About Me

Thursday, April 13, 2023

சித்திரை விரித்த சிறுகதை...



மனப்பறவையில் முதன்முறையாக எனது சிறுகதையைப் பகிர்கிறேன். 

வாசித்து முடித்து முடியுமானால் உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள். கட்டாயம் ஒன்றுமில்லை. மனசுக்குள் மத்தாப்பூ கொளுத்தினாலே போதும். 

மத்தாப்பூவாக  வாழ்வில் வண்ணங்கள் உயர எண்ணங்கள் ஈடேற அனைவருக்கும் 

"தமிழ்ப் புத்தாண்டு" 

நல்வாழ்த்துக்கள் 


கதைக்கத் தொடங்குகிறேன்...



சூரியனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள் 'ராசம்மா' என்கிற 'ராசி'. ஏழறை மணிக்கு அடிக்கிற வெயிலா இது. மண்டை காய்கிறது. ஏற்கனவே 'கருவாச்சி' எனும் பட்டம் உண்டு. எத்தனை முறை குளித்தாலும் நிறம் மாறப் போவதில்லை. இதில் இந்த கோடை வெயில் வேறு. ஏதேதோ நினைத்தபடி கமலாவின் மாடி வீட்டைப் பார்த்தாள் ராசம்மா.



இன்னும் கமலா  வெளியே முகம் காட்டவில்லை. 'இந்நேரம் வந்துவிடுவாளே. உடம்பு சரியில்லாமல் உறங்குகிறாளோ?' யோசித்துக் கொண்டிருக்கையில் 'ராசி' அமர்ந்திருந்த மின்கம்பி ஆட ஆரம்பித்தது. 


சுதாரித்தாள்' ராசம்மா' எனும்

'ராசி '. அணில் ஒன்று மின் கம்பி ஊடாகப் பயணித்து அருகில் இருந்த கொய்யா மரத்திற்குத் தாவியது. 

  இதையெல்லாம் கவனித்த 'ராசி' இந்தக் 'கோவாலுக்கு' எந்தப் பிரச்சினையும் இல்ல. கொய்யாவத் தின்னுட்டு நாளக் கடத்திருவான். 'நமக்குச் சோறு தான் முக்கியம்' என்று மனசுக்குள் சொல்லிக் கொண்டு கமலாவின் மாடிவீட்டை அடைந்தது 'ராசம்மா' என்கிற 'காகம்'.



கமலாவின் வீட்டுச் சாப்பாடு தட்டாமல் ராசிக்கு இலையிலோ அல்லது தட்டிலோ வந்துவிடும்.ஏழறை மணிக்கு காலை பலகாரத்துடன் கொஞ்சம் சோறும் பிசைந்து எடுத்து வந்து ராசிக்கு வைத்துவிடுவாள் கமலா.


சாப்பிட்டு முடித்து அவளது பிள்ளைகளுக்கான உணவை வாயில்  அதக்கிக் கொண்டு ராசி  பறக்கும் வரை அருகில் நின்று கொண்டு கமலா ராசியிடம் ஏதேனும் பேசிக் கொண்டிருப்பாள். இதுவே கமலாவின் தின வழக்கம்.


காகத்திற்கு 'ராசம்மா' எனப் பெயர் வைத்து 'ராசி' எனச் சுருக்கியவள் கமலா தான். கமலா ராசியை தன் உறவுக்கார இறந்துபோன 'ஆத்துமாவாக' எண்ணிவந்தாள். அதற்கேற்றாற்போல ராசியும் கமலா வீட்டைச் சுற்றியே பறந்து திரியும்.

'அது சரி. ராசியும், கமலாவும் ராசியானது இருக்கட்டும். இன்றைக்கு ஏன் இன்னும் கமலா காலை உணவுடன் வெளியே வரவில்லை?'

ராசியைப் போலவே உங்களுக்கும் கேள்வி எழலாம். கேள்வியின் பதிலோடு கதையும் முடிவுக்கு வரப் போகிறது. 


ராசி கமலாவின் சமையலறைச் சாளரத்தின் வழியே எட்டிப் பார்க்க கமலா கைகளில் உணவுடன் மொட்டை மாடித் திண்டு நோக்கித் திரும்பினாள். 

   'அதான... பார்த்தேன். கமலாவாவது ஒடம்பு சரியில்லாம படுக்கறதாவது. நல்ல மனசுக்காரிக்கு ஒரு நோக்காடும் வரக்கூடாது'

மனசுக்குள் நினைத்துக் கொண்டு திண்டு வந்து அமர்ந்தாள் 'ராசி' . 



'ராசி... ஆளக் காணாமேனு தேடுனயா? காலைல கொஞ்சம் லேட்டா எந்திரிச்சிட்டேன். இந்தா சாப்பிடு' வைத்துவிட்டு ராசி சாப்பிடுவதையே பார்த்துக் கொண்டிருந்தாள் கமலா. மனசுக்குள் ஏதேதோ எண்ண ஓட்டங்கள் ஓடின.


எதிர்க்க இருக்க வீட்டம்மா கைகள் நிறைய சோத்த வச்சுக்கிட்டு

'கா... கா... கா'...னு கத்துனாக் கூட ஒண்ணுகூட அங்குன போய் சாப்பிட மாட்டேங்குதுங்க. வச்ச சோத்த பூனை தான் தின்னுட்டுப் போகுது. 'இந்தப் பறவைகளுக்கு மனுசங்க மனசு தெரியும் போல...!' என்ற எண்ண ஓட்டத்துடன் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்க ராசி சாப்பிட்டு முடித்து தன் பிள்ளைகளுக்கான உணவை வாயில் கவ்விக் கொள்ள 'கமலா' ராசியிடம் ஒரு விஷயம் சொன்னாள். 


 ' இனி வெயிலு கொளுத்தும். தண்ணிக்கு அங்குன எங்கயும் தேடிப் போகாத. இனிமே ஒரு சின்ன டவராவுல தண்ணிய இங்குன வச்சிடுவேன். குடிச்சுக்கோ. மத்தவங்ககிட்டயும் சொல்லிடு'

என்றாள் நல் குணக்கார 'கமலா'. 'ராசி'எல்லாம் புரிந்தவளாக

'கா... கா' எனக் குரலெழுப்பி தன் கூடு நோக்கிப் பறந்தாள். 



கமலா சமையலைறைக்குள் நுழைந்து ராசிக்கான தண்ணீர் டவராவைக் கழுவித் தண்ணீர் பிடிக்க ஆரம்பித்தாள். 




"காக்கை... குருவி... எங்கள் சாதி" 

   -  மகாகவி 'பாரதியார்' பாடல் வரிகள் மனசுக்குள் நிழலிடுகிறது. 


கோடையில் தங்கள் வீட்டுச் சாளர ஓரத்தில் ஏதேனும் நற்குவளையில் தண்ணீர் வைத்தீர்கள் என்றால் இந்தக் கதையின் நோக்கம் முழுமை பெறும். ஏற்கனவே இச்செயலை கைக்கொண்டவர்களுக்கு பூங்கொத்துக்கள் உரித்தாகட்டும். "இனி செஞ்சுட்டாப் போச்சு" என்ற உள்ளத்தவர்களுக்கு பறவைகளே நன்றிப் பூக்களோடு வாசல் வரும்.


வாசித்தமைக்கு நன்றிகள் பல...



மனப்பறவை பறக்கும்...



- இருதய். ஆ




   




Saturday, April 1, 2023

ஏப்ரல்1




உருவிப் பறித்த மருதாணி இலைகளுக்குள் உறைந்து கிடக்கும் குளுமையும், விரல்களோடு கைப்பிடிக்கக் காத்திருக்கும் சிவப்பு வண்ணமும் போல சில நினைவுகள். 


இன்று… 

காலை மணி 6.01. 

'என் மேய்ப்பர் நீ தானய்யா' … கைப்பேசியின் துயில் எழுப்பல் பாடல் ஒலிக்கிறது. 

'Snooze on'... 

ஐந்து நிமிட இடைவெளி. மீண்டும் 

'என் மேய்ப்பர் நீ தானய்யா' ஒலிக்கிறது. 



வீட்டுக்காரம்மா… எரிச்சலாக 

'அலாரம் மத்தவங்கள எழுப்புறதுக்கா'… 

என என் கைப்பேசியின் மண்டையில் ஒரு தட்டுத் தட்டி அங்கிருந்து அப்புறப்படுத்துவார். நான் மீண்டும் குப்புறப் படுத்துக் கொள்வேன். இன்றும் அப்படியே. 


காலை மணி 9.07.

விடுமுறை தினத்தை முன்னிட்டு எழுந்த நேரம்.


தினக் காலண்டரில் 

' ஏப்ரல் 1' வெயில் முகம் காட்டிச் சிரித்தது. 

அதான் வந்துட்டம்ல. எப்பவும் ஏப்ரல் மாசம்னா ஒரு பழைய ரீலு ஒண்ண ஓட்டுவைல. இந்த முறையும் ரீல் ஓடுமா? என காற்றில் படபடத்தது. 


ம்...ம்... ஓட்டிட்டா போச்சு. 

மார்ச் மாசம் ஓடியே போயிருச்சு. அன்னிக்கு ஏப்ரல் மாசம்னா ஏரியாவே களைகட்டும். 


'இந்தாப்பா. இப்புடி 

பொசுக்குனு ரீல ஓட்டுணா எப்புடி. முன்ன பின்ன detail பண்ணுப்பா' .

ஓகே. ஓகே…

Detail-ஆ சொல்றேன். 



மனம் திரும்புதே…



Once upon a time 


"80" -  களின் மத்திமக் காலம். 

இடம்

மதுரை

'ஜெய்ஹிந்துபுரம் 1வது தெரு'.


"80" - களுக்குள் வந்துவிட்டீர்கள். 


'பொற்காலம்' என்றே சொல்லலாம். 



ஏப்ரல் - 1 -

மனம்' 80'- களின் மத்திமக் காலத்தில் காலூன்றியது.

அன்று நிகழ்ந்த நிகழ்வுகளை ஒரு பார்வையாளனாகப் பார்க்கப் போகிறேன். என்னோடு நீங்களும் காண்பீர்கள். அத்தகைய உணர்வைக் கடத்தினால் படித்து முடித்தவுடன் நீங்கள் உணர்ந்தால் மகிழ்வேன்.


சரி களம் காணலாம்.


அன்று...

எவர் கைகளிலும் 'கைப் பேசி' இல்லை. தொகுப்பு வீடுகள் (காம்பவுண்ட் வீடுகள்) அதிகம் உள்ள பகுதியாக ஜெய்ஹிந்துபுரம் இருந்தது. சிறிய சந்துக்குள் நுழைந்து வெளிவந்தால் 'ப' வடிவத்தில் முப்புறமும் சின்னஞ்சிறிய வீடுகள் வரிசை கட்டி வரவேற்கும்.


தொலைக்காட்சிப் பெட்டிகள் அரிதான சூழலில் குடுத்தனக் காரர்களின் பேச்சு சப்தங்கள் காதுகளை நிறைக்கும். தீர்ந்து போகாத பேச்சுக்களிடையே உறவுகளின் பிணைப்பு அறுபடாத சங்கிலித் தொடராக நீளும்.

இன்று வீதியிறங்கினால் வீட்டுக்குள் ஓடும் தொலைக்காட்சியின் நிகழ்வுகளை வெளியிலிருந்து வசனங்களாகக் கேட்கலாம். பேச்சுக்கள் குறைந்தே போனது. அம்மாவின் கைகளுக்குள் கதகதப்பாக அடங்கிக் கொள்ளும் கைக்குழந்தை போல சதா நேரங்களிலும் கைப்பேசி கைகளுக்குள் அடங்கிக் கிடக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது. சரி கிடக்கட்டும். பழைய கதைக்குத் திரும்பலாம்.


ஜெய்ஹிந்துபுரத்து முதல் தெருவில் இருந்த பொதுக்

குழாயடியில் கதைகள் பேசிய படி தாவணி அணிந்த அக்காக்கள் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். 


குதிரை வண்டி என்னைக் கடந்து போகிறது. ரிக்ஷாக்காரர் ஓய்வாக அமர்ந்து பீடி புகைத்துக் கொண்டிருக்கிறார். காதோரம் சேமிப்பில் இரண்டு துண்டுப்பீடிகள் உதடுகளின் ஊதலுக்காகக் காத்திருந்தன.


மரக்கட்டைப் பேனா சிறுவர்களும்& வண்டிச்சக்கர அச்சு மை கத்தரிக்காய்களும்


சிறுவர்கள் தங்கள் கைகளில் பேனாவை பின்பக்கமாக மறைத்து வைத்துக் கொண்டு குறுக்கும், நடுக்கும் ஓடி தெருவில் நடந்து செல்பவர்களின் ஆடைகளில் பேனாவிற்குள் நிரம்பியிருந்த ஊதா நிற & சிவப்பு நிற 'எழுது மை' திரவத்தை தெளித்த படி இருக்கிறார்கள்.


சிலரது கைகளுக்குள் இரு பாதியாக நறுக்கிய கத்தரிக்காய் துண்டுகள் இருக்கின்றன. அதில் மாட்டுவண்டிச்சக்கர அச்சு மையும்  ஒட்டியிருக்கிறது.


கடகடவென ஓடிச்சென்று  கத்தரிக்காயைச் சட்டையில் ஒட்டி விட்டு  'ஏப்ரல் பூல்' எனக் கத்தியபடி கடந்து ஓடுகின்றனர். 



ஓடும் சிறுவர்களின் முகத்தில் வெற்றிக்களிப்பு அட்சய ரேகையாகப் படர்ந்திருக்கிறது.


இதோ... அந்தச் சிறுவர்களிடம் சிக்காமல் நைசாக மறைந்து மறைந்து கடைக்குச் சென்று கொண்டிருந்த என்னைக் காண்கிறேன். சட்டை அணியாமல் தோற்பட்டை நாடாவுடன் சேர்த்துத் தைத்த 'கால்சராய்' அணிந்திருக்கிறேன்.



ஒடிசலான தேகம். முகச் சாயலில் எவ்வளவு வித்தியாசங்கள். ஓர வகிடு எடுத்து வாரிய தலைமுடி. தேங்காய் எண்ணெய் முகத்திலும் வழிகிறது.  நானா இது!. ஆச்சரிய ரேகைகள் உள்ளங்கை ரேகையாக விரிகின்றன. 


சற்றும் எதிர்பாராத வகையில் கடைக்கு அருகில் இருந்த ஒருவன் எனது வெற்றுடம்பில் மையைத் தெளித்து விட்டு 'ஏப்ரல் பூல்' எனக் கத்திக் கொண்டு ஓடுகிறான்.



நான் போரில் தோற்ற வீரனாக வருத்தமுடன் வீடு திரும்புகிறேன். இது அன்றைய நாளின் எனது இரண்டாவது தோல்வி. அப்படியென்றால் முதல் தோல்வி எது? பதில் வருகிறது.


முதல் தோல்வி


முதலில் தோற்றது அம்மாவிடம் தான்.

காலைப் பொழுது...

இன்னும் உறக்கம் கலையவில்லை. அருகில் உறங்கிக் கொண்டிருந்த அண்ணனையும், தம்பியையும் காணவில்லை. எங்கே போனார்கள். கண்களைக் கசக்கியபடி பார்த்துக் கொண்டிருக்கிறேன். 


'டேய்... உங்க அம்மாச்சி வந்திருக்காங்கடா. எந்திரிக்கலயா?' 

அம்மாவின் உற்சாகக் குரல் காதுகளில் அலாரம் அடிக்கிறது. 


வாரிச்சுருட்டி எழுந்து 'அம்மாச்சி' எனக் குரல் எழுப்பி அம்மாச்சியைத் தேடுகிறேன். 

'April Fool. ஏமாந்த   Fool' ஏற்கனவே அம்மாவிடம் ஏமாந்துபோன எனது அண்ணனும், தம்பியும் அம்மாவோடு சேர்ந்து

'கோரஸ்' பாடுகிறார்கள். 


அப்பா வருகிறார். கருகரு மீசை. தோற் சுருக்கமின்றி இளமையாக இருக்கிறார். 

"இந்தா பிள்ள சின்னப் பயலுகள காலங்காத்தால ஏமாத்திகிட்டு.



'ஏப்ரல்' பொறந்தா உன் கூத்து பெருங் கூத்து. தெருவுல அதவிட பெரிய கூத்து ஓடிக்கிட்டு இருக்குது".


அம்மாவிடம்

"April Fool" ஆன முதல் ஆள் அப்பா தான். அப்பாவின் சலிப்பிற்கான காரணம் விளங்குகிறது. 

அம்மாவிடம் இருக்கிற துறுதுறுப்பையும், சுறுசுறுப்பையும், கலகலப்பையும் காண்கிறேன். இன்று அம்மா நடப்பதே குறைந்து பெரும்பாலும் அமர்வு தான். ஓடி ஓடி வேலை செய்த வாழ்வைக் காலம் ஓரம் கட்டி அமரவைத்து விடுகிறது.


வயது ஏற ஏற முதுமை கூடி கண்ணெதிரே கை நழுவி தொட முடியாத தூரம் நோக்கி ஒவ்வொரு நாளும் பயணப்படுகிற முதுமைப் பெற்றோர்களைக் காண்கையில் வாழ்வின் மீதான பிடிப்பு அற்றுப் போகிறது. வாழ்வின் நியதியை மாற்றவா முடியும்.


இன்று அப்பா இல்லை. வான் வீட்டிற்குச் சென்று ஒரு வருடம் ஆகப் போகிறது. அப்பாவின் இருப்பை மட்டும் இழந்திருக்கிறேன். மற்றபடி அப்பாவின் நினைவுகள் இன்றி ஒரு நாளும் கடக்காது. 


அன்றைய' ஏப்ரல்' முதல் நாளின் காலைப் பொழுதுகள் மீண்டும் ஒரு முறையேனும் விடியுமா?. மனம் கேள்விக் குடைகள் விரிக்கிறது.


'மாற்றம் ஒன்றே மாறாதது' என மனம் காதுகளுக்குள் கிசுகிசுத்தபடி மீண்டும் '2023 ஏப்ரல்' தினத்தின் 

காலைப் பொழுதிற்குள் நுழைந்தது.  பரபரப்பான காலைப் பொழுதைக் கடந்து எனது வீட்டில்  இறக்கிவிட்டுவிட்டுப் பறந்து போனது. 


மகன் கைப்பேசியில் ஏதோ விளையாடிக் கொண்டிருக்கிறான். வீட்டுக்காரம்மா காலை உணவின் தயாரிப்பு வேலைகளில் மூழ்கியிருந்தார். 

நான் எனது அம்மாவிடம் பேச எண்ணி  அம்மாவின் கைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டேன். 


  நான் மீண்டும் ஏமாற விரும்பினேன். ஆனால் அம்மாவிடம் பேசிய போது கடந்த ஏப்ரலில் அப்பாவோடு தேவாலயம் சென்று வந்த நினைவுகளைத் தான் பகிர்ந்தார். அன்றைய நினைவுகள் குறித்த பேச்சு அம்மாவிடம் இல்லை. நானும் பழையனவற்றைப் பேசாமல் நலவிசாரிப்போட கைப்பேசியைத் துண்டித்தேன்.

மனப்பறவை பறக்கும்...


                     -இருதய். ஆ



Monday, March 27, 2023

இசை ஞானியின் இசையும் ஒரு குவளைத் தேநீரும்...



ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு மனப்பறவைக்குத் திரும்புகிறேன். 'மனம் கொத்தும் பறவை' "காணொளி" தொடக்கத்திற்குப் பிறகு எழுதுவது குறைந்து போனது. எழுத்திற்குத் திரும்பியது சொந்த ஊருக்குத் திரும்பிய மனநிறைவைத் தருகிறது. 
89-பதிவுகளைக் கடந்து இது 90-வது பதிவு. 

என்ன எழுதியிருக்கிறேன்? திரும்பிப் பார்த்தேன். எண்ணம் போல எழுதியிருக்கிறேன். வாசித்த அனைவரும் பெரிய மனசுக்காரர்கள். அதனாலேயே தொடர்ந்து எழுத முயல்கிறேன்.

 தொடர்ந்த வாசிப்பிற்கு நன்றிகள். தொடரும் வாசிப்பிற்கு வரவேற்புகள்... 



ஆகாசத்தைப் பார்த்தபடி அமர்ந்திருக்கையில் உருமாறி உருமாறி  காற்றில் மிதந்து கடக்கும்  மேகச் சித்திரங்கள் மனதை விசாலமாக்கும். 


கணங்களில் காற்றில் கலைந்து  மீண்டும் கூடி பலவிதங்களில் மாயம் காட்டும் மேக 

வி…சித்திரங்கள் விரல்களின் தூரிகைகளுக்கு அப்பாற்பட்டது. 


மனதை விசாலமாக்கும் விசித்திரங்கள் இன்னும் இன்னும் இந்த உலகில் நிறைய உண்டு. அறிவீர்கள். 


விசித்திரங்களை ஆராயாமல் சரணடையும் மனதிற்கு படிகளின் வழியே குதித்து குதித்து இறங்கும் மழைக்காலத்து மழைத்துளியும் விசித்திரம் தான். 


கேள்வியும் நானே. பதிலும் நானே… 


பதிவின் தலைப்பிற்கும் இந்த தொடக்கத்திற்கும் என்ன சம்பந்தம்? கேள்வி எழுகிறது.  பதில் தந்துவிடுகிறேன். 


நீண்ட ஆகாசமும், ஆகாசத்து மழைத்துளியும், மழைக்கு வித்தான மேகங்களும் போலவே 'இசைஞானி' இளையராஜாவின்  இசையும் மனதை விசாலமாக்கும் விசித்திரங்கள் என்றால் ஒப்புக் கொள்வீர்கள் தானே. 



இசை ராசாவின்  இசையும் ஒரு விசித்திரம் தான். 

கண்களை மூடிக் கொண்டு  இசைஞானியின் பாடல்களைக் கேட்டால் அகம் திறக்கும். அச்சமயம் கேட்கும் பாடல்  நமக்கு எப்பொழுது எச்சூழலில் அறிமுகமானதோ அச்சூழலுக்கே மீண்டும் அப்பாடல் நம்மை  அழைத்துப் போகும். அக்கணத்தில் மனம் உறையும். 



இப்பொழுது கண்களை மூடிக்கொண்டு   ராசாவின் இசையில் உங்கள் மனசுக்கு நெருக்கமான பாடலை நினைத்துக் கொள்ளுங்கள். அந்தப்பாடல் உங்களை உங்களின் பழைய நினைவுகளுக்கு அழைத்துச் செல்லும். 


தற்போது என் காதுகளுக்குள்… 

   "புது ரூட்டுல தான்  ஹொய்யா… 

நடு ரோட்டுல தான் ஹொய்யா… 

தினம் நின்றாடும் வெள்ளி நிலவு" … 

-இசைஞானியின் 'மீரா' திரைப்பாடல் ரீங்காரமிடுகிறது. இதற்கு ஒரு நிசக்கதை உண்டு. சொல்கிறேன். சொல்வதெல்லாம் உண்மை. 


ஒரு குவளைத் தேநீரும்… 

இசை ஞானியின் இசையும்… 



Have your cup of" tea"… 


"காலம் கனிந்தது 

கதவுகள் திறந்தது

……. 

புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே… 



சரணம்2

நேற்றென் அரங்கிலே 

நிழல்களின் நாடகம்… 

இன்றென் எதிரிலே

நிசங்களின் தரிசனம்

வருங்காலம் வசந்தகாலம்"… 

இசை ராசாவின் மடை திறந்த பாடலைக் கேட்டிருப்போம். 


-இக்காலம் வரை. மன்னிக்கவும். ஒரு திருத்தம். எக்காலம் வரையிலும் இசைஞானியின் மடை திறந்த இசை கரையோர வேர்களின் தாகம் தீர்க்கும் நதியாக பரவிப் பாய்ந்து இசைதாகத்தை தீர்த்தபடியே இருக்கிறது. 


தீராஇசை


ஐந்து வருடங்களுக்கு முன்பு… 


'News 18 தமிழ்நாடு' தொலைக்காட்சியில் 'அன்னையர் விருதுகள்' நிகழ்விற்காக மூன்று மாதத் திட்டத்தின் கீழ் வேலை பார்த்தபோது கிடைத்த அனுபவங்கள் அலாதியானது. 


'நியூஸ்' தொலைக்காட்சியில் பணிபுரிந்தது எனக்குப் புதிய அனுபவமாகவே இருந்தது. செய்திப் பிரிவில் நடக்கும் தினசரி நிகழ்வுகளை அருகாமையில் இருந்து கண்ட அனுபவம் மறக்க இயலாதது.


பகல்பொழுதுகளில் சேனல்

 எடிட்டர் இருக்க அவருடன் அமர்ந்து 'எடிட்' செய்வேன். சின்ன இடைவெளி எடுத்துக்கொள்ள தேநீர் அருந்த வெளியே செல்வேன். அப்படிச் செல்ல எண்ணிய  ஒரு நாளில்

" சகோ. செந்தில்(எடிட்டர்)

 'ப்ரோ' எதுக்கு வெளில போறீங்க. இங்க தேநீர் இருக்கு. 'Dinning' போங்க. டீ சாப்ட்டு வாங்க'என்றார்

OK brother. என்றபடி

' dinning' சென்றேன். தேன் குப்பி வாங்கச் செல்கிறவனை தேனடை சேகரக் கூட்டிற்குள் அனுப்பினால் எப்படி இருக்கும்.  எனக்குப் பிடித்த 'தேநீர்' அங்கு விதவிதமான ருசிகளில் பாக்கெட்டுகளில் அடங்கி எனைக் கண்டு புன்னகைத்தன.

'மாதுளைத் தேநீர்' எனக்கு மிகவும் பிடிக்கும். தேநீரோடு பொழுதுகள் விடியும். தேநீரோடு பொழுதுகள் முடியும். 


'அன்னையர் விருதுகள்' விழா  நாள் நெருங்கி வந்த    இறுதி மாதத்தில் 

காலை பத்து பத்தரைக்குச் சென்றால் இரவு 9 மணிக்கு வீடு திரும்புவேன். சில நாட்கள் வீட்டிற்குத் திரும்பாமல் அங்கேயே தங்கிவிடுவேன்.

வீட்டிற்குச் சென்றாலும் இரவு உணவிற்குப் பின் மீண்டும் சேனலுக்குத் திரும்புவேன். இரவில் உடன் பணிபுரிய வெளியில் இருந்து ஒரு எடிட்டரை  பணியில் அமர்த்தியிருந்தார்கள்.  இரவில் எடிட்டிங் வேலை இருக்கும்.


'நடு ரோட்டுல தான்' 'மீரா' பாட்டுக் கதைக்கு வருகிறேன். 


 இரவு மூன்று மணி. கண்கள் தேநீரைத் தேடும். 


மனம் 'ஆகட்டும் ராசாக் கண்ணு ந்தா கெளம்புறேன்' என தேநீர் உலாவிற்குத் தயாராகும். 


"நண்பரே. வாங்க. வெளிய போய் டீ சாப்ட்டு வரலாம். கொஞ்சம் relax - ஆ நடந்துட்டு வரலாம்" என உசுப்பேற்றி எடிட்டரை லாவகமாக வெளியே அழைத்துக்கொண்டு தேநீர் கடை நோக்கி நடையாய் நடக்க 

'தினம் நின்றாடும் வெள்ளி நிலவாக'

'அப்பா கடை' குறித்த தகவல் கிடைத்தது. 



"அப்பா கடை" என்றால் சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் அனைவரும் அறிவார்கள். 'பார்ம்குரோவ்' ஓட்டல் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது இந்த "அப்பா தேநீர் கடை" 


நடுநிசி தாண்டி திறந்திருந்த 

'அப்பா தேநீர் கடை' அன்றைய மதுரைக் கால நாட்களின் 'Rewind' பொத்தானை மீண்டும் அழுத்தியது. அன்று 

'90' -களில்  மதுரையில் விடிய விடிய தேநீர்க் கடைகள் திறந்தே இருக்கும். 


கூத்தாடிகளாகச் சுற்றிய காலங்களில் இரவின் விசித்திரங்களாகத் தேநீர்க் கடைகள் எங்களை வரவேற்கும். பல கடைகளின் வாடிக்கையாளர்கள் நாங்கள். 'நாங்கள்' என்பதற்குள் 'மார்ட்டின், தாமஸ், குட்டி ராஜா, கிளிட்டஸ், பிரபு, சுகுமார், ஜோ'

பிறகு அடியேனும் அடங்குவேன். 

அது ஒரு பொற்காலம். சரி இக்காலத்திற்கு வருகிறேன். 


அப்பாகடையும், இசைஞானியின் இசையும்


         நடுநிசி கடந்து சுமார் அதிகாலை 3.30 மணியளவில் அப்பா கடையின் கதவுகள் திறக்கும். முழுக்கதவுகள் திறக்கும் முன் பாதிக் கதவு திறந்த நிலையில் கடை உள்ளே சட்னி வகையறாக்கள் தயாராகி கடை திறந்ததும் நம்மைப் பார்த்து 'வாங்கண்ணே' என புன்முறுவல் பூக்கும். கடையின் முழுக் கதவு திறக்கும் வேளையில் இரவு பணியில் இருந்த 'கார்ப்பரேட்' நபர்கள் முதல் ஆட்டோ டிரைவர்கள் வரை இங்கே ஒன்று கூடிவிடுகிறார்கள். சுடச் சுட மசால் வடை, போன்டா, மெதுவடை அத்தனையும் ஏகபோகமாக தட்டுக்களை நிறைக்கும். 


'அண்ணே ரெண்டு டீ' … 

-என்றபடி அப்பா கடையின் உட்புறச் சுவர்களைக் கண்டால் எங்கெங்கும் இசைஞானியின் புகைப்படங்கள். அறிய எண்ணுகையில் அறிந்த விசயம் ஆச்சரியப்படுத்தியது. 



அப்பா கடையில் இசைஞானியின் பாடல்களைத் தவிர வேறு பாடல்களைக் கேட்கவே முடியாது. கடை திறந்தது முதல் கடை அடைக்கப்படும் வரை இசைஞானியின் மடை திறந்த பாடல்கள் ஓடிக் கொண்டே இருக்கும். 


எங்கள் கைகளுக்குள் தேநீர்க் குவளை வந்தமர்ந்தபோது இசை ஞானியின் பாடல் அதிகாலை ஒளியின் ஒலியாக… 


"காற்றில் எந்தன் கீதம்…

காணாத ஒன்றைத் தேடுதே" … 

எனக் கசிந்து காதுகளை நிறைக்க வயிறும் மனமும் நிறைந்தது. . 


அன்றைய பொழுதின் தொடக்கமும் நேற்றைய பொழுதின் முடிவும் சங்கமிக்கும் இடமாக 'அப்பா கடை' முகம் சிரிக்கும். 



இசைக்கும் ராசாவின் பாடல்களைப் பட்டி தொட்டியெங்கும் ஒலிக்கச் செய்த காரணிகளுள்   தேநீர்க் கடைகளுக்கு  பெரும் பங்கு உண்டு. 



'தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்' 

-'சிந்து பைரவி' திரைப்பாடல் 'ஆடியோ கேசட்'  நாடா தேயும். ஆனாலும்  ராசையாவின் 'இசை' மன வானில் தேயாத முழுநிலவாக என்றும் முகம் காட்டும். 


வழி நெடுக காட்டு மல்லியாக மனம் வீசும்.


'தேநீர்' இந்தியாவின் 'தேசியபானம்' என்றால் இசை ஞானியின் இசையை 'தேசிய கானம்' என்று சொல்லத் தான் வேண்டுமோ… 

சொல்லாமலே விளங்கும்  இசைஞானியின் இசை ராசாங்கம். 


மனப் பறவை பறக்கும்…



                         இருதய். ஆ












அலாவுதீனும், அற்புத விளக்கும்...

மிக நீ…ண்ட இடைவெளிக்குப் பிறகு ‘மனப்பறவை’யோடு பரந்த எழுத்து வெளிக்குத் திரும்பியிருக்கிறேன். நமக்குப் பிடிச்சவங்கள நீண்ட நாட்களுக்குப் பிறகு...