நீ..... ண்ட கால இடைவெளிக்குப்பின்னும்
சொந்த ஊர் சென்று திரும்பிய தருணங்கள் மனதிற்கு நெருக்கமாகவே இருந்தது. இம்மனநிலையை எப்படிச் சொல்லலாம்? என யோசிக்கையில் யாசித்தவுடன் கிடைத்த பரிசுப் பொருள் போல சட்டென ஓர் உணர்வு தோன்றியது. தலைப்பிரசவம் முடிந்து தன்
தாய்வீடு திரும்பும் பெண்மையின் மனநிலை போன்ற உணர்வு தான் எனக்குத் தோன்றியது. இப்படிக்கும் நான் பிறந்ததெல்லாம் மதுரை தான். இருப்பினும் என் அம்மாவின் ஊரையே என் மனம் சொந்த ஊராகச் சொந்தம் கொண்டாடுகிறது. ஏன்? கேள்வியால் தான் விஞ்ஞானம் பிறந்தது. ஆனால் இவ்விஷயத்தில் 'ஏன்?' என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை. அது ஓர் உணர்வு. அவ்வளவு தான்.
அந்த உணர்வுடன் மழையில் நனைந்தபடி ஊரின் தெருக்களில் நடந்தேன். ஒருவரிடம் "பாஸ்கா மேடை உள்ள தெருவிற்கு இப்படிப் போகலாமா? '-என்று கேட்டவுடன் என்னை ஊன்றிப் பார்த்துவிட்டு
'இப்ப பாஸ்காவெல்லாம் போடுறது இல்ல. இடதுபக்கமாப் போய்த் திரும்புங்க'- என்றார்.
நான் சரி எனச் சிரித்துவிட்டு இடமாகத் திரும்பி நடந்தேன்.
('பாஸ்கா'என்பது கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்று நிகழ்த்துக்கலை மேடை நிகழ்வு. இரண்டு நாட்கள் நடக்கும். (இரவில்). நான் பார்த்தது இல்லை. என் அம்மா சொல்லி அறிந்திருக்கிறேன். ஆனால், என் தந்தை ஊரான
இடைக்காட்டூரில்
இன்னமும் கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவிற்குப் பிறகு' பாஸ்கா' நடத்தப்பட்டு வருகிறது.)
அம்மாச்சியின் வீட்டருகே ஒரு தாய்க்கோழி மழையில் நனைந்தபடி இறகு உலர்த்த, சேய்க்கோழிகள் 'குருச்... குருச்' ஓசையுடன் நனைந்தபடி தாய்க்கோழியின் கால்களுக்கு இடையில் முண்டி ஒண்டின.
பார்க்க கொள்ளை அழகாக இருந்தது. அக்காட்சிகளைச் சிறைப்பிடித்தேன்.
மிக்கேல் பட்டணத்து வீடுகளில் கோழிகள், ஆடுகள், மாடுகள் எல்லாம் குடும்ப உறுப்பினர்கள் போலவே வலம் வந்து கொண்டிருக்கும்.
Cut to
சென்னைப் பட்டணம்
கோடம்பாக்கத்தில் வசிக்கும் நான் இப்பகுதிகளில் வீடுகளை ஒட்டிச் சுற்றும் கோழிகளைப் பெரும்பாலும் கண்டதில்லை. (பிராய்லர்) கறிக் கோழிக்கடைகளைத் தான் அதிகம் கண்டிருக்கிறேன்.
பல சமயங்களில் இரு சக்கரவாகனத்தில் சோடி சோடியாகக் கட்டப்பட்டு தலைகீழ் விகிதங்களாக தலை தரை தொங்கக் கத்தியபடி கொத்துக்கொத்தாக 'விதிவிட்டவழி' என்றபடி வழி பயணிக்கும் கலப்பின நாட்டுக்கோழிகளையும், கறிக்கோழிகளையும் அதிகம் கண்டிருக்கிறேன். நீங்களும் கண்டிருக்கலாம். ஆனால் விட்ட குறை தொட்டகுறையாக எங்களது அடுக்கக்குடியிருப்புக்கு அருகில் ஒரு சண்டியர் சேவல் இருக்கிறார். என் மகனுக்கும் சண்டியருக்கும் சதா சண்டையாகத்தான் இருக்கும்.
காரணம் சண்டிப் பயலுக்கு உறக்கம், விழித்தல், பின் காலைக்கடன்கள் கழித்தல் எல்லாம் எங்களது இரு சக்கரவாகனத்தில் தான் நிகழும். இப்படிக்கும் அருகாமையில் விதவிதமாக இரு சக்கரவாகனங்கள் நின்றுகொண்டிருக்கும். ஆனாலும் படவா ராஸ்கல்!
சண்டியருக்கு
இருத்தல், கழித்தல் எல்லாம் எங்களது வாகனத்தில் தான். மகன் சமயங்களில் சண்டியரை விரட்டிக் கொண்டு ஓடுவான். ஆனால் சண்டியர் சிட்டாகப் பறந்து சுவரின் மீது ஏறி நின்று ஒரு பார்வை பார்த்து கொக்கறிப்பார். 'போடா பொடிப்பயலே' என்பது போல சிறகு தட்டுவார். உங்களுக்கு சண்டியரைக் காட்டவே அவரைப் புகைப்படம் எடுத்தேன். சற்றே தள்ளி நின்றபடி 'போஸ்' கொடுத்தார் சண்டியர். முகம் மட்டும் திருப்பிக் கொண்டார். (படவா ராஸ்கல்)
பெற்றிருக்கிறேன். ஒவ்வொன்றும் ஒரு ரகம். சட்டை செய்யாமல் மனசுக்குள் சிரித்துக் கொள்வேன். இந்த உணர்வுக் கலவைகளை கலைரசிப்பாக எனக்குள் கடத்தியது மிக்கேல் பட்டணம் தான். அத்தனையும் ஒப்பனைகளற்ற உண்மை.
Cut to
மிக்கேல் பட்டணம்
நான் அறிந்தவரை
ஒப்பனைகளற்ற முகங்களாகத் தான் மிக்கேல் பட்டணத்து மக்கள் .இருந்தார்கள். இருப்பார்கள். முகங்கள் மட்டுமல்ல மனங்களும் அப்படித்தான். உங்கள் ஊர் மக்களும் அப்படி இருக்கலாம். அதுதான் நம் ஊர்மக்களின் பெருமை. அதனாலேயே திருவிழா பண்டிகை நாள்களில் நம் சொந்த ஊருக்கு சிறகடித்துப் பறக்கிறோம்.
அப்படிப் பறந்து வந்து பருந்தாகச் சுற்றாமல் அவசரகோலத்தில் சூழல் காரணமாக புள்ளிக்கோலம் மட்டும் இட்டுவிட்டு சென்னை திரும்பினேன். மீண்டும் செல்லவேண்டும். பருந்தாகச் சுற்ற வேண்டும்.
எனது அம்மாச்சியின் வீடு கண்டேன்.
மாறாத வீடு. மாறாத தெரு. பெரிய மாற்றத்துடன் நான் கண்டது தண்ணீர்க் குழாயடிதான்.
எனக்குள் சந்தோசத்தை ஊற்றியது. எனது சிறு பிராயத்தில் அந்தக் குழாயடிக் குழாய்களைத் திறந்து காற்று வாங்கலாம். எப்பொழுதேனும் சிலசமயங்களில் தண்ணீர் வடியும். 'வரும். ஆனா வராது? அம்புடுதேன் சங்கதி'. இது தான் அன்று அக்குழாயடியின் விதியாக இருந்தது.
நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு மிக்கேல் பட்டணம் சென்றபொழுது அங்கிருந்த குறைந்த பொழுதிலும் மனசுக்குள் 'மிக்கேல் பட்டணம்' குறித்த எனது மனச் சித்திரங்களைக் காலம் தன் அழகான தூரிகைகள் கொண்டு தூறலில் தொடங்கி மழையாகப் பொழிந்த அந்த நாளில் என்மனசுக்குள் இருந்த பழஞ் சித்திரங்களுக்கு
புதிய வண்ணங்கள் சேர்த்தது.
'மிக்கேல் பட்டணம்' மீதான என் எண்ணங்களைத் தொடர்ந்து வண்ணங்களோடு உங்களின் மனத் தாள்களில் தீட்டுவேன். தூரிகையுடன் அடுத்த பதிவில் நினைவுகளைப் பதியமிடுகிறேன்.
தொடர்ந்திருங்கள். தொடர்ந்திடுங்கள்....
Have your cup of tea...
...
மனப்பறவை மனம் கொத்தும்!
பழம் நினைவுகள் உண்ணும்!
பறக்கும்...
Irudhy. A