About Me

Wednesday, January 12, 2022

அம்பலத்தில் "மகுட ராசா"...

Fly...
              

            மனம் கொத்தும் பறவை 

      "'சும்மா கதை பேசாம             வேலையப் பாருங்க' ... 
    'கதைவிடுறதுல பெரிய ஆளு அவரு!' 
     'எல்லாமே கட்டுக்கதை' ... 
          'இந்தக் கதையெல்லாம்           எங்கிட்ட வேணாம்' .
        'அவங்க சொன்ன கதைய       நம்பீட்டிங்களா?' " 

                - கேட்கும், வாசித்தறியும் கதை உலகம் இன்றைய சூழலில் காட்சி வழி ஊடகங்களால் கொஞ்சம் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்தாலும் ஏதேனும் ஒரு சூழலில் எங்கேனும் 'கதை' என்ற சொல்லாடல் தாழிடப்பட்ட கதவுகளின்  இடுக்குகளின் வழியே வீட்டிற்குள் 'சரேலென' நுழையும் முன்னைய நாட்களின் தபால்களைப் போல 'கதை' என்ற சொல்லும் நம்  காதுகளுக்குள் நுழைந்து கதைக் கதவுகளைத் திறந்து விடுகின்றன. 
      பதிவின் தொடக்கத்தில் நீங்கள்  வாசித்த 'கதை' எனும் சொல்லாடல்களை பேச்சு வழக்குகளை  வெவ்வேறு சூழல்களில் நாம் கேட்டிருக்கக் கூடும். 

சாரமற்றோ, சாரத்துடனோ எப்படியாயினும் கதைகள் பேசும் மனிதர்கள்  தான் கதை உலகின் உயிர்க்காற்று  குறைந்து போகாத படி கதைகளின் விதைகளை விதைத்துக் கடக்கிறார்கள். 

     என் சிறு பிராயத்தில்...



  'அம்மாச்சி' கதைத்த கதைகளில்


'மகுடராசா' கதை  
ஏனோ குளத்தினுள் விழுந்த கல்லைப் போல என் மனதின் அடிஆழத்தில் விழுந்து அசைவாடியபடியே கிடக்கிறது. 
இக்கதையை உங்களிடம் பகிர விரும்பினேன். இதோ இப் பதிவுடன் கதை முடிந்துவிடும். இதன் முடிவில் உங்களுக்குள் வேறு சில கதைகள் கிளைக்குமானால் அதுவே கதை உலகில் பல கதவுகளைத் திறந்துவிடும்... 

Have your cup of "tea"... 


கடந்த பதிவில்...

       அம்பட்டன் 'மகுட ராசா'வின் கழுதக் காது விஷயத்தை 'மகுட ரகசியத்தை' தன் மனையாளிடம் இறக்கி வைத்து இலவம் பஞ்சாகிப் பறக்கிறான். அம்பட்டன் மனதின் எடை குறைந்து மனையாளின் மனத் தராசில் எடை கூடுகிறது. உளறிக் கொண்டே இருக்கிறாள். 
மனையாள் ரகசியம் காக்கமுடியாமல் தனக்கு வினையளாகிவிடுவாளோ என்றெண்ணி அவளை யாருமறியாமல் காட்டிற்கு அழைத்துச் செல்கிறான். 

இனி... 
         
அம்பலத்தில் 'மகுடராசா'...
          அம்பட்டன் காட்டிற்குள் வேறு யாரும் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டு கையில் இருந்த மண்வெட்டியால் ஆழமாக குழி வெட்ட ஆரம்பித்தான்.


 முழுமதியும் சகத் தோழமை நட்சத்திரங்களும் கண்கொட்டாமல் இருவரையும் கவனித்தபடி இருந்தன.

 ரகசியங்களை சக மனிதர்களிடம் மறைக்க முடியும். இயற்கையிடம் மறைக்க முடியுமா? 
அறியாத அம்பட்டன் மீண்டும் யாருமற்ற சூழலை உறுதிப்படுத்திக் கொண்டு மனையாளை வெட்டிய குழி அருகில் அமரச் சொல்கிறான். மனையாள் கணவனின் நடவடிக்கைகள்  புரியாது குழம்பி குழியருகே அமர மறுக்கிறாள்.

 அம்பட்டன் மனையாளிடம்... 
       'உன் வயிற்றுக்குள் உப்பி வளரும் ரகசியத்தை இக் குழிக்குள் இறக்கி வை. நான் ரகசியத்தை மண்ணிட்டு மூடி விடுகிறேன். உன் மனம் இலகுவாகும்'
      - என்கிறான். மனையாள் மண்டியிட்டு அமர்ந்து குழிக்குள் படர்ந்திருந்த இருள் விலக்கி வெளிச்ச உண்மையான ராசாவின்  காது ரகசியத்தை வயிற்று உப்புசம் குறையுமட்டும் 

  "ராசாக் காது.... கழுதக் காது!? 
    ராசாக்காது.... கழுதக் காது!" 

            - எனப் பெருங்குரலெடுத்துக்   கத்தி முடிக்கிறாள். இலகுவாகிறாள். அம்பட்டன் சுற்றிலும் நோட்டமிட்டு பெருமூச்செறிந்து மண்ணிட்டு ரகசியத்தை மண்ணோடு புதைத்து அதன் மேல் ஒரு செடியை நடுகிறான். 
எல்லாம் இனிதே நிறைவுறுகிறது. 

காலங்கள் கடந்தன. 
அரண்மனையில் அன்று ஒரு திருவிழா அரங்கேறுகிறது. புதிய முரசுகள் அரண்மனையின் நடையில் வீற்றிருக்கின்றன. 'மகுட ராசா' விழா தொடக்கத்தை முரசறைவதிலிருந்து தொடங்க உத்தரவிடுகிறார். 


புதிய முரசுகள் அறையும்  கலைஞர்கள் கோலால் முரசைத் தட்ட முரசுகள் அத்தனையும் ஒத்திசைவோடு...

        " ராசா... ராசா... ராசா...!" - என எதிரொலிக்க ஆரம்பித்தன. அவையில் ஆச்சரிய அதிர்வுகள் எழுந்தன. 
        மகுட ராசா முரசுகள் குரல் எழுப்புவதை  ஆச்சரியத்துடன் கண்ணோக்கி கைகளை "ஆகட்டும் வாசியுங்கள்" - என்பதாக சைகை காட்ட முரசறையும் கலைஞர்கள் தொடர ஆரம்பிக்கின்றனர்.

      முரசுகள் அத்தனையும் மூர்க்கமாக ... 


         "ராசாக் காது கழுதக் காது...? ராசாக் காது கழுதக் காது....!" என அதிர ஆரம்பிக்க எட்ட நின்று கண்ட அம்பட்டன், 
          முரசுகளின் ஓசையில் மனையாளின் குரல் அம்பலமாவதைக் கண்டு அதிர்கிறான். அவைக் கண்கள்  முழுவதும் மகுடராசாவை  ஈக்களாக மொய்க்க மகுட ராசா தன்னைத் தெருவில் கிடக்கும் மலமாக உணர்ந்து கூனிக் குறுகுகிறார். தலை குனிகிறார். குனிந்த தலையிலிருந்த மகுடம் கழண்டு தரைதொட்டு உருண்டோடுகிறது.

 மகுடமற்ற ராசாவின் நீண்ட இரு கழுதைக் காதுகள் அம்பலமாகி திறந்துகிடக்கும் காதுகள் தோறும் சென்று ராசாவின் ரகசியத்தை தோரணமாக்கித் தொங்கவிட்டன. 

 அன்று அம்பட்டன் அவனது மனையாளின் பெருங்குரலோடு மண் மூடி நட்ட சிறு செடி..... புதையுண்டு கிடந்த ரகசிய உண்மையை வேரோடு பிடித்து வளர்ந்து நின்றது. முரசுகள் உருவாக்க ஏற்ற மரமாகத் தன்னைத் தந்தது. முரசுகளுக்குள் 'உண்மை' புகுந்து கொண்டது. 
    
 தலைகீழாகக் கவிழ்த்தாலும் மேல் நோக்கி எழும்பும் நெருப்பு போன்றது 'உண்மை'. 

       அன்று... அம்மாச்சி கதை முடிக்கையில் ஆகாசத்தில் முழுமதியும் அதன் தோழமை நட்சத்திரங்களும் எங்களைப் பார்த்து கண் சிமிட்டிச் சிரித்தன.              
        காலங்கள் கடந்து கனிந்து இதோ 'மகுட ராசா' கதையை   கொஞ்சம் மெருகேற்றி  உரு மாறிவிடாதபடிக்கு கவனத்துடன் உங்களிடம் பகிர்ந்துவிட்டேன். கதை இப்பதிவோடு முடிந்துவிட்டது. இருப்பினும் இக்கதை உங்களின் வாயில் கடந்து  இன்னும் சிலர் காதுகளுக்கு எட்டுமானால் 'மகுடராசா' தொடர்ந்து ஓடிக்கொண்டே இருப்பார். இக் கதையை எங்கள் அம்மாச்சிக்கு காணிக்கை ஆக்குகிறேன். வாசித்துவரும் அனைவருக்கும் நன்றி நவில்கிறேன். 
 
            "வலியது வாழும்" 
கதை உலகமும் சுற்றும் பூமிக்குள்  நின்றுவிடாது சுழலும். 
சுழல்வதற்கான காரணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. 

சமீபமாக கேட்கும் கதைச்செயலிகள் புழக்கத்திற்கு வந்துவிட்டன. இப்புழக்கத்திற்கு என்னைப் பழக்கி கதைகளைக் கேட்பதை வழக்கமாக்கிக் கொள்ள முயல்கிறேன். உங்கள் எண்ணமும் இந்த வண்ணம் ஆகலாம். கதைகளின் உலகிற்குள் பிரவேசிக்கலாம். 

'கற்றலின் கேட்டல் நன்று '-காதுகளுக்குள் ஒரு குரல் கிசுகிசுக்கிறது. 


அன்பில் ஒரு வேண்டுகோள்... 

பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள்
.... 

மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்...


Irudhy.a 

 
  

 

Sunday, January 9, 2022

வலைப் பூவில் தினம் ஒரு பூ...

Fly...

 மனம் கொத்தும் பறவை... 

     நம்பிக்கைப் பூக்கள் தொடுத்து புதுவருடத் தேரை வடம் பிடித்து இழுக்கத் தொடங்கிய சூழலில் மீண்டும் 'கொரோனா'ச் சுழல் மூன்றாவது அலையாகி அலையடிக்க ஆரம்பித்துவிட்டது.
 வலைவீசிக் காத்திருக்கிறது. 

 கண்ணுக்கரண்டியில் அள்ளிய தண்ணீர் கண்களின் வழியே அள்ளிய வேகத்திலேயே தன்னை விடுவித்து மீண்டும் தண்ணீரோடு சேரும். கண்ணுக்கரண்டியில் சிக்காத தண்ணீராக.... 'கொரோனா' வீசும் வலைகளில் சிக்காத மீன்களாகி! நம்மை பெருந்தொற்றிலிருந்து தற்காப்போம். 

அலையோடு போக செத்த மீன்களல்ல நாம். எதிர்நீச்சலிடும் உயிருள்ள மீன்கள் என்பதை நினைவில் கொள்வோம். 

கண்கள் அறியா சத்தமில்லா யுத்தத்தில் வாள் சுழற்றி வீரம் காட்டவா முடியும். கேடகமாக முகக் கவசம் கைக் கொள்வதே கொரோனாவை கைகழுவும் சாதுர்யமாகும்.
முகக் கவசம் அணிவோம். முகக் கவசம் அணியாதவர்களைக் கண்டால்

"Where mask? Wear Mask" 
 - என அன்புடன் அறிவுறுத்துவோம்.

Have your cup of  "tea" ... 


சத்தமில்லா யுத்தக் களத்தில் நிற்கும் சூழலில் சத்தமில்லாமல் பூக்கும் பூக்கள் பற்றிய யோசனைகள் மனசுக்குள் அரும்பியது. எது வரினும் என்ன நிகழ்ந்தாலும்  பூக்கள் தன் மொட்டுக்களை அவிழ்க்கத் தவறுவதே இல்லை. எங்கெங்கும் சூழலுக்கேற்ற பூக்கள் பூத்தபடியே தன் வாழ்வைக் கடக்கின்றன.

 'பூக்களிடம் பாடம் படிக்க 
புத்தகப் பை தேவையில்லை. புன்னகை போதும்' . 

புன்னகையோடு அணிசேரும் பூக்களும் புன்னகை பூத்து குலுங்கிச் சிரிக்கும். மனசுக்குள் வாசம் சேர்க்கும். 


பூக்களின் வாழ்வு அறிய விரும்பினேன். பூக்களை அரியாது அதன்  மொழி அறிந்து பூக்களின் சுற்றத்தோடு சிநேகம் கொண்டு பூக்களைப் பறித்து வாசம் நுகராது தள்ளி நகர்ந்து ரசித்தபடி ரசித்த பூக்களின் அழகை அதன் வாழ்வை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

வலைப் பூவில்.... 
தினம் ஒரு பதிவு இடவேண்டும் என மையல் கொண்டேன். மனம் தான் ஆமை வேகத்தில் நகர்ந்தது. 
தினம் என்ன பகிரலாம்? என யோசிக்கையில் மனசுக்குள் ஊர்ந்த ஆமை... 

"தம்பி. நீ ராக்கோழி. தினம் உன்னால ஒரு பதிவ மத்தவுக ராத்தூக்கம் தூங்கப் போகுறதுக்குள்ள பகிர முடியுமா? கொஞ்சம் யோசி. எழுதும் முன் உன் மனதை யாசி" 
      - என்றபடி அறிவுறுத்தி நகர்ந்தது அந்த ஆமை. ஆமை எப்பொழுதும் என்  மனசுக்குள் ஒரு சவாலைக் கொடுத்துவிட்டு  
"தம்பி உன் சாமர்த்தியம். சவாலே...சமாளி என உசுப்பேற்றும்.
   "உசுப்பேறி உசுப்பேறி ரணகளமான... உடம்புக்காரனாக்கும் யான். விடுவேனா?".... 
உசுப்பேற்றிய 'முயலாமையுடன்' முரண்பட்டு சவாலை சந்திக்க முடிவு செய்தேன்.

 இதோ புதிய தொடரின் 
       ' திரை விலகல்'...
பதிவை அன்பர்களின் ராத்தூக்கத்திற்கு முன் பகிர்ந்து விட்டேன்.
பூக்களோடு தினம் உங்களைச் சந்திக்க முடிவும் செய்தாகிவிட்டது. தொடரின் தலைப்பு பற்றிய யோசனை தினம் தலை தூக்கியது. நான் யோசிப்பது ஒன்றாக இருக்கும். முடிவில் ... நெருங்கி வருகையில் 'மனப்பறவை'  கைக்குள் வேறொன்றைத் தரும். 'அதுவும் நன்றே' என எண்ணத் தோன்றும். பட்டியலிட்டுத் தொடங்க வாழ்வு  நிகழ்ச்சி நிரல் அல்லவே. நான் அப்படியே வாழப் பழகிக் கொண்டேன். கணங்களில் மனம் உறைந்திருக்கும். 

சரி முடிவாக தலைப்பு விஷயம் வருகிறேன். யோசித்து ஒரு வழியாக ஒர் வழி திறக்க யோசிக்காமல் ஒரு தலைப்பை


மனப்பறவை' வழக்கம் போல கைகளுக்குள் திணித்துப் பறந்தது.


வரும் 'தைப் பொங்கல்' முதல்... 
        பூக்கும்... 
      " தினப் பூ... 'நெனப்பு'!" 

                       
                        - மனம் கொத்தும் வலைப்பூவில் தினம் ஒரு பூவோடு சந்திக்கிறேன்...
      உங்களின் ராத்தூக்கத்திற்கு முன். 
              தொடர்ந்திருங்கள்...

அன்புடன் ஒரு வேண்டுகோள்... 

பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள்... 

மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்... 


Irudhy.a 
 

Thursday, January 6, 2022

மகுட ராசா கதை முடிவும், தொடங்கும் நீதியும்...

Fly...


தீர்ந்து போகாத பேச்சுக்கள் போல பழங்கதைகளும் தீராப் பக்கங்களில் தன் கதைகளை கதைத்தபடியே கடகடக்கின்றன.   கதைசொல்லிகளால் மட்டுமே கதை உலகம் தன் நீள்வட்டப் பாதையில் தொடர் வண்டியாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. 


நம் முன்னோர்கள்  தங்கள் நெஞ்சுக் கூட்டுக்குள் அடைகாத்த பழங்கதைகளை கூடுமளவும் 
கூடு விட்டுக் கூடு  கடத்தியிருக்கிறார்கள். பழங்கதைகள் ஏதேனும் ஒரு நீதியை 'கடுகின் விதையாக' சின்னதாக மனசுக்குள் விதைக்கும். சிறிய கடுகுவிதைக்குள்
 உருக்கொண்டிருக்கும் 'பெரு மரம்' போல பழங்கதைகளுக்குள் ஒளிந்து கிடக்கும் நீதியும் மலையளவு யோசிக்க வைக்கும். 

எங்கள் அம்மாச்சி சிறந்த கதை சொல்லி.  என் சிறுபிராயத்தில் எங்கள் அம்மாச்சி  விதைத்த ஒரு நீதிக் கதை தான் "மகுடம் மறவா மகாராசா". அம்மாச்சி கதைத்த மூலக்கதையின் சாரத்தில் நின்று கொண்டு நான் திரைக்கதை கூட்டி மூலக்கதையின் சாரம் சரிந்துவிடாமல்   கவனத்துடன்  அடிவைக்கிறேன். 

Have your cup of "tea" ... 


"மகுட ராசா" கதையில் இதுவரை... 
                 
' ஒரு ஊர்ல ஒரு ராசா' ... 
'ராசா தலையில ஒரு மகுடம்' . ராசாவென்றால் மகுடம் இருக்கத் தானே செய்யும். இதில் என்ன ஆச்சரியம்? இதில் தான் ஆ... ஆச்சரியம்! அணையா விளக்காக கனன்று கொண்டிருக்கிறது.  அந்தப்புரத்து மகாராணிகள் கூட மகுடம் அற்ற தலையோடு ராசாவைக் கண்டதில்லை. இதனால் ராசாவிற்கு "மகுடராசா" என்று  இன்னொரு பெயரும் உண்டு. 'பெயர்போன ராசா'... தலைக்குள் அப்பிக்கிடந்த இருள் நீக்கி உள் ஒளியேற்ற மண்டைக்குள் கம்பளிப்பூச்சிகளாக நெளியும் சுருள் முடிகளை நீக்க எண்ணி அரசவை 'அம்பட்டனை' தனியே தன் இடம் வர உத்தரவிடுகிறார். தனியொருவனாக வந்து நிற்கும் அம்பட்டனை மானாவாரியாக எச்சரித்து தன் மகுட ரகசியம் கழட்ட அம்பட்டன் ராசாவின் 'மகுட ரகசியம்' அறிந்து அலறுகிறான். 

"ராசா காது கழுதக் காது...! ராசா காது கழுதக் காது???" 

   - அம்பட்டனால் பட்டத்து ராசாவின் 'மகுட ரகசியம்' காற்றில் பட்டமாகப் பறக்குமா??? 

இனி... 
 
"மகுட ராசா" கதை முடிவும், தொடங்கும் நீதியும்... 


அம்பட்டன் சென்ற பின்பும் அவனைக் குறித்த எண்ணங்கள் ஓர் அச்ச உணர்வுகளாகி... 'சுனாமி' அலைகளாக எழுந்து ராசாவின் மனசுக்குள் பேரலைகளாக மோதியபடி இருந்தன. அம்பட்டன் தன் காது ரகசியத்தை 'காதும் காதும் வைத்தமாதிரி' எங்கேனும் சொல்லிவிடுவானோ?... 

ராசாவின் மனசுக்குள் கத்திச் சண்டை தொடங்கியது. 
 தலையில் தறி நெய்த அவஸ்தையை விட மனசுக்குள் நடக்கும் கத்திச் சண்டை மகுட ராசாவிற்கு படு அவஸ்தையாக இருந்தது. 

            சில நாட்கள் கடந்தன... 
   அம்பட்டன் அக்கம்பக்கம் பேசுவதையே தவிர்த்தான். 'மகுட ராசாவின்' காது ரகசியத்தை அடைகாக்க முடியாமல் தவியாய் தவித்தான்.


 தன் நடவடிக்கைகளில் வித்தியாசம் உணர்ந்த மனைவியிடம் வேறு வழியில்லாமல்' ராசா'வின் மகுட ரகசியத்தை போட்டு உடைத்தான். அம்பட்டனின் மனம் 'இலவம் பஞ்சாகி' பறக்க   மனைவியின் இதயமோ 'திண்டுக்கல் பூட்டாக' கனத்தது. மனையாளின் மனதில் எடை கூடியது. 

இன்னும் சில நாட்கள் கடக்க... 

        இதயத்தைக் கத்தரிப்பது போல அம்பட்டனின் மனசுக்குள் ஒரு நச்சரிப்பு இரைச்சலாகக் கத்தியது.  

'மகுட ராசா'வின் ரகசியத்தை மனையாள் மனசுக்குள்  பூட்டிக் கொள்வாளா? அல்லது ரகசியங்களை வண்டியில் பூட்டி ஊருக்குள் அனுப்பி தன்னைக் கொல்வாளா???' 
தன் மனைவி குறித்த அச்ச உணர்வு அச்சாணியாகி அம்பட்டனின் மனச் சக்கரத்தைச் சுழல வைத்தது. 

ஒவ்வொரு நாளும்' ராசா' ரகசியம்  உருமாறும் 'கொரோனா' போல அம்பட்டனையும் மனைவியையும் அச்சுறுத்தியபடியே கடந்தன.

 அம்பட்டனின் மனைவியால் ரகசியத்தைக் காக்க முடியவில்லை. அவள் வயிறு உப்பலானது. அம்பட்டன் அதிர்ந்தான். வயிற்று உப்புசத்தின் காரணம் கேட்க மனைவி 'ராசா ரகசியத்தை மென்று மென்று வயிற்றுக்குள் வைத்திருக்கிறேன்' என்றாள். ரகசியத்தை எங்கேனும் சொல்லாவிட்டால் வயிறு வீங்கி செத்துவிடுவதாக அரற்றினாள். பிதற்றினாள். 

அம்பட்டன் முடிவாக ஒரு முடிவெடுத்தான். நடுச் சாமத்தில் ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டிற்குள் மனைவியுடன் பிரவேசித்தான் அம்பட்டன். முழுநிலா தன் தோழமை நட்சத்திரங்களுடன் அம்பட்டனையும், அவன் மனையாளையும் கவனித்துக் கொண்டிருக்க... 


 அம்பட்டன் யாருமற்ற சூழலை அறிந்து மண்வெட்டியால் ....??? 

Extra One minute please...
 
'ராசா கதை' முடிக்க எனக்கு இன்னும்  இரண்டு 'பாராக்கள்' (Two paragraphs) போதும். கதை முடிந்துவிடும். அந்த இரண்டு 'பாராக்களை' ஊர் பதிவின் தொடரும் பதிப்பில் பறக்க விடுகிறேன். கதை உலகின் பயணங்கள் நெடியது.நெடியதாகிலும்  அலுப்புத் தட்டாது. 

அம்பட்டன் மனைவியை ஏன் காட்டிற்குள் அழைத்துப் போனான்?

'தன்னைக் காட்டிக் கொடுத்துவிடுவாள்' என்ற அச்சத்தால் காட்டினுள் வைத்து அம்பட்டன் தன் மனைவியை கட்டம் கட்டியிருப்பானோ?'
                         - கேள்விகள்...????? மனசுக்குள் பிறக்கட்டும். கேள்விகளால் தானே விஞ்ஞானம் பிறந்தது.  

 சுவாரஸ்யங்களைச் சட்டென முடிக்க மனமில்லாமல் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கிறேன். அடுத்த ஏழு நாட்களுக்குள் 'மனம் கொத்தும் பறவை'யில் மற்றுமொரு புதிய அத்தியாயம் மலர இருக்கிறது. புதிய அத்தியாயம் தொடர்ந்தவுடன் 'மகுடராசா' கதையை முடிக்கிறேன். 

தொடர்ந்து வாசித்து வரும் அனைவருக்கும் நன்றிகள்... தொடர்ந்திருங்கள்... 

-பணிவுடன் ஒரு வேண்டுகோள்-

பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள்... 

மனப் பறவை மனம் கொத்தும்! 
பறக்கும்... 


Irudhy.a 





Friday, December 31, 2021

நம்பிக்கைப் பூக்கள்...





மனம் கொத்தும் பறவை... 

பனிவிழுந்த இரவில்... 
   மீட்பராம் "பாலன் இயேசுவின்வின் பிறப்பை  உற்சாகத்துடன் கொண்டாடி முடித்து
நினைவுகளைச் சுமந்தபடி மதுரையிலிருந்து சென்னை புறப்பட்டதிலிருந்து வருகிற வழியெல்லாம் நல்ல மழை. இந்தப் பதிவை மதுரையில் தயார் செய்தேன். முடிக்கையில் விடிந்தே விட்டது. 

புதியதொரு விடியலை நோக்கிய வருடம் குறித்த பதிவென்பதால் பதிவின் முடிவும் விடியலில் தான் முடிந்தது. "கொக்கரக்கோ... கோ"... சேவல் கூவியது. சேவல் விழித்துக் கொள்ள "இனி ஆவுறதில்ல. பேஜாம(பேசாமல்) படுத்துத் தூங்கிட்டு பொறவு கிறுக்கல்களுக்குத் தயாராகலாம்"-என்றெண்ணி பென்சில், அழிப்பானைப் பார்த்தபோது 'ஆகட்டும். நாங்களும் தாயார் (தயார்) தான்' என நகைச்சுவை மன்னர்  கவுண்டமணி கணக்காக பென்சிலும், அழிப்பானும் கவுண்டர் கொடுத்தன. " (அழிரப்பர்-இப்படித்தான் நான் சொல்லுவேன். என் மகன் கிண்டல் பண்ணியதால் 'எரேசர்' என அவன் சொல்லியதை தமிழாக்கத்தில் அழிப்பான் என பதிந்துவிட்டேன்) சரி விஷயத்துக்கு வருகிறேன். எல்லாம் முடித்து சின்னச்சின்ன 'நகாசு' வேலைகள் மட்டும் மீதமிருந்தன.

 இதற்கிடையில் எங்கள் வீட்டிற்கும் எனது 'வூட்டுக்காரம்மா' ஊரான 'ராசகம்பீரத்திற்கும்' 'கால்டாக்ஸியை'ப் போல எங்கள் காரை 'ட்ரிப்' அடித்தேன். 'Upcoming-நம்பிக்கைப் பூக்கள்' 'status' இட்டு பூக்களெல்லாம் காய்ந்தே போயிருக்கும். இரண்டு நாட்கள் கடந்தது. இடையில் ஒருநாள் எனது பற்களில் பராமரிப்பு வேலை நடந்தது. 'சும்மா இரண்டரை  மணி நேரமா பற்கள ஒராசி ஒராசி. இப்ப நெனச்சாலும் ஸப்பாடி... முடியல. வாய் விட்டுச் சிரிக்க மட்டுமில்ல. பேசக் கூட முடியல. டபக்குனு (உடனே) ஒரு முடிவு பண்ணி என் வூட்டம்மாவுக்குப் போன் பண்ணி இதபாரு... நம்ம "gabree'அப்புறம் உன்  தங்காச்சி (தங்கச்சி) புள்ளைக சாரா, சாண்ட்ராவ பூக்குடை புடிச்சாமாதிரி சோக்கா படம் வரையச்சொல்லு.


 கலர் சங்கதிகள் எம் பொறுப்புனு சொல்லி போனை' வைத்து முடிக்க சுடச்சுட' வாட்ஸ் ஆப்' வழி மூன்று படங்களும் வந்துசேர்ந்தன. (சாரா, சாண்ட்ரா ரெண்டுபேரும் எங்க புள்ளைக தான்.சிறுசில இருந்து எங்கள அம்மா, அப்பான்னு தான் கூப்புடுவாக. எப்புடிக் கூப்புடுவாக தெரியுமா? 'எட்டம்மா','எட்டப்பா'. எனது' வூட்டம்மா'வின் பெயர் 'எட்விடா'. அதனால் 'எட்டம்மா'என அன்புடன் அழைக்கப் பெற்றார். நான் 'எட்டப்பா'வானது என் அறிவிற்கு எட்டாத விந்தை. என்னை எட்டப்பனாக்கிய பெருமை அவர்களையே சாரும்.  சரிதான் விட்டா கதைபேசிக்கிட்டே இருப்பேன். விஷயத்துக்கு வர்றேன். முடிவாக மழையோடு சென்னை வந்து வீடு வந்ததும் 'மறுபடியும் மொதல்ல இருந்து பதிவின் சில பகுதிகளை மாற்றினேன். ஒரு வழியாக நம்பிக்கைப் பூக்களை கட்டி முடித்தேன். 
    
வழக்கம் போல இந்த ஆண்டிலும் 'டிசம்பர்' பனியையும், மழையையும் ஒரே வண்டியில் பூட்டி கடகடவென ஓடி நம்மைக் கடந்து போகப் போகிறது.  இதை நீங்கள் வாசிக்கிறபோது  'டாட்டா' காட்டியபடி கடந்தே போயிருக்கும். 


"கிறிஸ்துமஸ்" உற்சாகத்தின் தொடரியாக "புதுவருடம்" நம்மைத் தொட்டுத் தொடரக் காத்திருக்கிறது. தொட்டதெல்லாம் பொன்னான நீதிக் கதையை அறிந்திருப்பீர்கள். அப்படியான பேராசைகள் எதுவும் இல்லை. தொடுவதெல்லாம் பூக்களாக விரிந்தால் போதும். விரியும்  நம்பிக்கைப் பூக்களை வண்ணப்பூக்களின்  குடையாக்கி  புதுவருடத்தை பூக்குடையின் கூடாரத்திற்குள் வசப்படுத்துவோம். 




Have your cup of "tea"...


Who is the " Hero?"... 


கடந்த பதிவை  who is the" Hero"என்ற கிறிஸ்துமஸ் தாத்தாவின் கேள்வியோடு முடித்திருந்தேன்.  மனமுடிக்குள் முடிந்து வைத்துள்ள "ஹீரோ" முடிச்சை இப்பதிவில் அவிழ்க்கிறேன்... 

  ஒளிந்துபிடித்து விளையாடி அவ்வப்போது கண்ணாமூச்சி ஆட்டம் காட்டும் 'நம்பிக்கை ஒளி' தான் நமக்குள்  உருக்கொண்டிருக்கும்    
 "ஹீரோ"... 

  நமக்குள் இருக்கும் நம்பிக்கை 'ஹீரோ'வைத் தேடிக் கண்டுகொண்டால் தொட்டதெல்லாம் பூக்களாக விரியும். வண்ணங்கள் நம் வழியாகும். நல் எண்ணங்கள் நம் மொழியாகும். விழி காணும் வழியெல்லாம் ஒளியாகும். 

எல்லா மறைகளும் நம்பிக்கைகளையே தங்கள் கரங்களாக்கி நம்மை அரவணைக்கின்றன. 

"நம்பினோர் கெடுவதில்லை. இது நான்கு மறைத் தீர்ப்பு" 
- என்பதனை அறிந்திருப்போம்.

 'நம்பிக்கை' குறித்த ஒரு நிகழ்வை நான் அறிந்த மறை வழியே பகிர்கிறேன்.
வேதாகமத்தில் 'புனித பேதுரு' தேவகுமாரன் 'இயேசு' வின் சீடராக மாறின வரலாறு அறிந்தபோது 'நம்பிக்கையும், விசுவாசமும்' எவ்வளவு ஆழமானது  என்பதனை உணர முடிந்தது.

 தேவன் 'இயேசு' வால் சீடராகத் தெரிந்துகொள்ளப்பட்ட மீனவர் 'பேதுரு' புனிதராகும் முன் மீனவராக அறியப்பட்டார். மீன்பிடி தொழிலில் அதன் அடி ஆழம் கண்டவராக விளங்கினார். 
மீன்வலை விரிப்பதில் வல்லவர். இவர் விரிக்கும் வலைகளின் கண்களுக்கு மீன்கள் தப்ப முடியாது. எல்லா மீன்களும்  மீனவர் 'பேதுரு' வின் வலைகளுக்குள் வளையவந்து சரணாகதி அடைந்துகொள்ளும்.

 இச்சூழலில் ஒருநாள் மீனவர் 'பேதுரு' வழக்கம்போல கடலில் வலைவீசினார். கணங்கள் கடலில் கரைந்தும் வலைக்கண்களில் ஏனோ! மீன்கள் கண் வைக்கவில்லை. இரவெல்லாம் வலைவிரித்து சோர்ந்த கணத்தில் தேவன் 'இயேசு' மீனவர் 'பேதுரு' வின் படகில் ஏறினார்.


 சோர்ந்துபோயிருந்த மீனவர் 'பேதுரு' வின் நிலைமை அறிந்தார் தேவன் இயேசு. பேதுருவை மீண்டும் கடலில் வலை விரிக்கச் சொன்னார் தேவகுமாரன் 'இயேசு'.

நம்பிக்கை வலை விரித்தார் மீனவர் 'பேதுரு'...


மீனவர் 'பேதுரு' தேவனின் வார்த்தைகளைக் கேட்டவுடன் மறுமொழி பகிராமல் கடலில் வலை விரித்தார். கணநேரம் கடந்தது. கடல்மீன்கள் தேவனின் விருப்பத்தை அறிந்தன.ஒவ்வொரு மீன்களும் 'நான் முந்தி நீ முந்தியென' பிந்தாமல் நீந்தி மீனவர்' பேதுரு' வின் வலைக்குள் வலை அறுபடுமளவிற்கு  தஞ்சம் புகுந்தன.

இந்த இடத்தில் ஆழமாக "விசுவாசம், நம்பிக்கை" எனும் இரண்டு உண்மைகளை உணர முடிந்தது.  

மீன்பிடித்தலில் கரைகண்ட மீனவர்
' பேதுரு' தேவன் வலைவிரிக்கச் சொன்னவுடன்... 

'நான் இரவெல்லாம் வலைவிரித்து அகப்படாத மீன்கள். நீங்கள் சொன்னவுடன் விரித்தால் மட்டும் மீன்கள் கிடைக்கவா போகிறது?'  - என நாவெனும்  நாணில் பதில் அம்பு தொடுக்காமல் 'நான் பெரிய மீனவனாக்கும்' என்ற 'நான்' எனும் அகந்தையற்று தேவகுமாரனின் வார்த்தைகளை விசுவசித்து  நம்பிக்கையுடன் உடனே வலை வீசினதாலேயே வலைஅறுபடுமளவிற்கு மீன்கள் கிடைத்தன. பின்னர் மீன்களைப்பிடிப்பதை விட்டுவிட்டு
இயேசுக் கிறிஸ்து'வின் சீடராக மாறி மனித மனங்களைப் படிக்க
 பின்னாளில் எல்லோருக்கும் பிடிக்கும்  புனிதர்  ஆனார். 


வேதாகமத்தில் அற்புத நிகழ்வுகளின் விவரிப்பில்
'உடன்' என்ற சொற்பயன்பாடு இடம்பெற்றிருக்கும். 'உடன்' என்ற சொற்பயன்பாட்டிற்குள் நம்பிக்கை உருக்கொண்டிருக்கும். தேவன் "இயேசுக் கிறிஸ்து " அற்புதங்கள் நிகழ்த்திய தருணங்களிலெல்லாம் 'தன்னால் தான் அற்புதம் நிகழ்ந்தது' 
என்று எப்பொழுதும் காப்புரிமை மொழிந்ததில்லை. மாறாக... 
 "உன் விசுவாசத்தாலும் நம்பிக்கையாலும் அற்புதம் நிகழ்ந்தது" 
        என்றே மொழிந்திருக்கிறார் தேவகுமாரன் 'இயேசுக் கிறிஸ்து'.

"இயேசுக் கிறிஸ்து" மட்டுமல்ல எல்லா மறைகளும் முன்மொழியும் வேதமொழிகள் இவைகளே.
"நம்பிக்கை" , "விசுவாசம்" 
இரண்டும் இரு விழிகள். 

 கடக்கும் வழியெல்லாம் விசுவாசத்துடன் 'நம்பிக்கைப் பூக்கள்' உயர்த்தி பாதைகள் கடப்போம்.  


வரும் காலம் 'பூக்காலமாக' 
மலர வேண்டி பிரார்த்தனை
செய்வோம்.
விசுவாச நாற்றில் நம்பிக்கைப் பூக்கள் தொடுத்து 'புதுவருடத்தை' வரவேற்கலாம். 
 அன்பிற்கு இனிய... அனைவருக்கும்   "புதுவருட" வாழ்த்துக்களை மகிழ்வுடன் பகிர்கிறேன்... 


பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள்... 




' மனப் பறவை'  மனம் கொத்தும்! 
பறக்கும்... 

"சுய பலத்தினாலும், பராக்கிரமத்தினாலும் அல்ல.  தேவ கிருபையினால் எல்லாம் கூடும்". 
ஆமென். 
Irudhy. a

Wednesday, December 22, 2021

அது ஒரு பனிக் காலம்...


Fly...

'டிசம்பர் உலா' தொடர்வதால் 'மகுட ராசா' கதையும், கடந்த இரண்டு ஞாயிறாக இடம்பெறாத 'காதல் உலாப் போகும் காலமும்' டிசம்பர் உலா' முடிந்தவுடன் தொடரும் என்பதை தாழ்மையுடனே பகிர்கிறேன். 

தொடர்வது...
டிசம்பர் உலா-பகுதி-2
                 
 அது ஒரு "பனிக் காலம்"... 

          ஏழு மலை ஏழு கடல் தாண்டி ஒரு காடு. அந்தக் காட்டினுள் ஒரு குகை. குகைக்குள் ஓர் ஓடை. ஓடைக்குள்   இறங்கி கண் மூடினால் கைவரும்  தங்க மீன்.


 'அம்புலிமாமா' கதை  'டிசம்பர்' மாதத்தில் மனக்கதவைத் தட்டும். டிசம்பரில் "கிறிஸ்துமஸ் தாத்தா"
தானே கதவு தட்டவேண்டும்!? "Why?" 'அம்புலிமாமா'? 

       Have your cup of "tea" ... 


1980 களின் மத்தியில் 'அம்புலிமாமா' கதைகள் மிகவும் பிரபல்யம்.  ஐந்து பைசா கொடுத்தால் கடையிலேயே அமர்ந்து' காமிக்ஸ்' புத்தகங்கள் படித்து வரலாம். 

எனது மூத்த சகோதரர் வெறித்தனமான வாசிப்பாளர். சிறுகதைகள் புனைவதில் கெட்டிக்காரர்.   'நெல்லுக்குப் பாயும் நீர் சிறு புல்லுக்கும் பாய்வது போல' அவராலேயே நானும் வாசிப்புப் பழக்கத்துக்கு என்னைப் பழக்கிக் கொண்டேன். 'கண்டதைக் கற்றவன் பண்டிதன் ஆவான்' - என்ற சொற்பதம் அறிந்திருப்பீர்கள். எனது சகோதரர் நல் உதாரணம்.

 சிறு பிராயத்தில் துப்பறியும் 'பாக்கெட் நாவல்' தொடங்கி 'இரும்புக் கை மாயாவி' வரை எல்லாவற்றையும் படித்து முட்ட உண்ட வயிற்றுக்காரன் போல 'ஏப்பம்' விடுவார்.  நானும் எனது மூத்த சகோதரரும் பாடப் புத்தகத்திற்குள் 'பாக்கெட் நாவல்' வைத்துப் படித்த பண்பாளர்கள்.  

இப்பொழுது "அம்புலிமாமா" கதைக்கு வருகிறேன். ஏழு கடல் ஏழு மலை தாண்டிய கதைகள் போல சிறுவயதில் "கிறிஸ்துமஸ்" கொண்டாட்டத்திற்கு குறுக்கே அரையாண்டுத் தேர்வுகள் வந்து நிற்கும். 'ஸப்பாடி' இந்தப் பரீட்சைகளத் தாண்டித் தான் "கிறிஸ்துமஸ்" கொண்டாடணுமா? பேசாம 'jesus' 'June'  இல்லைனா 'july' -ல பிறந்திருக்கலாம். பரீட்சை இல்லாம இருந்திருக்கும். சிறிய வயதில் மனம் கூப்பாடு போடும். 

 'டிசம்பர்' மாதம் ஒரு கையில்  'கூடைக் கேக்கு'களையும் மற்றொரு கையில் அரையாண்டு பரீட்சைக்கான வினாத் தாள்களையும் சுமந்தபடி கதவு தட்டும். 'கூடைக் கேக்'கிற்குள் கிறிஸ்துமஸ் சந்தோசங்கள் வாசம் பண்ணும். வினாத் தாள்கள் அச்சந்தோசங்களைக் கேள்விக் கொக்கிபோட்டு பரீட்சைக்கு இழுத்துச் செல்லும். பரீட்சை எனும் ஏழு மலை ஏழு கடலைத் தாண்டினால் தான் 'கிறிஸ்துமஸ்' எனும் 'தங்க மீனான' தங்கத் தருணங்களை அடைய முடியும்.


' சவாலே சமாளி' என்றபடி நாட்கள் கடக்கும். டிசம்பர் 22 அல்லது 23 தேதிகள் வரை பரீட்சை இருக்கும். பரீட்சை முடியும் நாளும் 'கிறிஸ்துமஸ்' புத்தாடையை தையற்கடைக்காரரிடம் பெறும் நாளும் ஒன்றாகவே இருக்கும். 

80 களின் மத்தியில் புத்தாடை அணிவது 'புதுப்பட ரிலீஸ்'போல படு 'த்ரில்லாக' இருக்கும்.  துணி எடுத்து 'மேட்சிங் கால்சராய்' நிறம் தெரிந்து தீபாவளி தினத்தில் புத்தாடை அணிந்த 'தோஸ்த்துகளில்' யாரின் உடை சிறப்பாக இருந்ததோ அந்த தோஸ்த்திடம் தைத்த 'டெய்லர்' கடை  அறிந்து அங்கு கிறிஸ்துமஸ் புத்தாடை தைக்க கொடுப்போம். 


 ' சும்மா "குடை ராட்டிணம்" கணக்கா டெய்லர் நம்மள சுத்து சுத்துனு சுத்தி அளவெடுப்பாரு. நோட்டுல எழுதறப்ப நான் அளவை மறு மதிப்பீடு செய்வேன். கடைசில என் கெரகம்  alteration பண்ணித்தான் அதை அணியணும். இருப்பினும் அந்நாட்களில் அணிந்த உடைகளின் தருணங்களை எப்பொழுது நினைத்தாலும் மனசைத் தைக்கும். சரி. பனிக்காலத்தை விட்ட இடத்திலிருந்து தொடர்கிறேன்.

அன்று எனக்கு புத்தாடையின் வாசனையைத் தவிர பரீட்சை குறித்த எந்த யோசனைகளும் தோன்றாது. 'எப்படா... பரீட்சை முடியும்' என்று 'ட்ரிகரை' விட்டு வெளியேறத் துடிக்கும் தோட்டா போல மனம் காத்திருக்கும். 
"80-களின்" மத்திய தீபாவளிக் கொண்டாட்டங்களைப் போலத் தான் 'கிறிஸ்துமஸ்' பண்டிகையும்   மனதை "80களின்" மத்திய வருடங்களுக்கு இழுத்துச் செல்லும்.

"1980" களின் மத்திய வருடக் "கிறிஸ்துமஸ்" காலங்கள்


            மதுரை 'தூயமரியன்னை' மேல்நிலைப் பள்ளிப்படிப்பு நாட்கள் எனக்கு வனவாசம் போலவே கழிந்தன.  தேர் ஊர்வலத்தில் 'மண்டபப் படிகள்' இருக்குமே அப்படி பள்ளிக்கால நாட்களில்  'தீபாவளி' , 'கிறிஸ்துமஸ்' போன்ற பண்டிகைகள் மண்டபப் படிகள் போல வந்து மனத்தேரின் ஓட்டத்தை நிறுத்தி இளைப்பாற வைக்கும். இப்படிக்கும் எங்கள் வீடு பள்ளிக்கூடம் போலத் தான் அப்பொழுது இருந்தது. அப்பா நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர். அம்மா ஆசிரியை. அம்மா எனக்கு '3-c டீச்சராக்கும்'. ஆசிரிய வீட்டுப் பிள்ளை 'மக்கு' என்ற சொல் வழக்கு உண்டு. வழக்குகள் இல்லாமல் வழக்கமாகப் பல வேளைகளில் நிரூபித்து நெஞ்சு நிமிர்த்தி நடந்தவன் யான். அந்தக் கதைகளைப் பின்னொரு சூழலில் பகிர்கிறேன். 

சுவாரஸ்யங்கள் நிறைந்த கதைகளை மனப் பறவையாக உங்கள் மனக்கூட்டிற்குக் கடத்துவேன். என் கதைகளில் உங்கள் கதைகளும் கிளைகள் விடலாம்.

ஒரு வழியாக அரையாண்டுப் பரீட்சை முடியும். மனசுக்குள் "கிறிஸ்துமஸ்" சந்தோசக் குடில் கட்ட ஆரம்பிக்கும். மதுரை ஜெய்ஹிந்துபுரத்து வாழ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கும் பின்னர் 90களில் மதுரை அண்ணாநகரில் கொண்டாடிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கும்  நிறைய வித்தியாசங்களை உணர்ந்த காலங்கள் அவை. இரண்டின் ஞாபகங்களும் 'டிசம்பரில்' மனசுக்குள் அலையடிக்கும். 
ஜெய்ஹிந்துபுரத்தில் 'தீபாவளி' களை கட்டும்.  'கிறிஸ்துமஸ்' எங்கள் வீட்டில் மட்டும் வாழைமரம் கட்டும். எங்கள் தெருவில் மூன்று கிறிஸ்தவக் குடும்பங்கள் இருந்தன. அதுவும் அந்தக் கடைசியில் ஒன்று. இந்தக் கடைசியில் ஒன்று. நடுவில் ஒன்று என்ற விகிதாச்சாரப்படி கிறிஸ்தவ வீட்டுப் படிகள் இருக்கும். ஆரம்பத்தில் அங்கிருந்த  எங்களை ஆங்கிலேய நாட்டிலிருந்து வந்தவர்களைப் போல பாவித்தார்கள் அங்கிருந்த பயலுகள். 

பின்னர் "! அடேய்! பயலுகளா... நாங்களும் புரத்துல இருந்து தான் வந்திருக்கோம். நாங்களும் உங்க சரகம் தான்டாஅடேய்" என பேச்சுவார்த்தைக்கு அழைப்போம். மதுரை எம். கே.புரத்தில்  (சுப்ரமணியபுரம் அருகில்) தான் எங்களது ஆரம்பகாலம் அமைந்திருந்தது. எங்களது அதான பிரதான செயல்பாடுகளைக் கண்ணுற்ற பின்னர் ஜெய்ஹிந்துபுரத்துப் பயலுகள் 'எங்கள் இனமடா நீங்கள்' என்று எங்களை ஏற்றுக் கொண்டார்கள்.

ஆரம்பத்தில் கிறிஸ்துமஸ் தினத்தில் எங்களை வெடி போட விடமாட்டான்கள் அந்தப் படவாக்கள். வெடி வைத்து நெருப்பு மருந்தைத் தொடும் முன் படவாஸின் 'சில்லாக்கு' விளையாட்டுக் கற்கள் எங்களின் வெடிகளைப் பருந்தாகத் தூக்கிப் பறக்கும்.' தீபாவளிக்கு மட்டுந்தான்டா வெடிச்சத்தம் கேட்கணும். நீங்கள்லாம் சர்சுக்குப் போனமா கேக்க தின்னமானு இருக்கனும். மனசுக்குள் திரி கிள்ளுவான்கள் படவாக்கள். நான் அப்பொழுதெல்லாம் மிகுந்த கோபக்காரனாக்கும். 
இப்பொழுது இல்லை. கோபங்கள் எல்லாவற்றையும் மூட்டை கட்டிவிட்டேன். அவர்களுடன் மல்லுக்கு நின்று பின்னாளில் "மூழ்காத சிப்பே ப்ரண்ஷிப் தான்" - என்று பாடாத குறையாக 

 படவாக்களுடன்.... 
'சில்லாக்கு', 'ஆத்தலக்கடி, பூத்தலக்கடி' , 'கம்புத் தள்ளி' , கிளியாங் கிளியா, 'கல்லா... மண்ணா' ... எல்லாம் விளையாண்டு கழிக்க '' டிசம்பர்" 'கிறிஸ்துமஸ்' தினத்தன்று எங்கள் வெடிகளின் திரிகளை படவாக்கள் தான் கிள்ளிக் கொடுப்பார்கள்.

 'கிறிஸ்துமஸ்' தினத்தன்று ஜெய்ஹிந்துபுரத்து தெருவில் வெடிச்சத்தம் கேட்க ஆரம்பித்தது. இந்து மதச் சகோதரக் குடும்பங்களுக்கு நடுவில் தனித் தீவாக இருந்த எங்கள் வீட்டு வாசற்படிகளில் வெடித்த மருந்தின் வாச நெடிகள் , வெடிப்பில் எழுந்த புகைகள்  இப்பொழுது நினைத்தாலும் மனசுக்குள் புகை மூட்டமாக எழும்பும். 

எங்கள் வீட்டின் உள்ளே 'கிறிஸ்துமஸ் கேக்'குகளின் வாசனையை முகர்ந்து சிரித்தபடி படவாக்களுடன் உண்ட தருணங்களும் மனக்குடுவைக்குள் கண்ணாடி மீன்களாக நீந்திக் கொண்டே இருக்கின்றன. 

தினத்தந்தியில் இடம்பிடித்த 'கன்னித் தீவு' கதை போல 'டிசம்பர் உலா'வும் முடிவற்றது. இம்மாதம் முடியும்வரை 'டிசம்பர் உலா' தொடர்வேன். தொடர்ந்திருங்கள். டிசம்பர் தேரை தொடர்ந்து இழுக்கிறேன். 

வரும் பதிவில்...

"who Is The" Hero"*...? 


பதிவு பிடித்திருந்தால் பகிருங்கள்... 

மனங்கொத்தும் பறவை பறக்கும்... 


Irudhy.a 




அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...