உங்களுடன் ஒரு நிமிடம்...
இந்த ஒரு நிமிடம் என் பதிவைக் கண்ணுற நீங்கள் எனக்காகத் தரும் நிமிடங்களுக்குள் சேராது. புரட்டாசி மாதச் சலுகையாக இந்த ஒரு நிமிடத்தை கூடுதலாகத் தர வேண்டி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
One minute begins...
இந்தப் பதிவில் மிக்கேல் பட்டணத்தைப் பற்றி நான் சொல்லுவேன் என்று நினைத்திருப்பீர்கள். மன்னிக்கவும். அடுத்த பதிவில் சொல்கிறேன்.
"'அப்புடியா ? ... விஷயம் அப்புடிப்போகுதா! சர்தான். அப்ப
' next meet panrane'-னு வாசிக்காம போயிடாதீங்க. தீபாவளிக்கு முந்தைய இரவு எப்படி சுவாரஸ்யம் சேர்க்குமோ அதுபோலத்தான் இப்பதிவும் அடுத்த பதிவிற்கான தொடக்கம். நான் என் கதைகளை மட்டும் மையப்படுத்தி சொல்வதில்லை. அதனோடு தொடர்புடைய மற்ற விஷயங்களையும் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். நீங்களும் விரும்புவீர்கள் என நம்புகிறேன்.
மனம் விரும்புதே....
" தனிமை கண்டதுண்டு...
அதிலே சாரம் இருக்குதம்மா!"
-மகாகவி பாரதியாரின்
வரிகளுக்குள் ஏதோ ஓர் உணர்வு புதைந்து கிடக்கிறது. கம்பிகளுக்கு ஊடாக கடக்கும் கண் அறியா மின்சாரம் போல ஓர் இனம் புரியாத உணர்வை ஈர்க்கும் காந்த அலைக் கற்றையாக மனசுக்குள் கடத்துகிறது. கடக்கிறது.
நிலையா வாழ்வில் நிலைத்த உண்மை - 'எல்லாம் கடந்து போகும்' என்பதே.
'தனிமை' என்பது எண்ணிக்கை சார்ந்தது அல்ல. ஆயிரம் பேருக்கு மத்தியிலும் தனிமை வரும். தனிமை மனம் சம்மந்தப்பட்டது.
"தனிமரம் தோப்பாகாது" அறிந்தும் அறியாமல் கடக்கும் உண்மை இது. இன்றைய சூழலில் 'கொரோனா' பிடியில் இருப்பவர்கள் தனிமரமாகத் தான் பொழுதைக் கடக்கிறார்கள். இருப்பினும் அவர்கள் தோப்பில் உள்ள ஒரு தனிமரம் அவ்வளவே. காரணம் தனிமரத்தைத் தாங்கிப் பிடித்துள்ள வேர்களாக முன் களப் பணியாளர்களும், மருத்துவர்களும் இருக்கிறார்கள்.
'தனித்திரு. மனதால் ஒன்றித்திரு'-இது 'கொரோனா' காலத்து பாலபாடம்.
தனித்து இருக்கும் சூழலுக்கு ஆட்படுகையில் கூட்டாக வாழும் சூழலை மனம் எதிர்நோக்குகிறது. இன்றைய கலாச்சாரமும் வாழ்வின் சூழலும் கூட்டு வாழ்க்கையில் கல் எறிந்து கூட்டைக் கலைத்திருக்கிறது. வலி அறிந்தே ஏற்று நடக்கும் வழி இது. வேறு வழியில்லை. காலத்தின் கட்டாயம்.
'திரை கடலோடியும் திரவியம் தேடு' முன்னோர்கள் சொன்னது. பின்னாளில் ஏன் சொன்னோம்? என்று முன்னோர்கள் எண்ணுமளவிற்கு திரவியத் தேடலில் முனைப்பானது வாழ்வு.
தனித்தனி தீவாக மாறிப் போனது வாழ்க்கை.
தேடி ஓடிச் சேர்த்துக் களைத்து நரை கூடி உலகறியும் போது வாழ்வு 'முதுமை' எனும் அட்டை உயர்த்தி "ஆடியது போதும். வா... வந்து அமர்ந்து கொள்" - என்றபடி 'தனிமை' எனும் வரவேற்பறைக்குள் தள்ளிவிட்டுக் கடக்கிறது. வரவேற்பறையில் அமர்ந்த மனம் உறவுகளின் வருகை நோக்கிக் காத்திருக்கிறது.
'முதுமை' வரமா? சாபமா? மனசுக்குள் பட்டி மன்றம் நடக்கிறது.
மூத்த பட்டிமன்ற நடுவர் திரு. சாலமன் பாப்பையா அவர்கள் நடுவராக அமர்ந்து கொண்டு அவரது பாணியில் 'முதுமை ஒரு வரமாத் தானய்யா இருந்துச்சு. அப்புறம் இப்ப இருக்க நெலமையப் பார்த்தா சாபமோ? அப்படின்னு நெனைக்கத் தோணுது. ஏன்? அப்படின்னு மனசுக்குள்ள ஆயிரம் கேள்விகள் ஓடுது.' முதுமை' என்பது என்று திரு. சாலமன் பாப்பையா அவர்கள் தீர்ப்புச் சொல்லத் தயாராகிறார்.
தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுகிறது.
ஒரு காலத்தில் முதுமை வரமாகவே இருந்தது.
'நரை கூடும்.
வெம்மை மறையும்.
மனசுக்குள்
வெண்மை படரும்.
தோல் சுருங்கி
அன்பு விரியும்...
பற்கள் விழும்.
பொக்கை வாயில்
பொய்களற்ற புன்னகை எழும்! முதுமை வாழ்வின் எழுச்சி...'
உடன் இருத்தலின் உயிர்ப்பு
"இருக்கின்றாள் என்பதே
எனக்கு இன்பம்"
-பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வரிகள் இருப்பை மட்டுமே விரும்பும் முதுமையின் முதிர்ச்சியைப் பறைசாற்றுகிறது.
தங்களின் அநேக சூழலில் முதியவர்கள் எதிர்கொள்ளும் கேள்விகள்...
"உங்க கூட யார் வந்திருக்கா?
உங்க கூட யார் இருக்காங்க"
என்பதாகவே இருக்கும்.
இன்று...
முதியோர் இல்லங்களில் 'முதியவர்கள் தினம்' விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
பெரும்பாலும் முதியவர்கள் தனித்து இருக்கிறார்கள். அல்லது முதியோர் இல்லங்களில் இருக்கிறார்கள். இது நிதர்சனம்.
முதுமை வரமாக இருந்ததை அன்று கிராமங்களில் காண முடிந்தது. அப்பொழுது அதன் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்ள முடியாத விளையாட்டுப் பருவம். இப்பொழுது நினைக்கையில் இழந்து கடந்த பாதை நீளும் வானமாக விரிகிறது. மீண்டும் பழைய பாதைக்கு மனம் திரும்ப விரும்புகிறது. விரிந்த வானை நடந்து கடக்க முடியாது.
மனம் பறவையானால் சிறகு விரித்துப் பறந்து பழைய நினைவுகளுக்குள் பிரவேசிக்கலாம். பழம் பாதைகள் கண்டு நம் வேர்கள் பிடித்து நிற்கும் மரம் அடையலாம். இளைப்பாறி பழம் நினைவுகள் உண்ணலாம்.
அடுத்த பகுதியில் நான் என் வேர்கள் தாங்கிப் பிடித்திருக்கும் மரத்தையும் அதன் கிளைகளின் வனப்பையும் மரம் படர்ந்திருக்கும் மிக்கேல் பட்டணத்து மண்ணையும் அறிமுகம் செய்கிறேன்.
முதியோர்களின் நேசமும் மண்ணின் வாசமும் அடுத்த பதிவில் வசப்படும்.
மனம் பறவையாகும்.
பழம் நினைவுகள் உண்ணும்!
மனம் கொத்தும். பறக்கும்...