்ல. மல்லிகை with தேநீர் கூட்டணி set ஆகாது. அதான் Tea cancel. Combination முக்கியம்ல.
அன்று…
Wedding combination
பெரும்பாலும் எனக்கு இஸ்லாமிய நண்பர்கள் வாய்ப்பதே இல்லை. அகஸ்மாத்தாக ஒற்றை இலக்க எண்ணிக்கையில் தான் இருக்கிறார்கள். இஸ்லாமியர்களின் பண்டிகை நாட்களில் இது பெரிய குறையாகக் தோன்றும். ஏன்? உங்களுக்கே தெரியும்.
சிறு பிராயத்தில் இரு வேறு வசிப்பிடங்களில் இஸ்லாமியத் திருமணங்களைக் கண்டிருக்கிறேன். ஒன்று, ஜெய்ஹிந்து புரம், அடுத்து,
ஹாஜிமார் தெரு. இங்கு இஸ்லாமியர்கள் அதிகம்.
இஸ்லாமியர்களின் திருமணச் சடங்கு என் நினைவுகளில் வாசம் செய்வதற்கு 'மதுர மயக்கும் மல்லிகையே' காரணம்.
பொதுவாகவே, இஸ்லாமிய மகளிர் பூச் சூடி வருவதை நான் கண்டதில்லை. இஸ்லாத்தில் பூக்களுக்கு ஏன் அதிக முக்கியம் கொடுப்பதில்லை என அறிய முற்படுகையில் இஸ்லாமிய மகளிருக்கு மல்லிகைப் பூக்கள் பிடிக்கும் என்பதை அறிய முடிந்தது. உண்மை தான்.இதற்குச் சாட்சியாக அன்று இஸ்லாமியத் திருமணங்களில் நான் கண்ட காட்சிகளே கண் முன் வருகின்றன.
'வெண் குதிரை' மீதமர்ந்து வரும் இஸ்லாமிய மணமகன் வண்ணங்கள் மிளிரும் 'குர்தா' அணிந்து தலைக்கு பாகை அணிந்து பளபள காலணியோடு முகமே தெரியாதபடி மணக்கும் மல்லிகைப் பூக்களைச் சரஞ்சரமாகக் கோர்த்து தொங்க விட்டபடி வெண் குதிரையில் வருவார்.
https://www.facebook.com/reel/1333320153842494?fs=e&s=cl
மாப்ள எப்புடி மல்லிகைப் பூக்காட்டுக்குள்ளயே குடியிருந்தாரு?' இப்பொழுது மனம் யோசிக்கிறது. சரி அது கெடக்கட்டும்.
'மாப்ள ஏன் வெண் குதிரை மீதமர்ந்து வந்தார்?'
கேள்வி குடை விரித்தது. சரி வலைப் பூக் காட்டிற்குள் நுழைந்து தேடலாம் என வலைச்சந்தைக்குள் நுழைந்ததில்' வெண் குதிரை சமாச்சாரம் விளங்கியது.
' வெண் குதிரை சமாச்சாரம்'
வெண் குதிரை ஒருத்தருக்குப் பாத்தியப்பட்டதாகத் தெரிந்தது. பாத்தியக்காரர் வேறு யாருமல்ல. நம்ம 'சுக்கிரன்' தான். சகல சுக போகங்களுக்கும் அதிபதி. இவருக்கு உகந்த நிறமாக வெண்மை இருக்கிறது. வாசனைகளின் மீதான ஈர்ப்பு, இல்லற வாழ்வில் சுபிட்சங்கள், கலைகளில் பிரசித்தம், காதல், களவு, கற்பு என கலந்துகட்டி சுக்ர திசையானவர்.
இதனால் தானோ என்னவோ…
"உங்களுக்கு இனி சுக்ர திசை வாய்க்கப் போகுது" - என சோதிடம் சொல்கிறார்களோ!
சுக்ரனுக்கு 'கவி' என்ற பெயரும் உண்டு. கருட வாகனத்திலும் இருக்கிறார். வெண் குதிரையோடும் இருக்கிறார். நான் வெண் குதிரை சமாச்சாரத்தை அறிந்து 'ஓஹோ!' என விளங்கினேன். அது சரி இஸ்லாத்தில் எப்படி சுக்கிரன் சாயல் வந்தது. ஆச்சரியமாக இருந்தது.
உண்மையில் இஸ்லாமியர்களுக்கு வாசனைகள் மீதான ஈர்ப்பு இருக்கவே செய்கிறது. நாங்கள் அப்பொழுது குடியிருந்த வீட்டின் ஓனர் இஸ்லாமியர். தலையில் வைத்திருந்த குல்லாய். பிறகு அந்த மயக்கும் வாசனை இன்னும் நாசிகளில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. 'ஓனர் பாய்' சென்ற பின்பு
வீடு முழுவதும்' மல்லிகைச் செண்டு' கொண்டு தீர்த்தம் தெளித்தது போல இருக்கும்.
'சந்தனக் கூடு'
பண்டிகையிலும் மல்லிகைப் பூக்கள் இடம் பிடிக்கும். மலர் அலங்காரம் அமோகமாக இருக்கும்.
மல்லிகை விஷயத்திற்கு வருகிறேன்.
இஸ்லாமியத் திருமணச் சடங்குகளில் மல்லிகை அன்று பிரதானமாக இருந்தது.
மல்லிகைப் பூக்களின் காட்டிற்குள் இருப்பது போல ஓர் உணர்வு எழும். மலரின் வாசனையோடு இன்ன பிற திரவியங்களின் வாசனையும்
தம்பதியர் கண்ணாடியின் துணை கொண்டு தன் துணை கண்டு மகிழ்வது ஒரு சடங்காக நடக்கும்.
ஏன் கண்ணாடி வழியாகக் கண்டார்கள். இப்பொழுது விளங்குகிறது.
மனிதனின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு "கண்ணாடி" .
நம்மை நமக்குக் காண்பிக்கிறது. நான் சிரித்தால் சிரிக்கும். அழுதால் அழும். வெட்கி முகம் மறைத்தால் கண்ணாடியும் தன்னை மறைத்துக் கொள்ளும். 'கண்ணாடி' நிசத்தின் சாயல்.
முகம் மறைத்துப் பூத்துக் குலுங்கும் மணக்கும் மல்லிகைச் சரங்களை நைசாக விலக்கி தன் முன் உள்ள கண்ணாடி வழியாக இஸ்லாமிய மணமகன் தன் இணையை முதன் முறையாக காண்கிறார்.
கண்ணாடி என்னைத் தானே காட்டவேண்டும்.
திருமணத்தன்று இஸ்லாமிய மணமகன் முன் உள்ள 'கண்ணாடி' புதியதொரு அழகை பிரதிபலிக்கிறது.
காணும் பிம்பமும் உனது சாயல் தான்' எனச் சொல்லாமல்
சொல்கிறதோ!
' மணமகன் முகம் முன் சரம் சரமாக பூத்துக் குலுங்கும்
மணக்கும்' மல்லிகை 'தான் இதற்கு சாட்சி.
மணமக்கள் இருவரும் முன் நிற்க மல்லிகைப் பூக்கள் காற்றில் ஊஞ்சலாட மண்டபம் முழுக்க மல்லிகையின் வாசம் வியாபித்திருக்க…
"நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும்,
அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்"
-'திருக்குர்ஆன்' திருவசன குரல் ஒலி கேட்க 'மல்லிகை' மனமார மணம் வீசி புதுத் தம்பதியரை இல்லற வாழ்விற்கு வரவேற்கும்.
அடுத்த பதிவாக மதுரையின் வாசம் வசமாகும். மல்லிகை நடை தொடரும். தொடர்ந்திருங்கள்.
தொடர்ந்து வாசித்து வருதலுக்கு நன்றிப் பூக்கள்…
மனப்பறவை மனம்கொத்தும்!
பறக்கும்…