இனி தொடர்வது...
அன்று...
மிக்கேல் பட்டணத்துப் பொன்மாலைப் பொழுதினில்... அம்மாச்சியின் நேர்த்தியான கைப்பக்குவத்தில் தயாரானது சுக்கோடு கைகோர்த்த
'கருப்பட்டித் தேநீர்' .
'நான் ரெடி. நீங்க ரெடியா?' - என அழைக்க அம்மாச்சி தயார்நிலையில் தண்ணீர் நோக்கி தரைப்பலகையில் அமர்ந்திருப்பார். சூடான தண்ணீர் அழைப்பை ஆமோதித்து முன்னமே தட்டித் தயார்படுத்தி வைத்திருந்த சுக்கையும், கருப்பட்டித் துகள்களையும் சூடான தண்ணீரில் லாவகமாக கைவிரல்கள் குவித்து ஏகமாகத் தூவி விடுவார். பின்னர் கைகள் இரண்டையும் சேர்த்து கொதிக்கும் தண்ணீர் சட்டிக்கு மேலே உயர்த்தி கைகளைத் தட்டி கைரேகைகளின் பாதைகளில் ஒளிந்துபிடித்து விளையாடும் மீதத் துகள்களையும் மிச்சம்மீதி இல்லாமல் சுடு தண்ணீரில் சரணடைய வைப்பார். தனது முந்தியில் கைகளைத் துடைத்து மூக்குக் கண்ணாடியை சற்றே உயர்த்தி தயாராகும் தேநீர் நோக்குவார். சில மணித்துளிகள் கரைய சுக்கும், கருப்பட்டித் துகள்களும் தன்னைக் கரைத்து சுக்கின் வாசனையை நாசிகளுக்குக் கடத்தும். பொக்கை வாய் மலர்ந்தபடி 'பொறுக்கக் காஞ்சுருச்சு' - என்றபடி படிகளில் அமர்ந்திருக்கும் எங்கள் மூவரையும் 'வாங்கப்பு. காப்பித் தண்ணிய குடிச்சிட்டுப் போங்கப்பு ராசாக்களா! ... ' என்று அழைப்பார்.
இந்த இடத்தில் உங்களிடம் ஒரு விஷயத்தை சொல்லாமல் விட்டுவிட்டேன். கருப்பட்டித் தேநீர் சூடு குறையும் முன் சொல்லி விடுகிறேன். நான் தான் கருப்பட்டித் தேநீர் என்கிறேன்.
மிக்கேல் பட்டணத்தில் இந்த பானத்தை எப்படிச் சொல்லுவார்கள்?
தேநீர் சூடு ஆறப்போகிறது. குடித்தவுடன் சொல்கிறேன்.
Have your cup of...
சுக்கு கலந்த கருப்பட்டித் தேநீர்
சூடான தண்ணீரில் தன்னைக் கரைத்து சுக்கின் வாசனையையும் கருப்பட்டியின் 'அக்மார்க்' சுவையினையும் இரண்டறக் கலந்து கருப்பட்டி கழித்துக்கட்டிய மண்துகள்களை காடாத்துணி தடுத்து நிறுத்தி சுக்குக் கலந்த கருப்பட்டித் தண்ணீரை தேநீராக உருமாற்றும். வரிசைகட்டி நிற்கும் மூன்று பித்தளைக் குவளைகளில் சரிவிகிதமாக 'சொர்ருக்' என்ற பின்னிசையோடு கருப்பட்டித் தேநீீர் ஊற்றுவார் அம்மாச்சி.
பிறகென்ன, சூடு பறக்க ஒவ்வொரு மிடறாக நா கடந்து நாவின் சுவை மொட்டுக்கள் அத்தனையும் மலர வாசனையோடு உள்ளேன் தம்பிகளா! என்றபடி தொண்டை இறங்கும் சுவையான சுக்குக் கலந்த 'கருப்பட்டித் தேநீர்' .
மிக்கேல் பட்டணத்தில் இப்பானம் 'கருப்பட்டிக் காப்பி' என்று அன்று அன்போடு அழைக்கப்பட்டது. இப்பொழுது எப்படி என்று தெரியவில்லை. அறிந்து சொல்கிறேன்.
இந்தப் பதிவில் மிக்கேல் பட்டணத்தைப் பற்றிய வாழ்வியலில் வேறு எதையும் சொல்லப் போவதில்லை.
ஓர் அழகான கதையை மட்டுமே பகிரப்போகிறேன்.
கதை
வசனம்
இயக்கம்
- அனைத்தும் 'சாட்சாத்' எங்கள் அம்மாச்சியே!
'All Rights Reserved' அம்மாச்சி.
அம்மாச்சியிடம் ' Remake' உரிமை பெற்று கொஞ்சம் திரைக்கதை கூட்டி வண்ணங்கள் சேர்த்து அம்மாச்சியின் மூலக்கதை சிதைந்து போகாதபடி கவனத்துடன் உங்களிடம் கதைக்கிறேன்.
கதைப்போமா?
கதைகளின் உலகம் விசித்திரமானது. அலாதியானது. வாசித்தாலோ அல்லது கதைகள் கேட்டாலோ சடுதியில் நம் கண்களுக்குள் ஓர் உலகம் உருண்டு 'மேகக் கூட்டங்களாகத்' திரளும். பிய்த்துக் காற்றில் பறக்கவிட்ட 'இலவம் பஞ்சாக' மனம் மேல் எழும்பும்.
இன்றைக்கு கதைகள் சொல்லவோ கதைகளைக் கேட்கவோ அதற்கான சூழல்கள் இருப்பதாகத் தெரியவில்லை. அகன்று விரிந்த திரைகளிலும், கைக்குள் அடங்கி விரியும் கண்ணாடித்தொடுதிரைகளிலும் கதைகளின் உலகம் தன்னைச் சுருக்கிக் கொண்டுவிட்டது. இது எனது எண்ணம். உங்கள் எண்ணமும் இந்த வண்ணத்தில் இருக்கலாம்.
நம் பிள்ளைகளின் (இன்றைய தலைமுறைகள்) மனதில் கற்பனைகளையும், கலைநயங்களையும் விதைக்க கதை சொல்லிகளால் மட்டுமே இயலும். கதை சொல்லிகளாக மாறுவோமா? நான் எனது மகனுக்கு முன்பெல்லாம் நிறைய கதைகள் சொல்லுவேன். அவனும் கண்கள் விரிய... கதைகள் கேட்பான். எங்கள் கதைகளில் 'Batman, spider man, Hulk, mottu, patlu, டோரா & புஜ்ஜி' போன்றோர்கள் வருவார்கள். அனைவரும் ஒரே அடுக்கக வாசிகள். நாங்களும் தான். கதை சொல்லி முடித்ததும்
'அப்பா இன்னோருக்க!'-என 'Repeat audience' கணக்காக 'Rewind button' தட்டுவான். இப்பொழுது கதைத்தால் 'போங்கப்பா. எல்லாம் கட்டுக்கதை' என்கிறான். 'You tube' பார்க்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது. இருப்பினும் நம் பிள்ளைகளின் கைப்பேசியோடு நைசாகப் பேசி அதை அணைத்து கைவிரலால் ஒருதட்டுத்தட்டி ஓரங்கட்டிப் படுக்கவைத்துவிட்டு நம் பிள்ளைகளின் கைகள் பிடித்து கதைகளின் உலகத்திற்கு அழைத்துச் செல்வோம்.
சொல்லக் கதைகளா இல்லை நம்மிடம்!.
சொல்ல மறந்த கதைகள் உண்டு.சொல்லக் கதைகள் ஏராளம் உண்டு. உண்டு கழித்து இரவில் உறங்கச் செல்லும் முன் நம் குழந்தைகளோடு நாமும் குழந்தைகளாகி கைப்பிடித்து கதைகளின் உலகத்திற்குள் பிரவேசிக்கலாம். குழந்தைகளின் கதை உலகில் எந்த வரையறைகளும் இல்லை.
பறவைகள் மீது ஏறி அமர்ந்து வான் பறக்கலாம். ஐந்தறிவு ஜீவராசிகளுடன் ராசியாகி அவைகளுடன் 'ஏய் சிங்கராசா நாளைக்குக் காலைல எங்கூட காலார நடக்க வாரியா?
" நோ LOGIC. ஒன்லி MAGIC !".
இப்பொழுது அன்று அம்மாச்சி எங்களை அழைத்துப் போன ஒரு கதை உலகிற்குள் உங்களையும் அழைத்துப் போகிறேன்.
' Time Machine' தயார்.
என்னுடன் வந்து அமர்ந்துகொள்ளுங்கள்.
Count down Start...
மூலக் கதை-அம்மாச்சி'சொர்ணம்மாள்'
திரைக்கதை
படங்கள்... (கிறுக்கல்கள்)
பேரன்- இருதய்.ஆ
கதையின் பெயர்
'மகுடம்' மறவா "மகாராசா" ...
ஒற்றை ஆளாக யார் துணையுமின்றி தனித்து தைரியமாக வான் தெருவில் உலவிக் கொண்டிருந்த வடிவான முழு நிலாவை வானத்து நட்சத்திரங்கள் கண் சிமிட்டி, கண் சிமிட்டி கிறக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன.
சொரிந்தபடி வடிவான நிலவை ரசித்துக் களிக்க முடியாமல் தலைமுடியில் தறிநெய்துகொண்டிருந்தார் அந்நாட்டு மகாராசா...
கதையைத் தொடரும் முன் உங்களிடம் ஒரு விஷயம் சொல்லிவிடுகிறேன்.
நாட்டின் பெயர், மகாராசாவின் பெயர் மற்ற கதாபாத்திரப் பெயர்கள் எல்லாவற்றையும் அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிடுகிறேன். நீங்களே நாமகரணம் சூட்டிக் கொள்ளுங்கள். நான்
மகாராசாவிற்கு ஒரு பட்டப்பெயர் வைத்திருக்கிறேன். தொடரும்பொழுதில் அறிவீர்கள்.
சரி. மகாராசா ஏன் அந்தப்புரத்து மேல் மாடத்தில் நின்று கொண்டு நிலவின் வடிவு கண்டு வியக்காமல் மானாவாரியாக தலையில் தறி நெய்தார்?
தலை சொரிவுக்கு காரணம் இருக்கிறது.
மகாராசா எப்பொழுதும் தலை சொரிவாரே அன்றி பொதுவெளிகளில் ஒரு போதும் தலை குனிந்ததே இல்லை. ஏன்?
மகாராசாவின் தலைமகுடம் தரையில் இருப்பது அரிது. தலையில் இருந்தது தான் நாட்களில் பெரிது. இரண்டு காதுகளும் மறையும் அளவிற்கு திரையிட்டதுபோல சொக்கத்தங்கத்தோடு வைர, வெள்ளி மணிகளும் ஜொலி ஜொலிக்க தகதகக்கும் தங்கமகுடத்தை மகாராசா எப்பொழுதும் தலையில் தூக்கிச் சுமப்பார். தலை எடையைத் தாங்கிக்கொள்ள நிறைய பிரயத்தனங்கள் மேற்கொள்வார்.
ஓடுவன, நடப்பன, நீந்துவன, பறப்பன வரை எதையும் விடமாட்டார்.
அப்பக்கம் தலைநீட்டவே மாட்டார். முப்பொழுதும் வஞ்சனையின்றி சுவைகூட்டிச் சமைந்து தன் தலைவாழை இலை அமரும் அத்தனை அசைவப் பதார்த்தங்களையும் மகுடம் அசைந்து கீழ் விழாதபடி நிமிர்ந்தபடியே கண்களை மட்டும் தலைவாழை இலை இறக்கி......
ஒரு கை பார்ப்பார் நம் மகாராசா. மன்னிக்கவும். 'தலைசொரி மகுடம் மறவா மகாராசா' என்றே சொல்லுகிறேன்.
இதப்படிங்க கவனமா...
மிக முக்கியமான ரகசியம்.
மகுடம் இல்லா தலையோடு நம் "தலைசொரி மகுட மகாராசா"வை அந்தப்புரத்து இளவரசிகள் கூட கண்டதில்லை. தப்பித் தவறி எவரேனும் கண்டால்
'கண்டா வரச் சொல்லுங்க' - என்ற இக்கால 'கர்ணன்' திரைப்படப் பாடலைப்போல கண்டவரை தனியே கண்டு அவரின் இவ்வுலக 'டிக்கெட்டை'க் கிழித்து மேல் உலகத்திற்கு சீட்டுக் கொடுத்து அனுப்பிவிடுவார் நம் 'தலை சொரி மகுடம் மறவா மகாராசா'.
தலைமறவா மகுடம், எந்நேரமும் தலை சொரிவு...
- இரண்டிற்குமான காரணங்களின் மைய முடிச்சுக்கள் தான் மீதிக் கதை. இன்று எந்தக்கதை ஒரே ஓட்டத்தில் முடிந்திருக்கிறது. திரையில் காணும் கதையில் ஓர் இடைவேளை வரும். வீட்டுத் திரையில் காணும் கதைகளில் சொல்லவேண்டியதில்லை. நீங்களே அறிவீர்கள். நானும் இடைவேளைக் கூட்டத்தில் ஒருவன் தான். நம் 'தலைசொரி மகுடம் மறவா மகாராசா' கதையிலும் ஓர் இடைவேளை வந்துவிட்டது.
மகாராசா தலையில் தறி நெய்வதற்கும், மகுடம் அகலா தலைக்குமான காரணங்கள் என்னவாக இருக்கும்? கேள்விகளோடு இப்பதிவை முடிக்கிறேன். மீதிக்கதையை வரும் பதிவில் கதைக்கிறேன். அதற்குள் கேள்விகள் விழுந்த உங்கள் மனதில் நிறைய கதைகள் பிறக்கலாம். ஒவ்வொன்றும் ஒரு வண்ணத்தில் சிறக்கலாம். சிறகடிப்போம்...
கதைப்போம் .....
மனப்பறவை மனம்கொத்தும்...
பழம் நினைவுகள் உண்ணும்!
பறக்கும்...
Irudhy.a