சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடி முடித்து சந்தோச மழையில் நனைந்து மனம் மகிழ்வெனும் பூக்குடை விரிக்க தாங்கள் பிழைக்கக் கால் ஊன்றிய ஊர்கள் நோக்கித் திரும்பிக் கொண்டிருக்கும் தருணங்கள் இவை.
சூழலும் பெருமழையாகி அணைகளையும், கண்மாய்களையும், குளங்களையும் நிரப்பி மடை திறந்து ஊருக்குள் அடியெடுக்க ஆரம்பித்துவிட்டது. கொடையாகக் கருதப்பட்ட மழை எப்போது விடைபெறும்? என்று சாளரத்தின் வழியே சிறைக்கைதிகள் போல கம்பிகள் வழியே ஊர் காண வேண்டிய சூழல். சூழலை ரசிக்க முடியாமல் சிக்கும் சுழலாக்கியது நமது வழிமுறைகள் தான் என்பதில் ஐயம் இல்லை. எவரையும் தனித்துக் குற்றம் சொல்லி விட முடியாது. நம் வாழ்நிலைகள் நீர்நிலைகளில் இறங்கியதால் வந்த விபரீதங்கள்.
சமீபத்தில் நான் ரசித்துச் சிந்தித்த ஒரு 'மீம்ஸைப்' பகிர்கிறேன்.
வீடு வாங்கியவர்-
இடுப்பளவுத் தண்ணீரில் நின்றபடி...
'எட்டடியில தண்ணி வரும். வத்தவே வத்தாதுனு சொல்லி வீட்ட வித்தானுங்க. தரைக்கு மேலயா? தரைக்குக் கீழயான்னு கேக்காம விட்டுட்டேன். இடுப்பளவு தண்ணில நிற்கும் போது தான் உண்மை தெரியுது'.
இந்த' மீம்ஸ்' நிறைய புதைந்த உண்மைகளை தண்ணீரோடு அள்ளி சேறும் சகதியுமாக முகத்தில் அடிக்கிறது.
உண்மை சுடும். மழைக் காலத்துச்சூடு ஒவ்வோர் ஆண்டும் தொடர்வது மழையின் பிழை இல்லை.
மழை என்றும் கொடை என்பதை மனம் உணர செல்ல வேண்டிய தூரம் அதிகம். நாம் கடந்து வந்த பாதைக்கு மீண்டும் திரும்பலாம். திரும்பினால் எதுவும் கடக்கலாம்.
சொந்த ஊரின் மண் வாசனையும் ஒண்ணு மண்ணாகப் பழகிய மனிதர்களின் நேசமும் திரைகடலோடி திரவியம் தேடிக் கண்டடைந்தாலும் சொந்த ஊரில் கண்டடைந்த சின்னஞ்சிறு சந்தோசங்களுக்கு எந்நாளும் ஈடாகாது.
மிக்கேல் பட்டணம் சென்றடைகிற பொழுது 'SNR' ஐ விட்டு இறங்கியதும் அம்மாச்சி எங்களை அழைத்துச் செல்ல தயாராக 'குருசடியில்' (க்ரூஸ் அடி) நிற்பார்.
நாங்கள் வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்திறங்கும் அண்டைநாட்டு அதிகாரிகள் போல 'SNR' - ல் இருந்து படி இறங்குவோம். சிவப்புக் கம்பளம் விரிக்காத குறையாக அம்மாச்சி எங்களை வரவேற்று அழைத்துச் செல்வார். நடுத்தெரு வழியே நடந்து அதிதூதரின் ஆலயத்துக்கு இடப்புறமாகத் திரும்பி அம்மாச்சியின் வீட்டை அடையவேண்டும். அப்படிச் செல்லுகையில் வழி நெடுக திண்ணையில் அமர்ந்திருக்கும் அறிந்த தெரிந்தவர்களிடம் எங்களைப் பற்றிச் சொல்லாமல் கடக்கமாட்டார். அவர்களும் புதிதாகக் கேட்பது போல 'அப்புடியா! மெர்ஸி மக்களா! சந்தோசம். போங்கப்பு. சூதானமா விளையாடுங்க' என்று அறிவுறுத்தி கன்னம் கிள்ளிக் கிள்ளிய கைவிரல்களில் முத்தமிட்டுச் சிரிப்பார்கள்.
சுருள் பாக்கின் வாசனையும், 'போயிலையின்' (புகையிலைத் தூள்) நெடியும் அவர்கள் கிள்ளிய கன்னத்தில் உறைந்து கொள்ளும். வழிநெடுக விசாரிப்புகள் முடிந்து அம்மாச்சியின் வீடடைந்ததும் தட்டில் வரமிளகாய் எடுத்துவந்து எங்கள் மூவரின் தலை சுற்றி நெருப்பிலிடுவார் அம்மாச்சி. வரமிளகாய் சரவெடியாக வெடிக்க 'கண்ணயறு தீர்ந்துபோச்சு' என்பார்.
மஞ்சள் சுடுசோறும், பந்தற்காய் சாம்பாரும்...
மதியவேளை சுடுசோறு மஞ்சள் நிறத்தில் ஆவிபறக்க மங்குத் தட்டில் இளைப்பாறும். அம்மாச்சி எங்கள் எதிர் அமர்ந்து பந்தற்காய்கள் பதவிசாக மிதக்கும் மணக்கும் சாம்பாரை பொக்கை வாய் மலர மஞ்சள் சோற்றில் ஊற்றி 'பொறுக்கச் சாப்பிடுங்க ராசாக்களா!' என்றபடி சோற்று வற்றலை ஒர் ஈயத்தட்டில் பரப்புவார். சிறு கிண்ணியில் உடைத்த சிறுபருப்பிட்டுச் சமைத்த முட்டைக்கோஸ் அவியலைச் சரித்து விடுவார். உண்டு முடியும் வரை பனையோலை விசிறியால் எங்களுக்கு விசிறி விட்டபடி இருப்பார்.
இக்காட்சிகள் அழகான ஓவியமாக மனசுக்குள் அழிந்துபோகாதபடி இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது.
மதியச்சாப்பாட்டை ஊதி வயிற்றுக்குள் தள்ளிவிட்டவுடன் வராந்தாவில் 'வாங்க ராசாக்களா! வந்து துயில் கொள்ளுங்கள்' எனும் விதமாக விரிக்கப்பட்ட பாய் தயார் நிலையில் தரை கிடக்கும். பிரயாணக் களைப்பு நீங்கவேண்டுமல்லவா! மூன்று ராசாக்களும் உறக்கம் மேற்கொள்ளும் வரை அம்மாச்சி ஏதேனும் கதைகள் பேசியபடி பனையோலை விசிறியால் விசிறிக்கொண்டே இருப்பார். ராசாக்கள் உறங்கியதும் உணவருந்தச் செல்வார் அம்மாச்சி.
தாத்தா, பாட்டியினரின் அன்பை ருசித்தவர்களுக்கு அவர்களின் அருமை பெருமைகள் விளங்கும். மூன்று ராசாக்களும் உறக்கம் முடிந்து மாலையில் எழும்போது
கருப்பட்டித் தேநீரோடு மீதிக் கதைகளை(கதைகளான நிஜங்கள்) உங்களிடம் விவரிக்கிறேன்.
அதுவரை கொடிக்கால் மனிதர்களின் வாழ்வை....
பற்றிப் படர்ந்த பந்தற்கொடிகளை உங்களது மனதில் படரவிடுகிறேன்.
பந்தல் காய்க்கொடிகளும், கருவேல மரங்களும், கை உயர்த்தி நிற்கும் நெடும் பனை மரங்களும், முருங்கை மரங்களும், முள்ளு முருங்கை மரங்களும், புளிய மரங்களும், எருக்கம் பூச் செடிகளும், கரும்புக் காடுகளும் தரையோடு தரையாக திறந்து கிடக்கும் கேணிகளும் அன்று மிக்கேல் பட்டணத்தில் நாங்கள் கண்ட காட்சிகள்.
'எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' - என்ற தமிழிலக்கணப் பதம் போல முன்னோர்களின் ஒவ்வொரு செயல்களிலும் ஏதேனும் அர்த்தங்கள் விளங்கிக் கொண்டே இருக்கும்.
மிக்கேல் பட்டணத்தில் பெரும்பாலான வீடுகளை பந்தற்கொடிகளும், முள்ளு முருங்கைகளும் அலங்கரித்தபடி இருக்கும்.
ஏன்? என்ற கேள்விகளோடு தகவல் களக் காப்பாளர் திருவாளர் 'கூகுளை' நாடியபோது பந்தற் கொடிக் காய்களின் அருமை பெருமைகளை அறியும் கதவுகளைத் திறந்துவிட்டார். உள் நுழைந்து பார்க்கையில் பந்தற் கொடிக்காய்களின் உன்னத மருத்துவ மகத்துவங்களை அறியமுடிந்தது.
அவற்றில் சில துளிகள்....
பந்தற்காய்களின் மகத்துவங்கள்
உடலின் நச்சுத்தன்மையை நீக்கும் கை தேர்ந்த மருத்துவச்சி 'சுரைக்காய்' .
வளைந்து,நெளிந்து தோரணமாக ஊஞ்சலாடும் 'புடலை' உடலுக்கு நீரச்சத்தை மிகுதியாகத் தருகிறது.
இரத்த அழுத்தத்தை அடித்துவிரட்டும் ஆதர்ச புருஷன் 'அவரைக்காய்'
முருங்கை பந்தல் தோட்ட வகையறா இல்லை. ஆனால் வீடுகள் தோறும் வளர்ந்து நின்றது. அசைவ உணவுகள் தரும் சத்துக்களை முருங்கை தரும் எனும் உண்மையை அறிந்து வீடு தோறும் முன்னோர்கள் முருங்கையை
வளர்த்திருக்கிறார்கள்.
படர்ந்து விரியும் கொடிக் காய்களை வீடுகள் தோறும் பந்தலிட்டு முன்னோர்கள் வளர்த்ததன் நோக்கங்கள் விளங்கியது. இன்னும் நிறைய கொடிக்காய்களைப் பட்டியலிடலாம்.
மிக்கேல் பட்டணத்தில் அப்பொழுது நான் அதிகம் காணாதது வெற்றிலைக் கொடிகள் தான். என் அம்மா சிறு பிள்ளையாக இருந்த காலங்களில் வெற்றிலைக் கொடிக்கால்கள் அதிகம் இருந்திருக்கின்றன.
மிக்கேல் பட்டணத்து மக்கள் பலர் வெற்றிலைக் கொடிக்கால்களில் வேலை பார்த்திருக்கிறார்கள்.
வெற்றிலை நம்நாட்டுப் பயிர் அல்ல. மலேயாவில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்த பயிர். வெற்றிலையின் மகத்துவங்களை ஊர் அறியும். ஒன்றா, இரண்டா எல்லாம் சொல்லவே. ஒரு பதிவு போதுமா?
சங்க காலம் முதல்
தொட்டு, தொட்டுத் தொடரும் வைபோகமாக வெற்றிலை உடன் வருகிறது. நன்கு உண்ட பின்பு வெற்றிலையை தன் மடி தேய்த்து விரல் தடவி சுண்ணாம்பு இட்டு பாக்கு சுருட்டி, சாவகாசமாக அமர்ந்து மயக்கும் வார்த்தைகளை இலைக்குள் மடித்து...
விசேஷங்களோடு எப்போதும் வெற்றிலை கைபிடித்துக் கொள்ளும். வெற்றிலையை மெல்ல மெள்ள உடலை கிறக்கம் அள்ளும். இலக்கியங்களில் வெற்றிலை பற்றிய குறிப்புகள் நிறைய உள்ளன.
நல்லவிஷயங்கள் எங்கிருந்து வந்தாலும் முன்வீட்டு வாசல் நிறுத்தி ஆரத்தி எடுத்து தங்களோடு சேர்த்துக் கொள்ளும் நம் முன்னோர்களின் மரபு என்றும் மறக்கமுடியாது. மிக்கேல் பட்டணத்தில் இதை நான் கண்டிருக்கிறேன். உங்கள் ஊர்களிலும் நீங்கள் கண்டிருக்கலாம்.
உறக்கம் முடிந்து மூன்று ராசாக்களும் விழித்துக் கொள்ளும் நேரமிது. அழகான பொன்மாலைப் பொழுதில் செப்புக் கோப்பை நிறை கருப்பட்டித் தேநீரோடு வரும் பதிவில் சந்திக்கிறேன்.
மனப் பறவை மனம் கொத்தும்...
பழம் நினைவுகள் உண்ணும்!
பறக்கும்...
Irudhy.a