Fly...
Have your Cup of palm sugar tea...
'SNR' திருப்பாச்சியை விட்டுப் புறப்படத் தயாரானது...
"கரம் சிரம் புறம் நீட்டாதீர்கள்"
'தம்பி ஒரு நிமிஷம். கரம் சிரம் புறம் யாரும் நீட்டமாட்டாங்க. எல்லாரும் தூங்கியாச்சு. வெத்தலப் பேட்டயில காரு கெளம்பி பல நாளாச்சு. ஏறுன எடமே மறந்துரும் போல . எங்க போறோம்கிறது மட்டும் ஞாபகத்துல இருக்கு.
அதுவும் திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டே வர்றதுனால நெனப்புல இருக்கு. ஏறுன இடத்துலயே எறங்கி நடையக் கட்டியிருந்தாக் கூட இந்நேரம் மிக்கேல் பட்டணம் போயிருக்கலாம். எப்ப தம்பி ஊரக் காட்டுவ? '
-மேற்கண்ட மனக் குரல் வேறு யாருடையதுமல்ல.
' சாட்சாத்' அவை அடியேனுடைய மனக் குரல் தான். உங்களுக்கும் இந்த எண்ணம் தோன்றியிருந்தால்
' we are sailing in the same boat'. இதன் இன்னொரு வடிவம் தான் நகைச்சுவைப் புயல் வடிவேலு அவர்களின் "why blood? Same Blood! "comedy dialogue. Ok சமாளிச்சது போதும்னு நினைக்கிறேன். 'SNR' - க்கு வந்துட்டேன்.
உங்களைக் காக்கா பிடித்துக் கொண்டிருந்த 'cycle gape' -ல் 'SNR' பச்சேரியில் இருவரை இறக்கி விட்டுவிட்டு சிட்டுப் போல பறந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில மணித் துளிகளில் மிக்கேல் பட்டணத்துக்குள் நுழைந்து விடலாம். வெயில் காய்ந்து வெளியில் உறைந்து
காகமாய்க் கரைந்து 'ஒண்ணு மண்ணாய்' வாழும் கிராமத்து மனங்களுடன் கலக்கலாம்.
'SNR' - In'
'நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் இரண்டு. ஒன்று மனசாட்சி'
- என்ற பாடல் நடத்துனரின் குட்டி 'டிரான்ஸிஸ்ட்டர்' ரேடியோவில் ஒலித்துக் கொண்டிருந்தது.
பாட்டைக் கேட்டபடி
பேருந்து நடத்துனர் ஆசுவாசமாக காலியாகக் கிடந்த கடைசி இருக்கையில் அமர்ந்து கைகளின் விரல்களுக்குள் சிறைப்பட்டுக் கிடந்த அழுக்கேறிய ரூபாய் நோட்டுக்களுக்கு விடுதலை கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஓட்டுனர் 'ஸப்பாடி ஊருக்குள்ள நுழைஞ்சாச்சு' - எனும் தோரணையில் கறுப்புக் கரைபடிந்து காய்ந்து கோட்டோவியம் இட்ட உப்புப்படிந்த சட்டைக் 'காலரை' கழுத்துக்குப் பின்புறம் சற்றே இழுத்துவிட்டுக் கொண்டு 'Trade mark Horn" இசையைக் கரும்புக் காட்டுக்
காற்றில் கசிய விட்டு 'SNR' - ன் வருகையைக் காற்று வழி ஊருக்குக் கடத்தினார்.
கொஞ்சம் கரடு முரடான மண் சாலையைக் கடந்து பள்ளம் மேடுகளுக்குத் தக்க இடம் வலமாக தலையை ஆட்டியபடி 'SNR' 'இந்தா வந்துட்டம்ல' - என்கிற தோரணையில் மிக்கேல் பட்டணம் வந்து சேர்ந்தது.
கரும்புக் காடுகள் வழி கசிந்து வந்த காற்று கொஞ்சம் வெக்கையோடு 'SNR' கைப்பிடிகளைத் தழுவி பின்பக்கமாக நுழைந்து உறங்கியவர்களை உறக்கத்திலிருந்து எழுப்பியபடி
ஓட்டுனரின் முதுகில் ஒரு தட்டு தட்டிவிட்டு முன்பக்க படிகள் வழி இறங்கி ஊருக்குள் கடந்து போனது கரும்புக் காற்று.
தோசை வார்ப்புகள் முடிந்த கல்லில் தண்ணீர் தெளித்தவுடன் ஓர் ஓசை எழுமே அது போல பயணம் முடித்த களைப்பில்...
'SNR' ஓர் உறுமல் சத்தத்தை உறுமி தன் உஷ்ணக் காற்றை தரைக்குக் கடத்த கீழிருந்து 'தூசு துப்பட்டைகள்' வெளிக் கிளம்ப உள்ளிருந்த பயணிகள் மிக்கேல் பட்டணத்து மண் தொட்டனர்.
'இந்தியா கிராமங்களில் வாழ்கிறது' என்றார் மகாத்மா காந்தியடிகள்.
'அது அப்போ!
இப்போ கிராமங்களின் வாழ்வே அஸ்தமிச்சுப் போச்சு' என்பது தான் நிதர்சனம். கிராமங்கள் நகரங்களாகிவிட்டன. நகரங்கள் நரகங்களாகிக் கொண்டிருக்கின்றன.
நான் எழுபதுகளில் பிறந்தவன். கிராமத்தின் வாசனையை நுகர்ந்து, ஊறுகாய் அளவேனும் தொட்டுச் சுவைத்தவன். என்னைப் போல எழுபதுகளிலோ அல்லது அதற்கு முன்னரோ பிறந்தவர்களும் கிராமத்து விலாசம் அறிந்திருக்கலாம். எண்பதுகளுக்குப் பிறகு கிராமங்கள் தன் வாசற்படிகள் தாண்டி ந(க)ரகத்திற்குள் அடி எடுத்து வைக்க அண்டம் கிடுகிடுக்க ஆரம்பித்தது.
'கொரோனா'க் கொடி தேசமெங்கும் பறக்கும் இன்றைய சூழலில் மனம் கிராமத்தின் வேர்கள் நோக்கிப் பறக்கிறது.
மிக்கேல் பட்டணம் உங்களை இனிதே வரவேற்கிறது.
என் பெயர் மிக்கேல் பட்டணம். அதிதூதர் மிக்கேல் சம்மனசு ஆண்டவரின் தேவாலயம் என் அடையாளம். பெரும்பான்மையாக கிறிஸ்தவர்களும் சிறுபான்மையாக இஸ்லாமியர்களும் பிற மதத்தவர்களும் கலந்து வசிக்கின்றனர். வெயிலின் நிறம் என் நிறம். வியர்வையின் வாசனை என் மணம்.
என் விடியல் பற்றி ஒரு பட்டிமன்றம் நடத்தலாம்.
தலைப்பு
சேவல் கூவிப் பொழுது விடிந்ததா ?
பொழுது விடிந்து சேவல் கூவியதா?
கொஞ்சம் குழப்பமாகத்தான் இருக்கும் எனது விடியல்.
குழம்பித் தெளிந்த தண்ணீர் கொள்ளை அழகு!
அப்படியென்றால் மிக்கேல் பட்டணம் எனும் நானும் அழகு தானே? ...
மிக்கேல் பட்டணம் ஒர் அழகான கிராமம். கருவேல மரங்கள் தனது 'ஆக்டபஸ்' வேர்களால் தண்ணீர் உறிஞ்சிய போதும் மலர்ந்து சிரிக்கும் வெம்மை முகம் தான் மிக்கேல் பட்டணத்து மண் முகம்.
தவழ்ந்து எழுந்து நின்று நடந்து ஓடிக் களைத்து அமரும் குழந்தை போல மிக்கேல் பட்டணத்து
வெயிலும் தன் நாள் கடக்கும்.
பெண்ணுக்கு வெட்கம் அழகு. மிக்கேல் பட்டணத்து மண்ணுக்கு வெயில் அழகு!...
அமரர் கவிஞர். நா. முத்துக்குமார் அவர்களின்
" வெயிலோடு உறவாடி...
வெயிலோடு விளையாடி..."
மனசுக்கு நெருக்கமான பாடல். காதுகளுக்குள் நுழைந்து இதயக்கதவைத் திறக்கிறது.
அழகைத் தரிசித்த நாட்களுக்குள் திரும்பப் பறக்கிறது மனம். உங்கள் மனமும் பறக்கட்டும். கிராமங்களுக்குள் பிரவேசிக்கட்டும்.
அது ஓர் அழகிய வெயிற் காலம்...
மனம் கொத்தும் பறவை பறக்கும்...
மனம் கொத்தும்...
பழம் நினைவுகள் உண்ணும்!