About Me

Friday, December 3, 2021

மனமகிழ் டிசம்பர்...

Fly...

நகரும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நாளும் மூன்று விதமான விளையாட்டுக்களை ஞாபகப்படுத்துகின்றன. 

ஒன்று 'பரமபத விளையாட்டு'...



ஏற்றம்...
இறக்கம்...
காத்திருப்பு...
இம் மூன்றும் சேர்த்துச் செய்த கலவையாக கணங்கள் கடக்கும். 


இரண்டு... 
'சதுரங்க விளையாட்டு' .


விரல்களின்
உத்தரவிற்கு
காத்திருக்கும்
'சிப்பாயாக' கணங்கள் கடக்கும்... 
'ராஜா' தானோ என்ற சந்தேகம் எழும். 'பவர்ஃபுல் ராணி' நிறைய யோசிக்க வைக்கும்.  முயன்றால் 'சிப்பாய்' கூட ராஜாவாகலாம்' - என்று கட்டங்களின் வழி விழி திறக்கும். 

மூன்றாவது' சீட்டு விளையாட்டு.' 

முதல் இரண்டும்  கட்டங்கட்டி விளையாடிப் பார்க்கும். 

 'இருக்கு. ஆனா! இல்ல' 'வரூ... ம்.? ஆனா வராது!' என்பது போல கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும்.

'Joker'-ஆக்கி வேடிக்கை காட்டும். கூட்டணி சேர்த்து' joker' - ஐ 'king maker' ஆக்கும்.

எது எப்படியோ வாழ்வின் மூவகை விளையாட்டுக்களிலும் சிக்கல்கள் விழும்போதெல்லாம்  அவரவர் இஷ்டதெய்வங்கள் நடுவர்களாக நின்று சிக்கல்களை சிக்கெடுத்து சீர்வரிசைகள் செய்து மீண்டும் விளையாட்டைத் தொடர வைக்கிறார்கள். கடந்த பதினோரு மாதங்களில் வாழ்வின்  இவ்வகை விளையாட்டுக்களை விளையாடிப் பார்த்திருப்போம் அல்லது வேடிக்கை பார்த்திருப்போம். இவை எல்லாவற்றையும் விட கடந்த இரண்டு ஆண்டுகளாக  கால் அடியில் எந்த நொடியில் கண்ணிவெடி வெடிக்கும் என்று அறிய முடியா வழிப் பாதைகள் போல 'கொரோனா' கண்ணி வைத்து காணமுடியா காற்றாக அலைந்து திரிகிறது. நிறம் மாறும் பச்சோந்தி போல 'கொரோனா' தன்னை உருமாற்றிக் கொண்டே தன்னைத் தக்க வைத்து வருகிறது.இச்சூழல்கள் எல்லாம் சுழல்களாக மாறி நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. 

' எல்லாம் கடக்கும்' எனும் நிதர்சனம் மனம் சுழல் வாழ்வைக் கடக்க தோணியாகிறது. இதோ தோணிப் பயணத்தில் இது 'டிசம்பர் மாதம்'..


சிறுவயதில் ஒரு மண் உண்டியலில் கிடைக்கும் காசுகளை சேமித்து அவ்வப்போது  உண்டியலில் இட்டு அது நிறையும்பொழுது உடைத்து சேர்ந்த மொத்தச்சில்லரைகளை எண்ணுகிற போது மனசுக்குள் ஒரு பல்பு எரியும். மனம் பிரகாசமாகும். அதுபோல மனக்கூட்டை உடைத்துப் பார்க்கும் மாதமாக 'டிசம்பர்' பிறப்பெடுக்கும். 


வீட்டுத் தாழ்வாரங்களில் வண்ணங்களில் விரிந்து 
காகித நட்சத்திரங்கள் முளைக்கும்! 
பகற்பொழுது...
பனித்துகளாகக் கரையும். 
சட்டென இரவு கவிழும். 
காற்றோடு கைகோர்த்து வரும் கடுங்குளிர் 'நான் தான் வந்துட்டேன்ல' - என்றபடி
 நம் உதடுகள் தட்டும். 
பற்கள் தந்தி அடிக்கும்.
வாசமில்லாப் பூக்கள்
 வண்ண முகம் காட்டும்.

 மாலை... 
அதிகாலை வேளைகளில்...  


'
பக்திப்பாடல்கள் 'காற்றினிலே வரும் கீதமாகி
"காதோரம் தான்...   நான் பாடுவேன்" - என்றுபாடி பரவசம் கூட்டும். 

Have your cup of "Tea"... 


மொத்தத்தில் 'டிசம்பர்மாதம் கூடை நிறைய பரிசுப்
பொருட்களோடு வண்ணங்கள் நிறை ஒளி முகமாக
 தன் முகம் காட்டும். 



 ஒவ்வொரு பூவிற்கும் ஒரு மணமும், வண்ணமும்  இருப்பது போல ஒவ்வொரு மாதத்திற்கும் சில பிரத்யேகப் பலன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. பலன்களுக்குள் நான் நுழையப்போவதில்லை. எல்லாப் பலன்களும் எல்லா மாதங்களிலும் நிறைந்திருக்க வேண்டுமென்பதையே மனம் விரும்பும். 
'பெட்ரோமாக்ஸ்' லைட்டே தான் வேணுமா? 'திரு. கவுண்டமணி அவர்களின் வசனம் காதுக்குள் கேட்கிறது. 

' ஜீலை மாதம் வந்தால் ஜோடி சேரும் மனது... '
' செப்டம்பர் மாதம் செப்டம்பர் மாதம் வாழ்வில் இன்பத்தை தொலைத்துவிட்டோம்'
           - போன்ற பாடல்களைப் போல டிசம்பரில் தொடங்கும் பாடல்கள் ஏதேனும் இருக்கிறதா? தெரியவில்லை. ஆனால், உலகளவில் மாதங்களின் பெயரில் வெளிவந்த திரைப்படங்களில் ஆஸ்கர் விருது பெற்ற ஒரே படம்
' டிசம்பர் 7'
ஜான் போர்டு என்பவரால் 1943-ஆம் ஆண்டு
"பேர்ல் ஹார்பர்" பற்றி எடுக்கப்பட்ட ஆவணப்படம் தான்
'டிசம்பர் 7' இப்படத்திற்கு ஆஸ்கர் கிடைத்ததில் ஆச்சரியமில்லை. ஆச்சரியங்களை, எதிர்பாரா நிகழ்வுகளை நிகழ்த்திப் பார்ப்பதில் 'டிசம்பர்' எப்பொழுதும் முதல் நம்பர். 

'டிசம்பர்' -  Bio-Data... 


  'டிசம்பர்' கிரெகொரியின் நாட்காட்டியில் பனிரெண்டாவது மாதம். முன்பு ரோமானிய நாட்காட்டியில் பத்தாவது மாதமாக கணக்கிடப்பட்டுள்ளது. பின்னர் ரோமானியர்கள் சனவரி, பிப்ரவரியை காலண்டரில் இணைக்க 'டிசம்பர்'' 12வது மாதமானது. 'மார்ச்' மாதமே வருடத் துவக்க மாதமாக இருந்திருக்கிறது. தமிழ் மாத வழங்கல்களிலும் 'சித்திரை' முதலா? 'தை' முதலா? என்கிற குழப்பம் இன்றும் நீடிக்கிறது. முன்னதாக 'டிசம்பருக்கு' 29 நாட்கள்  ஒதுக்கப்பட்டிருக்கிறது. பின்னர் 'ஜூலியஸ் சீசர்' நாட்டாமையாகி 29-  ஐ 31 நாட்களாக்கி தீர்ப்புச் சொல்லவே காலண்டரில் 'டிசம்பர்' 31  நாட்களானதாக வலைப்பூவில் அறிந்தேன். எது எப்படியோ 'டெசம்என்ற 'லத்தீன்' வார்த்தையிலிருந்து தான் 'டிசம்பர்' பிறந்தது. 'தசம்' - என்றால் 'பத்து' என்ற பொருள் தமிழில் உண்டு. அப்படியென்றால் 'டிசம்பர்' மாதம் பத்தா? பனிரெண்டா? கேள்விகள் முளைக்கிறது. 

'ஏன்யா... நல்லாத் தான போய்கிட்டு இருக்கு. டிசம்பர் குளிருக்கு இந்த மாதிரி பத்தவைக்கிறதும் குளிர்காய சுகமாத்தானயா இருக்கு! சரி, பதிவ சீக்கிரமா முடிச்சுவிடுய்யா. முடிவா என்ன சொல்ல வர்றீக. சொல்லி முடிங்க. இன்னும் ஒரு நிமிசம் மிச்சமிருக்கு' ' ஐயா திரு. சாலமன் பாப்பையா அவர்களின் குரல் ஒலிக்கிறது. 
ஐயா, 'ஆனது ஆச்சு இன்னும் அஞ்சு நிமிசம். முடிச்சுடுவேன்'. மனம் வேண்டுகோள் வைக்கிறது. உங்களிடமும் தான். 
' Extension please' என்று 'திரிசூலம்' படத்தில் நடிகர் திலகம் திரு. சிவாஜி அவர்கள் கத்துவாரே. அப்படியே நானும். 
'Extension please... '

'இதப் பாருப்பா பதிவ இதுக்கு மேல ஓட்டுனா படிக்கிறவுக பாப்கார்ன் சாப்புடப் போயிருவாக. இப்ப நிற்கிறதே எல்லைக்கோட்டுல தான். இனிமே உனக்கு இல்லை கோடு. இப்ப கோட்ட தொட்டுட்டு அவுட் ஆகாம உன் எல்லைக்குள்ள போயிருப்பா.  ஒரு நிமிசத்துல ஏதாவது சொல்றதுனா சொல்லிட்டு மனப்பறவைய திறந்து விடு. பறக்கட்டும். பொறவு வரட்டும். என்ன நாஞ்சொல்றது சரி தானே'. இது உங்கள் குரலாகவும் இருக்கலாம். 

மிச்சமுள்ள... ஒரு நிமிடம்

அடுத்து ஊர் பதிவு இட்டவுடன் தொட்டுத் தொடர்ந்து' கூடை நிறை டிசம்பர் பூக்களுடனும் 'ஒரு குட்டிக்கதையுடனும் வருகிறேன். தொடர்ந்திருங்கள். பிடித்திருந்தால் பகிருங்கள்.

மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்... 


Irudhy.a 

Sunday, November 28, 2021

காதல் வெளியிடை... உலா-3

Fly...

மனம் கொத்தும் பறவை...

"நோக்குவ எல்லாம் அவையே போறல்"
-தமிழிலக்கண தொல்காப்பியக் 'களவியலின்' கூற்று ஞாபகத்திற்கு வருகிறது. 'காதல் உலாப் போகும் காலத்தில்ஏன் தொல்காப்பியர் வருகிறார்? கேள்விகள் எழலாம். எழும் கேள்விகளை அப்படியே மடை மாற்றி மேற்கண்ட கூற்றுக்குத் திருப்பி கேள்வியுடனே மீண்டும் தொடர்கிறேன்.

'நோக்குவன எல்லாம் 
அ(எ) வையே போறல்? கேள்விக்கான பதிலைத் தேடினால் ஒரு நாயகனும் ஒரு நாயகியும் ஒளிந்திருப்பார்கள். இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டில் நாயகனையும் நாயகியையும்
காதல் 'எனும் வெளிச்சக்கீற்றில் கண்டுகொள்ளலாம்.

காதல்' வெளியிடை... 


லக்கியம் முதல் இலக்கணம் வரை... 'காதல்' எல்லாப்பக்கங்களிலும் நுழைந்து பெருமழையின் வெள்ளமாகி கண்கள் காண கடந்து போகிறது.

பார்க்கும் சினிமா, படிக்கும் கதைகள், குறும், நெடும்தொடர்கள் எங்கும்' காதல்' தன் வண்ணங்களைக் காற்றில் விசிறி மனசுக்குள் 'ஹோலிப் பண்டிகை' கொண்டாடிக் கடக்கிறது.

காதலெனும் தேர்வெழுதி காத்திருந்த மாணவனாக மனம் 'காதல்' என்ற மாயக் கண்ணாடிக்கு முன் நிற்கையில் மீண்டும் மனசுக்குள் கேள்விகள் முளைக்கின்றன. 


    எது காதல்?
         எது... முதல்... காதல்... ? 
                 எதுமுதல் காதல்? 
                          எதுவரை காதல்

        கல் விழுந்த குளத்தில் எழும்  வட்ட வட்ட அலைகள் போல  மனம் முன் ஒய்யாரமாக நிற்கும் மாயக் கண்ணாடியில் ஒரு பிம்பம் அலையாகி விரிகையில் காதலின் முத்துக்கள் எடுக்க 
 மனம் அலைக்குள் மூழ்கும். மூச்சுப்பிடித்து சிறு மீன் போல பழம்நினைவுகளில் நீந்தும். 

H
a
V    your cup of 'tea' ...  
e  

எது 'காதல்' ? 

        இருபாலினத்துக்கும் இடையிலான இடைவெளியை வெற்றிடம் இல்லாமல் இட்டு நிரப்பும் உயிர்க்காற்றை மட்டுமே 'காதல்'  என்று மனம் ஏனோ ஒருவித கற்பிதம் செய்துகொள்கிறது. 'காதல்' எனும் புவிஈர்ப்புவிசைக்குள் ஈர்க்கப்படாமல் நாடோடி போல அலைந்து திரிவது அண்டவெளியில் ஒன்றும் இல்லை. 

இலைகள் துளிர்த்து கிளைகள் பரப்பி பறவைகள் வந்து இளைப்பாறும் அளவிற்கு விருட்சமாகும் மரம் ஒன்று சின்னஞ்சிறிய கடுகு விதைக்குள் இருப்பது போல... 'காதல்' எனும் விசும்பிற்குள் இருபாலின ஈர்ப்பு  மட்டுமே காதல் கோட்டை கட்டுவதில்லை.  இன்னும் சிலபல தருணங்களும் காதல் வெளியிடையில் தோரணங்கள் கட்டும். 


ஏழு ஸ்வரங்களுக்குள் இழையோடி வெளியிடை தழுவும் காற்று... 
எத்தனையோ ராகங்களை உருவாக்கும் ரசவாதம் போலவே
'அன்பு, கருணை, இரக்கம், நேசம், விருப்பம், ப்ரியம்' ... என நீளும் பட்டியலின் ஒவ்வொரு கட்டத்திலும் 'காதல்' தன் தொட்டில் கட்டி மனங்களைத் தாலாட்டுகிறது. காதல் தாலாட்டைக் கேளா உயிர்கள் உலகில் இல்லை. ஓர் உயிரின் காதல் இன்னொரு உயிரில் தான் பிறக்கும் என்ற எந்தவித வரையறையும், கற்பிதங்களும் காதலுக்கு இல்லை. உயிரற்ற பொருள்களின் மீதும், மனம் லயித்துக்கிடக்கிற விஷயங்கள் மீதும் 'காதல்' கடை விரிக்கும். அப்படி காதல் கடை விரிக்கும் ஒவ்வொரு படிகளிலும் மனம் ஏறி இளைப்பாறும். 

எது... முதல்... காதல்? 


        ஏகமாக விழும் மழைத்துளிகளில் எது தன்னைத் தொட்ட முதல் துளி என்பது  மண்ணுக்குத் தெரியும். மண்ணைப் போலவே தன்னைத் தழுவிய 'முதல் காதலை'யும் மனம் அறியும். 

மனம் அறிந்த 'முதல் காதல்' 
சக உயிரணுக்களோடு போட்டியிட்டு முட்டி மோதி வீரியத்துடன் வெற்றிவாகை சூடி பெண்மையின் கர்ப்பப் பைக்குள் தன்னை விதைத்து புதிய உயிராக்கி ஒவ்வொரு நாளும் வளர்ந்து சதைப்பிண்டமாக உருவெடுக்கும். குறித்த நாளில் வீறிட்டு அழுது அண்டம் கண்டு தன்னை ஓர் உயிராக வார்த்தெடுத்த பெண்மையின் முகம் காணும் முதல் நொடியில் தாய்மையின் மீதான 'முதற்காதல்' பிறக்கிறது. 

'அன்னை' என்று அறிமுகமாகி தன் மார் சேர்த்து பாலூட்டுகையில் அன்னையின் அரவணைப்பில் 'முதற்காதல்' புத்துயிர் பெறும். 

 புதிய உயிரை அள்ளி எடுத்து முத்தமிட்டு   தோளில் சுமந்து வேடிக்கை காட்டுகையில்.... 


அப்பாவின் நேசத்தில் 'முதல்காதல்' 
தோள் பற்றி கிளை பரப்பும். 

மொழிஅறியா புதிய உயிரின் மொழி அறியும் அன்னையின் விழிகள் மீது புதிய உயிரின் 'முதற்காதல்படர்ந்து விரியும். 

புதிய உயிரின் உறக்கத்திற்காக 
உறக்கம் தொலைத்த விழிகளோடு அன்பெனும் மொழி பேசி காதோடு கதைகள் சொல்லி இசைபாடி பூவாய் விரியும் அன்னையின் வாய் உதிர்க்கும் மொழியின் மீது 'முதற்காதல்' மையல் கொள்ளும். 


இரவில் நிலவு காட்டி அன்பு கூட்டி  அன்னை உணவூட்டுகையில்  நிலவின் ஒளியில் மிளிரும்  அன்னையின் அன்பில் 'முதற்காதல்பூப்பூவாய் பூக்கும். 

காதல் வெளியிடையில் ஒர் உயிரின் 'முதல்காதல்' ஊற்றெடுக்கும் சுனையாகிறாள் 'அன்னை' என்பதில் துளியளவும் ஐயம் இல்லை. சுனைநீரில் தாகம் தீர்க்கும் புதிய உயிர் காதல்வெளியிடையில் காதலின் வெவ்வேறு பரிமாணங்களில் தன்னை பட்டைதீட்டிப் பயணிக்கும். 

மனப் பறவை மனம் கொத்தும். 
பழம் நினைவுகள் உண்ணும்!
பறக்கும்... 


Irudhy.



     
 

Sunday, November 21, 2021

ராசா கதையும்... கருப்பட்டித் தேநீரும்...

Fly...


டந்த பதிவை பொன்மாலைப் பொழுதின் தொடக்கத்தோடு முடித்திருந்தேன். 


இனி தொடர்வது...


மிக்கேல் பட்டணத்துப் பொன்மாலைப் பொழுது


அன்று... 

மிக்கேல் பட்டணத்துப் பொன்மாலைப் பொழுதினில்... அம்மாச்சியின் நேர்த்தியான கைப்பக்குவத்தில் தயாரானது  சுக்கோடு கைகோர்த்த
'கருப்பட்டித் தேநீர்' 


சாணமிட்டு மெழுகிய மண்அடுப்பில் அலுமினியப் பாத்திரத்தில் 'தளபுள தளபுளவென' தன்னைச் சூடாக்கிக் கொண்ட தண்ணீர்...
 'நான் ரெடி. நீங்க ரெடியா?' - என அழைக்க அம்மாச்சி தயார்நிலையில் தண்ணீர் நோக்கி தரைப்பலகையில் அமர்ந்திருப்பார். சூடான தண்ணீர் அழைப்பை ஆமோதித்து முன்னமே தட்டித் தயார்படுத்தி வைத்திருந்த சுக்கையும், கருப்பட்டித் துகள்களையும் சூடான தண்ணீரில் லாவகமாக கைவிரல்கள் குவித்து ஏகமாகத் தூவி விடுவார். பின்னர் கைகள் இரண்டையும் சேர்த்து கொதிக்கும் தண்ணீர் சட்டிக்கு மேலே உயர்த்தி கைகளைத் தட்டி கைரேகைகளின் பாதைகளில் ஒளிந்துபிடித்து விளையாடும் மீதத் துகள்களையும் மிச்சம்மீதி இல்லாமல் சுடு தண்ணீரில் சரணடைய வைப்பார். தனது முந்தியில் கைகளைத் துடைத்து மூக்குக் கண்ணாடியை சற்றே உயர்த்தி தயாராகும் தேநீர் நோக்குவார். சில மணித்துளிகள் கரைய சுக்கும், கருப்பட்டித் துகள்களும் தன்னைக் கரைத்து சுக்கின் வாசனையை நாசிகளுக்குக் கடத்தும். பொக்கை வாய் மலர்ந்தபடி 'பொறுக்கக் காஞ்சுருச்சு' - என்றபடி படிகளில் அமர்ந்திருக்கும் எங்கள் மூவரையும் 'வாங்கப்பு. காப்பித் தண்ணிய குடிச்சிட்டுப் போங்கப்பு ராசாக்களா! ... ' என்று அழைப்பார். 
இந்த இடத்தில் உங்களிடம் ஒரு விஷயத்தை சொல்லாமல் விட்டுவிட்டேன். கருப்பட்டித் தேநீர் சூடு குறையும் முன் சொல்லி விடுகிறேன். நான் தான் கருப்பட்டித் தேநீர் என்கிறேன். 

மிக்கேல் பட்டணத்தில்   இந்த பானத்தை  எப்படிச் சொல்லுவார்கள்? 

தேநீர் சூடு ஆறப்போகிறது. குடித்தவுடன்  சொல்கிறேன்.  

Have your cup of... 

     சுக்கு கலந்த கருப்பட்டித் தேநீர் 

சூடான தண்ணீரில் தன்னைக் கரைத்து சுக்கின் வாசனையையும் கருப்பட்டியின் 'அக்மார்க்' சுவையினையும் இரண்டறக் கலந்து கருப்பட்டி கழித்துக்கட்டிய மண்துகள்களை காடாத்துணி தடுத்து நிறுத்தி சுக்குக் கலந்த கருப்பட்டித் தண்ணீரை தேநீராக உருமாற்றும். வரிசைகட்டி நிற்கும் மூன்று பித்தளைக் குவளைகளில் சரிவிகிதமாக 'சொர்ருக்' என்ற பின்னிசையோடு கருப்பட்டித் தேநீீர்  ஊற்றுவார் அம்மாச்சி.
                 பிறகென்ன, சூடு பறக்க ஒவ்வொரு மிடறாக நா கடந்து நாவின் சுவை மொட்டுக்கள் அத்தனையும் மலர வாசனையோடு உள்ளேன் தம்பிகளா! என்றபடி தொண்டை இறங்கும் சுவையான சுக்குக் கலந்த 'கருப்பட்டித் தேநீர்' . 

மிக்கேல் பட்டணத்தில் இப்பானம் 'கருப்பட்டிக் காப்பி' என்று அன்று அன்போடு அழைக்கப்பட்டது. இப்பொழுது எப்படி என்று தெரியவில்லை. அறிந்து சொல்கிறேன். 

இந்தப் பதிவில் மிக்கேல் பட்டணத்தைப் பற்றிய வாழ்வியலில் வேறு எதையும் சொல்லப் போவதில்லை. 
ஓர் அழகான கதையை மட்டுமே பகிரப்போகிறேன்.

கதை
 வசனம் 
    இயக்கம் 
         - அனைத்தும் 'சாட்சாத்'  எங்கள் அம்மாச்சியே!
 'All Rights Reserved' அம்மாச்சி. 

தற்பொழுது...
அம்மாச்சியிடம் ' Remake' உரிமை பெற்று கொஞ்சம் திரைக்கதை  கூட்டி வண்ணங்கள் சேர்த்து அம்மாச்சியின் மூலக்கதை சிதைந்து போகாதபடி கவனத்துடன் உங்களிடம் கதைக்கிறேன். 

கதைப்போமா? 

கதைகளின் உலகம் விசித்திரமானது. அலாதியானது. வாசித்தாலோ அல்லது கதைகள் கேட்டாலோ சடுதியில் நம் கண்களுக்குள் ஓர் உலகம் உருண்டு  'மேகக் கூட்டங்களாகத்' திரளும். பிய்த்துக் காற்றில் பறக்கவிட்ட 'இலவம் பஞ்சாக' மனம் மேல் எழும்பும். 

இன்றைக்கு கதைகள் சொல்லவோ கதைகளைக் கேட்கவோ அதற்கான சூழல்கள் இருப்பதாகத் தெரியவில்லை.  அகன்று விரிந்த திரைகளிலும், கைக்குள் அடங்கி விரியும் கண்ணாடித்தொடுதிரைகளிலும் கதைகளின் உலகம் தன்னைச் சுருக்கிக் கொண்டுவிட்டது. இது எனது எண்ணம். உங்கள் எண்ணமும் இந்த வண்ணத்தில் இருக்கலாம். 

நம் பிள்ளைகளின் (இன்றைய தலைமுறைகள்) மனதில் கற்பனைகளையும், கலைநயங்களையும்  விதைக்க கதை சொல்லிகளால் மட்டுமே இயலும். கதை சொல்லிகளாக மாறுவோமா? நான் எனது மகனுக்கு முன்பெல்லாம் நிறைய கதைகள் சொல்லுவேன். அவனும் கண்கள் விரிய... கதைகள் கேட்பான். எங்கள் கதைகளில் 'Batman, spider man, Hulk, mottu, patlu, டோரா & புஜ்ஜி' போன்றோர்கள் வருவார்கள். அனைவரும் ஒரே அடுக்கக வாசிகள். நாங்களும் தான். கதை சொல்லி முடித்ததும் 
'அப்பா இன்னோருக்க!'-என 'Repeat audience' கணக்காக 'Rewind button' தட்டுவான். இப்பொழுது கதைத்தால் 'போங்கப்பா. எல்லாம் கட்டுக்கதை' என்கிறான். 'You tube' பார்க்கிறான். மாற்றம் ஒன்றே மாறாதது. இருப்பினும் நம் பிள்ளைகளின் கைப்பேசியோடு நைசாகப் பேசி அதை அணைத்து கைவிரலால் ஒருதட்டுத்தட்டி ஓரங்கட்டிப் படுக்கவைத்துவிட்டு நம் பிள்ளைகளின் கைகள் பிடித்து கதைகளின் உலகத்திற்கு அழைத்துச் செல்வோம். 
சொல்லக் கதைகளா இல்லை நம்மிடம்!. 

சொல்ல மறந்த கதைகள் உண்டு.சொல்லக் கதைகள் ஏராளம் உண்டு. உண்டு கழித்து இரவில் உறங்கச் செல்லும் முன் நம் குழந்தைகளோடு நாமும் குழந்தைகளாகி கைப்பிடித்து கதைகளின் உலகத்திற்குள் பிரவேசிக்கலாம். குழந்தைகளின் கதை உலகில் எந்த வரையறைகளும் இல்லை. 

பறவைகள் மீது ஏறி அமர்ந்து வான் பறக்கலாம். ஐந்தறிவு ஜீவராசிகளுடன் ராசியாகி அவைகளுடன் 'ஏய் சிங்கராசா நாளைக்குக் காலைல எங்கூட காலார நடக்க வாரியா


"
-என நடைப்பயிற்சிக்கு அழைக்கலாம்.

" நோ LOGIC. ஒன்லி MAGIC !". 

இப்பொழுது அன்று அம்மாச்சி எங்களை அழைத்துப் போன ஒரு கதை உலகிற்குள்  உங்களையும் அழைத்துப் போகிறேன்.

' Time Machine' தயார். 
என்னுடன் வந்து  அமர்ந்துகொள்ளுங்கள். 

Count down Start... 

மூலக் கதை-அம்மாச்சி'சொர்ணம்மாள்' 


திரைக்கதை
 படங்கள்... (கிறுக்கல்கள்) 
பேரன்- இருதய்.ஆ

கதையின் பெயர்

'மகுடம்' மறவா "மகாராசா" ... 


 ஒற்றை ஆளாக யார் துணையுமின்றி தனித்து தைரியமாக வான் தெருவில் உலவிக் கொண்டிருந்த வடிவான முழு நிலாவை வானத்து நட்சத்திரங்கள் கண் சிமிட்டி, கண் சிமிட்டி கிறக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தன.


      இந்த வான் வீதி நிகழ்வுகளை எல்லாம் அங்குமிங்கும் நடந்தபடி தனது அந்தப்புரத்து மாடமாளிகையின் மேல்மாடத்தில் நின்று கொண்டு தலைமகுடத்தை லாவகமாகத் தூக்கி மகுடத்திற்குள் விரல்கள் நுழைத்து மண்டிக்கிடக்கும்  இருளடைந்த தலைமுடியை
சொரிந்தபடி வடிவான நிலவை ரசித்துக் களிக்க முடியாமல் தலைமுடியில் தறிநெய்துகொண்டிருந்தார் அந்நாட்டு மகாராசா... 

கதையைத் தொடரும் முன் உங்களிடம்  ஒரு விஷயம் சொல்லிவிடுகிறேன். 

நாட்டின் பெயர், மகாராசாவின் பெயர் மற்ற கதாபாத்திரப் பெயர்கள் எல்லாவற்றையும் அவரவர் விருப்பத்திற்கு விட்டுவிடுகிறேன். நீங்களே நாமகரணம் சூட்டிக் கொள்ளுங்கள். நான் 
மகாராசாவிற்கு ஒரு பட்டப்பெயர் வைத்திருக்கிறேன். தொடரும்பொழுதில் அறிவீர்கள். 
 
சரி. மகாராசா ஏன் அந்தப்புரத்து மேல் மாடத்தில் நின்று கொண்டு நிலவின் வடிவு கண்டு வியக்காமல் மானாவாரியாக தலையில் தறி நெய்தார்

தலை சொரிவுக்கு காரணம் இருக்கிறது. 

மகாராசா எப்பொழுதும் தலை சொரிவாரே அன்றி பொதுவெளிகளில் ஒரு போதும் தலை குனிந்ததே இல்லை. ஏன்?


 
தலைசொரிந்து கொண்டே இருப்பதற்கு காரணம்  இருப்பது போல மகாராசா தலைகுனியாமல் இருப்பதற்கும் மிக முக்கியமான காரணம் உண்டு.

மகாராசாவின் தலைமகுடம் தரையில் இருப்பது அரிது. தலையில் இருந்தது தான் நாட்களில் பெரிது.  இரண்டு காதுகளும் மறையும் அளவிற்கு திரையிட்டதுபோல சொக்கத்தங்கத்தோடு  வைர, வெள்ளி மணிகளும் ஜொலி ஜொலிக்க தகதகக்கும் தங்கமகுடத்தை மகாராசா எப்பொழுதும் தலையில் தூக்கிச் சுமப்பார். தலை எடையைத் தாங்கிக்கொள்ள நிறைய பிரயத்தனங்கள் மேற்கொள்வார்.
 ஓடுவன, நடப்பன, நீந்துவன,  பறப்பன வரை எதையும் விடமாட்டார். 

சைவம் இவருக்கு 'சக்களத்தி'.
அப்பக்கம் தலைநீட்டவே மாட்டார். முப்பொழுதும் வஞ்சனையின்றி சுவைகூட்டிச் சமைந்து  தன் தலைவாழை இலை அமரும் அத்தனை அசைவப் பதார்த்தங்களையும் மகுடம் அசைந்து கீழ் விழாதபடி நிமிர்ந்தபடியே கண்களை மட்டும் தலைவாழை இலை இறக்கி...... 
 ஒரு கை பார்ப்பார் நம் மகாராசா. மன்னிக்கவும். 'தலைசொரி மகுடம் மறவா மகாராசா' என்றே சொல்லுகிறேன்.

இதப்படிங்க கவனமா... 
மிக முக்கியமான ரகசியம். 

 மகுடம் இல்லா தலையோடு நம் "தலைசொரி மகுட மகாராசா"வை அந்தப்புரத்து இளவரசிகள் கூட கண்டதில்லை. தப்பித் தவறி எவரேனும் கண்டால்
 'கண்டா வரச் சொல்லுங்க' - என்ற இக்கால 'கர்ணன்' திரைப்படப் பாடலைப்போல கண்டவரை தனியே கண்டு அவரின் இவ்வுலக 'டிக்கெட்டை'க் கிழித்து மேல் உலகத்திற்கு சீட்டுக் கொடுத்து அனுப்பிவிடுவார் நம் 'தலை சொரி மகுடம்  மறவா மகாராசா'. 

தலைமறவா மகுடம், எந்நேரமும் தலை சொரிவு... 
                        - இரண்டிற்குமான காரணங்களின் மைய முடிச்சுக்கள் தான் மீதிக் கதை. இன்று எந்தக்கதை ஒரே ஓட்டத்தில் முடிந்திருக்கிறது. திரையில் காணும் கதையில் ஓர் இடைவேளை வரும். வீட்டுத் திரையில் காணும் கதைகளில் சொல்லவேண்டியதில்லை. நீங்களே அறிவீர்கள். நானும் இடைவேளைக் கூட்டத்தில் ஒருவன் தான். நம் 'தலைசொரி மகுடம் மறவா மகாராசா' கதையிலும் ஓர் இடைவேளை வந்துவிட்டது. 

மகாராசா தலையில் தறி நெய்வதற்கும்,  மகுடம் அகலா தலைக்குமான காரணங்கள் என்னவாக இருக்கும்? கேள்விகளோடு இப்பதிவை முடிக்கிறேன். மீதிக்கதையை வரும் பதிவில் கதைக்கிறேன். அதற்குள் கேள்விகள் விழுந்த உங்கள் மனதில் நிறைய கதைகள் பிறக்கலாம். ஒவ்வொன்றும் ஒரு வண்ணத்தில் சிறக்கலாம். சிறகடிப்போம்... 

     கதைப்போம் ..... 

மனப்பறவை மனம்கொத்தும்... 
பழம் நினைவுகள் உண்ணும்! 
பறக்கும்... 


Irudhy.a 

     





Sunday, November 14, 2021

கண்ணடிக்கும் காதல்...கண் சிவக்கும் கண்ணாடி!

Fly...

மனம் கொத்தும் பறவை...

உலகின் ஆகச் சிறந்த கண்டுபிடிப்பு கண்ணாடி
உயிர்களின் புவிஈர்ப்பு விசை காதல்...

கண்ணாடியோ காதலோ முன்நின்றால் தான் முகம் காட்டும். 
உடைபடுவது எதுவாயினும் மீண்டும் முன் உருவில் மீளாது. 
'கண்ணாடி' நிஜத்தின் நிழல்... 


'காதல் இரண்டின் பிரதிபலிப்பு... 
காதலும், கண்ணாடியும்... 
களவியலில் கைகோர்க்கும்
ரகசிய சிநேகிதம்! 

"உன் பிம்பம் விழுந்தே 
கண்ணாடி உடைந்து போகும்!"
   - 'இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல' கவிப் புத்தகத்தில் கவிப்பேரரசு திரு.வைரமுத்து அவர்கள், காதலில் விழுந்த உயிரின் நாடிபிடித்து காதல் நடை அமைத்திருக்கிறார்.

சரியோ?... 
ஏகபோகமாக காதல் விளையாட்டில் களவு போனவர்களுக்கு நிதர்சனம் விளங்கும்.
இன்னும் விளங்கலாம். விலங்குகளிடமும் காதல் உண்டு... 
எங்கும் பாரபட்சமின்றி விழுந்து எழும் மழைத் துளி போல காதலும் எவ்வுயிரிலும் விழுந்து வீழ்ந்து உண்டு உயிர்க்கும்! 
'காதல்' நேசமுள்ள இதயங்கள் உடுத்திக் கொள்ளும்... 
அழகிய சீருடை! 
அழகிய சீருடை உடுத்தி ரகசிய சிநேகமான... 'கண்ணாடியின்' முகத்தில்
 தன் முகம் கண்டு புறச்சீர்படுத்தி அகமனதிற்கு சிறகுகள் முளைக்க இறக்கைகள் விரிக்கிறது...

இது "உலாப் போகும் காலம்" ... 


னிய உலாவில்-


கண்ணடிக்கும் '
காதலும்' ...
கண்சிவக்கும் 'கண்ணாடியும்' !


'கண்ணாடியை' யார் கண்டார்? - கேள்வியோடு உலாவுகையில் கிமு. 4000- ஆண்டுகளுக்கு முன்னமே கண்ணாடி தன்னை பிரதிபலித்ததை அறிய முடிந்தது. எகிப்து, சீனா, இத்தாலி  போன்ற  நாடுகள் கண்ணாடியை பிரதிபலித்ததில் முக்கியப்பங்கு வகித்திருக்கின்றன. துவக்கத்தில் தொடக்கமும் முடிவும் அறிய முடியா வட்டவடிவத்தில் தான் கண்ணாடி உலகில் சுற்றிச் சுழன்றிருக்கிறது. பின்னரே, அறிந்தவரை இத்தாலி நாட்டின் 'வெனிஸ்' நகரத்தில் தட்டை வடிவக் கண்ணாடி தன் உரு மாறி புதிய வடிவில் தன்னைத் தடம் பதித்திருக்கிறது. 
மற்றபடி கண்ணாடியைக் கண்டது இன்னார் தான் என்ற தகவல் அறிந்தவரை ஏதுமில்லை. 

தண்ணீரில் மனிதன் தன் முகம் கண்ட நொடியே...


'க
ண்ணாடியின்' பிறப்பிற்கும் பிரதிபலிப்பிற்கும் காரணமாக இருந்திருக்கலாமோ? 
எதுவாயினும் 'கண்ணாடி' உலகின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு என்பதில் ஐயமில்லை. 

கண்ணடிக்கும் 'காதல்' ... 


'காதல்' யாரது கண்டுபிடிப்பு? கேள்வி கேட்கலாமா...

தேவையில்லை.

 ஓங்காரமாக ஒலிக்கிறது குரல்கள்.
காதலின் காப்புரிமை
 எந்த வரையறைகளுக்குள்ளும் சிக்காது. 
ஜீவராசிகளின் 
ஜீவிய உரிமையே 'காதல்' ...

சரி, கண்ணாடி எப்போது காதலுடன் கை கோர்த்தது?

இதயம் இடம் மாறித் துடித்து - இதயம் 'இடமா? வலமா?' எனும் ஐயம் வந்து ஐம்புலன்களும் ஆராயாது அறிவு கடந்த
இனம்புரியா ஓர் உணர்வில் ஐக்கியமாகி இருவேறு பாலினம் தன்னை ஒன்றாய்க் காணும் தருணத்தில் கண்ணாடி கண்சிவந்து இருபாலினத்துடனும் ரகசிய சிநேகமாய் கை கோர்க்கிறது. 

"உன் பிம்பம் விழுந்தே 
கண்ணாடி உடைந்து போகும்
கவிப்பேரரசு திரு. வைரமுத்து அவர்கள் வரிகளின் அர்த்தம் விளங்குகிறது. 

கண்சிவக்கும் '' கண்ணாடியில்' 
சில துளிகள்... 


ஒரு நாளைக்கு இருநூறு முறை... 
கண்ணாடி பார்க்கிறான்! 
அறுநூறு முறை அவளின் வரவை எதிர்நோக்கி...! 
தலைவாரியின் பற்கள் உடைபட 
முடிதிருத்தி முகம் சிரித்து
முன் நிற்கும்
'கண்ணாடி' சிவக்க
நெஞ்சோடு பேசி...
அவள் வருகையில்... 
அவள் விழியே கண்ணாடியாகும்
அவள் விழி தனில்
தன் முகம் கண்டு !
நாவு கதவடைக்க...
தன் வயம் இழந்து 
உதடுகள் நடத்தும் 
மௌன ஊர்வலத்தில்...
இரு இதயங்கள் இடம்மாறி
விழிகளே கண்ணாடியாகி!... 
எதிரெதிர் தன்முகம் காண்கையில்
'காதல்' கண்ணடிக்கும்!
விழியெனும் 'கண்ணாடி' கண்சிவக்க... 
நடந்து முடியும் 
முதல்... 
"காதல் லா"


கண்ணாடிக்கு வலிக்காது பிரியும் பிம்பம் போல...காதலில் வாழ்வோ வீழ்வோ இருந்துவிட்டால் 'காதல் உலாவில்' களங்கங்கள் என்றும் இல்லை. 
மனப் பறவை காதல் வானில்... 
சிறகு விரிக்கும்...
மனம்கொத்தும்! 
பறக்கும்... 

இது காதல்...
" உலாப் போகும் காலம்"


                       Irudhy.a 



அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...