About Me

Friday, July 1, 2022

சித்திரப் பூவும்&பயிற்சிப் புத்தகப் புறாவும்...

Fly...



 "நினைவோ ஒரு பறவை... 

விரிக்கும் அதன்  சிறகை" ... 

      நான் எனது முகப் புத்தகத்தில் 'என் கதை' பக்கத்தில் அடிக்கடி பயன்படுத்தும் பாடல். பாடல் நிகழ்ந்த களத்தை ஒரு நாள் சுற்றி வருவேன் என நான் எண்ணியதில்லை. 


'தந்திர பூமி' தொலைக்காட்சித் தொடரில் உதவி இயக்குநராக சேர்ந்த காலம். இந்தத் தொடரின் படப்பிடிப்பு  ஒரு முறை "சிகப்பு ரோஜாக்கள்" திரைப்படம் எடுக்கப்பட்ட வீட்டில் அமைந்தது.  வீடு முழுக்க வெள்ளை நிறம். உட்புற இருக்கைகள்  சிவப்பு நிறத்தில் இருந்தன. படத்தில் பார்த்தபொழுது இருந்த  அதே உணர்வு அன்று வீட்டிற்குள் சுற்றி வந்த போதும் இருந்தது. 


வீட்டிற்குள் சுற்றிச் சுற்றி வந்தேன். 

"சிகப்பு ரோஜாக்கள் " படம் கண் முன்னே விரிந்தது. குறிப்பாக, ஒர் அறைக்குள் நுழைந்தவுடன் என் நண்பன் 'ஜஸ்ட்டின்' 

" டேய்.. மாப்ள... இந்த ரூம்ல தான்டா அந்தப் பாட்ட எடுத்திருக்காங்க"

என்றான். 


சட்டென எங்கள் இருவரையும் "கதாநாயகன் பறவை" கடந்து பறக்க... 


கதவுகள் திறந்தன. 

திரு. 'கமல்ஹாசன்'... 

'பெல் பாட்டம்' அணிந்த வெள்ளைச் சட்டை கறுப்புநிற கால்சராயுடன்..




"ம்..... ம்.... ம்.... 

ப... ப... ப... ப"... 

-'கமிங்' செய்தபடி .... 

"நினைவோ ஒரு பறவை... 

      விரிக்கும் அதன் சிறகை...

        பறக்கும்...

      அது கலக்கும் தன்  உறவை..." 

என கால்களை உயரத் தூக்கித் தூக்கி 'ஸ்லோமோசனில்' உள் நுழைந்தார். 


இவ்விதம் தான்" சித்திரப் பூ செம்பருத்தி" பதிவின் இரண்டாம் பகுதியில் ஒரு பயிற்சி ஏட்டுப் பறவை என் மனவெளியின் கதவுகளைத் திறந்து பறந்து வந்தது. இந்தப் பறவையின் கதையைத் தான் இப்பதிவில் 

பகிரப் போகிறேன். 


நினைவுகள் அலாதியானது. 


நினைவுகள் சில சமயம் மீன்களாக  நீந்தும்.

சில சமயம் பறவைகளாகி

சிறகடித்துப் பறக்கும். 

 

சில இடங்கள் சில நினைவுகளை நமக்குள் செதுக்கும். மனசுக்குள் உறையும். 


"நினைவுப் பறவை" எனது பள்ளிப் பருவ நாட்களுக்குள் இப்பொழுது பறக்கிறது…


சித்திரப் பூ செம்பருத்தியின் இரண்டாம் பதிவு இது.




முதல் பதிவை வாசித்தவர்களுக்கு இரண்டாம் பதிவு விளங்கும். 






இரண்டாம் பதிவின் மையம் எனது 'அப்பா' தான். 


அப்பாவிற்கும் சித்திரப் பூவிற்கும் ஒரு  சம்பந்தமும் இல்லை. ஆனால், சித்திரப் பூவின் நினைவில் அப்பாவின் கதை இடம் பெற்றது தற்செயலானது அல்ல. எனக்கு செம்பருத்திப் பூவை அன்று வரையத் தெரியாது. ஆதலால் இறுதித் தேர்வில் வினாத் தாளின் 'சாய்ஸில்' சுருங்கிப் போனது செம்பருத்தி. பிறகு செம்பருத்தி மனசுக்குள் பூத்தது எப்பொழுது என்பதை பதிவின் முடிவில் சொல்லுகிறேன். 


தனியே தன்னந்தனியே ஜாலியாக பயணிக்கையில் எதிர்பாராமல் நாம் அறிந்த நபர் நம் முன் எதிர்ப்பட்டு நம் பயணத்தில் நம்மோடு இணைந்து கொள்வது 

அவ்வப்போது நிகழும். அதுபோல உலாப் பூக்களின் பதிவில் அப்பா குறித்த சில நினைவுகள் இணைந்து கொள்ள "செம்பருத்தி" காரணமாக அமைந்தது. 


எங்கள் வாழ்வின் பயணத்தில் எல்லாமுமாக இருந்த அப்பா தான் எனது கிறுக்கல்களுக்கு குருநாதர். 


'பர்மா' குச்சியால் அப்பா வரைந்த ஓவியங்களில் அதிகம் முகம் காட்டியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தான். அப்பா வரைந்து முடித்து சிலேட்டை என்னிடம் தருவார். வாங்கிப் பார்த்து யார் இவர்? வினா எழுப்புவேன். குறுகுறுப்பாகச் சிரித்து 'கணேசன்' என்பார். நான் சிவாஜி கணேசனா? என மீண்டும் கேள்வி எழுப்புவேன். சிரித்தபடி 'வகுப்புலயும் இப்புடி கேள்வி கேட்டா பிரமாதமா வருவ' என எழுந்து செல்வார்.  சிலேட்டில்  நடிகர் திலகம் சிரிப்பார். 


சிலேட்டில் வரைந்த அப்பாவிற்கு ஒரு சோதனை வந்தது. அதுவும் பதினோராம் வகுப்பு பயிற்சி ஏட்டின் வழியாக வந்தது அந்த சத்திய சோதனை. உருவாக்கித் தந்தது எனது தம்பி' சுகுமார்'. தனக்கு வந்த சத்திய சோதனையை மடை மாற்றி தந்தைக்குத் திருப்பிய பெருமை தம்பியையே சாரும். 


கதையல்ல நிசம்… 


தூயமரியன்னை மேல்நிலைப் பள்ளி… 


பகற்பொழுது… 


தம்பி சுகுமார், அறிவியல் பாட வேளை பாடாய்ப் படுத்தி முடித்த களைப்பில் அமர்ந்திருக்க… 


நண்பர்கள் கிறிஸ்டபரும், மார்ட்டினும் சுகுமார் அருகில் கைகளில் சீரக மிட்டாய்களுடன் வந்து அமர்கிறார்கள்.

 'சுகு சீரக மிட்டாய் சாப்பிடு. Practicals எப்பவும் difficults தான். சமாளிச்சிரலாம்' 

என தேற்றுகிறார்கள். சுகுமார் மனசுக்குள்ளேயே தலை ஆட்டுகிறான். 


  "practical note submission" சுகுமாரையும், நண்பர்களையும் 

'இன்று போய் நாளை வாருங்கள்' 

-என வீடடைய அனுப்புகிறது. பள்ளி முடிகிறது. 


Cut to 

 சுகுமார் வீடு…


மாலை ஆகாரங்கள் முடிகிறது. மேசை மீது பயிற்சி ஏட்டின் பக்கங்கள் காற்றில் படபடக்கின்றன. கூர் தீட்டப்பட்ட பென்சில்கள், தவறுகளை அழித்து அழித்து தன் வெள்ளை நிறம் இழந்து கரிய நிலையில் இருக்கிறது. இனிமேலும் முயல சுகுமார் தயார் இல்லை. 


அப்பா வந்தார். 


சுகுமார் முகத்தில் "Thousand lights" . 

    'அடச் சே. அப்பா வரைவார்ல. அப்பா டிராயிங் மாஸ்ட்டரா ஆக வேண்டியவரு.அப்பாவே சொல்லியிருக்காரு'...


"அப்பா"

-என அழைக்கும்

சுகுமாரின் அபயக் குரல் கேட்க எங்கள் அப்பா வந்தார். 


இங்கு வசனமின்றி காட்சிகளை மட்டும் கடத்துகிறேன். 


பயிற்சி ஏடு அப்பாவின் கை சேர்கிறது. கூர் தீட்டப்பட்ட பென்சில் முனை வழியே தந்தையின் வரை கலை திரை விலக்குகிறது. நிமிடங்கள் கரைகிறது. அழிப்பானுக்கு வேலையே இல்லை. ஓய்வெடுக்கிறது. சற்று நேரத்தில் பயிற்சி ஏட்டில் அறிவியல் பாட புறா? (கேள்விக் குறிக்கான பதில் அடுத்து வரும் வகுப்பறைக் காட்சியில் விளங்கும்) வந்திறங்கியது. 


அப்பா வரைந்ததைப் பார்த்து சுகுமார் மகிழ்ச்சியோடு "ஸப்பாடி தப்பிச்சிட்டோம்" என பயிற்சி ஏட்டை மூடி வைக்கிறான். 


மறுநாள்…


தூயமரியன்னை மேல்நிலைப் பள்ளி… 


வகுப்பறை


ஆசிரியர் மேசைமீது பயிற்சி ஏடுகள் ஒன்றின் மேல் ஒன்றாக அமர்ந்திருக்கின்றன. 

சுகுமாரைக் கண்ட நண்பர்கள் கிறிஸ்டபரும், மார்ட்டினும் அதிர்வுக்கு ஆட்படுகிறார்கள். 


என்ன??? 

Practical note - அ submit பண்ணிட்டியா? அந்தப் புறாவ வரைஞ்சு பாகம் குறிச்சிட்டியா? 

கேள்விகளுக்கு சுகுமார் புன்னகையைப் பதிலாகத் தந்தான். 


எப்புடிடா???? 

நண்பர்களின் கேள்வி. 


சுகுமார் பதில்… 

'எங்கப்பா வரைஞ்சு குடுத்தார்'. 

'டேய். எங்க நோட்டையும் எடுத்திட்டுப் போயி குடுத்திருக்கலாம்ல. ஏமாத்திட்டல்ல' 


'அங்க என்ன man சத்தம். Silent'  

-இடைக்குரலாக அறிவியல் ஆசிரியர். 

திரு.' சாந்தக் குமார்' என நினைக்கிறேன். நல்ல பெயர். சாந்தம் சர்வ சொரூபம். நிகழ இருப்பது வேறு. 


பயிற்சி ஏடுகளை ஒவ்வொன்றாக திருத்துகிறார். சுகுமாரின் பயிற்சி ஏடு திறக்கிறது. ஆசிரியரின் கண்களுக்குள் புறா பறக்கிறது. ஒரு நிமிடம் 'ஷாக்!' ஆனவர் பிறகு சுதாரித்து....



'யார் man இந்தப் புறாவ வரைஞ்சது?'

சாந்தம் மலை ஏறுகிறது. 


சுகுமார் 'it's me' என எழுந்து நிற்கிறான். இடம், வலம் அமர்ந்த கிறிஸ்டபர், மார்ட்டின் ஆசிரியரைப் பார்க்கிறார்கள். 



பயிற்சி ஏட்டில் இருந்த "புறா" அனைவருக்கும் தரிசனம் தந்துவிட்டு பயிற்சி ஏட்டோடு வாசலுக்குப் பறக்கிறது. 



சுகுமார் பயிற்சி ஏட்டின் புறாவைக் கைகளில் பொத்தி மறைத்து மூடி வைக்கிறான். 


நான் இப்பொழுது அந்தப் பயிற்சி ஏட்டுப் புறாவை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன். 



 அப்பா வரைந்த பயிற்சி ஏட்டுப் புறாவை  நான் முடிந்த வரை அப்படியே வரைந்திருக்கிறேன்


அப்பாவிற்கு புறா என்றதும் அவரது அழகியல் பார்வையில் என்ன தோன்றியதோ அதை வரைந்திருக்கிறார். ஆனால், சுகுமாருக்கு அறிவியல் விதிகளின் படி வரைய வேண்டிய புறா ஓவியம் எப்படி இருக்க வேண்டும் எனத் தெரியும். தெரிந்தபிறகு எப்படி அழகியல் புறாவை அறிவியல் ஏட்டில் பறக்க விட்டான்!? 

இன்றும் எனக்கு ஆச்சரியமாகவே இருக்கும். 


நண்பர்கள் கிறிஸ்டபரும், மார்ட்டினும் அன்று உணவு இடைவேளையில் இடைவேளை விடாது சுகுமாரை ஓட்டு… ஓட்டு என ஓட்டியிருக்கிறார்கள். 


நான் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அப்பாவைக் கலாய்ப்பேன். 


"அப்பா. ஆனாலும் உங்களுக்கு ரொம்ப தைரியம். பயிற்சி நோட்டுல கொப்புள்ள கிளையில் உட்கார்ந்த மாதிரி ஒரு புறாவ எப்படிப்பா வரைஞ்சு குடுத்தீங்க!? "


அப்பா சிரித்தபடி…

 'புறா வரையச் சொன்னான். வரைஞ்சேன். அவ்வளவு தான். பாகம் பிரிக்கிற மாதிரி வரையத் தெரியாது'-எனச் சிரிக்க

நான்

" "why blood. Same blood comedy" போல ரியாக்ஷன் கொடுப்பேன். 

இந்தப் பதிவு  தந்தை உயிரோடு இருந்தபோது வர வேண்டியது. சூழல்கள் சாத்தியப்படுத்தவில்லை. 


கடந்த "மே - 12" பயிற்சிப் புறாவை வரைந்த அப்பா தன் கூடு விட்டு சிறகு விரித்து பறந்தே போனார். 


சித்திரப் பூவைச் சாய்ஸில் விட்ட நான் பனிரெண்டாவது படித்த போது விடாது துரத்தி அடித்துப் பிடித்து மதுரை "சரஸ்வதி" தியேட்டர் வாசலில் செம்பருத்தி திரைப்படம் பார்க்க நிற்கிறேன். 


அப்பொழுது அறிவியல் பூ 'செம்பருத்தி' … 

"இதெப்படி இருக்கு?" 

என மனசுக்குள் கண் சிமிட்டியது. 


"அ" …. - அழகியல்

"ஆ" … -  ஆராய்ச்சி

           என வரிசைப்படுத்திக் கொள்ளலாமோ? 


மனப்பறவை மனம் கொத்தும்! 

பறக்கும்…




இருதய். ஆ 




Sunday, June 19, 2022

சொல்லித் தரும் வானம்...

Fly...


      மனம் கொத்தும் பறவை 


"வானம் எனக்கொரு போதிமரம்... 
நாளும் எனக்கது சேதி தரும்"        


           மதிப்பிற்குரிய 'கவிப் பேரரசு வைரமுத்து' அவர்களின் வரிகள் மனசுக்கு எப்பொழுதும் நெருக்கமாக இருக்கும். 

 வீட்டுக்குள் முளைத்த போதிமரமாக!... 
சொல்லித் தரும் வானமாக நீளும் உறவைக் கொண்டாட ஒரு தினம்!

" ஒரு நாள் போதுமா? இன்றொரு நாள் போதுமா? "
பாடத் தோன்றுகிறது. 

அன்னையின் வழியில் அன்னை மொழியில் 

நாம் அறிகிற

 உன்னதமான உறவு 'தந்தை'


அப்பான்னே சொல்றேன்.  அப்பான்னு சொல்றது தான் மனசுக்கு மிக நெருக்கமா இருக்கு.



அன்புடை 'அப்பாக்களுக்கு' … 


மரியாதை நிமித்தமாக…


'தந்தையர்' 

தின 

     நல்வாழ்த்துக்கள்…. 



 தன் பிள்ளைகளின் உயரத்தையே 

தன் உயரமாகவும் 

தன் உயர்வாகவும் எண்ணுகிறவர் 'தந்தை'


அன்பின் மொழி உணர்ந்தும்

அறிந்தும், அறியாமலும்

அகிலம் கடக்கும் 

உன்னத உறவு "அப்பா"... 

உறவுகளில் ஓர் அதிசயம்! 


அறிதலில் "அப்பா" 


' தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை'

உண்மை தான். 

என்னைப் பொறுத்தவரை

"தந்தை"

என்ற சொல்லே மந்திரம் தான். ஒப்புக்கொள்வீர்கள். 


குழந்தை தரை தவழுகையில் தன் உயரம் குறைப்பார். 

 குழந்தையோடு குழந்தையாகி 

தரை தவழ்வார்! 

             

இரு கைகளும் கால்களாகும். 

கைகளும் சேர்த்து

கால்களின் கணக்கு நான்காகும். 

முதுகில் அம்பாரி முளைக்கும்.

        தந்தை தன் குழந்தைக்காக

யானையாக உருமாறுவார்.



"யானை" எப்பொழுதுமே பிரமிப்பின் உச்சம். 

"அப்பா" உறவுகளில் உச்சம். 


ஒரு குழந்தை அறிகிற முதல் யானை தகப்பனோ! 

தந்தையின் முதுகில்

 யானை சவாரி போகாத குழந்தைகள் உண்டோ? 


 யானையாக… 

சமயத்தில் குதிரையாக மாறி

குழந்தையோடு தன் உலகத்தில் சுற்றி வருபவர் "அப்பா".



அப்பாவின்  விரல் பிடித்தோ, தோள்களில் அமர்ந்தோ குழந்தை செல்லும்

 'உலா'... 

வாழ்வில் என்றும் மறக்க இயலா

 இன்பச் சுற்றுலா… 


தன் பிள்ளைகளின் உயரத்தை தன் உயரமாகக் கொண்ட தந்தையின் கண் எதிரே பிள்ளைகள் உயர உயர "அப்பாக்கள்" ஏனோ தூரம் போய் விடுகிறார்கள். 


அப்பாக்களின் அகராதியில் 'அன்பு இலை மறை காயாக' ஒளிந்து கொள்கிறது. 


ஆரம்பத்துல நெருக்கமா இருக்க இருந்த  "அப்பா" என்கிற உறவ பின்னாளில் ஏனோ 'கொரோனா' காலத்து சமூக இடைவெளி மாதிரி கொஞ்சம் தள்ளிப் பார்த்து மனசுக்கு அருகாமை இல்லாம கடந்து போயிடுறோமோ? 


 மரியாதை காரணமா இருக்கலாம். இல்லைனா பய உணர்வு காரணமாக இருக்கலாம். 


எனக்கு என் அப்பா மேல பயம் இருந்ததே இல்ல. சின்ன வயசுல கொஞ்சம் இருந்துச்சு. அதுவும் மதிப்பெண்களின் அட்டையில் கையொப்பம் வாங்கும் பொழுது மட்டுமே பயம் இருந்தது. காரணம் லட்சணமாக மதிப்பெண்கள் பல் இளிக்கும். சிவப்புக் கம்பள விரிப்பில் தான் எனது மதிப்பெண்கள் அந்நாட்களில் அமர்ந்திருக்கும். அப்படி இருந்தும் கொஞ்சம் சடுகுடு ஆடி கையொப்பம் இட்டு 'என்னடா நீ?' என வருத்தப்படுவார் 'அப்பா' .


அப்புறம் நான் வளர வளர அப்பாவின் அருகாமையும் அன்பும் மனசுக்குள் இட்ட மருதாணியாக சிவந்தது. 


விரல்களோடு ஒட்டிப்பிடித்துக் கொண்ட 

மருதாணிச் சிவப்பாக

 அப்பாவின் நினைவுகள் மனசோடு ஒட்டிக்கிடக்கிறது. 

அழியாத கோலங்கள் ஒன்று இட முடியுமானால் அது நினைவுகளால் மட்டுமே இயலும். 


அப்பாவுக்கு அருகில உட்கார்ந்து நிறைய பேசியிருப்போம். 


அவரோட ஆசைகள கேட்டுருக்கமா? நான் கேட்டதே இல்ல. பெரும்பாலும் கேட்கிறதே இல்ல. 


அப்பாக்களும் தன்னோட ஆசைகள வீட்டுல இருக்கவங்ககிட்ட பெரும்பாலும் சொல்றதே இல்ல. 


பொதுவாவே ஆம்பள அழக்கூடாதுனு சொல்லுவாங்க. கேள்விப்பட்டுருப்போம். 


அப்பாக்கள் தன் சுமைகள, வலிகள வெளிய காட்டிக்க மாட்டாங்க. 


 விழிகளின் வாசல் தொடாத கண்ணீர தன் இதயத்துக்குள்ள தேக்கி வச்சுக்கிற தகப்பன்கள் தான் அதிகம். "கல்லுக்குள் ஈரம்னு" சொல்லலாம். 


ஒரு குழந்தை அறிகிற முதல் "யானை" அப்பா தான். திரும்பவும் சொல்லத் தோணுது.


 'கூறியது கூறல்' இலக்கணப்படி  குற்றமாக இருப்பினும் தலைக்கனம் இல்லா தந்தையருக்கு முன்னே இலக்கணம் எக்கணம் செல்லுபடியாகும். 


"யானை இருந்தாலும் ஆயிரம் பொன்! இறந்தாலும் ஆயிரம் பொன்!" 

உண்மை தான. 


 யானைய எப்ப பார்த்தாலும், எப்படிப் பார்த்தாலும் பிரமிப்பா இருக்கும். அதன் தோல் கடினமா இருக்கும். துதிக்கை உயர்த்தி பிளிறும் போது பயம் கலந்த ஆச்சரியம் கண்களுக்குள் நிறையும். யானை மேல அமர்ந்து ஊர்வலம் போனா உலகமே நமக்குக் கீழ சுழல்வது மாதிரி இருக்கும். 


அப்பாவின் கைகள் பிடிச்சு  நடந்தா  உலகம் நம்மோட கைகள பிடிச்சுக்கிற மாதிரி இருக்கும். அப்பாவின் கை எப்பொழுதும் நம்பிக்கை கொடுக்கும். 


"அப்பா" என்கிற பிரமிப்பான

யானைய  தனித்தனியா பிரிச்சுப் பார்க்க முடியாது. யானைய முழுமையா பார்த்தா

தான் பிரமிப்பா இருக்கும். 


அன்பின் முகமாக அப்பாவின் முன் நின்றால் அன்பின் முழுமையை அம்மாவில் மட்டுமல்ல. அப்பாவிடம் இருந்தும் கைகள் நிறைய அள்ளலாம்.


உலகில் அதிசயங்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் வரலாம். 

 

உறவுகளின் உலகில் 

என்றைக்கும் மாறாத  மறுக்கமுடியாத அதிசயம், பிரமிப்பு என்றைக்கும் "அப்பாக்கள்" தான்… 


கடற்கரையில் கால் நனைக்க வரும் கடல் அலை கண்டு

மகிழ்வு,

அச்சம்,

கூச்சல்

மூன்றும் ஆய்த எழுத்துக்களாக கூடிவர… 

ஓடி கரை சேரும் சிறு குழந்தை. பார்த்திருப்போம்.


கடல் புறம் கண்ட காட்சி "அப்பா, பிள்ளை" விளையாட்டை உறவை நினைவுபடுத்தி மனதை நனைத்துத் திரும்புகிறது… 



'மனப் பறவை' 

 மனம் கொத்தும்

பறக்கும்...



இருதய். ஆ



அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...