'யானை/
வீதி...
//கதையான நிசங்கள்' …
"கூடி வாழ்ந்தால் கோடி நன்மை" -
"கூடி வாழ்தல்" ஆதிச்சமூகத்தின் வாழ்வியலில் விழுந்த விதை.
விதை செடியாகி வளர்ந்து மரமாகி கிளைவிட்டு பூக்கள் பூத்து காயாகி பழம் கனிந்தது.
சுழற்சியில் விதைகள் மீண்டும் மண் சேர்ந்து மண்ணுக்குள் புதைந்தன. புதைந்த இடங்கள் விசாலமாயினும் மண்ணைத் தட்டி செடிகளாக மேல் எழும்பிய விதைகள் குறைவு.
இவ்விதைகளின் நிலை தான் ஆதிச்சமூகம் விதைத்த கூட்டுக் குடும்பங்களின் இன்றைய சுழலும் நிலை. சூழலில் சிக்கிய நிலை.
"வான் போலே...
வண்ணங்கள் கொள்ளும்
மனம் வேண்டும்"
'கனியிருப்பக் காய் கவர்ந்தற்று"
என்ற வள்ளுவத்தின் கூற்றுப் போல சுடு சொல் அன்றி சுட்டும் சுடர் விழிகளோடு கனிவான சொல்லெடுத்து வில்லுறுதியாக வளைந்து கொடுத்து வாழும்
வாழ்க்கையாக கூட்டு வாழ்க்கை இருந்தது.
' இருக்கிறது' எனச் சொல்லத்தான் ஆவலாக இருக்கிறது.
ஆவலை அடைகாக்கத் தவறி கல்லெறிந்த குளமாக அதிர்வலைகளோடு விட்டு விலகி 'கூட்டு வாழ்க்கை' தனித் தனி தீவுகளாகிவிட்டதை அறிவோம். இது காலமாற்றமா? இல்லை உளங்களின் மனமாற்றமா? பட்டிமன்றம் வைக்கலாம். தீர்ப்புச் சொல்ல மதிப்பிற்குரிய ஐயா
' சாலமன் பாப்பையா' தயாராகத் தான் இருக்கிறார். மனம் தயாராக இல்லை.
காரணம் நம்மில் பெரும்பாலானவர்களின் வாழ்வு தீவுகளில் தான் அடித்தளமிட்டு உயர்ந்து நிற்கிறது.
விழாக்காலப் பண்டிகை நாட்களில் மட்டும் ஒன்று கூடி கூட்டுவாழ்க்கையை எட்டிப் பார்த்துவிட்டு பண்டிகைப் பலகாரங்கள் ஜீரணம் ஆகும் முன் செய்கூலி சேதாரமில்லாமல் ஆதாரக் கூடு விட்டுப் பறந்து விடுவது இன்றைய சூழலில் இயல்பு.
"எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை"
எனும் 'வானத்தைப் போல' திரைப்பாடல் போல மத்தாப்பு கொளுத்தி பூ வானமாக உயர்ந்து உறவுகளோடு வாழத்தான் ஆசை. வாழ நினைத்தால் வாழலாம். வழிகள் உண்டு.
ஆனால் தேர்ந்து கொள்ளும் 'வாழ்வியல்'
கூட்டு வாழ்க்கையில் கல்லெறிந்துவிடுகிறது.
ரொம்பவும் உணர்வில் கரைந்து உருகுவதாகத் தோன்றுகிறது. உருகுதல் பனிக்கு இயல்பு. மனம் பனியாகுமா?
மணியோசை முன்னே கேட்கிறது.
பின்னே… யானை வராதா!
வருகிறது
"யானை!" …
கூடும் வரை கூடியிருக்கும்
'யானை' …
நிசத்தில் கூடி வாழும் இயல்பு யானையிடம் மட்டுமே உள்ளதாகத் தோன்றுகிறது.
யானை கூட்டுக் குடும்பமாக வாழும் இயல்புடையது. அறிவீர்கள்.
கூட்டமாகச் செல்லும் யானைகளை நேரில் கண்டதில்லை. விரியும் குறும்படங்களாகக் கண்டதுண்டு.
பள்ளி முடிந்து வீடு திரும்பும் குழந்தைகளின் உற்சாகத்தை கூட்டமாகச் செல்லும் யானைகளிடம் காணலாம். அதிலும் குட்டி யானைகள் களிறுகளையும், பிடிகளையும் தொட்டுத் தொடர்ந்து கால்களுக்கு இடையில் புகுந்து புறப்பட்டு கபடி ஆடுவார்கள் 'குட்டீசுகள்' .
கூட்டுக் குடும்பத்திற்கான சாட்சிகளின் காட்சிகள் அவைகள்.
தனியொருவன்
தனித்த யானை ஆபத்தானது. கூட்டமாக ஊருக்குள் நுழையும் யானைகளை மக்கள் ஊருக்கு வெளியே எளிதில் விரட்டிவிடுவார்கள். தனியாக ஊருக்குள் நுழைகிற யானையைத் துரத்த மக்கள் படாதபாடுபடுவார்கள். அறிந்திருப்போம்.
மனிதச் சமூகம் உட்பட
'தனித்திருப்பது' எந்த உயிரினத்திற்கும் அழகு சேர்ப்பதில்லை.
"தனிமரம் தோப்பாகாது" - என உரைத்தது நினைவிற்கு வருகிறது.
ஆனால் வாழ்வின் பயணத்தில் "தனிமை" தவிர்க்க முடியாதது. நம் அருகே நின்று உடன் பயணிக்கும் ஒரு பயணி போல கூடவே வரும்.
வாழ்வின் ஓட்டத்தில் ஓட்டம் நின்று அமர்கையில் நம் அருகே நின்ற தனிமையும்
"கொஞ்சம் தள்ளி உட்காருமையா.எவ்வளவு நேரந்தான் நின்னுகிட்டு வர்றது" எனக் கடிந்துகொண்டு நம் உடன் அமர்ந்து கொ(ல்)ள்ளும். யானையின் துதிக்கையாகி 'தனிமை' நம்மை பற்றிக்கொள்ளும்.
"பசித்திரு… தனித்திரு…
விழித்திரு" …
அருட்கடல் 'வள்ளலார்'
உரைத்தது நினைவிற்கு வருகிறது.
பசித்திருத்தலும், தனித்திருத்தலும், விழித்திருத்தலும்
வாழ்வில் கைப்பிடிக்க வேண்டிய மூன்று பெரும்புள்ளிகள் தான்
என்பதில் ஐயமில்லை.
'தனித்திருப்பது' தவத்திற்கு அழகு.
'தனித்திருப்பது' படைப்புருவாக்க படைப்பாளிகளுக்கு இயல்பில் அழகு.
அப்புறம் மையல் கொண்ட தையலும், தலைவனும்...
சேர்ந்து தனி உலகில் பிரவேசிப்பதும், தனிமையில் இனிமை காண்பதும் காதலில் அழகு.
மேற்கண்ட இவைகள் அற்ற எந்நிலையிலும் தனியொருவனாக, தனியொருவளாகப் பயணிப்பது வாழ்வில் வண்ணங்கள் சேர்க்காது என்பது பொதுவான எண்ணம்.
"தனிமை கண்டதுண்டு. அதிலே சாரம் இருக்குதம்மா!"
மகாகவி பாரதியார் பாடியது தனிமைக்குள் உள்ள வலியை பற்றியதோ என எண்ணத் தோன்றும். ஆனால், உண்மையில் 'மகாகவி' தனிமையில் இனிமை கண்டார் என்பதே உண்மை.
ஆயினும், தனிமை தவிர்த்தலே நலம். இயல்பில் மனிதன் கூடி வாழும் இயல்புடையவன் என்பதை அறிவோம்.
தனிமையைத் தவிர்க்க என்ன செய்வது? எவருக்கும் பிடிபடாத விஷயம் இது. சில கேள்விகளுக்கு வாழ்வில் விடைகள் கிடைப்பதில்லை. அப்படியான கேள்விகளை 'சாய்ஸில்' விட்டுவிட்டு தொடர்ந்து பயணிப்பதே வாழ்வில் அழகு சேர்க்கும்.
ஆயிரம் பேருக்கு மத்தியிலும் தனிமை வரும்.
'தனிமை' என்பது அகம் சம்பந்தப்பட்டதோ என கேள்வி எழும். "அகத் தனிமை" தவிர்க்க புறத்தே அன்பின் தேடல் அவசியம் எனச் சொல்லுகிறது நீதி. உண்மை தான்.
யானைகளைக் காணும் பொழுது ஒரு குழு மனப்பான்மை தோன்றும். மனம் குதூகலப்படும். கூடி வாழ்வது யானைக்கு பலம் என்றால்' கூடி வாழ்தல்' ஆதிச் சமூகத்திற்கு இயல்பாக இருந்திருக்கிறது. இன்று ஒரு வீட்டிற்குள் தனித்தனி தீவுகளாக வாழ்கிறோம். வாழப் பழகிக் கொண்டோம்.
"தீவுகள்" என ஒரு கதை எழுதி வைத்திருக்கிறேன். நிசத்திலிருந்து உணர்ந்து எழுதிய கதை. இன்றைய சூழலில் பலரும் இக்கதையில் தங்கள் வாழ்வைக் காணலாம். இக்கதையை படமாக்கும் எண்ணமும், ஆவலும் எனக்கு இருக்கிறது. நடக்கலாம். நடக்காமலும் போகலாம்.
பயணமே அழகு. பயணிக்கலாம்.
"மனப்பறவை" பறக்கும்
மனச்சித்திரங்கள் நிழலிடும்…
வரும்' புதன் ' இரவு…
இப்பதிவின் தொடரியான
வீதி.. /
கதையான நிசங்களோடு
யானையாரின் 'மனச் சித்திர உலா' நிறைவு பெறும்.
தொடர்ந்து வாசித்து வரும் அனைவருக்கும் நன்றிகள்.
தொடர்ந்திருங்கள்….
"மனப்பறவை" பறக்கும்
'மனச்சித்திரங்கள்' நிழலிடும்…
இருதய். ஆ