About Me

Tuesday, March 8, 2022

"இரு சிறகு ..."

Fly...

            மனம் கொத்தும் பறவை 

    "மங்கையராய்  பிறப்பதற்கே
நல் மாதவம் செய்திடல் வேண்டுமம்மா"
          - கவிமணி 'தேசிக விநாயகம் பிள்ளை'. 

மாதரைக் கேட்டால் என்ன சொல்லுவார்கள். 'மா... தவம்'  தான் என ஒப்புக் கொள்வார்களா? 
அல்லது 'மா...மோசம்' என கழுவிக்கழுவி ஊற்றுவார்களா? 

     கேள்விகள் எழுகின்றன. வீட்டில் 'வூட்டம்மாவிடம்' கேட்கலாமா? 
வேறு வம்பே வேண்டாம். 

தேநீருக்குப் பதிலாக... 

இன்று... 
               "ஆரஞ்சு மிட்டாய்கள்" 


முன்னெல்லாம்' தேசியக் கொடி' ஏற்றியவுடன் 'ஆரஞ்சு மிட்டாய்' தருவார்கள். 
இன்று மகளிர் சுதந்திர
 வெளியின் நாள். அதனால்
              'ஆரஞ்சு மிட்டாய்'. 


   "இரு சிறகு" ...


"படி தாண்டி
நிமிர்ந்தால் வானம்... 
கைகள் இரண்டும் விரித்தால் 
சிறகு! 
பரந்த வெளி உனது... 
பார்க்கும் விழி எனது... 
' பற'... "

' மகளிர்' தின நல் வாழ்த்துக்கள் 

 "துன்பம் என்றும் ஆணுக்கல்ல. 
அது அன்றும் இன்றும் பெண்களுக்கே... 
..........  ...........   ....... 
நீ அன்று சிந்திய கண்ணீரில்"... 

" Hello... ஹலோ... 
One minute stop the song "
            இது எனது' ப்ளாக்கில்' வாசித்து வரும் கொஞ்ச நஞ்ச ஆண் வாசிப்பாளர்களின் குரல்களே தான். 

'போனா போகட்டும் போடா' ... என பெருந்தன்மையோடு

 நான் பகிர்வதை பெருவாரியாக வாசிப்பவர்கள் மகளிர் மட்டுமே.
நண்பர்களே கோபம் கொள்ள வேண்டாம். உண்மை பகிர்கிறேன். 

"I am sing in the rain. 
  I am 'ஸ்வைங்' in the...' 
        - இது அடியேன் தான். நண்பர்கள்    மேற்கண்ட பாடலை மாற்றச் சொல்கிறார்கள். 
மாற்றுவதற்கு முன் பாடி முடித்து விடுகிறேன். பெருவாரியான மகளிருக்காக மட்டுமே. 

     1' St - ல இருந்து பாடுறேன். 

" துன்பம் என்றும் ஆணுக்கல்ல. 
அது அன்றும் இன்றும் பெண்களுக்கே...? 
.......... ........... ....... 
நீ அன்று சிந்திய கண்ணீரில்... 
 இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா! 
இரவென்றால் மறு நாளே விடியும்... 
உன் தோட்டத்தில் அப்போது பூக்கள் மலரும்! 
அன்பு கொண்டு நீ ஆடு... "
              - சிப்பிக்குள் முத்து திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல். பாடும் நிலா 'எஸ்.பி.பி' அவர்களின் குரல் படம் முழுக்க தொடர்ந்து வரும். 
திரு. 'கமல்ஹாசன்' அவர்களுக்கு 'பாடும் நிலா' தான் குரல் கொடுத்திருப்பார். மறக்கவே முடியாத படம். 

'டவுசர்' அணிந்து திரிந்த காலத்தில் கண்ட படம். மதுரை ஜெய்ஹிந்துபுரத்து 'முருகன்' தியேட்டரில் கூட்டம் அள்ளியது. 'முருகன் 'தியேட்டர் அப்போது' c'    centre. பல நாட்கள் ஓடி வெற்றி பெற்ற படத்தை இங்கு பார்க்கலாம். அப்படிக் கண்ட படம்
             'சிப்பிக்குள் முத்து'
இருக்கை கிடைக்காமல் திரைக்கு சில அடிகள் முன்பு அமர்ந்து அன்னார்ந்த படியே கண்ட படம். 
மெய்யாகவே அன்னார்ந்து பார்க்க வேண்டிய படம் தான்.   '80' களின் மத்திமம் என நினைக்கிறேன். 

'துன்பம் என்றும் ஆணுக்கல்ல' ... 
   அன்று பாடியது. இன்றும் பாடிக் கொண்டிருந்தால் எனது கொஞ்ச நஞ்ச ஆண் வாசிப்பாளர்களும் மொத்தமாக வெளிநடப்புச் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

Song lyric. 'Updated' And Reloaded... 

           கொஞ்ச நஞ்சம் நான் பகிர்வதை வாசிக்கும் ஆண் நண்பர்களுக்காக மட்டும். 

     Song Reversion 

"துன்பம் இன்று... 
ஆண்களுக்கு  
பெண்களைப் போலவே...
 கொஞ்சம் (?) உண்டு.
பெண்மை அன்று சிந்திய கண்ணீரில்... 
இன்று ஆண்களின் தேசமும் கரைந்ததம்மா!.. 
ஆண் தேசம் மண் மீது ஆட... "


      எங்கெங்கு காணினும் மாதரின் 
தடங்கள் களங்கள் தோறும் அழுத்தமாகப் பதியத் தொடங்கி காலங்கள் ஆகி விட்டன. சமீபத்திய உள்ளாட்சித் தேர்தலில் களம் கண்டு வென்ற மகளிர் ஏராளம்.  தங்களுக்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளுகிற இடத்திற்கு நிறைய மகளிர் வந்துவிட்டனர். 

சமீபத்தில் ஒரு குறும்பதிவு கண்ணுற்றேன். ஒர் இளம் மங்கை
காட்சி ஊடக செய்தியாளரிடம் பகிர்ந்த விஷயம் இது. 
     "  வீட்டு வேலை பார்த்துக்கிட்டு வீட்லயே இருக்கற கணவன் கிடைச்சா சந்தோசம். நான் சம்பாதிச்சு அவர பார்த்துக்குவேன். அவுங்க தான் வேலைக்குப் போகணுமா? மாற்றமா வீட்ல இருக்கட்டும்." 
     மங்கை சொல்லி முடிய படம்  நிற்க காட்சியின் மறு பாதியில்
வைகைப்புயல் வடிவேலு அவர்கள் 'சூடம்' 'சாம்பிராணி' காட்டி பூசை மணி அடித்து அந்த மங்கையை ஆராதிப்பது போல உள்ள படக்காட்சியுடன் முடிந்தது. 

'உத்தியோகம் புருச லட்சணம்' என்பார்கள். மங்கையர் பணிக்குச் செல்லுதல் அவர்களது சுயம் சார்ந்தது. மறுப்பதற்கில்லை. ஆனால், 'நீங்க வீட்ல இருங்க நாங்க வேலைக்குப் போறோம்' என்று கிளம்பினால் 
       "மாமா டவுசர் கழண்டுச்சு...".       பாடலுக்கு நடனம் ஆட வேண்டியதாகிவிடும்.. "ஸப்பாடி" கண்களைக் கட்டுகிறது. 

Coming to the point your honour

   
"மங்கையே
ஒரு சிறகு நீ... 
மறு சிறகு நான்... 
பறக்க தடை என்ன?.. 
இடைவெளி குறைந்து
எல்லாம் நம் வெளியாகட்டும்!" 

என் வாழ்வில் சமீபமாக  நான் அறிந்த பெண் ஆளுமைகள் நிறையபேர் இருக்கிறார்கள்.   பெயர்களைத் தவிர்த்துப் பகிர்கிறேன். சம்பந்தப்பட்ட நபர்களும் வாசிக்கலாம்.

 பகிர்ந்ததில் குறை இருப்பின் கனிவு கொள்ளுங்கள். தண்ணீரில் எழுதிய பதிவாகக் கடந்து விடுங்கள். எனது கனிவான வேண்டுகோள் இது. ஏற்பார்கள் என நம்புகிறேன். 

நம்பிக்கை தந்த ஆளுமைகளுக்கு ஆளுயர மாலைகள் தேவையில்லை.  நம்பிக்கை விதைத்த ஆளுமைகளின் செயல்களை வெளிச்சத்தில் பிறர் அறிய உயர்த்திப் பிடித்தால் போதும் என நினைக்கிறேன். வெளிச்சக் கீற்றின் ஒளியில் நம்மையும் கண்டு கொள்ளலாம். 

நம்பிக்கை மாதர்கள்

இரண்டு மங்கையரை நான் அடுத்துப் பகிரவிருக்கும் பட்டியலுக்குள் இணைக்கப் போவதில்லை. காரணம் பட்டியலைத் தொடங்கி வைப்பவர்கள் அவர்கள் தான். 

முதல் மங்கை

அம்மாவைத் தவிர வேறு யாராக இருக்கமுடியும். 

         வெயிலாய், மழையாய், நதியாய், பனியின் குளிராய் மனசுக்குள் நிற்பவர். இந்த நிமிடம் வரை ஒரு நிமிடத்தில் ஒரு நொடியாவது எங்கள் (அண்ணன், தம்பி) மூவரைப் பற்றி நினைக்காமல் அந்த நிமிடத்தைக் கடக்க மாட்டார். 
உங்கள் அம்மாவும் இப்படியாகத் தான் இருப்பார். சந்தேகமில்லை. அம்மாக்களின்
 கடிகார உலகில் பிள்ளைகளின் நினைவுகள் தான் நொடிகளாகக் கடக்கும்.

மகளிர் தின நல் வாழ்த்துக்கள்            "அம்மா" ... 

அடுத்து என் வீட்டம்மாவிற்கு... 

என் பெற்றோர், சகோதரர்களைப்
போலவே என் மனைவியும் எனது 'இலக்கு' குறித்து எந்தக் கேள்விகளையும் என் முன் வைப்பதில்லை. ஏன் தெரியுமா? 
எனக்கு எந்த இலக்கும் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். என் மீது இவர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கை 
'நிலத்தினும் பெரிது. வானினும் உயர்ந்தது'. 

'வீட்டம்மாவிற்கு' ... 
'மகளிர் தின நல் வாழ்த்துக்கள்'. 

மீண்டும் ஒருமுறை அனைத்து மகளிருக்கும்  வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

வியப்பில் ஆழ்த்திய "மகளிர்"தொடரவிருக்கும்  'உலாப் பூக்கள்' பதிவினைத் தொடர்ந்து இடம் பெறுவார்கள். 

தொடர்ந்திருங்கள். தொடர்ந்திடுங்கள்...

மனம் பறவையாகும்... 
பறக்கும்... 

இருதய். ஆ







Friday, March 4, 2022

'வாசமில்லா மலர் இது' ...

Fly...

           மனம் கொத்தும் பறவை... 

"வாசமில்லா மலர் இது!
வண்ணங்கள் நிறைந்தது... 
வாடாது. வதங்காது!
பறவையின் சிறகிலிருந்து உதிர்ந்த
இறகாக...
      கொடி பிரிந்து 
       தரை இறங்கும். 
       தரையிறங்கி... 
     கரையோரம் ஆடும் 
   சிறு படகு போல... 
        இடம் வலமாக
            முன் பின்னாக 
              காற்றில் நகர்ந்து நகர்ந்து
             கண்கள் நிறைக்கும். 

         வாசமற்ற மலர் இது! 
             எண்ணி முடியாது.
எண்ணமுடியா கூட்டமிது...
 ஒரு கூட்டுப் பறவைகளாக!
    முள்ளோடு வேலியாக... 
       கொடி பிடித்து வேர் பரப்பும்"...

  பூ மரமோ? பூங் கொடியோ? 

   பூவுலகில் பூவிதன் பெயர்.....? 
 
             "போகைன் வில்லா" .... 

தேநீர் தருணம்... 


'தாவரவியல்' அறிவு  எப்பொழுதும் எனக்குத் தொலைவு. 

வாசமற்ற 
வண்ணங்கள் நிறைந்த
இப்பூக்களின் செறிவுள்ள பெயர் 
இனிக்கும் தமிழில் என்னவாக இருக்கும்? 


பூக்களின் பாடசாலையில்.... 

இனிதாகும் தமிழில்... 

               " காகிதப் பூக்கள்..." 


"காகிதம்" அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியா ஒர் அங்கம். 
  கனவுகள் கரை ஏறும்
   கட்டுமரம் 'காகிதம்'. 

படைப்புலகத்து தேவதைகளாக உலா வரும்' காகிதங்கள்' ஒரு பூக்களுக்குப்  பெயரானால் அந்தப் பூக்களும் தேவதைகள் தானே! 

'போகைன் வில்லா" எனும்
' காகிதப் பூக்களை' பூக்கும் கொடித் தாவரம் என்கிறது தாவரவியல். ரோசாவைப் போலவே காகிதப் பூக்களும்  முட்கள் சூழ பூக்கின்றன. 

முட்கள் நிறைந்த' காகிதப் பூக்களின்  கொடிகள் பூக்களுக்கு வேலியா!  அல்லது பூக்களை நட்டவர்களுக்கு வேலியா? ஆச்சரியமும், கேள்வியும் கைப் பிடிக்கும். பெரும்பாலும் காகிதப் பூக்கள் வேலிச்சுவர்களில்  'வேலிப்பூக்களாக' முட்களுடன்  கொடி பிடித்துப் படர்ந்திருக்கும். கண்ட கண்களை வண்ணங்களால் நிறைக்கும். 
மஞ்சள், சிகப்பு, ஆரஞ்சு, ரோசாப் பூ சிவப்பு  வண்ணங்களில் கொத்துக் கொத்தாகப் பூத்துக் கிடக்கும். மனம் அவற்றைக் கடக்க மறுக்கும். 

 வாசனையற்ற பூக்களாக மலர்வதும், பூவையரின் கூந்தல் சேராமல் காட்சிப் பொருளாக உறைவதும், கொடி பிரிந்தும் வாடாது வண்ணம் மாறாது ஒரு 'யோகி' போல தரைகளிலும்,  வேலியோரப் பாதைகளிலும் காகிதப் பூக்கள் .  அமர்ந்திருக்கும் '

 வாசமில்லா 'காகிதப் பூக்கள்' மனசுக்குள் கடத்தும் நினைவுகளுக்கும் வண்ணங்களுக்கும் என்றும்  வாசனைகள் உண்டு. 

காகிதப் பூக்களின் வாசமுள்ள நினைவுகள் 


 கடலில் நீந்தும் மீன்களும், வான் பறக்கும் பறவைகளும் கடக்கும்   வழிகளில் தடங்கள் ஏதும் தென்படுவதில்லை.  ஆனால், நம் வாழ்வில்  கடக்கும்  தருணங்கள் சில அழிக்க முடியா நினைவுகளை விதைத்துக் கடக்கின்றன.

 'காகிதப் பூக்கள்' எனக்குள் வாசமுள்ள பல நினைவுகளை மலர வைத்திருக்கிறது. என் நினைவுகளை கண்ணுற்று வாசிக்கையில் காகிதப் பூக்களின் வாசமான நினைவுகள் உங்கள் மனசுக்குள் பூக்கலாம்.

"'காகிதப் பூ' நெனப்பு(பூ)" ...


'காகிதப் பூக்களின்' தலைப்பில் ஏராளமான கவிதைகளும், கதைகளும் எழுதப்பட்டுள்ளன. எழுதப்படுகின்றன. ஏதோ ஒரு வசீகரத்தை வாசமற்ற காகிதப் பூக்கள் தன் கொத்துகளுக்குள் மறைத்து வைத்திருக்கின்றன.

'காகிதப் பூக்கள்' விதைத்த நினைவுகளில் மூன்று விதச் சூழல்களை, அழகான அந்நாட்களின்  தருணங்களை மறக்க  முடியாது.

'காகிதப் பூ' முதல் நெனப்பு

  மதுரை 'ஜெய்ஹிந்துபுரத்தில்' வசித்த போது நான் ஐந்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த  காலம். எங்கள் வீட்டிற்கு சற்றுத் தள்ளி ஒர் அரிசி ஆலை. நீண்டு பரந்த பகுதி. ஆலைக்கு அருகில் ஒர் அழகான வீடு.  கலாரசனையோடு புள்ளிக்கோலமிட்டால் எப்படி இருக்கும். அப்படி அழகான புள்ளிகளால் இடப்பட்ட வண்ணக் கோலமாக அந்த வீடு காணும் கண்களை நிறைக்கும். 


நிறைந்த கண்களின் கரு விழிகளில் வண்ண வண்ண  'காகிதப் பூக்கள்' தங்கள் முகம் பார்க்கும். 
வெள்ளை, இளஞ்சிகப்பு, 'ரோசாப் பூ செவப்பு' , ஆரஞ்சு, மஞ்சள் வண்ணம் என கொத்துக் கொத்தாகப் பூத்து அந்த வீட்டைச் சுற்றி வேலி அமைத்திருக்கும். தரையெங்கும் குட்டிக் குட்டி காகிதப் பூ தீவுகளாக விரிந்து கிடக்கும். 

காகிதப் பூக்களின் வீடாகவே அந்த வீட்டின் பெயர் என் நினைவில் வாசம் செய்கிறது. 
'பெந்தக்கோஸ்தே' பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவக் குடும்பத்தினர் அந்த வீட்டில் வசித்தார்கள். 
'காகிதப் பூக்களின் வீடு அவர்களின் சொந்த வீடு. 

அந்த வீட்டில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று மாலையில் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில்' மறைக்கல்வி' வகுப்பு நடத்துவார்கள். தவறாமல் கலந்து கொள்வேன். சில ஞாயிறுகள் எப்படியோ கை நழுவிப் போகும். வகுப்பு முடிகையில் எல்லோரது  கைகளிலும்  ஒரு  'பட்சணம்' கை சேர்வது நிச்சயம். பட்சணங்களை எதிர் நோக்கி காத்திருக்க மறைக்கல்வியின் இறுதிப் பாடல் தொடங்கும். 

    'சந்தோசம் பொங்குது. சந்தோசம் பொங்குது... 
சந்தோசம் என்னில் பொங்குது... 
இயேசு என்னை இரட்சித்தார்! 
முற்றிலும் என்னை மாற்றினார்... 
சந்தோசம் என்னில் பொங்குது...' 
      - கைகள் தட்டி சந்தோசக் குரலெடுத்து அந்த வீட்டின் அக்கா நடு நாயகமாக நின்று தலையை இடம் வலம் அசைத்துப் பாடுவார். நான் "ஆ" வென்று வாய் பிளந்து அக்காவிற்கு சற்றுத் தள்ளி தடல் புடலாகத் தயாராகிக் கொண்டிருக்கும் பட்சணங்களைப் பார்த்தபடி...    

       "சந்தோசம் பொங்குது... 
        சந்தோசம் பொங்குது..."                        சந்தோசம் என்னில்       பொங்குது"... 
    பாடிக் கொண்டிருப்பேன். 


    நடுவில் பாடிக்கொண்டிருக்கும் அக்காவின் தலையசைப்பிற்கு எதிர்விசையில்  தலையசைத்தபடி அக்காவிற்குச் சற்றுத் தள்ளி நடக்கும் களேபரங்களில்... 
       'கை சேரவிருக்கும் பட்சணம்          என்னவோ?' 
என அலைபாய்ந்தபடி அமர்ந்திருப்பேன். அமர்ந்திருப்போம். என் 'சகோதரர்கள் ' இருவரையும் சேர்த்துச் சொல்கிறேன். சில ஞாயிறுகளில் மூத்தவர் 'டேக்கா' கொடுத்துவிட்டு அவரது தோஸ்த்துகளுடன் 'சதுரங்கம்' விளையாடப் போய்விடுவார். நான் என் தம்பியுடன் தட்டாமல் கலந்து கொள்வேன்.  என் தம்பி... 


' இன்னும் கொஞ்ச நேரம் பாடினாத் தான் என்ன? 'இன்னும்
  நான் தூங்கணும்'
         - என்பது போல அமர்ந்திருப்பான். 

       "சந்தோசம் பொங்குது.... 
சந்தோசம் பொங்குது...." 

'காகிதப் பூக்கள்' நிறைந்த அந்த வீடு மனம் முழுக்க சந்தோசங்களை அள்ளித் தெளித்திருக்கிறது. 
 
காகிதப் பூக்களின் வீட்டைக் கடக்கும் போதெல்லாம் தரையில்  ஒரு' யோகி 'போல அமர்ந்திருக்கும் வெள்ளைக் காகிதப் பூக்களை கைகளில் பற்றி சொக்காயின் இடப்புற பையில் வைத்துக் கொள்வேன். 


சிகப்பு நிற காகிதப் பூவை அதன் சிறிய காம்புப் பகுதியை விரல்களில் வைத்து சுற்றிச் சுற்றி விளையாடிய படி நடந்த ஞாபகங்கள் காகிதப் பூக்களை பற்றி யோசிக்க ஆரம்பித்தால்  சட்டென "தோ... வந்துட்டேன்' என மனசுக்குள் நடைபயில ஆரம்பித்துவிடும்.

 வாடாத' காகிதப் பூக்களை' இதயத்தின் அருகாமையில் வைத்துக் கொண்டதினால் அதன் நினைவுகளுக்கு மட்டும் வாசம் உண்டு. 

காகிதப் பூக்களின் நடை தொடரும். 


மனப் பறவை மனம் கொத்தும்! 
பறக்கும்... 


இருதய். ஆ


 









Wednesday, March 2, 2022

மனம் திரும்புதே...

Fly...
          "மனம் கொத்தும் பறவை" 

"மனிதனே நீ  மண்ணாக இருக்கின்றாய்... 
மண்ணுக்குத் திரும்புவாய்... 
மறவாதே. மறவாதே... 
மனிதனே...... "
 கிறிஸ்தவர்களின் தவக் கால தொடக்க நாள் பாடல் இது. கேட்கும் நிமிடங்களில் மனம் புதியதொரு பாதைக்குத் தன்னைத் தயார் படுத்தும். 
           "தவத்தின் காலம்... 
          தாழ்ச்சியின் தொடக்கம்"... 
நல்லன தேடலில் 'நான்' 
தொலைந்து.... 
'நாம்' என்பதை உணரும் களம்...
சமாதானத்தில் சமன்படும்
                                         மனம்! "
     
  "பழையன கழிதலும்... 
           புதியன புகுதலும்..." 
இக் கணங்களில் நிகழும். நிகழ்தல் ஒன்றும் புதிதல்ல. ஒவ்வொரு வருடமும் இச்சூழலை மனம் எதிர்கொள்ளும். 

 'நாற்பது நாட்கள்' தவமாய் தவமிருத்தல் அவசியம் என
' திரு அவை' அறிவுறுத்தும்.

 தவத்திற்கான தேடலின் 
நுழைவு வாயில்களை மனதின் எல்லாத் திசைகளிலும் ' தவக் காலம்' திறந்து  வைக்கும். 
திறக்கப்பட்ட வாசல்கள் ஒன்றும் விசாலமான வழிகள் அல்ல. 


தவக் கால வாயில்களின் வழி  பிரவேசித்து பயணப்படலுக்கு மனதை நிறையப் பழக்க வேண்டும். 

"தவம்" எல்லா மார்க்கங்களிலும் உண்டு. இதற்கென ஒரு காலத்தையும் மார்க்கங்கள் அமைத்துக் கொடுக்கும்.

"விதைக்க ஒரு காலம்... 
அறுக்க ஒரு காலம்... 
அறுவடையானவைகளை களஞ்சியங்களில் சேர்க்க ஒரு காலம்" ... 
      - என எல்லாவற்றுக்கும் ஏற்ற வேளைகள் உண்டு. 

 'தபசின் காலம்' வீரியமுள்ள மரபுசார் விதை மணிகளை மனசுக்குள் விதைக்கும். விதைக்கப்பட்ட விதைகள் கனிகள் தருவதும், தராமல் தரிசாய்ப் போவதும் அவரவர் மனம் சார்ந்தது. வேளாணின் கடைசி நம்பிக்கை போல மிகவும் உயிர்ப்பானது இக் காலம்.
' நம்பிக்கை பொய்க்காமல் காத்துக் கொள்ளுதலில் கவனமாய் நடந்து கொள்' 
         மனம் தினம் பாடம் நடத்தும். 
தினப்பாடம் கற்கும் தவக் காலத்தின் தொடக்க நாளே... 


 கிறிஸ்தவர்களின்
          'திருநீற்றுப் புதன்' . 


தேவாலயத்திற்குள் நுழைகையில் காண்கிற முகங்களில்  தன்னைத் தேடி அலையும் சாயல் பூமத்திய ரேகையாக விரியும். 

 கடந்த வருட குருத்து ஞாயிறன்று  செபவேளைகள் முடிந்து கைவரப் பெற்ற 'குருத்தோலைகளை' 
கிறிஸ்தவர்கள் சிலுவைமரமாகச் செய்து தத்தம் இல்லங்களில்  கண்கள் காணும்படியாக நிறுத்தி வைப்பார்கள். 


கண்கள் சிலுவை அடையாளத்தைகாண்கையில்

"அவனவன் தன் சிலுவைகளைச் சுமந்து கொண்டு என்னைப் பின் தொடரட்டும்" 
       - என்ற 
'வேதாகம திருவசனங்கள்' நினைவுகளில் நிழலாடும்.



 நிஜத்தில் ஏற்கும் சிலுவைகளைச் சுமக்க 'பெலன்' தரும். 


"சுய பெலத்தினாலும், சுய பராக்கிராமத்தினாலும் அல்ல. தேவனுடைய கிருபையினால் எல்லாம் ஆகும்... "
     மனசுக்குள் தைரியம் துளிர்க்கும். 

 தவக் கால 'திருநீற்றுப் புதன்' தொடக்க நாளுக்கு முன்  வீடுகளில் வைத்திருந்த 'குருத்தோலையின் சிலுவைகள்' தேவாலயத்தில் ஒப்படைக்கப்பட்டு எரியிட்டு
 சாம்பலாக்கப்படும். 


சிலுவை மரத்தின் சாம்பல்கள் மந்தரிக்கப்பட்டு 'திருநீற்றுப் புதனன்று' செபவேளையின் மத்தியில் பங்குபெறும் மக்களின் நெற்றியில்' சிலுவை அடையாளமாக' வரையப்படும். 

"மனிதனே நீ  மண்ணாக இருக்கின்றாய்...
மண்ணுக்குத் திரும்புவாய்... 
மறவாதே. மறவாதே... 
மனிதனே"... 
     பாடல் இசைவாய் காதுகளுக்குள் நுழைந்து இதயத்தின் தாழ் திறக்கும். 


     "மனத்தாழ்ச்சியே  தவத்தின் தொடக்கம்"... 
--என அறிவுறுத்தும். மண்ணுக்குச் சொந்தமான உடலை உள் இருக்கும் மனம் பக்குவப்படுத்தும். 

      புதிய ஆண்டுக்குள் நுழைகையில் மனம் ஏற்கும் உறுதிமொழிகளைப் போலவே தவக் காலத் தொடக்க நாளிலும் புதிய பயணத்திற்கான உறுதிமொழிகளை மனம் உரக்கச் சொல்லும். 

மனதின் குரலை... 
கேட்கத் திறனுடைய செவிகள் கேட்கும். கேளாத செவிகளையும் 'கேட்டல் நன்று' என தவத்தின் காலம் உணர வைக்கும். 

'திருநீற்றுப் புதன்' திருப்பலி முடிவில் எல்லோர் கைகளிலும் ஒரு சேமிப்புக் குடுவையும், தபசின் அடையாளமாக ஒரு துணிப் பையும் கை சேரும். தவத்தின் ஒவ்வொரு நாள் விடியலிலும் வீட்டில் தயாராகும் உணவிற்கான அரிசியில் ஒரு பங்கு தேவாலயத்தில் பெற்றுவந்த தபசின் பை தனில்   இடப்படும். 


 ஒவ்வொரு நாளிலும் தன் வழக்கமான தேவைகளைச் சுருக்கிச் சேர்த்த தொகைகள்  சேமிப்புக் குடுவைக்குள் இடப்படும். 


ஆடம்பரம், அலட்டல்கள், ஒப்பனைகளற்ற வெளிகளை மனம் காண எத்தனிக்கும். வெளி வேடம் மறுக்கும். 


மனமது புதிய பயணத்திற்குள் இடுக்கமான தவக் கால வாயில்களுக்குள் ஒவ்வொரு நாளும் நுழைந்து வெளியேறும். நன்மைக்கான வழிகள் இடுக்கம் என்பதை அறியும். 

தீமைக்கு ஏதுவான வழிகள் விசாலமாக விரிந்து
 'வா... வந்து நுழைந்து கொள் '
என கைகள் விரித்து நம் முன் நிற்கும். இக்காலம் மட்டும் ஏனோ! மனம்  விழிப்பாய் கடக்கும்.
 தவத்தின் சாரமே தீமைகள் கடக்க பலகைகள் அமைக்கும். கைகள் பலகைகளின் சாரம் பற்றும். முன்னேறும். 

 'நாற்பது நாட்கள்' நன்மைக்கும் தீமைக்குமான  இந்த யுத்தம் நித்தம் நடக்கும்.

 யுத்தத்தில் சில நாள் விழலாம். வீழ்தல் இயல்பு. விழுந்து எழுதலே தவத்தின் சார்பு. 

'தேவன் கிறிஸ்து' சிலுவையைச் சுமக்கையில் மூன்று முறை விழுந்து எழுந்து கல்வாரிப் பயணத்தை முடித்தார். 

விழுந்தாலும் சிலுவைகளைச் சுமந்து  எழ தேவன் கிறிஸ்துவின் 'பெலனே' மனதிற்கு பலமாகும். தீமைகள் கடந்து நன்மைக்கு ஏதுவான பாலத்திற்குள் நுழைய சிலுவை மரம் பாலம் அமைக்கும். 

"என் பெலத்தினாலும் பராக்கிராமத்தினாலும் அல்ல. தேவனுடைய கிருபையினால் எல்லாம் ஆகும்... "

       தவக் காலப் பயணம் தொடங்கிவிட்டது. பயணத்தில் மனமதை வீழ்த்த துன்மார்க்கங்கள் மார்தட்டிக் காத்து நிற்கிறது. நிற்கட்டும். தவத்தின் பாதைகளில் முட்கள்இருக்கலாம். இருக்கட்டும்.

 'தேவன் கிறிஸ்து' முட்களையே  மணிமுடியாக ஏற்றார். தவம் எல்லா முட்களையும் ஏற்கும். கடக்கும். கடக்க மனமதை பழக்கும். 

எல்லா தவக் கால தொடக்க நாளைப் போலவே இப்பொழுதும் மனம் தயாராகிறது. ஒரு விஷயம் மனதை முள்ளாக தைக்கிறது.

 கடந்த தவத்தில் ஏற்ற புதிய மனத்தை தவம் முடிந்ததும்  ஏன்  இழந்தாய்???
        "கவலை கொள்ளாதே. மீண்டும் எழுந்து நட. மனம் திரும்பு"... 


       - தேவன் 'கிறிஸ்துவின்' குரல் மனசுக்குள் புதிய நம்பிக்கைகளை விதைக்கிறது. 

    " மனம் திரும்பும். எல்லாம் கடக்கும்" .... 


மனப் பறவை மனம் கொத்தும்! 
பறக்கும்..


                    இருதய். ஆ

Friday, February 25, 2022

பூக்களின் பாடசாலையில் வெள்ளை ரோசா ...

Fly...


            மனம் கொத்தும் பறவை 

காற்று அலம்பிவிட்ட வானத்தில் நீலநிறமும், வெண்மையும் மாறிமாறி 'ஸ்விட்ச்' தட்ட மனம் ஆகாசத்தில் வெண் பஞ்சுக்
கூட்டம் போல பறக்க ஆரம்பித்தது. 

வானம் எப்பொழுதும் போதி மரம் தான். 'என்ன...! போதிமரத்தடியில் ஆசுவாசமாக அமரத்தான் முடிவதில்லை' - என மனம் முணுமுணுக்கும். மனதுடன் ஒர் ஒப்பந்தமிட்டு இரவில் போதிமரத்தடியில் அமர்ந்து விடுவேன். 
"நான்... 
போதி மரம்... 
நிலா" ...

 'டிசைன் டிசைனாக' படம் காட்டும் மேகக் கூட்டங்கள். ஒவ்வொன்றுக்குள்ளும் ஒரு சித்திரம் திரை விலக்கும். 

       நேரம் கடக்கும். சமீபமாக நான் விரும்பிக் கேட்கும் பாடல்
' 'Hallamithi Habibo' என்று நீங்கள் எண்ணியிருந்தால்...
'ஸப்பாடி... முடியல. 'தாறுமாறு தக்காளி சோறாக' இப்பாடலை பரிமாறிக் கொண்டே இருக்கிறார்கள். ஒரு வயதான பாட்டி அவரது பேரனுடன் (' யூ டியூபரோ? ) இப்பாடலுக்கு ஆடியதைக் கண்டவுடன் ' கண்டா வரச் சொல்லுங்க. பாட்டிய கையோட கூட்டி வாங்கனு' சொல்லத் தோன்றுகிறது. 
'தாறு மாறு தக்காளிச் சோறு தான் போங்க' . சரி என் விசயத்துக்கு வருகிறேன்.

அடிக்கடி கேட்கும் பாடல்... 
     ' உனை மெது மெதுவாய் ஒரு              பயணம் போல... 
                தொடங்கிடவா' ... 
' salmon-3d'-ல் 'sid sriram' பாடிய பாடல். கேட்டுப் பாருங்கள். 
மெதுமெதுவாக நான் 'உலாப் பூக்கள்' பயணத்திற்குள் உங்களுடன்  நுழைகிறேன். 

தேநீர் தருணம்...


'ரோசா' இந்தப் பதிவிலும் தொடர்கிறது. ரோசா ராணி ஆயிற்றே!...
           ரோசா முட்களுக்கு மத்தியில் தான் தன் மொட்டவிழ்க்கிறது. ஆனால் ?...
 தாவரவியல் கோட்பாடுகள் மறுக்கிறது. 
'ரோசாவை சூழும் முட்கள் முட்களல்ல. அவை திருத்தி வளரும் கிளைகள், தண்டுப் பகுதிகள்' என்கிறது தாவரவியல். 

அடப்போங்க சாரே...

     "முட்களுக்கு மத்தியில் பூக்கும் ரோசா!
கன்னித்தீவுல வில்லன் மூசா...
கவலை வேணாம்... 
நான் உன் ராசா...
உனக்காகத் தூக்குவேன் கூசா!...
ரோசான்னா லேசா? 
பூக்கும் என்றும்' மாஸா'! " 
    என்றெல்லாம் பாட வேண்டியிருக்கிறது. 'இப்ப போய்க்கிட்டு தண்டு. திருத்தப்பட்ட கிளைன்னு சொல்லிக்கிட்டு' செல்லாது. உங்கள் பாடமெல்லாம் அறுந்த பட்டமாகப் பறந்து போகும். 

 அப்புறம், 

ரோசாவே... 
    முள் உனக்கு க்ரீடமா?         வேலியா? "
என்றெல்லாம் தத்துவ விசாரங்களில் பெருக வேண்டியிருக்கிறது.

 அதனால்
' உங்க பேச்சு கா'... செல்லாது. செல்லாது. 

ரோசாவுக்கு இருப்பது முள்ளே. முள்ளே. முள்ளே. உள்ளே மனம் தீர்ப்புச் சொல்லிவிட்டது. 

      " ரோசாவுக்கு முட்கள் 
வேலியோ! 
          இருக்கலாம். 
'வேலி தாண்டாமல் ரசி' 
பாடம் சொல்கிறாள். 
மலர்களின் அரசி. 



வேலி தாண்டாத ரசனை பூக்களின் பாடசாலையில் மட்டுமல்ல பூவுலகிலும் அதுவே வேதாந்தம். 

மலர்களின் அரசி பற்றிய நினைவுகள்,  அனுபவங்கள் அத்தனையையும் ஒரே ஒரு பூக் கூடைக்குள் அள்ளிவிட முடியாது.


 உலகெங்கும் பூக்கும் ரோசாக்களில் நூறு வகைகளும், நிறைய வண்ணங்களும் இருப்பதாக தாவரவியல் 'டக்ளஸண்ணே' சொல்கிறார். அப்படியிருக்கையில் இரண்டு பதிவாக ரோசா உலா வருவதில் மகிழ்ச்சி தான். 
இப் பதிவில் சிகப்பு ரோசாவை வெயிட்டிங் லிஸ்ட்டில் வைத்துவிட்டு 'வெள்ளை ரோசா' தனி ஆவர்த்தனம் செய்கிறார்.

        
தனித்த அழகில் 'வெள்ளை ரோசா' !


 ரோசாக்களில் சிகப்பு ரோசா காதலில் கெட்டிக்காரி. சாட்சியின் காட்சிகளாக சிகப்பு ரோசாக்களை கூந்தலில் செருகி நடைபோடும் பாவையர்களை அதிகம் காணலாம். அதிலும் பிற பூக்களை விட ரோசாக்கள் பெருவாரியாக பூவையரின் காதோரமாகவே தன் இருப்பைத் தக்கவைத்துக் கொள்கிறது. 

ஏனோ?..... 


'ரோசா' பூவையரின் காதோரமாக ரகசியம் பேசுமோ! 
இருக்கலாம். அதனால் தானோ! ஏனோ! காளையர்கள் காதலியிடம் காதல் சேதி உரைக்க ரோசாவைக் கரம் பிடிக்கிறார்கள். 
'காதோரம் தான் நான் பேசுவேன்' இது ரோசாக்களின் குரலாக இருக்கலாம். 

"வெள்ளை ரோசா" மனசுக்கு நெருக்கமாக இருப்பதற்கு என் சிறு பிராய நினைவுகளே காரணம். கதையல்ல நிசம். சில பல நினைவுகள் எப்படி எனக்குள் வேர் பிடித்தே கிடக்கிறது. கிளை பரப்புகிறது! கேள்விகள் கேட்டுக் கொள்கிறேன். 
மனம் ஒரு' விசித்திரப் பறவை' . நெருக்கமான நினைவுகளை  அப்படியே மனக் கூட்டுக்குள் வைத்து அடை காக்கும். 

அன்று... 

மதுரை 'காஜிமார் தெருவில்' மாடிவீட்டில் குடியிருந்த காலம். எத்தனையோ நினைவுகள் அலையடித்தாலும் இன்றும் மனதை நனைத்தபடியே இருக்கும் ஒர் அலை அற்புதமானது. என் சகோதர்களுக்கு நினைவில் உள்ளதா? தெரியவில்லை. 

நான் மூன்றாவது படித்துக் கொண்டிருந்தேன். 
 'சகாயமாதா நடுநிலைப்பள்ளி' 'வெள்ளை ரோசாவை' எனக்கு அறிமுகப்படுத்தியது. 


"வெள்ளை ரோசாவும், லக்ஷ்மி டீச்சரும்" ... 

            என் அம்மாவை விட  வயது குறைந்தவர். ஆனாலும் அம்மாவின் நெருங்கிய தோழியானார் 'லக்ஷ்மி டீச்சர்'. அம்மாவின் வகுப்பறைக்கும் 'லக்ஷ்மி டீச்சரின்' வகுப்பறைக்கும் ஊடாக ஒரு நடைபாதை இருக்கும். நான் என் அம்மாவிடம் '3c'வகுப்பில் படித்தபோது (?) 'லக்ஷ்மி டீச்சரை' தினம் காணும் சூழல் அமைந்தது. 

'இருக்காங்க. ஆனா இல்ல' - என்கிற வடிவில் தான் இருப்பார் 'லக்ஷ்மி டீச்சர்' . 'மலேயா சேலை' கட்டிவருவார். அப்பொழுது 'மலேயா சீலைகள்' கொஞ்சம் 'ஒசத்தி'. இப்பொழுது நினைத்தாலும் 'லக்ஷ்மி டீச்சர்' குறித்த நினைவுகள் மறக்காமல் ஒளிப்படமாக ஞாபகத்தில் ஓடுகிறது. 

காரணம்... 

'ஒற்றை வெள்ளை ரோசா'... 

'லக்ஷ்மி டீச்சரின்' காதோரம் மென்மை பூத்துச் சிரிக்கும் வெள்ளை ரோசா . ஒற்றை ரோசாவைக்  தான் காதோரம் கூந்தலில் செருகியிருப்பார். உடன்  அடர் பச்சையில் சில
இலைகள் ஒட்டிக்கொண்டிருக்கும்.
அதிர்ந்து பேசிக் கண்டதில்லை. சத்தமிட்டுச் சிரித்துப் பார்த்ததில்லை. எப்பொழுதும் புன்முறுவலோடு இருப்பார். ஒரு மெளனம் அவரது கூந்தலில்  அமர்ந்திருக்கும் 
 'வெள்ளை ரோசாப் பூ' போல புன்முறுவலுக்குள் உறைந்திருக்கும். சிகப்பு ரோசா வைத்து வந்ததாக என் நினைவில் இல்லை. வெள்ளை ரோசாவை ஏன் தேர்ந்து கொண்டார்? ஒற்றை ரோசாவாக இல்லாமல் இன்னும் ஒரு ரோசாவைச் சேர்த்து சூடியிருக்கலாமே? இப்பொழுது கேள்விகள் முளைக்கிறது. பதில் ஒற்றை வெள்ளை ரோசாவுக்குத் தெரிந்திருக்கலாம். 


பூக்குடை தான் விரிப்பார். ஆனால் மற்ற வண்ணப் பூக்களைச் சூடிக் கண்டதில்லை. இப்பொழுதேனும் வண்ணப் பூக்கள் சூடுவாரா? சத்தமிட்டுச் சிரிக்கும் வழக்கிற்கு வந்திருப்பாரா? 

திருமணம் முடிந்து பிள்ளைகள் இருக்கலாம். கணவர் அதிர்ந்து பேசுபவராக அமைந்திருக்கக் கூடாது. என் அம்மாவிடம் கேட்டால் 'லக்ஷ்மி டீச்சர்' பற்றிய ஏதேனும் தகவல்களை அறியலாம். ஆனால், நான் கேட்கப் போவதில்லை. 'லக்ஷ்மி டீச்சரின்' ஞாபகங்கள் புதிய வடிவங்களுக்குள் பிரவேசிக்க என் 'மனப் பறவை' அனுமதிக்கவில்லை. 



ஒற்றை வெள்ளை ரோசா நினைவுகள் என்றும் இளமையாகவே இருக்கட்டும். 

ரோசாக்களின் வண்ணங்கள் எதுவாயினும் மனசுக்குள் படரும் எண்ணம் ஒன்று தான். 
அது அன்போ! காதலோ! எதுவாயினும் இருக்கலாம். 
ரோசாவின் மீதான அன்பும், காதலும் தீர்ந்து போகாத பேச்சுக்கள் போல என்றைக்கும் தொடர்ந்திருக்கும். 

 சிறு பிராயத்தில் என் அம்மாவும், இப்பொழுது என் மனையாளும் ஒரு விசயத்தில் ஒன்றுபட்டிருத்தலை அநேக முறை கண்டிருக்கிறேன். சில நாட்களுக்கு முன் கூட கண்டேன். 

கண்ட ஒற்றுமை

  இருவரும் 'ரோசாப் பூவை' குப்பையில் இட்டுக் கண்டதில்லை. 
என் கண்கள் குப்பையில் கிடக்கும் ரோசாவைக் கண்டதே இல்லை. இதே போன்ற அனுபவங்களை நீங்களும் கடந்திருக்கலாம். 
நான் இப்பொழுது பகிர்ந்திருக்கும் ரோசாவின் புகைப்படம் மூன்று நாட்கள் வரை பொறுத்திருந்து நான் எடுத்தது. 


காய்ந்த பின்னும் ஒய்யாரமாக அமர்ந்திருந்தது. "சிகப்பு ரோசா"

காய்ந்து போன ரோசாவின் இதழ்களில் பாவையரின்
ரோசா மீதான காதல் காய்வதே இல்லை. 
 
காய்ந்து போன ரோசா
இப்பொழுது அங்கில்லை. எங்கே சென்றது. ஆராயவில்லை. ஆராய்ந்து தீர்க்க முற்பட்டால் பூக்களை ரசிக்க முடியாது. பூக்களின் தேர்வுக்கும் மனதின் ஆளுமைக்கும் நிறைய சம்பந்தங்கள் இருப்பதாகவே மனம் சொல்கிறது. 

பூக்கள் என்ன சொல்கிறது?.... 

 எல்லாவற்றையும்  ஆராயாமல் கடத்தலே வாழ்க்கை பூக் காடாக  இருப்பதற்கான சாத்தியங்கள்.

 சத்தியமாக கொஞ்சம் கடினம் தான். 'ஆராய்ந்து அறிதலே அறிவு'. கற்றலில் அறிந்தது. கல்லாமலேயே அறியும் அறிவு ஒன்று உண்டு. 

 "எல்லாவற்றையும் ஆராயாதே" . பூக்களின் பாடசாலையில்... 
இதுவே வேதம். 

      "ஆலை இல்லா ஊரில்            இலுப்பைப் பூ சர்க்கரை!" - 
                                - என்பது போல கல்லூரிக் காலத்தில் எங்கள் வீட்டுத் தோட்டத்தில் தரையெங்கும் வாசனையற்ற வெவ்வேறு வண்ணங்கள் நிறைந்த 'தொட்டி ரோசாக்கள்' (Table Roses) கடை விரித்திருக்கும். 


இந்த ரோசாக்களுக்கு முட்கள் இல்லை. ஏன்? 
"படவா ராஸ்கோலு... ஆராயாதே"-
என்கிறாள் 'மனப் பறவை' .

மனப் பறவை மனம் கொத்தும்!
பறக்கும்... 


இருதய். ஆ
 
   
 
   
     


     
            









Monday, February 14, 2022

உலாப் பூக்களில் 'ரோசா'...

Fly...


இரண்டு மணி நேரத் தாமதத்திற்கு மன்னிப்(பு) பூக்கள்... 
'7pm எனப் பகிர்ந்து 9pm' ஆகிவிட்டது. 

தொடர்ந்திடுங்கள்...
'வரவேற் பூக்களுடன்' ..... 

"மனம் கொத்தும் பறவை" 

    "பேரம் பேசி... 
அளவினும் கூட்டி அரிந்து... 
  கட்டுப்படி விலையில் கபடி ஆடி 
கைப்பிடித்த பூவை... அவ்விடத்திலேயே நின்று கொண்டு 'கூந்தற் ஊக்கி'யை (hair pin ) பற்களில் கடித்து இழுத்து.... 
பின்னர், லாவகமாக பிண்ணிய கூந்தலில் கண்ணாடி பார்க்காமல் முன்நோக்கி கண்களை இடம் வலம் நகர்த்தி"... 
    முடிவாக   ஒரு வழியாக சரியான இடத்தில் பூவை மையம் கொள்ள வைப்பாள் ஒரு பூவை . நிறைய பாவையர்கள் இக்கலை அறிவார்கள். 


          மை இட்ட கண்கள்... 
     'சரிடியம்மா. கரெக்டா வச்சிட்ட!' 
         - எனச் சொல்லாமல் சொல்வது போல கருவிழி மையம் கொண்டு பச்சைக் கொடி காட்டும். காணும் கண்களுக்குள் "பூங்கொடித்  திருவிழா" நடந்து முடியும். 

பூக்கடைகளில் ... 
      அன்றைய நாட்களில் (80-90 களில்)  கண்ட இக்காட்சிகளை நினைத்தால் இப்பொழுதும்... அட! எப்பொழுதும் நெஞ்சை அள்ளும்! 

"மையம் கொண்டது பூவா? பூவையா? 
 காதோடு சொல்லுங்கள். இதயத்திற்கு கேட்கும்" . 

தேநீர் தருணம்... 

Have your cup of 'tea' ... 


"பூவும்... பூவையும்!" ... 

ஆண்களின் தேசத்தில் பூக்களுக்கு விலையே இல்லை. பூக்களிடம் பேரமும் இல்லை. 
ஏன்?...! 

"பெண் இல்லாத ஊரிலே அடி ஆண் பூ கேட்தில்லை... 
உன் புடவை முந்தானை சாய்ந்ததில்...
இந்த பூமி பூ பூத்தது!" ... 
       என்ற பாடல் வரிகள் நினைவுக் கதவைத் தட்டுகிறது. 

மனம் தராசுத் தட்டு உயர்த்துகிறது.
              "ஒரு தட்டில் பூ... 
               மறு தட்டில் அவள்"...
'அட... அடடடா... அட... அடடடடா...!'
அதிசயம் கணங்களில்....              கண்களில்  நிகழும்!
'பூவும், பூவையும்' சமன்படும்!


தராசின் மையத்தில் நின்ற 
நடு முள் இதயத்துக்குள்
நொடி முள்ளாகி நாடி பிடித்து ஓடும். 

பூக்கள் அவளுக்குப் பிடிக்கும்... 
அவளை  பூக்களுக்குப் பிடிக்கும். 
காளையர்களுக்கு பூவோடு சேர்ந்த பூவையரைப் பிடிக்கும். 

ஆண்களின் தேசத்தில் பூக்களிடம் பேரம் எப்பொழுதும் இல்லை.
        'பூவையர் அறிவீரோ?' 

       பூக்கடையில் பேரம் பேசி பூ வாங்கும் ஆண்களை நான் கண்டதே இல்லை. கண்டால் சொல்லுங்கள். 

'பூக்களுக்குள் பேரங்கள் நடக்கலாம். பூக்களோடு பேரம் நடக்கலாமா?' 

பூக்களை ரசிக்கவும் நேசிக்கவும் கற்றுக்கொண்டால் 
'இளமை' என்றும் 'இலவசம்' ...! 
 

'விலையற்ற பூக்கள் அழகு! 
எந்நிலை உற்றாலும்' பூவையர்' அழகு!' 

"இருக்கின்றாள் என்பதே எனக்கின்பம்..." - என்றார் பாவேந்தர். 'பாரதிதாசன்'. 

பூக்களோடு  பூக்களாக பூவுலகில்  நிறைந்திருக்கும் 'பாவையர்களுக்கும்' பூக்களை கண்மலராகப் பாவிக்கும் 'காளையர்களுக்கும்' ... 

   மனம் கொத்தும் பறவையின்... 

'காதலர் தின'    
நல்வாழ்த்துக்கள்... 


" மனம் பிடித்த இதயம்
மனக் கூடு அடைந்தால்... 
நாளெல்லாம் கூடும்! 
" காதல் தினம்" ... 


ஆதி மனிதன் 'ஆதாம்' '' ஏவாளை' கண்ட முதல் நொடியே' காதல் தினம்' தன் தேதிக்கு சேதி சொல்லி அகரம் இட்டது. 

உலாப் பூக்களில்... 

பூக்களின்  சபையில்
பூக்களின் ராணிக்கு 
'சுயம்வரம்'... 


பூக்களின் ராணிக்கேற்ற 'ராசா' 
இன்னமும் அமைந்த பாடில்லை. 
'பூக்களின் ராணி'  இன்னமும்
கன்னியர்களின் ராணி தான். 

கன்னியர்களுக்குப் பிடித்த  பூவும்
இந்தப் 'பூவரசி' தான்! 

பூக்களின் அரசி... 

                        "ரோசா"!


எத்தனையோ பூக்கள் இருக்கையில் 'ரோசா' மட்டும் எப்படி பூக்களுக்கெல்லாம் ராணி ஆனது? 

வீட்டு ராணியிடம் கேட்டேன். அளித்த பதில்களில் இந்தக் 
'கூசாவிற்கு' திருப்தி இல்லை. 
உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள். 
எது எப்படியோ 'ரோசா' ... ரோசா தான். 

அத்தனை உணர்வுகளையும் தன் முகத்தே கடத்தும் ஒரு பூ 'ரோசா'... மட்டும் தான் என்பது என் எண்ணம். உங்கள் எண்ணமும் இந்த வண்ணம் ஆகலாம். 


"காதல்" 
"கைக்கிளை" 
"அன்பு" 
"கருணை" 
"இரக்கம்" 
"களிப்பு" 
"தனிமை" 
      என எல்லாத் தருணங்களிலும் மனசுக்குள் பூத்துப் பொருந்தும்
 'ரோசாப் பூ...' ! 

 "ரோசா" என்றுமே பூக்களின் வாக்கியத்தில் ஒர் 'ஆச்சரியக் குறி' தான். 

நான்கு கால் பாய்ச்சலாக மனசுக்குள் ஓடும் 'அதிசயப் பரி' என்று சொன்னாலும் தகும். 

ரோசாப் பூவின் முன் நின்றால் 
ஆண் முகமும் நகும்! 

ரோசாவைப் பற்றி எழுத யோசிக்கையில் 'மலர்களின் அரசியை' வருணிக்கவோ அவளின் வரலாறை எடுத்துரைக்கவோ தேவையான சொற்களை மனசுக்குள் கடத்த நினைக்கையில்... 
"அடேய். மக்குப் பையா. நான் கடல். என்னை ஒரு குடுவைக்குள் அடக்க முடியுமா! பேசாமல் எப்பவும் போல உனது நினைவுகளில் நான் எப்படி வாசம் பரப்பினேன் என்பதைச் சொல். அது போதும்." 
            - என்றாள் பூக்களின் ராணி. 'ஆகட்டும் அரசி. அப்படியே செய்கிறேன்'- என்றேன். 

 
'ரோசா' ஒவ்வொருவருக்கும் ஒரு சூழலில் அறிமுகம் ஆகியிருக்கும். 
எனக்கு 'ரோசா' முகம் முகமாக அறிமுகமான சூழலும் நினைவுகளும் வாடாமல் வதங்காமல்  சித்திரங்களாக வயசு மாறாமல்  அப்படியே மனசுக்குள் இருக்கின்றன. 

அன்று...

        எனது சிறு பிராயத்தில் எனது அம்மாவின்' கேசம்' தான் எனக்கு 'ரோசாவை' அறிமுகம் செய்தது. என்  அம்மா நடுநிலைப்பள்ளியில் ஆசிரியை. சனிக்கிழமைகளில் அரைநேரப் பள்ளி தான். நான் பெரும்பாலும் அரைவகுப்பிற்கு 'டேக்கா'(விடுப்பு) கொடுத்துவிடுவேன். 

அம்மா சனிக்கிழமைகளில் சீயக்காய் தூள் தேய்த்து தலைக்குக் குளிக்கும் வழக்கம் கொண்டவர். குளியல் முடித்து கேசத்தில் ஈரம் காயாமல் இருக்கும். துண்டை கேசத்தோடு சுருட்டிக் கட்டியிருப்பார். துண்டையும் மீறி சீயக்காய்த் தூள் வாசனையை  கேசம் நாசிக்குக் கடத்தும். 

மிகச்சரியாக சனிக்கிழமைகளில்  வழக்கமாக எங்கள் வீடு வருவாள் ஒரு 'பூக் காரிகை' . 


அவள் பெயர் ஞாபகத்தில் இல்லை. இன்றுவரை அவளின் பெயர் என்னைப் பொறுத்தமட்டில்... 
       " ரோசாப் பூ கூடைக் காரி" 
அப்படித்தான் மனக்கூடையில் அமர்ந்திருக்கிறாள் அந்த 'ரோசாப் பூ காரிகை'... 

      "டீச்சராக்கா... ரோசாப் பூ..."
என்ற குரல் வாசற் கதவு தட்டும். தட்டாமல் சட்டென 'வராந்தா' வந்து விடுவேன். 

'டீச்சரக்கா' என்ற விளிப்பிற்கு ஒரு காரணம் உண்டு. அதை பூக்காரிகையே அம்மாவிடம் சொல்வாள். 
'நீங்க பவுசா பதவிசா ரோசாவ எடுப்பீங்க. கோழி மாறி கெளற மாட்டீங்க. அதாங்கா... உங்களயே எடுக்க வுட்றுவேன்.' 
கோழி மாறிக் கிளறுபவர்களை கழுவிக் கழுவி ஊற்றுவாள் 'பூக்காரிகை' . 

ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. பூக்களை மதித்தால் மரியாதையும் மல்லுக்கட்டாமல் நம் முன் வந்து நிற்கும். பூக்களை மட்டுமல்ல. பூவையரையும் இவ்விஷயத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். 

'ரோசாக் காரிகை' தன் இடுப்பிலிருந்த வட்டமான நார்க்கூடையை வாசற் நிலைச் சுவற்றில் முட்டுக் கொடுத்து வைத்திருப்பாள். நான் கட்டமிட்ட வெள்ளை நிற தகரக் கதவின் சட்டக வழியே விழி விரிப்பேன். 

நார்க் கூடைக்குள்... 
பூக்களின் 'இளவரசிகள்' பச்சையும் மஞ்சளும் கலந்த  வண்ணத்தில்  இருக்கும் இலையால் தங்களின்  முகங்கள் மூடி மறைந்திருப்பார்கள். 


அம்மா வந்ததும் பூக்காரிகை இலைமறைவை நீக்க திரைமறைவை விலக்கிக் கொண்ட ராணிக்களாக அத்தனை இளவரசிகளும் முகம் முகமாக பூத்துச் சிரிப்பார்கள். கண்டவர்கள் சிலிர்ப்பார்கள்.

 பூக்கூடைக்குள் இருக்கும் இளவரசிகள்-   ' இளஞ்சிவப்பு,மங்கல கர மஞ்சள், அடர் சிவப்பு, வெளிறிய சிவப்பு'            - என வண்ணங்கள் குழைத்து  கண்களை நிறைப்பார்கள். 


அம்மா 'மங்கல கர மஞ்சள் நிறத்திலும், இளஞ் சிவப்பு நிறத்திலும் உள்ள ரோசாக்களை எடுப்பார்.  அடர் பச்சை நிறத்தில் உள்ள சில ரோசா இலைகளை காம்புடன் சேர்த்து அம்மாவிடம் தருவாள் 'ரோசாப் பூ காரிகை' .    முன்னமே ஈரப்பதத்துடன் தயார் படுத்தி வைத்திருந்த வெள்ளைத் துணி கொண்டு ரோசாக்களை அதன் இதழ்கள் அழுந்தாதவாறு பத்திரமாகப் போர்த்தி ஒரு சில்வர் தட்டில் வைப்பார் அம்மா. 


வெள்ளைத் துணி கொண்டு தங்களின் முகங்கள் மறைத்திருக்கும் இளவரசிகளின் மலர்ந்த முகங்களும்  சூடிக் கொண்ட எனது அம்மாவின் முகமும், ரோசாப் பூக்கள் செருகியிருந்த கேசமும் பார்க்க அத்தனை அழகாக இருக்கும். 

என்னைப் பொறுத்தமட்டில் 'பூவையர்' மீதான ரசனை அறிவது ஆண்களுக்கு  அன்னையிடம் இருந்தே ஆரம்பமாகிறது. பல தருணங்களில் இணையிடம் அன்னையின் வாசனையை அறிவார்கள். அல்லது தேடுவார்கள். அடியேனும் தான். 

'ரோசாப் பூ' வின் ஆரம்பப் பாடசாலை நினைவுகள் அடுத்து வரும் பதிவிலும் மீண்டும் பூக்கும். தொடரும். 

  நிசங்களால் நிறைந்த பூக்கள் அரசியின் கதைகள் இன்னும் இருக்கிறது. தொடர்ந்திருங்கள்... 

அன்பில் விண்ணப்பம்... 

'ரோசாப் பூக் காரிகை' -'பூக்களின் அரசி' பிடித்திருந்தால் பகிருங்கள்... 

நன்றிப் பூக்களுடன்... 


மனப்பறவை மனம் கொத்தும்! 
பறக்கும்... 


இருதய். ஆ
 
  











 

அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...