ஊர் கூடி இழுத்த தேர் போல... தீபாவளி எனும் தேர் வீடுகளைக் கடந்து மகிழ்ச்சியான தருணங்களை கம்பி மத்தாப்பாக, பூ வானமாக, சங்கு சக்கரமாக சுற்றிச் சுழல விட்டுவிட்டு 'டாட்டா' காட்டியபடி நகர்ந்து போய்விட்டது.
தீபாவளி மட்டுமல்ல எந்தப் பண்டிகையாக இருந்தாலும் பண்டிகை நாளை விட அந்நாளுக்கான முந்தைய தயாரிப்புகள் தரும் மனமகிழ்வுகள் திருநாளைக் காட்டிலும் மனசுக்கு மிக நெருக்கமாகவே இருக்கும்.
காற்றுக்குக் கூட இடமளிக்காமல் இறுகக் கட்டியணைத்து கூடிக் களிக்கும் புதுமணத் தம்பதிகள் போல பண்டிகை நாளை இறுகக் கட்டிக் கொண்டு கொண்டாட்டமாகக் கழித்தாலும் கைகளுக்குள் இறுகப் பிடித்துக்கொண்ட பனித்துகள்கள் நமக்குத் தண்ணீர் காட்டியபடி கைகளின் வழியே ஒவ்வொரு துளியாகக் கரைந்தே போய்விடுவது போல பண்டிகை நாட்களும் மகிழ்ச்சியைக் கரைத்து மனம் முழுக்க இரைத்துக் கடந்து போகும். பனித்துகளைப் பற்றிய கரங்களுக்குள் துகள்கள் கரைந்தாலும் அது தந்த குளிர்ச்சி உள்ளங்கை ரேகையாக
விரவிக் கிடக்கும்.
பண்டிகை நாட்களும் பனித்துகள்கள் போலவே மகிழ்ச்சியை மனசுக்குள் குளிர வைத்துக் கடக்கும்.
இதோ, தீபாவளித் தேர் நம் கண்கள் காண கடந்துபோய்விட்டது. ஆனால் இத் தேரின் தடங்கள் மீண்டும் நாம் பயணிக்க ஒரு வரைபடமாகும். பயணித்து மீ்ண்டும் தேர் காணலாம்.
சந்தோசங்கள் ஒரு வாரத்திற்குள் காணாமற் போகும் 'ஜலதோஷம்' போல் இல்லாமல் 'வளி' முழுக்க நிறைந்து கிடக்கும் காற்றுப் போல நம் வழியெலாம் மகிழ்வைக் கடத்திக் கடந்தால் ஒவ்வொரு நாளும் தீபாவளி தான் திருநாள் தான்...
Have your cup of 'Green tea'
'தீபாவளி 'Re loaded...
இதோ, விடியல் தீபாவளியின் பழைய ஞாபக முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்க்கிறேன். அவிழும் முடிச்சுகளுக்குள் உறைந்து கிடக்கும் ஞாபகங்களை உங்களின் மனங்களுக்குள் இட்டு முடிச்சிடுகிறேன். இந்த முடிச்சுகளுக்குள் உங்களின் பழைய ஞாபகங்களும் கைபிடித்துக் கொள்ளட்டும்.
ஞாபக முடிச்சு1
'ஜெ... ஜெ!' - என்றிருக்கும். எனது தந்தை அதிகாலை 4 அல்லது 5மணி வாக்கில் தீபாவளி 'பர்சேஸிங்' முடித்து வீடு வருவார்.
குடையுடனும், இரண்டு கைகளிலும் அகன்று விரிந்த கட்டைப் பிடியுள்ள கைப்பைகளுடனும், அத்தனைப் பைகள் நிறைய தீபாவளிப் பொருட்களோடும் எங்களின் மனம் நிறையும்படி உறங்க ஏங்கும் கண்களின் வழியே மகிழ்வைக் கடத்தியபடி வீடு வந்து சேருவார்.
வளரும் பிள்ளைகள் இறுகப் பற்றி வழியெல்லாம் கடக்க தந்தை எனும் பிடிமானம் போதும். ஆறுதலாக தாய் உடன் வருவார். வேறு பிடிமானங்கள் தேவையில்லை. இது மனங்களின் வார்த்தைகள். எல்லோர் வாழ்வின் ஆதாரங்கள்.
மறுக்க முடியாது.
தீபாவளியின் முந்தைய இரவில் ஒரு பெரிய பட்டியலோடு தன்னை 'load' செய்து கொண்டு தீபாவளியின் இரவுக் கடைகள் நோக்கிக் கிளம்புவார் என் தந்தை. சில சமயங்களில் மழை பிடித்துக் கொள்ளும். இருப்பினும் விடாப்பிடியாக குடை பிடித்து எங்களுக்குப் பிடித்தவைகளை வாங்க அடாத மழையிலும் கிளம்பி விடுவார். நாங்கள் விடியலுக்காகக் காத்திருப்போம். அப்பா வந்ததும் தீபாவளிக் கடைகளில் வாங்கிய பொருட்களை அம்மா எங்கள் வீட்டில் கடை விரிக்க.... அத்தனையையும் பார்த்துச் சந்தோசித்து உறங்கச் செல்வோம்.
எங்களின் சந்தோச நிறைவைக் கண்டு மனநிறைவு கொண்ட பின்னரே தந்தை நித்திரை காணச் செல்வார். வாங்கி வந்த பொருட்களுக்குள் கிறிஸ்துமஸ் தினத்தன்று நாங்கள் வெடித்துக் கொளுத்தி மகிழ்வதற்கான வெடிகளும், மத்தாப்புகளும் அடங்கும்.
காலை 9 மணிக்கெல்லாம் தீபாவளித் தருணங்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கும். அன்றைய தினம் எங்களின் உறக்கம் கலைப்பவர்கள் எங்களது அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்களாகத்தான் இருப்பார்கள். உறக்கம் கலைந்து விழித்தால் கண் எதிரே அவர்களின் கைகளில் இலை மூடிய பெரிய தட்டு எங்களைப் பார்த்துச் சிரிக்கும். சிரித்தபடி வரும் தீபாவளிப் பலகாரத் தட்டுக்களை அம்மா புன்முறுவலோடு வாங்கி எங்கள் வீட்டுப் பாத்திரத்திற்கு மாற்றுவார்.
இப்படியாக தட்டுக்கள் தட்டாமல் எங்கள் வீட்டுக் கதவு தட்டி ஒவ்வொரு தீபாவளிக்கும் வந்து எங்கள் வீட்டுப்பாத்திரங்கள் நிறைக்கும்.
அம்மா அத்தனையையும் கண்களால் புகைப்படம் எடுத்துக்கொள்வார். சட்டகமிட்டு மனச்சுவரில் மாட்டிக் கொள்வார். அத்தனையும் மாற்று வடிவங்களுடனும் வேறுவேறு சுவைகளுடனும் ஒன்றும் குறைவு படாமல் நிறைவாக 'கிறிஸ்துமஸ்' தினத்தன்று அக்கம்பக்கத்து வீடுகளின் வாசற்படி ஏறும்.
மகிழ்வுடனே நான், என் அண்ணன், என் தம்பி மூவரும் அத்தனை தட்டுக்களையும் ஒவ்வொன்றாக கைகளில் ஏந்தி மூடிய இலை பறந்து விடாதபடி அக்கம்பக்கத்து வீடுகளுக்கு கடத்துவோம். தம்பி சிறியவன் என்பதால் என் உடன் வருவான். கைகளில் தட்டு தரப்பட மாட்டாது. அவனுக்கு அது சற்று எரிச்சலைக் கொடுக்கும். அம்மா அவனை என்னுடன் கோர்த்து விடுவார். 'கூட்சு' வண்டி கணக்காக கிளம்புவோம்.
தீபாவளிக்காரர்களை விட தீபாவளியை வேடிக்கை பார்க்கும் எங்கள் வீட்டில் தான் தீபாவளிப் பலகாரங்கள் ரகம் ரகமாகப் பல் இளித்தபடி எங்களின் பற்கள் கடக்கும்.
அதிரசங்கள், முறுக்குகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு கட்டமைப்பில் இருக்கும். வட்டமாக, தட்டையாக, பொடிமாசாக என்றபடி புதிய வார்ப்புகளோடும் புதிய பரிமாணங்களோடும் தட்டுகளுக்குள் இலை முக்காடிட்டு வீடு வந்து சேர்ந்த காட்சிகள் மனசுக்குள் சுவையும் வண்ணமும் குறையாமல் பொக்கிஷத்தைப் போல இன்றும் பத்திரமாக இருக்கின்றன. உங்களிடமும் இப்படிப்பட்ட பொக்கிஷங்கள் இருக்கலாம்.
இன்று, நான் கண்ட வரை சென்னையில் அடுக்கங்களில் அடைக்கப்பட்ட கதவுகளின் இடுக்கு வழியே கூட தீபாவளிப் பலகாரங்கள் தன் வாசனைகளை அருகாமைக்கு கசியவிடுவதில்லை. மாற்றம் ஒன்றே மாறாதது.
ஞாபக முடிச்சு - 3
புத்தாடை உடுத்தி பெரியவர்களின் ஆசி பெற்று சுவைமிகு பலகாரங்கள் உண்டு பட்டாசுகள் வெடித்து மகிழ்வதைப் போலவே தீபாவளி தினத்தன்று புதுத் திரைப்படங்களைக் கண்டு களிப்பது பலருக்கு வழக்கமாகவே இருந்தது. இன்றும் அப்படியே!
அன்றைய நாட்களில் திரைப்படங்கள் தான் ஆகச்சிறந்த பொழுதுபோக்காக இருந்தன. திரையில் பார்க்கும் கதாநாயகனில்
திரைகாணும் ரசிகன் தன்னைக் கண்டான். சிலாகித்தான். அப்பொழுது தொலைக்காட்சிகள் வீடுகளுக்குத் தொலைவாகவே இருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வீடுகளில் கறுப்பு வெள்ளையில் தெரியும் தொலைக்காட்சிகள் இருக்கும்.
சரி தீபாவளி திரைக்கு வருகிறேன்.
தீபாவளித் திரை அன்று...
அப்பொழுதெல்லாம் ஒரு வருடத்திற்கு பத்து முதல் இருபது படங்கள் தான் வெளியாகும். வெளியான படங்கள் குறைந்த பட்சம் இருபத்தைந்து நாட்களில் இருந்து ஐம்பது நாட்களாவது ஓடும். படம் நன்றாக இருந்தால் நூறு நாட்களையும் கடந்து ஓடும். வெள்ளி விழாக் காணும். மறு தீபாவளி வரை ஓடிய திரைப்படங்களும் உண்டு. இன்று அப்படி இல்லை.
'திரைக்கு வந்த சில நாட்களிலேயே' - என்கிற குரலோடு நம் வீட்டு வரவேற்பறையில் புதுப்படங்கள் தனியார் தொலைக்காட்சிகளில் 'பவுசு' காட்டும்.
அன்று படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பயன்படுத்திய, கையாண்ட வழிமுறைகளை நினைத்தால் அதற்கென தனியே ஒரு பதிவு தேவை. ஒரு விதத்தை மட்டும் பகிர்கிறேன்.
ஒரு பெரிய சட்டக வண்டி...
நடுவில் ஆட்டோ டயர் போன்று இரு டயர்கள் இருக்கும். முன் பக்கம் சட்டக வண்டியை இழுக்கத் தோதாக ஒரு கைப்பிடி இருக்கும். பின்னிருந்து தள்ள ஒருவரும் முன் இழுத்தபடி ஒருவருமாக இருக்க... மூன்றாவதாக வரும் நபர் சினிமா விளம்பரம் அச்சடித்த வண்ணக் காகிதங்களை
விநியோகித்தபடி வருவார். கூட்டம் கூடிவிட்டால் கைகளை உயர்த்தி வண்ணக்காகிதங்களை வான் நோக்கி எறிந்து சூறை விடுவார். சிறுவர்கள் குதூகலச் சத்தத்துடன் அங்குமிங்கும் ஓடி காகிதங்களைக் கைப்பற்றுவார்கள். அச்சிறுவர்களில் நானும் ஒருவன்.
தீபாவளி அன்று கமல், ரஜினி திரைப்படங்கள் வெளியானால் அது தனித்தீபாவளியாக இருக்கும்.அப்பகுதிகள் தனித் தீவுகளாகி ஆட்டம் பாட்டம் என்று கலை கட்டும். அன்று தீபாவளி தினத்தில் படம் பார்த்து வருபவர்கள் ஏரியாவின் கதாநாயகர்களாகி விடுவார்கள். அன்றைய காலங்களை தமிழ்த்திரையின் பொற்காலங்கள் என்றே சொல்லலாம்.
இப்படியாக அன்றைய தீபாவளி நாட்கள் நினைக்கையில் கைகளுக்குள் ஒட்டிக் கொண்ட வண்ணத்துப் பூச்சியின் நிறத்தைப் போல மகிழ் நினைவுகள் மனதோடு ஒட்டிக் கொள்ளும். என்றும் எப்பொழுதும்...
வழியெல்லாம் விழிகள் நிறை ஒளியாக நாட்கள் தொடரட்டும்....
பறக்கும்...
Irudhy.a