இனிய சுதந்திர தின
நல் வாழ்த்துக்கள்...
இரவில் பெற்றோம்...
இரவலாகவோ
இரந்தோ பெறவில்லை.
தியாகச் செம்மல்கள்
இன்னுயிர் துறக்கப் பெற்றோம்!
தியாகச் சுடர்களின் ஒளியில்
இருள் நீங்கி விடிந்தது...
இந்திய தேசத்தின் சுதந்திரம்!
தியாகச் செம்மல்களின் சிவந்த பிடிக் கரங்களால் நெய்ததே...
இந்திய தேசத்தின்
மூவர்ணக் கொடி!
செம்மை (தியாகம்)
வெண்மை (தூய்மை)
பசுமையின்
அடையாளங்களோடு
பட்டொளி வீசிப்பறக்கும்
மூவர்ணங்களுக்குப் பின்னால் ஒளி(ர்)ந்து கிடக்கும் தியாகச்செம்மல்களின்
சிவந்த குருதியின் ஈரம்
காய்ந்து மண்ணில் சாயாதபடி
நம் விரல்களை வேர்களாக்கி... இந்திய தேசத்தின் கொடி மரத்தை இறுகப் பிடிப்போம்.
அடைந்த சுதந்திரம் காற்றோடு பறந்துவிடாமல் சுதந்திரக் கொடி
பட்டொளி வீசிப் பறக்க
சுதந்திரக் காற்றை உயிர்க்காற்றாகச் சுவாசிப்போம்...
இன்னலுற்று
அந்நியர்களிடமிருந்து அடைந்த சுதந்திரம் இன்றும் அநேகர் அடைந்ததாகத் தெரியவில்லை. தேசத்தின் ஏதேனும் மையங்களில் தங்களின் சுதந்திரம் விரிய விரல்கள் மடக்கி கோஷமிட்டுக்கொண்டே இருக்கிறார்கள்...
நம் தேசத்தின் தலைநகர வீதிகளில் தங்களின்
தலைவிதி மாற பசுமைக் காவலர்கள் (வேளாண் மக்கள்) விடியாத தங்கள் இரவின் விடியலுக்காய் காத்திருக்கிறார்கள். காலம் கனியுமா?
கனியட்டும்...
சுதந்திர வெளிகளில் இயந்திரமாக இயங்கிய வாழ்வை...
காலம் 'கொரோனா' எனும் இறுகிய தாழ்ப்பாள் கொண்டு மூடியது. எண்ணற்ற மருத்துவர்கள், செவிலியர்கள், முன் களப் பணியாளர்கள் 'கொரோனா' யுத்தத்தில் முன் நிற்க தற்சமயம் கண்களை மட்டும் திறந்து கொண்டு 'கொரோனா' கண்ணிகளில் சிக்கிவிடாமல் பயணிக்கிறோம்.
இடம், பொருள், ஏவல் அறிந்து பயணிப்போம்.
ஏற்ற காலம் வரும். எல்லாம் கடந்து போகும்.
விடியாத இரவு என்பது இறைவன் படைப்பில் இல்லை. படைத்த அனைத்திலும் இறைவன் நல்லவற்றையே கண்டார்.
நல்லன கண்டடைவதே சுதந்திர வெளியின் விடியல்...
நாளைய குறித்த கவலை பறவைகளுக்கு இல்லை.
வானமே பறவைகளின் எல்லை!
மனப்பறவை
சுதந்திர வெளியில்
சிறகு விரிக்கட்டும். பறக்கட்டும்...
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்....